Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள்

என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.)

சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா? என்றார், நான் சற்று பந்தாவாய்  ஓ! ஒத்தக்கடை யானை மலை, திருப்பருங்குன்றம் என்று மேதாவித்தனம் காட்டினேன்.

சமணர் மலை மதுரை (vivaciousanushri.files.wordpress.com)

கீழவளவு பஞ்ச பாண்டவர் மலை, பொக்கிஷ மலை, அரிட்டாபட்டி மலையை பார்த்தது உண்டா? என்றார், இல்லை என்றேன். உலகம் சுற்றும் எண்ணம் சிறந்ததுதான்! ஆனால் சொந்த உரைப்பற்றி தெரிந்த பின் சுற்றலாமே என்றார்.

அதற்குப் பின் அவர் பேசிய எதுவும் காதுகளில் கேட்கவில்லை. எப்படியோ சமாளித்து அலைபேசியை வைத்து விட்டேன். ஆனால், எந்த வேலையும் ஓடவில்லை எனக்கு,இரண்டு உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் கூடச் சொல்லாமல் 10 மணிநேர பயணத்திற்குப்பின் வீட்டை அடைந்தேன்.

விடியற்காலையில் யார் கதவை தட்டுகிறது? என்ற சந்தேகத்தில் கதவை திறந்த அம்மாவுக்கு அதிர்ச்சி, என்னாச்சுப்பா! என்று பதறினாள். காரணம், சினிமாவில் இயக்குனர் ஆகவேண்டும் என்று சென்னை வந்தபின் குலதெய்வ வழிபாடு, உறவினர் திருமணம் என்று எதற்கும் ஊருக்கு வராத மகன், இப்படி வந்து நிற்கிறானே என்ற பயம் அம்மாவின் குரலில் தெரிந்தது.

அரிச்சந்திரனின் 2017இன் பிரதிநிதி என்ற நினைப்புடன் குடைவரைக் கோவில் தேடி வந்ததை சொல்ல, அடுத்த அரைமணி நேரத்திற்கு என் அம்மா திட்டிய வார்த்தைகளை வாசகர்கள் நலன் கருதி நீக்கி விட்டேன். (துடைப்பம் தேடியது தனிக்கதை) ஒரு வழியாக விடிந்ததும் அம்மாவின் கண் படாமல் நண்பனுடன் பயணம் ஆரம்பமானது.

நண்பனிடம் பஞ்ச பாண்டவர் மலை போவோம் என்றதும், நீதான் “தண்ணி” அடிக்கமாட்டியே? அங்க எதற்கு என்றான்.  முறைத்தபடியே ஊர் வந்த வரலாறு சொல்லிகொண்டு வாகனத்தை செலுத்த, மேலூரில் இருந்து 13 கி.மீ தொலைவில்தான் இருந்திருக்கிறது மலை. எப்படி தவறவிட்டோம் என்ற கேள்வியுடன் மலையேறினோம்.

பஞ்சபாண்டவர் மலை/சமணர் மலை மதுரை (visittnt.com)

குறைந்த அளவிலான சிற்பங்கள் தான் செதுக்கப்பட்டிருந்தாலும் அனைத்தும் புடைப்புச் சிற்பங்கள், அந்த மலை குடையப்பட்ட விதம் பம்பரம் போன்ற காட்சியைத் தந்தது, மலையின் உள்ளே படுக்கைகள் போன்ற அமைப்புக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அருகில் ஆடு மேய்த்த பெரியவரை அழைத்து விசாரித்தோம்.

“தம்பி கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி, இந்த மலையில் சில கல் தூண்களை கட்டி மலையை பாதுகாக்கறோம்-னு சொன்னாங்க. (ஆம் தொல்லியல் துறை வைத்த கல் தூண்கள் இருக்கிறது மற்றபடி எந்த வகையான பாதுகாப்பும் இல்லை! மது குடிக்கும் இடமாக மாறி உள்ளது என்பதை அங்கு கிடக்கும் கண்ணாடிக் குப்பிகளை வைத்து ஊகித்துக்கொள்ளலாம்). இதற்காகத்தான் நண்பன்நீதான் “தண்ணி” அடிக்கமாட்டியே? என்று கேட்டிருக்கிறான்) அங்க வந்த அதிகாரி ஒருத்தர்தான் சொன்னாரு இந்த மலையில் இருக்கும் சிற்பங்கள் 2,300 ஆண்டுகள் பழமையானது என்று, இங்க சமணத் துறவிகள் தங்கி பாடம் படுச்சாங்களாம், சொல்லியும் குடுத்தாங்களாம்! அவுங்க தங்கறதுக்குதான் இந்த படுக்கைகள்” என்றார்.

