இலங்கைத் திருநாட்டில் சுற்றுலாவுக்கா பஞ்சம்? – காலி (Galle)

வருட இறுதி, வேலைப்பழு அதன்பின் வரவிருக்கும் விடுமுறைகள் கொண்டாட்டங்கள் இதற்கிடையில் மனதுக்கு மகிழ்வுதரும் சிறு விடுமுறையொன்றில் தொலைந்துபோக மனம் நினைக்கிறதா? இயற்கையோடு கூடிய வரலாற்று வாசத்தில் நல்ல உணவோடு கலைத்துவமாக அவ்விடுமுறை இருக்கவேண்டுமா?

கவுதம் மேனனின் “அச்சம் என்பது மடமையைடா” பார்த்த பின்பு, கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட பயணத்துக்கு அழைக்கிறதா? அதற்காகவே இறைவன் உருவாக்கி வைத்திருக்கின்ற ஓர் இடமாக காலியை சொல்லலாம்.

காலி (Galle)

காலிக் கோட்டை (thehistoryhub.com)

காலிக் கோட்டை (thehistoryhub.com)

இலங்கையின் தென்மேற்கு கரையோர கடற்கரையை ஆக்கிரமித்து அமைந்த பிரதேசம் என்பதனாலும், இலகுவாக சர்வதேச கடற்பரப்பை கண்காணிக்ககூடிய தன்மை கொண்டுள்ளதாலும், இலங்கை எப்போதெல்லாம் ஜரோப்பியர்களின் ஆளுமைக்கு உட்பட்டதோ, அப்போது எல்லாம் அவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்ட நகரமாக இருந்திருக்கிறது காலி. இதனை இன்றளவிலும் காலி நகரினை சுற்றிலும் காணக்கூடியதாக உள்ளது. மேலும், இத்தகைய வரலாற்று எச்சங்களும், பாரம்பரியங்களுமே காலிக்கு சுற்றுலாபுரி என்கிற நிலையினை தந்துள்ளன என்றால் அது மிகையாகாது.

அதிவேக நெடுஞ்சாலை வசதி காலிக்கான பயணத்தை கொழும்பிலிருந்து ஒரு மணிநேரமாக மாற்றியிருப்பதால், ஒரு நாளில் காலியின் அழகையும், அங்குள்ள தொன்மைவாய்ந்த கட்டிடக்கலையை ரசித்து களிக்க இயலுமானதாக இருக்கும். இல்லாவிட்டாலும், தென்மேற்கு கடற்கரையோரமாக காலி நோக்கி பயணிக்கும் நேரம் அண்ணளவாக மூன்று மணிநேரமாகவிருந்தாலும், பயண வழிநெடுகிலும் காட்சிகளைக் கண்டுகளித்து முன்னேறும் மோட்டார் வாகன சவாரிக்கு (Bike Travel) பொருத்தமான பாதையாக இது இருக்கும்.

இரசிக்க வேண்டிய இடங்கள்

ஏனைய பிரதேசங்களைப்போல காலியில், ஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் வேறு வேறு பயண முறையை மேற்கொண்டு நெடுந்தூரம் அலையவேண்டியதில்லை. பெரும்பாலான புராதன கட்டிடங்களும், இயற்கையோடு கலந்த கடற்கரையும் பழைய காலிக்கோட்டையுடன் இணைந்திருப்பதால், இவற்றை இலகுவாக பார்வையிட முடியும்.

அடிப்படையில் காலி நகரினை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, புகையிரத நிலையம், பேரூந்து நிலையம், காலி சர்வதேச மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கி ஓய்வில்லாத நவீன நகரமாக ஓடிக்கொண்டிருக்கும். மற்றையது, இவை எவற்றிற்குமே சம்பந்தமில்லாமல், அமைதியாக பழைய ஒல்லாந்தரின் நகரத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்த அமைதியான நகரத்தை வாகனங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, நடையிலேயே சுற்றி வந்துவிடலாம்.

காலிக் கோட்டை

காலிக் கோட்டையின் ஓர் பகுதி (dailynews.lk)

காலிக் கோட்டையின் ஓர் பகுதி (dailynews.lk)

காலிக்குள் உள்நுழைந்ததுமே நமக்கு தெரிவது, வானுயர்ந்து எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கமும், இன்றும் உறுதியாய் அமையப் பெற்றிருக்கும் காலிக் கோட்டையின் மதில் சுவர்களுமே! அன்றைய ஆங்கிலேயரின் வாழ்விடங்களை காப்பாற்றிக்கொள்ள 1588ம் ஆண்டில் முதன்முதலில் போர்த்துகேயரினால் இந்த கோட்டை அமைக்கபட்டது. ஆனாலும், அதன் இன்றைய வடிவத்தை உருவாக்கியதில் ஒல்லாந்தருக்கு பெரும் பங்குண்டு. இன்றும், காலிகோட்டையின் உள் அமைந்துள்ள கலைநயமிக்க சில வீடுகளுக்கு ஒல்லாந்து குடும்பங்கள் உரிமையாளராக உள்ளார்கள் என்பது இலங்கையின் மீதான வெளிநாட்டவரின் காதலுக்கு ஓர் சான்றாகும்.

