பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அழகு சேர்க்கும் மூன்று பாலங்கள்

 இயற்கை அன்னையவள், தன் ஒட்டுமொத்த அழகியலையும் கொட்டித் தீர்த்திட தேர்ந்தெடுத்த இடமே பேராதனைப் பல்கலைக்கழகம். பொதுவில் இலங்கையில் காணப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் விசாலமானதும் , மிக அழகானதும், தரம் வாய்ந்ததும் என்ற எண்ணற்ற அடைமொழிகளைப் பேராதனைப் பல்கலைக்கழகம் தன் வசம் கொண்டிருந்தாலும், அதி உச்சமாய் இப்பல்கலைக்கழகமானது நிறுவப்பட்டுள்ள நிலப்பரப்பும், சூழலுமே எப்போதுமேயான பேசுபொருள் எனலாம். 

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கான வரலாறானது நீண்டதாகும் அதுபோலவே  பல்கலைக்கழகத்தின் அதிசயங்கள் எனும் பட்டியலும் நீண்டதாகும். அப்பட்டியலின் வரிசையில் அக்பர் பாலம், கஜசிங்க பாலம், யகா பாலம் ஆகிய முப்பெரும் அழகிய பாலங்களும் உள்ளடக்கமே. ஆம், சுற்றுலா நிமித்தம் வருகை தருபவர்களாகட்டும், பல்கலைக்கழகத்திற்கு கற்றல் நிமித்தம் வருபவர்களாகட்டும் என அனைவரும் இவ் அதிசயங்கள் பற்றி செவி வழியாய்க் கேட்ட கதைகளெல்லாம் தம் கண்முன்னே பார்வைக்கு விருந்தளிக்கையில் அத்துணை அழகிய உணர்வு தனை இவை நல்கிடும் என்பது உண்மையே. 

கஜசிங்க பாலம் 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின், கலைப்பீடத்தை வரவேற்கும் முகமாக, கம்பீரமாக வெண்மை நிறமதனில் காட்சியளிக்கின்ற அழகிய சிறு பாலமே இதுவாகும். 

யானைத் தலையையும், சிங்கத்தின் உடலமைப்பையும் கொண்டமைந்த உருவமைப்பு இப்பாலத்தின்  இருமருங்கின் முகப்பிலும் வீற்றிருப்பதால் இதனை கஜசிங்க பாலம் (கஜம் – யானை , சிங்க- சிங்கம்) என்பர். 

கஜசிங்க பாலம் :Google Images.com

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மற்றும் அப்பாலுள்ள சிறு கிராமங்கள் மற்றும் ஊர்களை அடைய வேண்டுமாயின், மனிதர்களாயினும், வாகனங்களாயினும் இப்பாலத்தில் தம் பயணத்தை மேற்கொண்டிட முடியும். 

அழகிய தாவரங்களும், மரங்களும் புடை சூழ்ந்த இப்பாலத்தினடியில், மகாவலி கங்கையின் சிறு கிளை நதியானது  தன் பயணத்தை தடையின்றி மேற்கொண்டுள்ளதோடு குறிப்பாக மழைக்காலங்களில் இவ்விடம் அத்துணை அழகியலாய் வெளிப்பட்டு நிற்கும்.

அக்பர் பாலம் 

அக்பர் பாலமானது,  பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் 1971ம் ஆண்டு காலகட்டத்தில் பேராசிரியராகவும்,  1975 – 1977 மற்றும் 1982 – 1985 ஆகிய காலப்பகுதிகளில் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றிய பேராசிரியர் துரைராஜா அவர்களால் கட்டப்பட்டது. 

அக்பர் பாலம் : புகைப்பட உதவி/Google Image.com

மகாவலி ஆற்றில், ஒற்றைத் தூணில் நிற்கும் இந்த அசாதாரண வடிவமைப்பானது நாட்டின் பழங்கால கட்டிடக்கலை மரபுகளை எடுத்துரைத்திடும் பெரும் சிறப்பைப் பெற்றுள்ளது. 

இப்பாலம் பொறியியல்பீடத்தையும், கலை மற்றும் ஏனைய பீடங்களையும் இணைத்திடும் வகையில் 110m நீளத்தில், இலங்கையின் நீளமான நதியென அழைக்கப்படும் மகாவலி கங்கையின் மேற்பரப்பில் அமையப்பெற்றுள்ளது. பீடங்களுக்கிடையிலான குறைந்தளவான நேர பயணித்தலைக் கொண்ட இலகுவழிப்பாதை இது என்பதோடு இப்பாலம் தனில் மனிதர்கள் நடந்திடவும்,  இரு சக்கரவாகனங்கள் பயணித்திடவுமே முடியும். 