பிராமி தமிழ் எழுத்துக்கள் (kowthamkumark.files.wordpress.com)

அங்கு புரியாத மொழியில் எதோ எழுதி இருப்பதை காட்டி இது பற்றி எதாவது தெரியுமா? என்றோம்.

“இப்ப இருக்க தமிழுக்கு முன்னாடி இப்படித்தான் இருந்துச்சாம்! பேர் கூட பரமி-னு எதோ சொன்னாங்க” என்றார்,

நண்பன் குறுக்கிட்டு “பிராமி” தமிழ் எழுத்துக்களா? அய்யா என்றான், ஆமாப்பா என்றார். ஆனால் அத்தனை எழுத்துகளும் பக்க நேர்மாறலாக இருக்கிறது கண்ணாடியில் பார்த்தால் நேராக தெரிகிறது. எதற்காக இப்படி எழுதியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

இந்த இடம் சமணத் துறவிகள் கல்வி பயிற்றுவித்த இடம், பின் மக்கள் பயன்படுத்தும் இடமாக மாறி உள்ளது என்பது புரிந்தது, “நீங்க அரிட்டாபட்டி போங்க தம்பி அங்க கோயிலே உள்ளது” என்றார் அந்த அய்யா, உடனே அரிட்டாபட்டி சென்றோம்.

மேலூரில் இருந்து 10 கி மீ தூரத்தில் உள்ளது அரிட்டாபட்டி. ஊருக்குள் சிறிது தூரம் சென்ற பின் பெரிய “கண்மாய்” தாண்டி மலையில் படிகட்டுகள் தெரிந்தன. முன்பெல்லாம் கண்மாயில் இறங்கித்தான் செல்லவேண்டுமாம் இப்பொழுது தனிப்பாதை அமைந்துள்ளது என ஊர் மக்கள் சொல்ல கோயிலை அடைந்தோம்.

கோயிலை பார்த்தபோது மகிழ்சியாக இருந்தது. காரணம், கோயிலின் முகப்பில் கோவிலின் வரலாறு கல்வெட்டாக உள்ளது. நல்ல பராமரிப்பு உள்ளது என்று பார்த்ததும் தெரிந்தது. கோயில் மூலவர் லிங்க வடிவில் உள்ளார். வெளிப்புறச் சுவற்றின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் “இலகுலீசர் ” சிலையும் செதுக்கப்பட்டிருந்தன. இந்த இலகுலீசர் சிவனின் 64 வடிவங்களில் 28 ஆவது ஆகும். இலகுலீசர் சிலை காண்பதற்கு அரிது என்பதால் வியப்பாக இருந்தது.

அரிட்டாபட்டி குகை (cpreecenvis.nic.in)

கோயில் அர்ச்சகரிடம் பேசினோம். சமணத் தீர்த்தங்கரர்களில் 22 வது தீர்த்தங்கரரான  “நேமிநாதர் ” என்பவருக்கு “அரிட்டநேமி” என்ற பெயர் இருந்ததாகவும், அவர்தான் இவ்வூரின் பெயருக்குக் காரணம் என்றும், இங்கும் 2000 ஆண்டுகளுக்கு முந்தய தமிழ் எழுத்துக்கள் உள்ளதெனவும் இங்கும் சமணர்கள் கல்வி பயின்றதாகவும் சொன்னார். தொல்லியல் துறையின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சியாக பேசிய போது, கோபமடைந்த பூசாரி;

“தம்பி, ஆசியாவிலேயே அரிதான மலைகளில் ஒன்றாம் இது (ரெட் கிரானைட்).  ஒரு பெரிய தனியார் கல் குவாரிக்கி வெட்டி எடுக்க அனுமதி கொடுத்துருச்சு அரசாங்கம், ஆரம்பத்தில் எங்களுக்கு பெருசா ஒன்னும் தெரியல ஆனா நம்ம “சக்கரை பீர்” மலைக்கு நேர்ந்த கெதி எங்க இந்த மலைக்கும் வந்துருமோனு பயந்துட்டோம்.”

(ஆரம்பத்தில் அந்த அலைபேசி நண்பர் சொன்ன பொக்கிஷ மலையின் மறு பெயரே சக்கரை பீர் மலை 80 ஏக்கர் மலையை 45 ஏக்கர் வெட்டி எடுத்து விட்டனர். எவ்வளவு பாரம்பரிய வரலாறுகள் கழிவறை கிரானைட்டாக மாறிவிட்டதோ! இப்பொழுது அங்கு ஒரு பள்ளிவாசல் மட்டுமே உள்ளது. இரு மத மக்களும் வழிபடும் இடமாக இருந்துள்ளது அந்த மலை).

