விமானப் பயணங்களுக்கு தயார் செய்துகொள்வது எப்படி ?

பயணம் என்றாலே மனம் குதூகலமாகிவிடும். அன்றாட வாழ்வின் அரைத்த மாவு அலுப்புகளிலிருந்து கொஞ்சம் விடுதலை என்பதால். சாதாரண பயணம் என்றாலே துள்ளாட்டம் போடுபவர்கள், உல்லாசப் பயணம் என்றால் கேட்கவா வேண்டும். உல்லாசப் பயணம் போவதன் முக்கியமான நோக்கங்களில் ஒன்று – நம்மை யார், எவர் என்றே தெரியாத கண் காணாத இடங்களுக்குச் சென்று சுதந்திரமாக நாம் விரும்பியபடியே உலாவிவிட்டு வருவது.

உல்லாசப் பயணம்

இன்றைய சூழ்நிலையில் குடும்பத்துடன் வருடத்திற்கு ஒரு முறையேனும் உல்லாசப் பயணம் செல்வது என்பது அத்தியாவசியத் தேவையாகி பல மாமாங்கங்கள் சென்றுவிட்டன.உல்லாசப் பயணம் என்ற பெயரில் சும்மா பக்கத்து ஊருக்குச் செல்லலாம் என்றால் உங்கள் வீட்டு பூனைகூட உங்களுடன் வராது – காலம் மாறிப் போச்சு பாஸ்!! இப்போதெல்லாம் ரெண்டாவது க்ளாஸ் படிக்கும் குட்டி பொடிசுங்களே வட்ட மேஜை மாநாடு போட்டு அடுத்த கோடை விடுமுறைக்கு எங்கே போவது, ரஷ்யாவா? ரொமாநியாவா? என்று முடிவு பண்ணதாக நேற்றுதான் என் மனைவி சொன்னாள்.

பியர் ப்ரஷர் (Peer pressure) என்று ஆங்கிலத்தில் சொல்வதைப்  போல், பள்ளியில் உடன் படிக்கும் சக நண்பர்/நண்பிகள்  ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு தங்கள் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்று வந்ததைக் கேள்விப்பட்டு உங்களின் பிள்ளைகளும் நச்சரித்ததாலோ,

அல்லது

உங்களின் அலுவலக சக ஊழியர்கள் வெளிநாட்டுக்குச் சென்று வந்ததைச் சொல்லி சீன் மேல் சீன் போட்டு உங்களை உசுப்பேத்தியதாலோ,

அல்லது

‘ஹனிமூனுக்குப் பிறகு மருந்துக்காகவாவது ஏதாவது வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கீங்களா? உங்களைக் கல்யாணம் கட்டிகிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்று உங்களின் தர்மபத்தினியோ அல்லது தர்மபத்தினனோ குமட்டில் குத்தியதால் வெகுண்டெழுந்ததாலோ,

இப்படி எந்தவொரு காரணத்தாலோ நீங்கள் ஏதேனும் ஒரு வெளிநாட்டுக்கு உல்லாசப் பயணம் செல்வதாக முடிவெடுத்ததாக நினைத்துக் கொண்டு, ‘நாம சொல்ல நினைத்ததைக் கேட்க சிக்கினார் ஒருத்தர், நன்றாக வெச்சு செய்வோம்’ என்ற என் மைண்ட் வாய்ஸ் உங்களுக்குக் கேட்கவில்லை என்ற நம்பிக்கையில்……

பில்டப் போதும். மேட்டருக்குப் போவோம்.

Excursion Trip
Excursion Trip (Pic: touregyptclub)

முன்பதிவு

விமானப் பயணம் செய்வது என்று முடிவெடுத்தபின் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் – முன்பதிவு !!

குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்லும்போது எவ்வளவு நாட்களுக்கு முன்பாக பயணத் தேதிகளை முடிவு செய்து முன்பதிவு செய்யமுடியும் என்பது சவாலான விஷயமே. பிள்ளைகளின் பள்ளி விடுமுறை, நமக்கும் நம் துணைக்கும் அலுவலக விடுமுறை எடுக்க முடியக்கூடிய சமயங்கள் போன்ற பல காரணிகள் இடியாப்ப சிக்கலாக இருக்கும். அவற்றை எல்லாம் கஷ்டப்பட்டு தாண்டி விமானப் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்ய முற்படும்போது பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நீங்கள் செல்ல விரும்பும் நாட்டுக்கு உங்கள் ஊரிலிருந்து ஒரே விமானத்தில் நேரடியாகச் செல்ல முடியுமானால் உங்களுக்கு கொஞ்சம் அதிருஷ்டம் உள்ளது என்று கொள்ளலாம். ஆனால் அதிலும் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். நீங்கள் செல்ல விரும்பும் வார நாளில் அந்த நேரடி விமானம் செல்கிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக, சென்னையிலிருந்து மொரிஷியஸ் நாட்டுக்கு உல்லாசப் பயணம் செல்வதாக முடிவெடுக்கிறீர்கள். ஒரு சனிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்று ஒரு வாரம் தங்கி அடுத்த சனிக்கிழமை திரும்பலாம் என்று நினைத்தால், அங்கேதான் பிரச்சனையே.

சென்னையிலிருந்து மொரிஷியஸுக்கு நேரடியாகச் செல்லும் விமானம் நம் விருப்பப்பட்ட நாட்களில் சேவை புரியாது. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான் இந்த நேரடி விமானம் சென்னையிலிருந்து மொரிஷியஸுக்குச் செல்லும். திரும்ப வருவதற்கும் இதே கதைதான் – திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும்தான்.

“முடியாது! முடியாது! எனக்கு பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேண்டும்” என்று நீங்கள் அடம்பிடித்தால், சனிக்கிழமை கிளம்பி அடுத்த சனிக்கிழமை திரும்பி வரவும் விமானங்கள் உண்டு. ஆனால், அவற்றில் விலையும் அதிகம், பயண நேரமும் கூடுதல்.

Tickets
Tickets (Pic: huffingtonpost)

பயணச்சீட்டின் விலையைப் பற்றி

போகும்போதும் வரும்போதும் நேரடி விமானத்தை உபயோகிக்க செவ்வாய்க்கிழமை புறப்பட்டு அடுத்த திங்கட்கிழமை திரும்பி வந்தீர்கள் என்றால், ஒருவருக்கு 38,000 ரூபாய் ஆகும். போவதற்கு ஆறு மணி நேரங்களும் திரும்பும்போது எட்டு மணி நேரங்களும் ஆகும். ‘திரும்பும்போது மட்டும் ஏன் இரண்டு மணிகள் கூடுதலாக ஆகிறதுங்கள்?’ என்று கேட்டால்… வழியில் பெங்களூரில் ஒரு மணி நேரம் நின்றுவிட்டு வரும் (நீங்கள் இறங்கத் தேவையில்லை).

அப்பாடி… முப்பத்தெட்டாயிரங்களா? என்று வாயைப் பிளந்தால்… இன்னும் இருக்கிறது.

சனிக்கிழமை புறப்பட்டு மீண்டும் அடுத்த சனிக்கிழமை திரும்பி வரவேண்டும் என்றால், ஒருவருக்கு 51,000 ரூபாய் ஆகும். போவதற்கு பதின்மூன்று மணிகளும் திரும்புவதற்கு பதினான்கு மணிகளும் ஆகும். இடையில் ஏதேனும் ஏர்போர்ட்டில் மூன்று முதல் ஆறு மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். அதிலும் உங்கள் கைப்பெட்டியை வைத்துக்கொண்டு.

இதனால்தான், எந்தெந்த நாள்களில் விடுமுறை எடுப்பது என்பதை முடிவு செய்யும் முன்னரே விமானத்தின் அட்டவணையைப் பார்ப்பது சாலச் சிறந்தது.

Amazes (Pic: womensweb)

கவனிக்க வேண்டியவைகள்

விமானம் பறக்கும் நேரமே ஐந்து முதல் ஏழு மணி நேரங்கள் இருந்தாலோ அல்லது இடையில் வேறொரு ஏர்போர்ட்டில் நாலைந்து மணி நேரங்கள் இருந்துவிட்டு அடுத்த விமானம் ஏறினாலோ உணவு பற்றி சிந்திக்க வேண்டும் அல்லவா?

விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது அந்த டிக்கெட்டில் விமானத்தில் (கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி) உணவு வழங்குவார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைக்கு பற்பல இணைய தளங்கள், அலைபேசிச் செயலிகள் வந்துவிட்டன, விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான ஆப்ஷன்கள் காட்டப்படுகின்றன. உணவு பற்றி தெளிவாக சொல்லப்படாவிட்டால் இலவச உணவு இல்லை என்பதே அர்த்தம். சில விமானங்களில் (சில இணைய தளங்களில், செயலிகளில்) நீங்கள் கூடுதலாக பணம் செலுத்தி உணவையும் டிக்கெட்டுடன் சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். “இதைப் போய் யாராவது முன்பதிவு செய்வார்களா? விமானத்தில் இருக்கும்போது பசித்தால் அந்த சமயத்தில் பணம் செலுத்தி சாப்பிட்டுவிட்டுப் போகிறேன்” என்றாலும் சரி – ஆனால் டிக்கெட்டுடன் உணவை முன்பதிவு செய்யும்போது மலிவாக இருக்கும், விமானத்தில் அதே உணவுப்பொருள் கொள்ளை விலையாகிவிடும்.

Food
Food (Pic: boardingarea)

பயணப்பெட்டியின் நிர்ணயிக்கப்பட்ட எடை

இதில்தான் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு பத்து முறை எல்லாவற்றையும் சரி பார்த்து மிகவும் கவனமாக முன்பதிவு செய்யும் நானே சறுக்கியதுண்டு, இந்த விஷயத்தில்.

பொதுவாக பார்த்தால், விமான டிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட பயணப்பெட்டிகள் (ஒரு டிக்கெட்டுக்கு) இரண்டு. கையுடனே தன்னுடன் பயணி விமானத்தில் எடுத்துச் செல்வது, Hand baggage எனப்படும் கைப்பை. மற்றொன்று பெட்டிகளுடன் அவற்றுக்கான தனி அறையில் வைக்கப்பட்டு எடுத்துச் செல்வது, Check-in baggage எனப்படும் சரக்கு பை. இவற்றின் நிர்ணயிக்கப்பட்ட எடையளவு முறையே 7 கிலோ மற்றும் 15 முதல் 30 கிலோ.

உள்நாட்டு விமானங்களில் பெரும்பாலும் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு, இருப்பினும் முன்பதிவு செய்யும்முன் சரியாக உறுதிபடுத்திக் கொண்டே முன்பதிவு செய்யுங்கள்.

வெளிநாட்டுக்குச் செல்லும் விமானங்களில் முன்பதிவு செய்யும்போது இதைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டே முன்பதிவு செய்யுங்கள். பல விமானங்களில் உங்கள் டிக்கெட்டில் வெறும் கைப்பைக்கு மட்டும்தான் அனுமதி இருக்கும், சரக்கு பைக்கு கூடுதலாகக் கட்டணம் தரவேண்டி இருக்கும். சில விமான நிறுவங்களின் இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சரக்கு பைக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்தும் வசதி இருக்கும். ஆனால் விமான நிறுவனங்களின் இணையத்திலோ, செயலியிலோ நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்தால் அதன் விலை அதிகமாக இருக்கும் என்பதால் முன்பதிவு செய்யவென்றே பிரத்தியேகமாக இருக்கும் இணையங்கள்/செயலிகளில் முன்பதிவு செய்யும்போது அவற்றில் சரக்கு பைக்கு கூடுதலாக கட்டணம் செலுத்தும் வசதி இருக்காமலும் போகலாம். அவ்வாறு இருப்பின், நேரடியாக அந்த இணையங்கள்/செயலிகளின் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்து விடுங்கள். அவ்வாறு தொடர்பு கொண்டால் கூடுதல் கட்டணத்தை வாங்கிக்கொண்டு அவர்களே சரக்கு பைக்கும் அனுமதி வாங்கித் தந்துவிடுவார்கள். அதைச்செய்ய மறந்து விட்டால், ஏர்போர்டில் விமானச் சீட்டு வாங்கும் சமயம் கூடுதல் கட்டணம் செலுத்தலாம், ஆனால் அதன் விலை அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பயணப்பெட்டியின் எடை பற்றி முடிக்கும் முன்பே இன்னொரு விஷயமும் முக்கியமானது, அதைப்பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

