வெற்றிகரமான முயற்சியாண்மைக்கு இருக்கிறதா இந்த 5 திறன்கள்?

இன்றைய நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களில் ஒன்று முயற்சியாண்மையின் வளர்ச்சியும், வெற்றிகரமான முயற்சியாண்மை வணிகமும் ஆகும்.

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை பொறுத்தவரையில், முயற்சியாளர்களின் வளர்ச்சியென்பது மிகமிக அவசியாமன ஒன்றாகும். இன்றைய நிலையில், பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச வெற்றிடங்களால் உருவாக்கமுடியாத புதிய தொழிற்துறை வணிகத்தையும், வேலைவாய்ப்பையும் இத்தகைய புதிய முயற்சியாளர்கள் மற்றும் அவர்களது வணிகத்தினாலயே உருவாக்க முடியும்.

அப்படியாயின், உருவாகும் அல்லது உருவாக்கப்படும் முயற்சியாளர்கள், சந்தை போட்டியில் தோல்வியடையாதவகையில் தமது திறன்களை வளர்த்துகொள்வது அவசியமாகும். அவ்வாறன திறன்கள் பலவாக உள்ளபோதும், கீழ்வரும் 5 திறன்களும் ஒரு முயற்சியாளர் தன்னை வெற்றியாளராக நிலைநிறுத்திக் கொள்வதில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன.

1. அபாயநேர்வை கணக்கிட்டு செயற்படல் (Takes calculated risks)

(yardcare.toro.com)

முயற்சியாளர் சந்தையில் தனது அபாயநேர்வுகளை பொருத்தமானவகையில் கணக்கிட்டு, அதற்க்கு ஏற்ப தனது முயற்சிகளை முன்னெடுத்து செல்வதன் மூலமாக, சந்தையில் வெற்றியாளராக செயல்பட முடியும் (yardcare.toro.com)

ஒரு முயற்சியாளருக்கு இருக்கவேண்டிய மிக அடிப்படையான தகுதியும், ஏனையவர்களுக்கிடையிலான வேறுபாடாக இதனைக் கொள்ளலாம். சந்தையில் இல்லாத, சந்தைக்குத் தேவையான புதிய முயற்சிகளை துணிந்தே செயல்படுத்தக்கூடிய தீர்மானங்கள்தான் என்றுமே முயற்சியாளர்களை வெற்றியாளர்களாக மாற்றியமைக்கும்.

உதாரணமாக, 2011ம் ஆண்டுவரை இலங்கையின் மிகப்பெரும் வர்த்தகதுறையானது இணைய பின்னணியை பெரிதும் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் சர்வதேச வலைப்பின்னலான E-Bay போன்ற தளங்களையும், இதர சில உள்நாட்டு தளங்களுமே ஒட்டுமொத்த வர்த்தகசந்தையின் சிறுபகுதியை இணையம் மூலமாக ஆக்கிரமித்திருந்தது. குறித்த சமயத்தில், அறிமுகபடுத்தப்பட்ட Anything.lk (தற்போது WOW.lk) இணையத்தளமானது தனிநபர் ஒருவர் சந்தை பெறுதியிலும் பார்க்க குறைவான விலையில் பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய புதிய முறையினை அறிமுகபடுத்தியிருந்தது. இது, துணிகரமாக மக்களை குறித்த இணைய கொள்வனவு முறைக்கு பழக்கபடுத்துகின்ற ஒரு அபாயநேர்வு முயற்சியாகும். ஆனால், அதனை நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதனை ஏனைய போட்டியாளர்களிருந்து வேறுபடுத்தி காட்டியதன் மூலமே, குறித்த வணிகம் வெற்றிகரமாக இன்றும் இயங்கி கொண்டுள்ளது.

இது ஒரு முயற்சியாளர் சந்தையில் தனது அபாயநேர்வுகளை பொருத்தமானவகையில் கணக்கிட்டு, அதற்க்கு ஏற்ப தனது முயற்சிகளை முன்னெடுத்து செல்வதன் மூலமாக, சந்தையில் வெற்றியாளராக செயல்பட முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும்.

2. தோல்விகளிலிருந்து கற்றுகொள்ளுதல் (Learns from failure)

(technobuffalo.com)

தோல்வியை சந்திக்கும்போது பயத்தை வளர்த்துக் கொள்வதனைவிட, அதிலிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பிப்பதே மேல். (technobuffalo.com)

மெய்யுலகில் எவரும், எதனையுமே 100% சரியாக செய்வதில்லை. இது யாருக்கு சரியாக பொருந்துகிறதோ இல்லையோ, வணிக உலகில் உள்ளவர்களுக்கும், முயற்சியாளர்களுக்கும் சரியாக பொருந்தும்.