சுற்றுலாப்பயணிகள், பாடசாலை மாணவர்கள் ஏன் பல்கலைக்கழக மாணவர்களுமே சென்று பாலத்தின் அழகதனைக் கண்டுகளித்திட முடியுமான அழகானதொரு சுற்றுலாத்தளமாக அக்பர் பாலம் காணப்படுவதோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதன்மையானதொரு இடமாகவும் இது  திகழ்கிறது. 

இதன் பிண்ணனியில் மூடுபனியால் சூழ்ந்த ஹந்தானை மலைத்தொடரானது சூரியனவனின் உதயத்திலும், மறைவிலும் தன் எழில் நிறைந்த காட்சியை காண்பவரின் கண்களுக்கு  விருந்தளித்திடும் பாங்கு வார்த்தைகளுக்கப்பாற்பட்டது.

யகா பாலம் ( பேய்ப் பாலம்) 

பேராதனைப் புகையிரத நிலையத்தையும், சரசவி உயன புகையிரத நிலையத்தையும் இணைத்திடும் வகையில், மகாவலி கங்கையின் அதி உயர் மேற்பரப்பில் புகையிரதங்கள் பயணிக்கக்கூடிய தண்டவாளங்களால் அமையப்பெற்ற சாகசப்பாலமே இதுவாகும். அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகம் தனை மிக இலகுவில் அடைந்திடக்கூடிய வழியாகவும் இப்பாலம் அமையப்பெற்றுள்ளது. 

சிங்கள மொழியில் யகா எனச்சொல்லப்படுவது தமிழில் பேய் எனப்படுகிறது. இப்பாலத்தின் பயங்கரத்தன்மையும், இப்பாலம் காவு கொண்ட உயிர்களையும் கருத்திற் கொண்டே இதற்கு யகா பாலம் எனப் பெயர் வந்தது என்பது ஒரு தனிக்கதை.

யகா பாலம் ( பேய்ப் பாலம்) – புகைப்பட உதவி -Google Image.com

யகா பாலத்தின் தண்டவாளங்களில் நடந்து செல்வது என்பது பயங்கரமானதொரு அனுபவமாகும் மறந்தேனும் கீழ் நோக்கினால் மகாவலி ஆற்றின் நீரோட்டமானது மனதிற்குள் சிறு கிலியை ஏற்படுத்தி விடும்.  ஆதலால் இருமருங்கிலும் காணப்படும் இரும்பாலான சிறிய பாதைகளே மனிதர்கள் நடந்து செல்வதற்கு உகந்ததாகும்.

எதிர்பாராத நேரத்தில் எந்நேரமும் புகையிரதங்கள் கடந்து செல்கின்ற இப்பாலத்தை முதல்முறையாய் கடந்து செல்வதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும். ஆம், பாலத்தில் நிற்கும் வேளையில் புகையிரதமானது வருமானால் ஆங்கே பக்கவாட்டில் காணப்படும் மூன்று சிறு திட்டுக்களில் இறங்கி நின்றிட முடியும் எனினும் அதற்கப்பால் கீழே மகாவலி நதியும் ஓடிக்கொண்டே தான் இருக்கும். உண்மையில் அப்போது அக்கணம் ஆங்கே நிற்கையில் மிக மிக கவனமாக , கடந்திட வேண்டிய பொழுதது தான் என்ற எண்ணம் அதீதமாய் மேலெழும். காரணம் சிறிதும் கால் தவறினாலோ, சிறிதும் பிடி தளர்ந்தாலோ மரணமானது வரவேற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

சுவாரஸ்யமின்றி வாழ்வேது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒரு  முதன்மை இடமான இப்பாலம் ஆகச்சிறந்த புகைப்படங்களை எடுத்திடுவதற்கு சிறந்த இடமுமாகும். அதனாலேயே பெரும்பாலும் இப்பாலம் தனில் மனிதர்களின் நடமாட்டமானது காணப்படும். 

மிகவும் நெகிழ்வான, குறுகலான உலோக நடைபாதையில் கர்ஜிக்கும் ஆற்றின் குறுக்கே ஒரு ரயிலைக் கடப்பது நிச்சயமாக முழு வாழ்க்கையிலும் பயங்கரமான அனுபவமாகும்.

ஆதலாலேயே அழகான ஆபத்து எனும் பதம் இப்பாலத்திற்குச் சாலப்பொருத்தமானது எனலாம்.

.

Related Articles