இலங்கையில் சுனாமி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மோசமான நகரங்களில் காலி நகரமும் ஒன்றாகும். இதன்போது, காலிக்கோட்டையும் பாதிப்புக்குள்ளானது. இன்றும், சுனாமியின் எச்சங்களை தாங்கியபடி, அதனையும் தாண்டி காலிக்கோட்டை எழுந்து நிற்பதானது, அன்றைய திறமையாளர்களின் திறனுக்கு ஓர் எடுத்துகாட்டாகும்.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட காலி நகரம் (thuppahi.files.wordpress.com)

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட காலி நகரம் (thuppahi.files.wordpress.com)

காலி கோட்டையின் கடற்கரைக்கு அண்டிய மதில்சுவர்களில் நடந்து செல்கையில், கடலின் அழகை இரசிப்பது மட்டுமல்லாது, முக்குளிப்போர் எனப்படும் Diverகளையும் காணக்கூடியதாக இருக்கும். காலியில் முக்குளிப்பதற்கு பெயர்போன கொடிப் பாறை (Flag Rock) பகுதியில் இவர்களை காணக்கூடியதாக இருக்கும். அழகில் ஆபத்தும் உள்ளது என்பதுபோல, இவர்கள் சாகசம் அழகானது என்றபோதிலும், உயிரை பறிக்கும் ஆபத்து நிறைந்ததாகும்.

அருங்காட்சியங்கள்

காலி நோக்கிப் பயணிப்பவர்கள், இலங்கையினதும் காலியினதும் தொன்மையை அறிந்துகொள்ளுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாயின், அவர்கள் தவறவிடக்கூடாத சில முக்கியமான இலங்கையின் அருங்காட்சியகங்கள் இங்குண்டு.

காலி தேசிய அருங்காட்சியகம் – ஒல்லாந்த அரசதரப்பினரால், அவர்களுக்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் இன்றும் காலியின் ஆதிகாலம்தொட்டு, ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வரலாறு சார்ந்த பொருட்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

காலி தேசிய அருங்காட்சியகம் (wikimedia.org)

காலி தேசிய அருங்காட்சியகம் (wikimedia.org)

தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டுவிட்டு வெளியே வரும் வழியில், நன்கு வளர்ந்த ஈரப்பலாக்காய் (Breadfruit Tree) மரத்தினை நீங்கள் கடந்து செல்லகூடும். ஆனால், இது சாதாரணமான மரமொன்று அல்ல. ஒல்லாந்து நாட்டவரால் இலங்கைக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட 300 வருடங்கள் பழமையான ஈரப்பலாக்காய் மரமே அதுவாகும்.

காலி கடல்சார் அருங்காட்சியகம் – இலங்கையின் இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று காலியிலும் அமைந்துள்ளது. அப்படியானால், கடலுடனும், கடல்சார் விடயங்களிலும் காலி எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது என்பதை சொல்வதற்கில்லை. 1992ம்ஆண்டு மக்கள் பாவனைக்காக ஒல்லாந்தரின் கட்டிடத்தில் ஆரம்பிக்கபட்ட இந்த அருங்காட்சியகமும் சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்தது. ஆனாலும், 2004ல் UNESCOவின் உதவியுடனும், 2010ம் ஆண்டு நெதர்லாந்து அரசின் 177 மில்லியன் உதவியுடனும், புத்தாக்கம் பெற்று மீண்டும் மக்கள் பாவனைக்கு திறந்துவிடபட்டுள்ளது.

தேசிய கடல்சார் அருங்காட்சியகம் (roadslesstravelledsrilanka.com)

தேசிய கடல்சார் அருங்காட்சியகம் (roadslesstravelledsrilanka.com)

காலி மாளிகை அருங்காட்சியகம் (Galle Mansion Museum) – இந்த தனிநபர் அருங்காட்சியகம் காலியின் பழமையான குடிமனையில் அமைந்துள்ளதுடன், இங்கு, காலியின் பண்டைய வாழ்க்கை முறைமையை பிரதிபலிக்கின்ற அனைத்துவகையான உபகரணங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. பழமையான மட்பாண்டங்கள் முதல், நம் முன்னோர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் என அனைத்துமே உள்ளடக்கபட்டிருக்கிறது. கவ்வார் (Gaffar) என்கிற பெரியவரினால், நடாத்தபடுகின்ற இந்த தனிநபர் அருங்காட்சியகம் விற்பனை நிலையமாகவும் இது அமைந்துள்ளது.

