மொட்டக் கடுதாசிக்கு வந்த மவுசு

‘ஜைனலாவுதீன் தவ்ஃபீக்’ என்ற  இளைஞர்தான் இன்று உலகமே வியந்து பார்க்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர். அவரது கண்டுபிடிப்பில் உருவான செல்லக் (செயலி) குழந்தை சாராஹா (Sarahah) இன்று பல நாடுகளில் சமூக வலைதளங்களில் உலவி வருவதோடு  அனைவரது விருப்பத்திற்குரிய செயலியாகவும்  உருவெடுத்துள்ளது. எளிமையாகச் சொன்னால் நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து பெயரிடப்படாத மொட்டக் கடதாசியைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையைத்தான் பல விதிமுறைகளைக் கையாண்டு செவ்வனே செய்து வருகிறது சாராஹா (Sarahah) என்கின்ற இந்தச் செயலி.

முதலில் நவம்பர் 2016 இல் வலைப்பக்கமாக உருவாக்கப்பட்டதுதான் சாராஹா . வழக்கமாக இன்று எந்த ஒரு பெருநிறுவனத்திலும் தரநிர்ணயத்துகான தணிக்கைச் சான்றிதழ் பெறவும், அதன்மூலமாகக் குறைகளைக் களைந்து வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திடவும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேர்மையான பின்னூட்டங்கள்(Feedback) அவசியமாகிறது. ஆனால் பெரும்பாலும் பணியிழப்புக்கு அஞ்சி நேர்மையான பின்னூட்டங்களைப் பலரும் வழங்குவதில்லை. இந்தக் குறையைக் களைவதற்காக முதலில் சவிதியில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் அனைவரும் நேர்மையான பின்னூட்டங்களை வழங்க வழிவகை செய்ய விரும்பித் தவ்ஃபீக்  இந்த வலைப்பக்கத்தை உருவாக்கினார். பிறகு இதைச் செயலியாக இந்த ஆண்டு ஜூன் 13 ஆம் தேதிதான் அறிமுகப்படுத்தினார். இப்போது மூன்றே மாதத்தில் 30 நாடுகளைச் சேர்ந்த 500 மில்லியன் பயனாளர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது சாராஹா. தொழில்நுட்பப் புரட்சியில் சாராஹா நிகழ்த்தியிருக்கும் சாதனையென்றால் அதோடு மொட்டைக் கடிதம் போடுவதையும், பெற்றுக்கொள்வதையும் வெறுத்து வந்த பொதுமனித மனநிலையை முற்றிலும் மாற்றி அதை வேண்டி விரும்ப வைத்து ஒரு புது உளவியல் பண்பாட்டைத் தோற்றுவித்திருப்பதை  மகத்தான சாதனை எனலாம்.

மொட்டைக் கடிதம் போடுவதையும், பெற்றுக்கொள்வதையும் வெறுத்து வந்த பொதுமனித மனநிலையை முற்றிலும் மாற்றி அதை வேண்டி விரும்ப வைத்து ஒரு புது உளவியல் பண்பாட்டைத் தோற்றுவித்திருப்பதும் மகத்தான சாதனை.
படம்: daily nation

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைக் கையாளும் இளைய தலைமுறை இரண்டு விதமான சூழலுக்குள் தங்களது வாழ்வியலைத் தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். எதார்த்த வாழ்வில் நான்கைந்து நெருங்கிய நண்பர்களை மட்டுமே கொண்டிருக்கும் இவர்கள் அனைவரும் முகநூல் (facebook), கட்செவியஞ்சல் (whats app) போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஆயிரக்கணக்கான நண்பர்களோடு அன்றாடம் நெருங்கிப்  பழகி வருகிறார்கள். நட்பு வட்டத்தைப் பெருக்குவதில் தொடங்கி தங்களது விருப்பு, வெறுப்புகள், சாதனைகள், சந்திக்கும் இன்னல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வது வரை அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இவர்கள் அனைவரும் தங்களை ஒரு புகைப்படக் கலைஞராக உருவகப்படுத்திக்கொண்டு எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் தாமி (Selfie) எடுப்பதோடு, அதை உடனே சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி எத்தனை பேர் விரும்புகிறார்கள், என்பதில் தொடங்கி எவ்வகையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்பதுவரை  அளவிற்கு அதிகமான ஆர்வம் காட்டுபவர்களாக மாறி ஒருவகையான மனநிலை பாதிப்பிற்குள்ளாகி விட்டனரென்றால்  அது மிகையல்ல.

