அந்த 7 நிமிடங்கள்- செவ்வாய்க் கிரகத்தில் InSight

இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மட்டுமே பூமியில் மனிதர்கள் வாழ முடியும் என்பதே விஞ்ஞானிகளின் கணிப்பாக இருக்கிறது. அப்படி வேறு கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் எங்கே செல்ல முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அதிகமாகக் கவனத்துக்குள்ளாகும் ஒரு கிரகம்தான் செவ்வாய். மற்ற கிரகங்களை விடவும் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அடுத்த 25 வருடங்களுக்குள்ளாக அங்கே மனிதர்கள் கால் பதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசா மட்டுமன்றி உலக நாடுகள் பலவும் செவ்வாயை, தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன. செவ்வாயில் நடைபெற்று வரும் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவிருக்கிறது இன்சைட் விண்கலம்.

https://mars.nasa.gov/insight/

இன்சைட்டின் பயணம்

கடந்த மே 5ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட இன்சைட், சுமார் 6 மாதங்களாக தன் பயணத்தை மேற்கொண்டு 50 கோடி கி.மீ. தூரம் கடுமையான பயணத்தின் பின் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி வெற்றிகரமாக தரை இறங்கியது.

HiRISE இலிருந்து InSight விண்கலத்தின் படம் :mars.nasa.gov/insight/

அந்த 7 நிமிடங்கள்

இன்சைட் செவ்வாய் கிரகத்தின் தரையை தொட்டது ஒரு சுவாரசியமானதும் விறுவிறுப்பானதுமான கதை என்கிறது நாசா. அந்தக் கதைக்கு நாசா,  “இன்சைட்டின் ஆபத்தான 7 நிமிடங்கள்” எனப் பெயரிட்டது. செவ்வாயின் வளிமண்டலத்தினூடே ஒரு பொருள் பயணப்படும் போது அதீத வெப்பம் உருவாகும். அதையெல்லாம் கடந்து விண்கலம் வெற்றிகரமாகத் தரையைத் தொட்டால் அது நிச்சயம் மிகப் பெரிய சாதனைதான். செவ்வாயின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழைவது முதல் தரையைத் தொடுவது வரையிலான காலம் சராசரியாக மொத்தம் 7 நிமிடங்கள்.

அதுதான் இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முதல் படியாக இருந்தது. விண்கலத்தை வெப்பம் தாக்காதவாறு அதற்கான பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டது. விண்கலம் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு மணிக்கு 12,300 மைல் என்ற வேகத்தில் தரையை நோக்கிப் பாயும். அப்பொழுது கவசத்தின் வெளிப்புற வெப்பநிலை ஆயிரம் செல்சியஸை நெருங்கும். சில நிமிடங்களில் அதன் வேகம் மணிக்கு 1000 மைல் என்ற அளவில் குறைந்து, தரைப் பகுதியிலிருந்து 10 மைல் உயரத்தில் இருக்கும் போது சூப்பர்சோனிக் பாராசூட் ஒன்று விரிவடையும். அதன் பிறகு வெப்பத் தடுப்புக் கவசம் பிரிந்து செல்லும். அதனுள்ளே இருக்கும் இன்சைட் விண்கலம் பூஸ்டர்களின் உதவியால் செவ்வாயின் தரைப்பகுதியில் இறங்கும். இது தான் திட்டம். தரையை தொட்டதும் பூஸ்டர்களையும் எஞ்சினையும் சடுதியாக நிறுத்துவதே இத் திட்டத்தில் பெரிதும் சவாலாக இருந்ததாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். இந்த மொத்த நிகழ்வும் நடைபெற்று முடிய 7 நிமிடங்கள் தேவைப்படும். இந்த நிமிடங்களுக்குள்ளாகவே ஆயிரக்கணக்கான செயல்பாடுகள் நடைபெற்றது.

350 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு, சுமார் 7 மாத உழைப்பு, கனவு அனைத்தையும் அந்த ஆபத்தான 7 நிமிடங்கள் நாசாவிற்கு நனவாக்கித் தந்தது. இன்சைட் செவ்வாய் கிரகத்தின் தரையை தொட்டபோது அங்கு கடுமையான புழுதி புயல் வீசியது. இருந்தும் மிக பாதுகாப்பாக இன்சைட் செயற்கை கோள் தரை இறக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்சைட் தனது முதல் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது. புழுதிப் புயல் காரணமாக குறித்த படம் தெளிவாக இல்லை. அதன் பின்னர் செவ்வாயின் தெளிவான மேற்பரப்பு  படம் பூமிக்கு வந்தது. அந்த படங்களை இன்சைட் அந்த நொடியே டுவிட் செய்திருந்தது.

