ஐம்பதாயிரம் ரூபாயில் உல்லாசப் பயணம் செல்ல முடியும் ஆசிய நாடுகள் பாகம் 1

“ஐம்பதாயிரமா !!!!! ஒருவருக்கா அல்லது ஒரு குடும்பத்துக்கா? வெளிநாட்டுப் பயணம் என்பதற்காக இத்துணை பணம் செலவு செய்ய வேண்டுமா?”

இப்படி கேட்டீர்கள் என்றால்….

4 முதல் 7 நாட்கள் பயணம், போக/வர விமானக் கட்டணம், தங்க, சரியான அறை, ருசியான உணவு, சுற்றிப் பார்க்கும் செலவு என்று ஒட்டுமொத்தமாக (இந்தியர்) ஒருவருக்கு ஐம்பதாயிரம் மட்டும்தான் என்றால் சந்தோஷப்படுங்கள்.

கீழ்வரும் எல்லாவற்றுக்கும் பொதுவான விடயங்கள் இவை. நாலைந்து மாதங்களுக்கு முன்பே விமானச் சீட்டை முன்பதிவு செய்தால் மலிவாகக் கிடைக்கும் (சென்னையிலிருந்து போக/வர விலை கொடுத்துள்ளேன்). கடவுச் சீட்டின் (பாஸ்போர்ட்) கால வரையறை குறைந்தது ஆறு மாதம் இருக்க வேண்டும், அதில் ஓரிரு பக்கங்கள் காலியாக இருத்தல் நலம். விடுதிகள் மலிவுதான், எனினும் நல்ல தரமான ஹோட்டல் அறைகளையும் கணக்கில் கொண்டுதான் செலவைப் பற்றி சொல்லியிருக்கிறேன் (ஓரிரவு இருவர் தங்க). செலவு செய்யும் வரைமுறை ஒருவருக்கொருவர் மாறுபடும் என்பதால் சில பல ஆயிரங்கள் வித்தியாசம் வரும். சிங்கப்பூர், மலேசியா போன்ற, தடுக்கினால் எல்லோரும் போகும் நாடுகளைத் தவிர்த்து நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாத நாடுகளைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.

கம்போடியா

ஒன்பது நூற்றாண்டுகள் பழமையான கோயில்களைக் கொண்ட நாடு.

விமானச் சீட்டு 22,000 வரையில் ஆகும்.

தங்கும் அறை 1,500 ரூபாய் ஆகும்.

விசா செலவு 4,200 ரூபாய்.

“ஃப்னோம் பென்ஹ்” இருந்து “சியாம் ரீப்” சென்று திரும்பும் பேருந்து கட்டணம் 2,500 ரூபாய், இவ்விரு நகரங்களும்தான் முக்கியம். ஒரே நகரம் செல்வது சுலபம் என்றால், “சியாம் ரீப்” மட்டுமே செல்லுங்கள் (நான்கு நாட்கள் போதும்).

உணவு மலிவாகக் கிடைக்கும் மற்றும் உள்ளூர்ப் போக்குவரத்து, சுற்றுலா கட்டணங்கள் எல்லாம் ஒரு வாரத்திற்கு 7,000 முதல் 10,000க்குள்ளேயே அடக்கலாம்.

Angkor Wat (Pic: cambodia-hotels)

வியட்நாம்

பரந்து விரிந்த மலைகள்/ஏரிகள், பசுமையான புல்வெளிகள் என்று பார்க்கவே இயற்கை எழில் கொஞ்சும்.

விமானச் சீட்டு 25,000 மற்றும் விசா 2,500 ஆகும்.

நல்ல அறை 1,000 ரூபாய்க்கே கிடைக்கும்.

“ஹோ சி மின்” இருந்து “ஹனோய்” சென்று திரும்பும் மலிவு விலை விமானத்தில் கட்டணம் 4,200, இவ்விரு நகரங்களும்தான் முக்கிய  இடங்கள். செலவு அதிகம் ஆகிறதெனில் ஒரே நகரம் மட்டும் செல்லுங்கள் (ஐந்து நாட்களாவது வேண்டும்).