ஆலயங்கள்

காலி வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பாதிப்பு இருப்பது போல, அவர்களது கலைதாக்கம் கொண்ட தேவாலயங்களுக்கும் பஞ்சமில்லை. REFORMED CHURCH, ALL SAINTS’ CHURCH என்பன அவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்ற 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்ரை கொண்ட தேவாலயங்களாக உள்ளன. அதுபோல, வாணிப வாயிலாக இலங்கைக்குள் உள்நுழைந்த இஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லுகின்ற 300 வருடங்கள் பழமையான மீரான் பள்ளிவாசலும் (MEERAN MOSQUE ) இங்குண்டு.

Dutch Reformed Church Galle (tropicalceylon.com)

Dutch Reformed Church Galle (tropicalceylon.com)

இவ்வாறு, தொன்மையான கட்டிடக்கலையையும், வரலாற்றை சொல்லும் அருங்காட்சியகங்களையும், மத தளங்களையும் இரசித்துகொண்டு காலிக்கோட்டைக்குள் நடைபயிலும் உங்களுக்கு பயணத்தின் நடுவிலோ அல்லது முடிவிலோ பசி வயிற்றை பதம் பார்ப்பின், அவற்றை வழமைபோல அல்லாமல், விதவிதமான உணவுகளுடன் தீர்த்துக்கொள்ள பல்வேறு வகையான உணவகங்கள் காலியில் உள்ளன.

மீரான் பள்ளிவாசல் காலி (i.ytimg.com)

மீரான் பள்ளிவாசல் காலி (i.ytimg.com)

உணவகங்கள்

அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் உல்லாச பயணிகளின் வருகையினால், ஒல்லாந்து குடும்பங்கள் தமக்கு சொந்தமான வீடுகளை நவீனதரமிக்க உணவகங்களாக மாற்றியமைத்து, வெளிநாட்டின் விதவிதமான உணவுவகைகளை பரிமாறி வருகிறார்கள். காலிக்கோட்டைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் விலையும், தரமும் அதிகமாக இருப்பதுடன், புதிய காலி நகரத்தில் நம்மவர்களின் வழமையான உணவுகளை வேவ்வேறு விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

காலிக்கோட்டையில் கொழும்பில் உள்ள டச்சு வைத்தியசாலை என்று அழைக்கபடுகின்ற இந்நாளின் உணவுக்கட்டிடத் தொகுதிபோல, டச்சு வைத்தியசாலை விதவிதமான உணவுதொகுதிகளை கொண்டு அமைந்திருக்கிறது.

இதனை தவிரவும்,

Fort Rotti Restaurant –  ரொட்டியை அடிப்படையாக கொண்ட விதவிதமான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

Chambers – மொராக்கன் மற்றும் இத்தாலிய உணவுவகைகளை இங்கே ருசிக்க கூடியதாக இருக்கும்.

Poonies-Kitchen – புதிய மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான Salads உட்பட ஏனைய உணவுகளையும் இங்கே ருசிக்கலாம்.

Poonies Kitchen (unakanda.com)

Poonies Kitchen (unakanda.com)

The Original Rocket Burger – Burger பிரியர்களுக்கு பொருத்தமான இடங்களில் ஒன்று. அதுபோல, கொழும்பின் உரிமைத்துவ உணவங்களான (Franchise Restaurant)  Buger King, McDonald போன்ற உணவகங்களுக்கு மாற்றீடாக இதனை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.

இவை எல்லாம், வழமையாக இலங்கையின் சுற்றுலா தளங்களில் உள்ள உணவகங்களுக்கு மாற்றீடாக பயணங்களின்போது ருசிபார்க்க கூடிய சில உணவகங்கள் ஆகும்.

காலிக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் (67.media.tumblr.com)

காலிக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் (67.media.tumblr.com)

இவ்வாறு, காலிநகரின் சகலபகுதிகளையும் இரசித்து கொண்டே, நாள் நிறைவில் வீடு திரும்பும் எவருமே, மாலைவேளையில் காலி கடற்கரையோரங்களிலோ அல்லது காலிக்கோட்டையின் கடற்கரையோர மதில்களிலிருந்தோ சூரிய அஸ்தமன அழகை இரசிக்காமல் திரும்புவதில்லை.

Related Articles