முயற்சிகள் எடுக்கின்றபோது எல்லாமே தோல்விகளாகவே இருக்கக்கூடும். ஆனால், அதனை தோல்விகளாக மட்டுமே பார்க்காமல், அதிலிருந்து எதனை கற்றுகொள்ள முடியும் என பார்க்கின்ற மனப்பான்மையே மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யும்போது வெற்றிக்கு அழைத்து செல்லும்.

வணிகங்கள் எப்போதுமே ஒரு சதுரங்க விளையாட்டுக்கு ஒப்பானதாகவே அமைந்திருக்கும். தவறுகளிலிருந்து மிகவிரைவகாக கற்றுக்கொண்டு மீளவும் ஆரம்பிக்காவிட்டால், சதுரங்கத்தில் எப்படி தோற்றுபோவோமோ, அதுபோலதான் வணிக முயற்சிகளும் அமைந்திருக்கும். வணிகங்களை பொறுத்தவரை எந்தவொரு முயற்சியுமே முதல்தடவையில் வெற்றி பெறுவதில்லை. எனவே, தோல்வியை சந்திக்கும்போது பயத்தை வளர்த்துக் கொள்வதனைவிட, அதிலிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பிப்பதே மேல்.

3. கனவுகளை பெரிதாக காணுதல் (Sees the bigger picture)

(wpengine.netdna-ssl.com)

ஒவ்வொரு வணிகத்தின் பின்னாலும், அதன் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னரும், அடுத்த இலக்கை நோக்கி நம்மால் பயணிக்க முடியும் என நம்பிக்கையூட்டும் முயற்சியாளர்களாலேயே சாத்தியமானது. (wpengine.netdna-ssl.com)

ஒரு முயற்சியாளரின் எண்ணங்களும் , இலக்குகளும் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்கவேண்டும். ஆனால், அதனுடைய அர்த்தம் முயற்சியாளர்கள் தனது இயலுமைக்குள் மாத்திரம் மட்டுப்பட்ட வணிக கனவை அல்லது இலட்சியத்தை கொண்டிருக்கவேண்டும் என்பது அல்ல. மாறாக, வணிக வெற்றியும், அவ்வெற்றிகள் தூரநோக்கில் எவ்வாறான பலாபலனை ஏற்படுத்தி தரப்போகின்றது என்பதனையும் கொண்டதாக இருக்கவேண்டும்.

இன்றைய நிலையில், இலங்கையில் மிகப்பெரும் வெற்றிகரமான வணிகங்களாக உருவெடுத்து நிற்கும் எந்தவொரு வணிகத்தினதும் ஆரம்ப நாட்களை எண்ணிப்பாருங்கள். அவை, ஆரம்பித்த புள்ளிக்கும், தற்போதைய நிலைக்குமிடையில் இமாலய இடைவெளி இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது ? ஒவ்வொரு வணிகத்தின் பின்னாலும், அதன் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னரும், அடுத்த இலக்கை நோக்கி நம்மால் பயணிக்க முடியும் என நம்பிக்கையூட்டும் முயற்சியாளர்களாலேயே சாத்தியமானது.

அதுபோலதான், தற்போது ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் முயற்சியாளர்களும், அவர்களது வணிகங்களும் விருட்சமாக வளர்ந்து நிற்க, அவர்களது கனவுகளுக்கும், இலக்குகளுக்கும் முட்டுக்கட்டை போடலாகாது.

4. புத்திசாதுர்யமாக பொறுப்பினை பகிர்தல் (Delegate wisely)

(ptconsultinggroup.com)

முயற்சியாளர் ஒருவருக்கு வணிகத்தினை நிர்வகிக்க மேலதிக நேரம் கிடைப்பதுடன், குறித்த வணிகத்தை மேலும் அழுத்தமற்ற வகையில் விருத்தியடைய வைக்கவும் உதவுகிறது. (ptconsultinggroup.com)

முயற்சியாளர்களின் மிகப்பெரிய பலவீனமே, அவர்களது கனவுக்கு அவர்களே சகலவகையிலும் நிஜ உலகில் உருக்கொடுக்க வேண்டும் என நினைப்பதாகும். இது ஒவ்வொரு முயற்சியாளர்களுக்கும் பணிச்சுமையை அதிகரிப்பதுடன், ஒரு எல்லைக்கு அப்பால் தமது கனவுகளை புதுப்பித்துக்கொள்ள முடியாது போகவும் செய்கிறது. இது சந்தை போட்டிக்கு அமைவாக, முயற்சியாளர் புதுப்பித்துகொள்ள முடியாமல் சந்தையை விட்டு ஒரம்கட்டப்படவேண்டிய நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

எனவேதான், முயற்சியாளர்கள் தனது இலக்கினை அடைந்துகொள்ளக் கூடியவகையில், அனைத்து செயல்பாடுகளையும் பொருத்தமான திறமையாளர்களை இனம்கண்டு புத்திசாதுர்யமாக பகிர்ந்து அளிக்கவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம், முயற்சியாளர் ஒருவருக்கு வணிகத்தினை நிர்வகிக்க மேலதிக நேரம் கிடைப்பதுடன், குறித்த வணிகத்தை மேலும் அழுத்தமற்ற வகையில் விருத்தியடைய வைக்கவும் உதவுகிறது.