https://twitter.com/NASAInSight/

செவ்வாயில் நாசா

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவன் மேற்கொண்ட பயணங்கள் கண்டங்களையும் தேசங்களையும் தாண்டி அண்டம் வரை சென்றிருக்கிறது. பல்லாயிர வருடங்களுக்கு முன்னர் தமிழன்  அண்டத்தின் விந்தைகளைக் குறிப்பிட்டிருக்கின்றான். அதற்கு நம் ஓலைச்சுவடிகளே சாட்சி. அந்த விந்தைமிகு அண்டவெளியில் ஆண்டாண்டு காலமாக செவ்வாய்க் கிரகத்தின் மீதான மனிதனின் பார்வை  நாளுக்கு நாள் பல கோணங்களை எட்டியபடியுள்ளது. அதன்படி, பூமியை விட பன்மடங்கு பெரிய செந்நிற கோள் என்ற கருத்தில் இருந்து, அக்கிரகத்தின் உண்மைத் தோற்றத்தை நிழற்படம் பிடிக்கும் வாய்ப்பு வரை நிகழ்காலத்தில் வெற்றிகள் சாத்தியப்பட்டிருகின்றது. அடுத்தாக, செவ்வாய்க்கு மனித குடிப்பெயரும் நாள் எப்போது என்று தேடும் அளவிற்கு அபிவிருத்தியடைந்திருக்கின்றது

அந்த வகையில்தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு ‘நீர்’ ஆதாரத்தை கண்டறிய ‘யத்பைண்டர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. 2003ஆம் ஆண்டில் ‘பீகிள் 2’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. 2004ஆம் ஆண்டில் ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது அங்கு தரை இறங்கி நீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்தான், செவ்வாய் கிரகத்தின் உட் பகுதியில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள . 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட ‘இன்சைட்’ என்ற செயற்கைக் கோளை அனுப்பியது.

https://mars.nasa.gov/insight/

‘இன்சைட்’  என்ன செய்யும்?

செவ்வாயின் நிலப்பரப்பை ஆழமாகத் துளையிட்டு ஆராய்வதுதான் இந்த இன்சைட் ஆய்வுக் களத்தின் முக்கிய வேலை. அதற்காக இன்சைட் விண்கலத்தில் பிரத்யேகமான கருவி ஒன்றை வடிவமைத்துப் பொருத்தியிருக்கிறது நாசா. இந்தக் கருவி 5 மீட்டர் ஆழம் வரை நிலப்பரப்பைத் துளையிடும் அதற்காக நாற்பது நாட்களை எடுத்துக்கொள்ளும் இன்சைட். அதன் பிறகு அந்தக் கருவி நிலத்தில் உள்ள அடுக்குகளை ஆராயும். இந்த ஆய்வின் மூலமாக நமது பூமி உட்பட பல்வேறு கிரகங்களின் தோற்றம் பற்றிய பல்வேறு உண்மைகள் தெரிய வரும் என்கிறது நாசா. மேலும் செவ்வாயில் உட் பகுதியில் எரிமலைக் குழம்புகள் இருக்கிறதா அல்லது அதன் உட் பகுதி எந்த நிலையில் இருக்கிறது என்ற தகவல்களும் இன்சைட் நடத்தப் போகும் ஆய்வின் மூலமாகத் தெரிய வரும். செவ்வாய் கிரகத்தின் கணக்குப்படி ஒரு வருடகாலம் இது செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியின் கணக்குப்படி இரண்டு வருடங்களுக்குச் சமமானதாகும். அதன் பிறகு புதிதாக எந்த ஆராய்ச்சியும் இன்சைட் நடத்தாது. அதற்காக இது மொத்தமாகச் செயலிழந்து விடும் என்றில்லை, செயல்பாட்டு காலத்துக்குப் பிறகும் கூடத் தேவைப்படும் சமயங்களில் அதிலிருந்து தகவலை பெறும்படிதான் அதை வடிவமைத்திருக்கிறது நாசா.

மனிதனுக்காக, எதிர்காலம் என்னமாதிரியான விந்தைகளை  ஒளித்து வைத்து விளையாடுகிறது என்பதை விஞ்ஞானம் கண்டு சொல்லுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும் அதற்கான வாயிலை இன்சைட் எட்டிப்பிடித்திருகிறது என்பதுதான் நாசா விஞ்ஞானிகள் உலகம் சொல்லும் செய்தி!

படங்கள் மற்றும் காணொளி உதவி : mars.nasa.gov/insight/

Related Articles