விளையாட்டுக்களில் சாகசங்கள்

உலகின் பிரபலமான விளையாட்டுக்களாக கிரிக்கட், உதைப்பந்தாட்டம், கரப்பந்து, ரகர், கோல்ஃப் மற்றும் டெனிஸ் ஆகியவற்றை அடையாளப்படுத்தலாம். பொதுவாக இந்த விளையாட்டுக்கள் நம் மத்தியில் பிரபலமானதாகும். ஆனாலும் உலகம் முழுவதும் பெருமளவில் பிரபலமடையாத, ஆனால், கண்டுகளிப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்ற சில விளையாட்டுக்கள் குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்ப்போம்.

பொதுவான நோக்குகளுக்கு அப்பால் சென்றவர்களால் இந்த விளையாட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் பிரபலமடைந்து வருகின்ற இந்த விளையாட்டுக்கள் Extreme Sports அல்லது Adventurous Sports என்று வழங்கப்படுகின்றன. உரிய பயிற்சியுடன், தொழில்வாண்மை ரீதியில் இந்த விளையாட்டுக்களில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகின்றது. இந்த விளையாட்டுக்களில் சாகசமும், விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதால், அதிகளவு உயிராபத்தும் நிலவுகின்றது.  இந்த விளையாட்டுக்களில் ஈடுபடும் விளையாட்டு வீரருக்கு, பெருமளவு தன்னம்பிக்கையும், உடல் பலமும் அவசியமாகும்.

மலையிலிருந்து பாய்தல் (Cliff diving)

படம் – theactivetimes.com

கி.பி. 1770 காலப் பகுதியில் ஹவாய் தீவுகளில் வாழ்ந்த வீரம் செறிந்தவர்களை தெரிவுசெய்வதற்காக, கடலுக்கு அண்மையிலுள்ள 200 மீற்றர் உயரம் கொண்ட மலையில் ஏறி, அதிலிருந்து கடலில் பாயும் போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் இது உலகெங்கும் பிரபல்யம் பெற்றுள்ளது.

இவ்வளவு உயரத்திலிருந்து பாய்கின்றபோது, உடலுக்கு மிகவும் வேதனை ஏற்படுகின்றபோதும், மன ஒருமைப்பாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு, வீரமும், சாகசமும் நிறைந்த இந்த விளையாட்டு அவ்வளவு பெரிய சவாலாக அமைவதில்லை. நீங்கள் காலிக் கோட்டைக்குச் சென்றால் Cliff diving  விளையாட்டை நிச்சயமாகக் காணலாம். ஆனால், இங்கு இது ஒரு போட்டியாக இல்லாமல், வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.

பங்கீ பாய்ச்சல் (Bungee Jumping)

படம் – bucharestapartment.net

இந்த விளையாட்டில், பாலம், உயரமான கட்டிடம் அல்லது மிகவும் உயரமாக சாய்வைக் கொண்ட மலையுச்சிகளிலிருந்து Bungee கயிற்றை கால்களில் வலையலாகக் கட்டிக் கொண்டு, கீழே பாய்வர். கீழே பாயும் நபரின் நிறைக்கேற்ப, Bungee கயிற்றின் நீளம் வித்தியாசப்படும். முன்பெல்லாம் ஒரு நிலையான இடத்திலிருந்துதான் இவ்வாறு பாய்வர். ஆனால், இப்போது விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், சாகச அனுபவத்தைப் பெறும் நோக்கில், காற்று நிரப்பிய பலூன்கள், ஹெலிகொப்டர்கள் போன்ற அசையும் இடங்கிலிருந்து பாய்வதையும் காணலாம்.

இந்த விளையாட்டின்போது, ஒரு வீரர் பாய்கையில், அவரது சக்தி, இயக்க சக்தியாக மாறுகின்றது. அத்தோடு, கயிறு இலுபடும் வகையில் இருப்பதனால், நீண்ட நேரமாக மேலும் கீழுமாக அசைந்து, இந்த சாசக அனுபவத்தை வீரர் பெற்றுக்கொள்வார். 1979 ஏப்ரல் 01 ஆம் திகதி, ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் டேவிட் க்ரயிக் என்பவர், Bristol நகரத்தின் Clifton பாலத்திலிருந்து பாய்ந்ததன் மூலம் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்ததினார்.

அலைச் சறுக்கு (Surfing)

படம் – perfectsunsetschool.com

இலங்கையின்  சுற்றுலா தொழிற்துறை வளர்ச்சியில் பங்கெடுக்கின்ற காரணியாக Surfing ஐ குறிப்பிடலாம். அருகம்பே கடற்கரை இந்த விளையாட்டுக்குப் பெயர்போன ஒரு கடற்கரையாகும். அத்தோடு, அவுஸ்திரேலியாவின் Gold Coast, தென்னாபிரிக்காவின் Jeffery’s Bay ஆகிய கடற் கரைகளும் இந்த விளையாட்டுக்குப் பொருத்தமான பகுதிகளாகும். இந்தக் கடற்கரைகளில் நன்கு அலை எழுவதுதான் இவற்றின் விசேட தன்மையாகும். இவ்வாறு நன்கு எழுகின்ற அலைகளுடன் Surfing Board ஒன்றின் மேல் ஏறி, குனிந்தவாறு அல்லது நேரே நின்றவாறு இந்த விளையாட்டில் ஈடுபடுவர். மிக உயரமாக எழுகின்ற அலைகளுக்கு கீழால் சென்று, இந்த வீரர்கள் பெறுகின்ற சாகச அனுபவத்தை கண்டுகளிப்பதற்கு Surfing அபிமானிகள் பெருமளவு விரும்புகின்றனர்.