உணவு, உள்ளூர்ப் போக்குவரத்து, சுற்றுலா கட்டணங்கள் எல்லாம் ஒரு வாரத்திற்கு 10,000 முதல் 15,000க்குள்ளேயே அடக்கலாம்.

North Vietnam Coastal Cruising (Pic: peregrinetraveladelaide)

லாவோஸ் (அல்லது) லாவ்ஸ் [Laos]

பெரும்பாலானோர் கேள்வியேபட்டிருக்காத நாடு. இதுவரை பலர் பார்த்திராத, அதே சமயம் நல்ல இயற்கை வளங்கள் உள்ள நாட்டைப் பார்க்கும் ஆசை இருந்தால் லாவோஸை குறித்துக் கொள்ளுங்கள். ‘இந்த வருடத்தில் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தியே தீருவது’ என்று இதன் அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளது.

விமானச் சீட்டு 25,000 வரையிலும், விசா 2,000 ரூபாயும் ஆகும்.

1,500க்கு அறை கிடைக்கும்.

உள்ளூர் போக்குவரத்துகள் அவ்வளவு வசதியாக இருக்காது, ஒரேயோர் நகரம் மட்டும் சென்று வரலாம். நாலைந்து நாட்கள் போதும்.

பிற செலவுகளை 10,000ற்குள் அடக்கலாம்.

Laos (Pic: indochinatour)

இந்தோனேஷியா

பாலி, ஜகர்தா, ஜாவா, சுமத்ரா போன்ற பல சிறு தீவுகளைக் கொண்டதுதான் இந்நாடு, சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலம்.

விமானக் கட்டணம் 22,000 வரையிலேயே முடிக்கலாம்.

அறை 1,000 முதல் 1,500 ரூபாய்க்கு கிடைக்கும்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் – முப்பது நாட்கள் வரை உல்லாசப் பயணம் செல்ல விசா செலவே இல்லை!

பிற செலவுகளை ஒரு வாரத்திற்கு 13,000 முதல் 18,000க்குள்ளேயே அடக்கலாம்.

ஒரே நகரம் மட்டுமல்லாமல் பிற நகரங்களுக்கும் செல்ல வேண்டும் என்றால்தான் அதிகமாகச் செலவாகும்.

Bali (Pic: timeshighereducation)

தாய்லாந்து

பாங்காக், படாயா, புக்கட் என்று பிரபலமான இடங்கள் உள்ளன.

17,000க்கே விமானச் சீட்டு கிடைக்கும்.

தரமான அறை 1,500 ரூபாயாவது ஆகும்.

விசா முன்னரே எடுத்தால் 2,500 ரூபாயும், அங்கு சென்று எடுத்தால் 4,000 வரையிலும் ஆகும்.

கடற்கரையில் விளையாட்டுகள் (Water sports) பிரபலம், உங்களது கையிருப்பு விகிதத்தைப் பொருத்து செலவு செய்யலாம். பிற செலவுகளை 15,000 முதல் 18,000 வரையில் முடிக்கலாம். ஒரே நகரத்தில் ஒரு வாரம் தேவைப்படாது – இரண்டு/மூன்று இடங்களாவது பார்த்துவிடுங்கள், ஒரு வாரம் தங்குவதாக இருந்தால்.

Bhuddha Statue (Pic: bbc)

பூடான்

இயற்கை எழில் கொஞ்சும் இந்த நாட்டை வாழ்நாளில் நிச்சயம் ஒரு முறை பாருங்கள். புத்த மடாலயங்களைத் தவிர்த்து மலைத் தொடர்கள், அருவிகள் என்று இயற்கையுடன் பின்னிப் பிணைந்த நாடு. இங்கு இருக்கும்போது மனதில் தானாகவே அமைதி குடி கொள்ளும் என்பது பயணிகளின் நம்பிக்கை.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லாத நாடு, வாக்காளர் அடையாள அட்டை கொண்டே உள்நுழைய அனுமதி தருவார்கள்.

