2017 இல் தொழில்துறையில் கேள்விக்குரிய 10 திறன்கள் – LinkedIn ஆய்வறிக்கை

தொழில்துறை நாளுக்கு நாள் பாரிய மாற்றங்களைக் கடந்தவண்ணமே நகர்ந்துகொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடு அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமித்து வளர்கிறதென்றால் அது மிகையல்ல. சுருங்கக்கூறின், அன்று அம்மியில் வைத்து அரைத்தெடுத்த அதே மிளகாயை இன்று மிக்சியில் போட்டு அரைப்பது போன்று என்று வைத்துக்கொள்ளலாம். “Paperless” அதாவது காகிதங்களற்ற என்கின்ற கருத்துக்கமைவாக துறைசார் தகவல்களனைத்தும் காகிதங்களிளிருந்து கணினிக்கு மாற்றப்பட்டு இலகுபடுத்தப்பட்டதேன்றே சொல்ல வேண்டும்.

களஞ்சியப்படுத்தல், பாதுகாப்பு, செலவு இப்படிப் பல காரணிகள் இதில் உள்ளடங்கியுள்ளன. இம்மாற்றம் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது நாமனைவரும் அறிந்ததே. கணினி அறிவுள்ளவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் பொற்காலம் இதுவென்றாலும் அது தகும். தகவல் பயன்பாடு, அதற்கான மென்பொருள் மேலாண்மை, வடிவமைப்பு, ஆய்வு, களஞ்சியப்படுத்தல், தேவைக்கேற்ப தகவல்களை வழங்கல், சந்தைப்படுத்தல், வியாபார மேம்பாடு இப்படி தகவல் தொழில்நுட்பத்தின் துறை பரந்து விரிகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கனவிலும் கண்டிருக்கமுடியாத அளவு தகவல் தொழில்நுட்பம் என்கின்ற துறை மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகள் இன்றைய தலைமுறையினரின் காலடிக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

படம் - liveoakcommunications.com

படம் – liveoakcommunications.com

ஆம், இதனை உறுதிப்படுத்தும் வகையில் லிங்க்ட்இன் (LinkedIn) நிறுவனம் 2017 இல் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற திறன்கள் 10 என்ற ஆய்வை மேற்கொண்டு 2017ஆம் ஆண்டில் தொழில் துறையில் அதிக கேள்விச் சாத்தியங்களுள்ள பத்துத் திறன்களை தனது ஆய்வின் அறிக்கையில் அறிவித்துள்ளது.

LinkedIn ஆய்வறிக்கை – காணொளி

தொழில்சார் சுயவிபரங்களையும் தொடர்பாடலையும் பில்லியங்களுக்கும் அதிகமான தொழில் பண்பாட்டாளர்களையும்  தனது சமூக வலைத்தளத்தில் கொண்டுள்ள இந்நிறுவனம், 2016ஆம் ஆண்டு வரை தனது வலைத்தளத்தில் இடம்பெற்ற வேலைவாய்ப்பு விளம்பரங்கள், தொழில் தேடல்கள், மற்றும் கலந்துரையாடல்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வுசெய்து தரப்படுத்தியுள்ளது.

இத்தரவை நோக்கும்போது இன்று அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமித்து வளர்ந்துநிற்கும் தகவல் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எந்தளவு வினைத்திறன்கொண்டதாக மாறப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தொழில்துறையில் வெற்றிகரமான ஓர் இடத்தைப் பிடிக்க முயலும் தொழில் தேடுனர்கள் அனைவரும் உற்றுநோக்கவேண்டிய பத்து திறன்கள் இதோ.

#1. மேக மற்றும் விரவல் கணினி – Cloud and Distributed Computing

படம் - media2.govtech.com

படம் – media2.govtech.com

தொழில் தருனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திறன் பட்டியலில் முதலில் இருப்பது இதுவேயாகும்.

#2. புள்ளிவிபரவியல் மற்றும் தரவுச் செயலாக்கம்  – Statistical Analysis and Data Mining

படம் - centratechnology.com

படம் – centratechnology.com

பரந்த தகவல் தளங்களிலிருந்து செயற்கை நுண்ணறிவுமூலம் (artificial intelligence) தேவையான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறை எனச் சுருக்கமாக இதனை விளக்கலாம்.

#3. வலைத்தள வடிவமைப்பு மற்றும் அபிவிருத்திக் கட்டமைப்பு – Web Architecture and Development Framework

படம் - pace.oregonstate.edu

படம் – pace.oregonstate.edu

வலைத்தளங்களின் உருவாக்கம் மற்றும் அதன் கட்டமைப்புத் தொடர்பான வடிவமைப்பு அல்லது முறைமை இதுவாகும்.

#4. இடைப்பொருள் மற்றும் ஒருங்கிணைப்பு மென்பொருள் – Middle-ware and Integration Software

படம் - pbs.twimg.com

படம் – pbs.twimg.com

வணிகங்கள் பல்வேறுபட்ட மென்பொருள் மற்றும் தரவுகளை பயன்படுத்தவேண்டிய தேவையில் உள்ளன. மேற்படி தரவுகளின் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள இவ்வாறான இடைப்பொருள் தொழில்நுட்பம் அவசியமாகிறது.