போராட்டம் பண்ண ஆரம்பிச்சோம், காவல்துறை வச்சு பொய் வழக்கு போடுவோம்னு சொன்னாங்க. நம்ம ஊருல இருக்க சில முக்கிய புள்ளிகள கூப்பிட்டு கோடிகளில் பேரம் பேசுனாங்க, இதுக்கு மேல எதாவது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் எங்க நிலமையை சொன்னோம். அவர்தான் இதை பெரிய அளவில் கொண்டு போனார். அவர் கொடுத்த தகவல் தமிழ் நாட்டையே திரும்பி பாக்க வைத்தது.

கிரானைட்டுக்காக வெட்டியெடுக்கப்பட்ட பொக்கிஷ மலை (frontline.in)

16,000 கோடி இழப்பு தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கு. அவ்வளவு ஊழல். அரசு சொன்ன எந்த விதிமுறையும் பின்பற்றப்படல, இதுவரை 46 குளங்களை கிரானைட்டால் மூடியுள்ளது அந்த நிறுவனம். மலையை சுற்றியுள்ள வீடுகளையும், நிலங்களையும் விலைக்கு கேட்கப்படும், இல்லையேல் மிரட்டி பறிக்கப்படும் அதைவிட கொடுமை குவாரிக்கு “நரபலி ” கொடுக்கப்பட்டது எனவும் தகவல். மொத்தம் 96 வழக்கு அந்த நிறுவனத்தின் மீது போடப்பட்டது. விளைவு அந்த கலெக்டர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார், மேலூர் நீதிமன்றம் அந்த நிறுவனத்தை விடுதலையும் செய்துள்ளது. ஏதோ சினிமா கதை கேட்ட உணர்வு எங்களுக்கு! அதிகாரி, அரசியல்வாதி, நீதிபதி வரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது அந்த நிறுவனம்.

அப்பறம் என்ன ஆச்சு என்று இருவரும் ஒன்றாக அவரிடம் கேட்க, மறுபடியும் போராட்டம் பண்ணோம் உச்ச நீதி மன்றம் அந்த நீதிபதியை நீக்கிடாங்க, அந்த கலெக்டர் (சகாயம்) தலமையில் மறுபடியும் விசாரனை நடக்குது, அந்த நிறுவன முதலாளி இப்பொழுது சிறையில்.

ஒரு நாள் டிஸ்கவரியில் மேன் வொய்ல்ட் நிகழ்ச்சியில், ஒரு காட்டில் 2000 ஆண்டுகள் முன் வாழ்ந்த காட்டுவாசி மக்களைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டு இருந்தார் “பேர்ஹில்ஸ்”, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியின் ஒரு பகுதி மக்கள் காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்த போது இங்கு ஒரு இனம் பள்ளிகூடம் வைத்து கல்வி போதித்துள்ளது என்றால் எவ்வளவு உயர்ந்த ஓர் வாழ்க்கைச் சூழலை கொண்ட இனம் நம் தமிழ் இனம். ஆனால் அதை பாதுகாக்க நாதி இல்லை!, முயன்றாலும் மறுபடி உருவாக்க இயலாத பொக்கிஷங்களை இப்படி பொறுப்பே இல்லாமல் தாரைவார்த்துக்கொண்டு இருக்கிறோம், எம் முன்னோர்களின் ஆன்மா நம்மை மன்னிக்கவே மன்னிக்காது! என்று புலம்ப, “என்னடா! 5 மணிக்கு இப்படி வெயில் அடிக்கிறது” என்றான் நண்பன் இயற்கையின் பதிலடி இப்படி தான் இருக்கும் என்றேன்.

முறைத்துக்கோண்டே, டேய்! நீயே ஒரு ஊர் சுத்தி உனக்கே தெரியாத கோயில்கள் எல்லாம் ஒருத்தர் சொல்லியிருக்காருனா! அவர் எவ்வளவு கோவில் போயிருப்பாறு? அவர் பேர் என்ன பங்காளி? என்றான், அவர் பெயர் “உசேன் முகமது” என்றதும் புருவம் உயர்த்தி ஒரு ஆச்சர்யப் பார்வை பார்த்தான் பார்த்தான்! நண்பன் தலையில் ஒரு தட்டு தட்டி அடுத்த மலையை நோக்கி வாகனத்தை செலுத்தினேன்.

Related Articles