விமானத்தை விட தரை வழிப் பயணமே சிறந்தது. முதலில் மேற்கு வங்கத்திலுள்ள பாக்டோக்ரா (Bagdogra) விமான நிலையத்திற்கு செல்லுங்கள் (சென்னையிலிருந்து சென்று வர 12,000 ஆகும்). அங்கிருந்து பூடானின் தலைநகர் திம்பு 300 கி.மீ. உள்ளது. பாரோ நகரத்திற்கு விமானம் செல்கிறது, வாரத்திற்கு இரு முறை மட்டும். போக வர 15,000 ஆகும். பாக்டோக்ராவிலிருந்து வாடகை மகிழுந்து (Taxi) பிடித்தால் நாலைந்து மணி நேரங்களில் எல்லையைத் தொட்டுவிடலாம் (3,000 ரூபாய் ஆகும்). அங்கிருந்து பேருந்தோ வேறொரு மகிழுந்தோ பிடித்து பாரோவோ திம்புவோ செல்லுங்கள்.

அறை 1,500 ரூபாய்க்கு கிடைக்கும்.

பிற செலவுகளை ஒரு வாரத்திற்கு 15,000 முதல் 20,000க்குள் அடக்கலாம்.

Bhutan (Pic: tourism)

பர்மா (அல்லது) மியான்மர்

விமானக் கட்டணம் 25,000 வரையும், விசா 7,700 வரையும் ஆகும்.

ஒரு காலத்தில் யுத்த பூமியாக இருந்தது. இப்போது உல்லாசப் பயணிகளின் விருப்பமாக உள்ளது. பழம் பெருமை வாய்ந்த கோயில்கள், அழகிய ஏரிகள், வயல் வெளிகள், மலைமுகடுகள் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் நாடு. நிச்சயம் ஒரு முறையாவது காண வேண்டிய நாடு.

1,500 முதல் 2,000க்குள் அறை கிடைக்கும்.

கூட்டி கழித்துப் பார்த்தால் சராசரியாக ஒருவருக்கான ஒரு நாள் செலவை 2,000க்குள் அடக்கலாம் – உணவு, உள்ளூர் போக்குவரத்து எல்லாம் சேர்த்து.

Burma (Pic: tripsavvy)

நேபாளம்

தரை வழியாகவே செல்லலாம். விமானக் கட்டணம் 23,000 வரை ஆகும். அல்லது, முதலில் மேற்கு வங்கத்திலுள்ள பாக்டோக்ரா (Bagdogra) விமான நிலையத்திற்கு செல்லுங்கள் (முன்பே சொன்னேன்). அங்கிருந்து நேபாளம் 25 கி.மீ. தூரம்தான் (காகர்பிட்டா). வாடகை வண்டியிலோ பேருந்திலோ சென்று, பிறகு காகர்பிட்டாவிலிருந்து தலைநகர் காத்மண்டுவிற்கு முணுக்கென்றால் கிளம்பும் பேருந்திலும் செல்லலாம்.

இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லை, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இருந்தாலே போதும்.

2,000க்குள் நல்ல அறை கிடைக்கும்.

இமயமலை ஏற்றம், காட்டுக்குள் விலங்குகளைப் பார்க்கும் பயணம், சாகச விளையாட்டுகள், கோயில்கள் தரிசனம் போன்றவற்றை செய்யலாம்.

2,000 முதல் 2,500க்குள் ஒரு நாள் செலவை அடக்கலாம். 

Adventure Nepal (Pic: parallelsandmeridians)

சீனா, ஸ்ரீலங்கா போன்ற அண்டை நாடுகள், தாய்வான் மற்றும் ஜப்பான் 

இவையும் ஐம்பதாயிரம் வரைமுறையில் அடங்க வல்ல நாடுகளே. 

Chinese park Zhangjiajie (Pic: fliup)

மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தாயாராகி விட்டீர்களா?

Web Title: Countries Issuing Visa Convenience And Constraints, Tamil Article

Featured Image Credit:  vietnam-rundreisen

Related Articles