நட்பு வட்டத்தைப் பெருக்குவதில் தொடங்கி தங்களது விருப்பு, வெறுப்புகள், சாதனைகள், சந்திக்கும் இன்னல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வது வரை அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
படம்: carole levy

இன்றைய நவீனக் கைப்பேசிகள் தற்படம் எடுப்பதற்குச் சிறப்பான நிழற்படக் கருவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக  போட்டி போட்டுக்கொண்டு விளம்பரப்படுத்திச் சந்தையில் இறங்கியிருப்பதே  இதற்குத் தக்க சான்று. இதற்குக் காரணம் பெரும்பாலும் நேரடியாகத் தங்களது ஆக்கங்களைப் பிறர் புகழ்ந்துரைப்பதை விரும்பாதபோதும் மறைமுகமாக அனைத்து மனிதர்களின் மனமும் இதைப் பெரிதும்  விரும்புகிறது. இந்தச் சிற்றின்பத்திற்கான ஆர்வமிகுதியைத் தூண்டுவதில் மூளையில் நரம்பு மண்டலங்களுக்கு இடையில் சமிஞைப் பரிமாற்றத்திற்கு வேண்டிச் சுரக்கும் டோபமைன்(Dopamine) என்ற வேதிப் பொருள் முக்கியக் காரணியாக விளங்குவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இதன் விளைவாகவே மனிதர்கள் எப்போதும் தங்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த இயல்பான எதிர்பார்ப்பிற்கு மிகவும் இலகுவான வாய்ப்பினை அள்ளித்தருகிறது இன்றைய சமூக வலைத்தளங்கள். அதிலும் சாராஹாவின் மூலம் நம் நட்பு வட்டத்தில் இருக்கும் யாரோ ஒருவரிடம் பெயரிடப்படாத கடிதம் போல வரும் விமர்சனங்கள் என்றால் அதன் அலாதி இன்பமே தனி என்கின்றனர் இதன் பயனாளர்கள்.

இதுபோன்ற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சிலருக்குப் பயனுள்ள நன்மைகளைச் செய்து வருகிறது. உதாரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பொதுநல அமைப்பானsave the smile குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திட வேண்டிய தகவல்களைப் பெறுவதற்கு இந்த ஆண்டு  ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் சாராவைப் பயன்படுத்தி வருவதாக அதன் நிறுவனர் சந்தியன் திலகவதி குறிப்பிடுகிறார்.

 

சென்னையைச் சேர்ந்த பொதுநல அமைப்பான ‘save the smile’ குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திட வேண்டிய தகவல்களைப் பெறுவதற்கு இந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் சாராவைப் பயன்படுத்தி வருவதாக அதன் நிறுவனர் சந்தியன் திலகவதி குறிப்பிடுகிறார். படம்: savethesmiles

ஆனால் பெரும்பாலானோர் தனக்குப் பிடிக்காத நபரைக் கேலி செய்யவும், மாற்றுக் கருத்தை ஏற்றுகொள்ள மனமில்லாது இழிவு படுத்தவும், தன் காதலை நிராகரித்த பெண்ணை அவமதிக்கவும், சகிப்புத் தன்மையின்றி மதம் சார்ந்த, சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை முன்வைத்து அவமானப்படுத்தவும், பெண்களின் மீதான பாலியல் வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளவும், தன் கருத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கவும் எனத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர். ‘sarahah’ என்ற வார்த்தைக்கு அரேபிய மொழியில் ‘நேர்மை’ என்று பொருள்.  ஆனால் நேர்மையை மறந்து சிலர் தங்கள்  ஆழ்மனதில் உள்ள வன்மங்களை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே தவறான விமர்சனங்களையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ள நேரிடும்போது அதை எதிர்கொள்ளும் நபர் பலகீனமானவராக இருக்கையில் விளைவுகள் விபரீதமாகி விடுகிறது.

தங்களது ஆழ்மனதில் உள்ள வன்மங்களை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே தவறான விமர்சனங்களையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ள நேரிடும்போது அதை எதிர்கொள்ளும் நபர் பலகீனமானவராக இருக்கையில் விளைவுகள் விபரீதமாகி விடுகிறது. படம்: mirror.co.uk

இதைத்தான் புறங்கூறுதல் அறத்திற்குப் புறம்பான செயல் என வள்ளுவரும் தனது ‘புறங்கூறாமை’ அதிகாரத்தில்

                       “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 

                        அறங்கூற்றும் ஆக்கத் தரும்.”

                                                                                          -திருக்குறள்-183

என்று முன்னிறுத்துகிறார். ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி இகழ்ந்து பேசுவது புறங்கூறுதல் ஆகும். தன்னலம், கோழைத்தனம், நடிப்பு, ஏமாற்று, வஞ்சகம் போன்றவை புறங்கூறலின் பின்புலக் கூறுகள். கடிந்து கூறுவதையும் இன்சொற்களால் கூற வேண்டும் என்று கருதும் வள்ளுவர் புறங்கூறுவதைப் பெருங்குற்றமென்றே சாடுகிறார். ஆனால் இன்று சாரா போன்ற செயலிகள் மூலம் புறங்கூறுவதும் நவீன உலகின் நாகரீமாகக் கருதப்படுமாயின் அது எத்தகைய மடத்தனம் என்பதை இன்றைய தலைமுறையினர் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

எனவே மனிதகுலத்தின் நன்மை, தீமைக்கு ஏற்றவாறு இதுபோன்ற சமூக வலைதளம் மற்றும் செயலிகளைப் பயன்படுத்த இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அதைப் பயன்படுத்த முற்படுவதைக் காட்டிலும் மிகவும் அவசியம்.

உசாத்துணைகள்:

Sarahah: Our experience with this app

Dopamine

Sarahah for a good cause: A Chennai NGO is using the app to address child sexual abuse

Sarahah: Popular ‘honesty app’ sparks cyberbullying fears as kids post anonymous comments to each other

Related Articles