இதன் காரணமாகத்தான் பெரும்பாலான வணிகங்களில், முயற்சியாளர்கள் அல்லது உரிமையாளர்கள் மூலோபாய முடிவுகளை எடுப்பவர்களாக இருக்க, நாளாந்த தீர்மானங்களை எடுப்பதற்கு பொருத்தமான திறனாளர்களை வைத்திருப்பார்கள். இது அவர்களது பணிச்சுமையை பெரிதுமே குறைக்க உதவுகிறது.

5. வினைத்திறன்வாய்ந்த தொடர்பாடல் (Communicates effectively)

(dn-media-1.lifehack.org)

போட்டிகள் நிறைந்த சந்தையில் மிகச்சிறந்த தொடர்பாடலை மேற்கொள்ளாத போது, உண்மையான திறமையாளரைவிட, போட்டியாளர்களே வெளியுலகுக்கு அடையாளமாக தெரிவார்கள் (dn-media-1.lifehack.org)

முயற்சியாளர்களுக்கு இருக்கவேண்டிய மற்றுமொரு பிரதான தகுதிகளில் ஒன்று தொடர்பாடல் ஆகும். எவருடனும், இலகுவாக தொடர்பாடலை ஏற்படுத்திகொள்ளக் கூடிய திறன் வாய்த்திருத்தல் இதன் அனுகூலமாகும்.

தனியே, தனது எண்ணங்கள் சிந்தனைகளை மாத்திரம் ஏனையவர்கள் மீது திணிக்கின்ற ஒருவழி தொடர்பாடலாக இல்லாமல், ஏனையவர்களின் அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு, கலந்துரையாடல்கள் மூலம் தம்மை வளர்த்துக்கொள்ளக்கூடிய வினைத்திறன் வாய்ந்த இருவழி தொடர்பாடலாக அமைவதே சாலச்சிறந்தது ஆகும்.

ஒரு முயற்சியாளர் தன்னை ஒரு முயற்சியாளராக வெளியுலகுக்கு காட்டிகொள்ள வெறுமனே தனது திறமைகளை மட்டும் வெளிப்படுத்தினால் போதுமானதாக அமையாது. அத்துடன், அவர் சிறந்த தொடர்பாடல்வாதியாகவும் இருக்கவேண்டும். இல்லையெனில், எத்தகைய திறனுக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெறாத நிலை ஏற்படும்.

உதாரணமாக, போட்டிகள் நிறைந்த சந்தையில் மிகச்சிறந்த தொடர்பாடலை மேற்கொள்ளாத போது, உண்மையான திறமையாளரைவிட, போட்டியாளர்களே வெளியுலகுக்கு அடையாளமாக தெரிவார்கள். இதற்கு மிக முக்கியகாரணமே, தொடர்பாடல் முறைமையை வினைத்திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்தாமைதான். அதிலும், இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு வணிகமும் தனக்குரிய விளம்பர தொடர்பாடலை வாடிக்கையாளரை கவரக்கூடியவகையில் வழங்காதபோதே தோற்றுபோக தொடங்கிவிடுகின்றன. எனவேதான், ஒட்டுமொத்த முயற்சியாளர்களின் எண்ணங்களுக்கும் இறுதி பெறுபேற்றை பெற்றுதருவதாக இந்த தொடர்பாடல் முறைமை உள்ளது.

மேற்கூறிய அனைத்து திறன்கள் மாத்திரமே ஒரு முயற்சியாளர்களை வெற்றியாளர்களாக அடையாளபடுத்துவதில்லை. மாறாக, இவை அனைத்துமே ஒவ்வரு முயற்சியாளரும் வெற்றிக்கான பாதையில் பயணிக்கும்போது, தன்னகத்தே வளர்த்துகொள்ளவேண்டிய அல்லது கொண்டிருக்கவேண்டிய திறன்கள் ஆகும். நிஜ உலகில் ஒருவரைப்போல இன்னுமொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்குமே, வெவ்வேறான திறமைகளும், திறனும் காணப்படும். ஆனால், வெற்றிபெற்ற எல்லா முயற்சியாளர்களையும் ஏறெடுத்துபார்க்கின், அனைவருக்கும் பொதுவான, அனைவர் இடத்திலுமே உள்ள திறன்களாக மேற்கூறியவை அமைந்திருக்கும் என்பதில் ஜயமில்லை.

Related Articles