பாகர் (Parkour)

படம் – coresites.factorymedia.com

பிரான்ஸைச் சேர்ந்த ரேமன்ட் பெல் என்பவர், 1990 இல் அறிமுகப்படுத்திய Parkour விளையாட்டை, அவரது மகன் டேவிட் பெல் உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி வருகின்றார். இது, அவரும் அவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய Yamakasi, யமகாஸி மற்றும் பாகர் ஆகிய இரு விளையாட்டு அணிகளுக்கு இடையிலான சில சுற்றுப் போட்டிகள் காரணமாக பிரபலமானது.

சுதந்திர ஓட்டம் (free running)  என்றும் வழங்கப்படுகின்ற இந்த விளையாட்டு, பெரும்பாலான திரைப்படக் காட்சிகளுக்காகவும் தற்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஓடுவதற்கு மேலதிகமாக, ஓடும்போது எதிர்வருகின்ற பல்வேறு வகையான தடைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும். எனவே, இந்த விளையாட்டில் ஓடும்போது, உரிய சந்தர்ப்பங்களில் பாய்தல், ரிங் செலுத்தல், புரட்டுதல் மற்றும் கரணம் அடித்தல் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். இந்த விளையாட்டுக்காக தெரிவுசெய்யப்படும் தடைகளைப் பொறுத்து, அதன் சாகசம் அமையும்.

பறத்தல் (Wingsuit flying)

படம் – fmagazineluxury.com

வரலாற்றில் நீண்ட காலமாக, பறக்கும் ஆசை மனிதனுக்கு இருந்து வந்தது. எனவே, பறைவகள் போன்று சிறகுகள் பொருத்திக்கொண்டு, உயரமான இடங்களிலிருந்து கீழே பாய்ந்த சம்பவங்கள் குறித்து நாம் அறிந்திருக்கின்றோம். ஆனாலும், இவ்வாறு பாய்ந்ததனால், அவர்கள் மரணமடைந்ததே வரலாறு. பிரான்ஸில் வாழ்ந்த ஒரு தையற்காரர், 1912இல் பறப்பதற்குப் பொருத்தமான ஒரு ஆடையைத் தைத்து, ஐஃபல் கோபுரத்திலிருந்து பாய்ந்து, பறப்பதற்கு முயற்சி செய்து, மரணமடைந்துள்ளார்.

1990 இல் பெட்ரிக் டி கெயாஹொங் (Patrick de Gayardon) தயாரித்த ஆடை, இதற்குப் பொருத்தமானதாக இருந்தது. இது Birdman ஆடை என்ற பெயரில் உலகெங்கும் பிரபலமானது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆடைகளுள், பறவைகள் போன்று வானில் பறப்பதற்கு, இன்று பயன்படுத்தப்படுவது Wing Suit என்ற ஆடையாகும். இந்த ஆடைப் பகுதிகளின் பரப்பளவு அதிகமாக இருப்பதனால், சுதந்திரமாகப் பறக்க முடியும். இந்த விளையாட்டில் ஈடுபடுவோர், விமானத்திலிருந்து கீழே பாய்ந்து, பறவைகள் போன்று சுதந்திரமாகப் பறந்து, இறுதியில் பரசூட்டை பயன்படுத்தி, கீழே இறங்குவர். படபடப்பையும், மன அழுத்தத்தையும் சிறப்பாக கட்டுப்படுத்தும் ஒரு விளையாட்டாக இதனை வழங்குவர்.

ஸ்கேடிங் (Skating)

படம் – .burnaby.ca

1950 களில் அமெரிக்காவின் கலிஃபோனியா கடற் கரையில் Surfing விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர்கள், கடலில் அலை இல்லாத சந்தர்ப்பங்களில், Surfing இற்குப் பதிலாக மேற்கொள்ள முடியுமான ஒரு விளையாட்டாக இதனை உருவாக்கினர். சக்கரங்கள் பொருத்தப்பட்ட பலகை மீது ஏறி, அவர்கள் முதல் Skateboarding விளையாட்டை உருவாக்கினர். இன்று இந்த விளையாட்டை, வேகமாக வீதிகளிலும், படிகளிலும், படிகளின் கைப்பிடிகளிலும் மேற்கொள்கின்றனர். இந்த விளையாட்டில் ஈடுபடும்போது, சிறியதொரு தவறு இடம்பெற்றாலும், உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்துக்கள் ஏற்படுவதனால், இந்த விளையாட்டில் ஈடுபட முன்னர் சிறந்த முறையில் பயிற்சி பெற வேண்டும்.

இந்த சாகச விளையாட்டுக்கள் குறித்து கட்டுரையை இத்துடன் நிறைவு செய்துகொள்கிறோம். விளையாட்டு வீரர்களையும், அபிமானிகளையும் அச்சமூட்டுகின்ற இந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு, சிறந்த பயிற்சியும், பாரிய தன்னம்பிக்கையும் அவசியம்.

ஆக்கம்: லசந்த குலரத்ன

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

Related Articles