#5. பயனர் இடைமுக வடிவமைப்பு – User Interface Design

படம் - images.huffingtonpost.com

படம் – images.huffingtonpost.com

கணிணி, இயந்திரங்கள் மற்றும் கைபேசி போன்ற உபகரணங்களில், பாவனையாளர் இடைமுக வடிவங்களை வடிவமைத்தல். இது பயனர்களுக்கும் வழங்கப்படும் சேவைக்கும் இடையிலான தொடர்பு மற்றும் பயன்பாட்டு அனுபவம்சார்ந்த தொழில்நுட்பம் ஆகும்.

#6. பிணையம்  மற்றும் தகவல் பாதுகாப்பு – Network and Information Security

படம் - marketingland.com

இன்று இணையம் என்று சொன்ன மாத்திரத்திலே நினைவுக்கு வரும் விடயம் இது எனலாம். இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதன் பாதுகாப்பு சம்பந்தமான தயக்கமும் அதிகரித்தே செல்கின்றது. தரவுகளைப் பாதுகாத்தல், இரகசியம் பேணல், அங்கீகாரமற்ற தரவுப் பயன்பாடு போன்ற பிரச்சனைகளை கட்டுக்கோப்பில் வைத்திருக்க இத்தொழில்நுட்பம் அவசியமாகிறது.

#7. கைப்பேசி மென்பொருள் கட்டுமானம் – Mobile Development

படம் - spcaf.com

படம் – spcaf.com

தற்காலத்தில் வியாபாரம் தொட்டு திருமணம் வரை அனைத்துமே இணையத்தினூடு நடைபெற்று முடிகின்றது. இருந்த இடத்திலிருந்தே தமது கடமைகள் அனைத்தையும் செய்துமுடிக்கும் இலகு வாழ்க்கையை உலகு அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக செயலிகளின் பெருக்கம் மற்றும் பல்வேறுபட்ட மென்பொருட்களின் தேவை அதிகரித்தவன்னமுள்ளது. தமது வணிகத்திற்குகந்த செயலிகளை உருவாக்கும் இத்திழில்நுடம் இன்று அதிக கேள்வியுள்ளதாக மாறியுள்ளது.

#8. தரவு வழங்கல் – Data Presentation

படம் - imprez.ie

படம் – imprez.ie

தரவுகள் பாரிய அளவில் சேமிக்கப்படுகிறது. ஆனால் தேவையான தரவுகளை தேவையான வடிவத்தில் உரிய நேரத்தில் பெறுவது தொழில் தருனர்களின் முக்கிய நோக்காக இருக்கிறது. Decision Making, முடிவுகளை எடுப்பதற்கும் தொழில்ரீதியான நிலைமைகளைத் திறம்படப் புரிந்துகொள்வதற்கும் இத்தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிறது.

#9. தேடுபொறி மேம்பாடு/சந்தைப்படுத்தல் – SEO/SEM Marketing

படம் - thenextweb.com

படம் – thenextweb.com

தமது வணிகம் அல்லது உற்பத்திகளை முக்கிய தேடுபொறிகளின் தேடல் விளைவுப் பட்டியலில் முன்னிலை வகிக்கச்செய்யும் தொழில்நுட்பம் இதுவாகும். இதன்மூலம் தமது பொருள் மற்றும் சேவைகள் பற்றிய விபரங்களை இலகுவில் சந்தைப்படுத்த முடியும். இது வணிகத்தின் செயற்பாட்டை மேலும் மேம்படுத்தும்.

#10. சேமிப்பு அமைப்புகள் மற்றும் மேலாண்மை  – Storage Systems and Management

படம் - themsphub.com

படம் – themsphub.com

தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் நாளுக்கு நாள் தரவுகளைத் தமது செயலிகளில் நுளைத்தவண்ணமே இருக்கின்றன. இவ்வாறு சேமிக்கப்படும் தரவுகள் வருடத்திற்கு இருமடங்காக அதிகரிக்கிறது. இந்நிலையில் இவ்வதிகரித்த தகவல்களை பெருமளவில் சேமிப்பது நிறுவனங்களுக்கு ஓர் பெரும் செலவாகவே இருக்கின்றது, ஆகையால் இலகு வழியில் அவற்றை சேமித்துப் பயன்பெறும் தொழில்நுட்பத்தை அவை நாடுகின்றன.

மேற்கூறிய திறன்கள் பத்தும் 2017ஆம் ஆண்டில் மட்டுமல்லாது அதற்குப் பிறகுவரும் காலப்பகுதியிலும் சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து வரலாம். மாற்றங்களை நொடிக்குநொடி எதிர்நோக்கியிருக்கும் தகவல் தொழ்ல்நுட்பத் துறையில் ஒரு சிறு புறக்காரணிகூட பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்த வல்லது என்பது உலகறிந்த உண்மையும்கூட. எனவே தொழில்துறையில் சாதிக்க இருக்கும் இளைய தலைமுறையினருக்கு இவ்விளக்கம் நன்மை பயக்கும் என நம்புகிறோம்.

Related Articles