ஏதேனும் வெளிநாட்டுக்கு ஒரு வாரமோ அதற்கு மேலோ உல்லாசப் பயணம் செல்கிறீர்கள் என்றால், முடிந்த வரையில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள், இடங்கள் அனைத்தையும் பார்த்துவிட வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள். அதனால் அந்நாட்டிற்குள்ளேயே இரு நகரங்களுக்கு இடையிலும் விமானப் பயணம் செய்யவேண்டிய சூழல் எழலாம். நேரத்தை மிச்சப்படுத்தி துரிதமாக சில நாட்களிலேயே பலவிதமான இடங்களைப் பார்க்க அவ்வாறு பயணப்பட வேண்டி இருக்கும். அதுபோன்ற சமயங்களில் (வெளிநாட்டின்) உள்நாட்டு விமானப் பயணத்தை முன்பதிவு செய்யும்போதும் அந்த பயணச் சீட்டின் விதியைக் கவனியுங்கள் – வெறும் கைப்பைக்கு மட்டும்தான் அனுமதியா? சரக்கு பைக்கும் அனுமதி உண்டா? உண்டெனில் எத்தனை கிலோ வரைக்கும் எடுத்துச் செல்லலாம்? பல (உள்நாட்டு) விமான நிறுவனங்கள் அடிப்படை விலையைக் குறைத்து விற்கிறோம் என்ற பெயரில் சரக்கு பைக்கு அனுமதியில்லாமல் டிக்கெட்டின் விலையை நிர்ணயித்துவிடுவார்கள். மேலும் சரக்கு பைக்கு அனுமதி அளித்தாலும் அதன் நிர்ணயம் செய்யப்பட்ட எடை எப்போதும் ஒரே அளவு இருக்காது. அதனால்தான் சொல்கிறேன், இதுபோன்ற எல்லா விஷயத்தையும் தோண்டித் துருவி தூர் வாரி ஒருமுறைக்கு இருமுறை தீர விசாரித்து முன்பதிவு செய்யுங்கள்.

அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் – இரு குழந்தைகளுக்கு இடையில் மட்டுமல்ல, பயணத்திலும் இடைவெளி போதுமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இது ஏதோ இரு (உல்லாசப்) பயணங்களுக்கு இடையில் ஓய்வுக்காக விடவேண்டிய இடைவெளியைப் பற்றி சொல்கிறேன் என்று அர்த்தமல்ல. வெகு தொலைவில் இருக்கும் நாட்டுக்கு பயணப்படுகிறீர்கள் எனில் நேரடியாகச் செல்லும் விமானத்தில் இல்லாமல் இடையில் ஏதேனும் நகரத்தின் ஏர்போர்டில் காத்திருக்க வேண்டிய இடைவெளியைப் பற்றி சொல்கிறேன். அவ்வாறு இருக்க நேரிடும்போது ஓரிரு மணி நேரங்களே போதுமா? இல்லை நிறைய நேரம் தேவைப்படுமா? என்று அறிந்து கொண்ட பின்னரே முன்பதிவு செய்யுங்கள். ஏனெனில், முதல் விமானம் வந்திறங்கும் முனையமும் (Terminal) அடுத்து ஏறவேண்டிய விமானம் புறப்படும் முனையமும் ஒன்றாக இல்லாமல் வேறு வேறாக இருந்து, மேலும் அவை சற்றே தொலைவில் இருந்தால், தொலைந்தது உங்கள் பாடு. லொங்கு லொங்கென்று ஓட வேண்டும். பல விமான நிலையங்களில் வெவ்வேறு முனையங்களுக்குச் செல்ல வேண்டியே புகைவண்டி, பேருந்து போன்ற வசதிகள் இருக்கும். எனினும் அவை பயணிகளை ஏற்றிக்கொள்ளும் நிறுத்தத்திற்குச் செல்வதற்கே அரை மணி நேரம் நடக்க வேண்டியிருக்கும் (விமான நிலையத்திற்கு உள்ளேயேதான்). பொதுவாக விமானங்களின் அட்டவணையையே இதுபோன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் தயாரித்து இருப்பார்கள். ஆனாலும் நாம் செல்லவேண்டிய விமானங்களுக்கு இடையில் போதிய இடைவெளி உள்ளதா எனப் பார்த்து முன்பதிவு செய்ய வேண்டியது நம் பொறுப்பு.

Passengers
Passenger (Pic: fortune)

இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு விமானப் பயணத்தை முன்பதிவு செய்து நிறைய பயணங்கள் செய்ய ப்ராப்திரஸ்து !!

                        Web Title: Air Trip Planning

               Featured Image Credit: Writer Himself

Related Articles