சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய மகாகவி பாரதியின் நினைவுகள்

தஞ்சாவூர், கும்பகோணம், திருப்புறம்பியம், பழையாறை, தாராசுரம் என சோழர் சுவடுதேடி ஆரம்பித்த எனது தமிழகப் பயண ஏற்பாடு, மதுரை, புதுக்கோட்டை, அரிட்டாபட்டி என விஸ்தீரணமான பெருமை எனது தமிழகப் பயணத்தின் வழிகாட்டி, பாதுகாவலர், தம்பி ராஜாராமையே சாரும். சுமார் ஒருமாதகால தடபுடல் ஏற்பாடு, தேடல், கற்றலோடு ஆரம்பித்த எனது தமிழகம் நோக்கிய கன்னிப் பயணம்… மதுரை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் தம்பி ராஜாராம் மற்றும் அவரது சகாக்களோடு மதுரையில் துவங்கியது.

முதன்மை வரவேற்பாக மதுரையின் சிறப்புவாய்ந்த ஜிகிர்தண்டாவோடு ஆரம்பித்து, மதுரை மாநகர் முழுவதும் நிறைந்திருந்த பிரபல்யமான சுவைமிகு உணவுகளில் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று திக்கித் திணறி வயிறும் நாவும் சலிக்குமளவு சரமாரியாக உண்டுகளித்தபின் மதுரை மாநகரப் பேரூந்தொன்றில் விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். இடைவழியில் விக்ரம் என்னும் வழிகாட்டி (மதுரையிலேயே பிறந்து இருபத்திரண்டு வயசாகியும் மீனாட்சியம்மன் கோவில் பார்க்காத அரியவகை உயிரினம்)   “இதுதான் சேதுபதி மேல்நிலைப்பள்ளி” என்று சொல்ல, இருந்துட்டு போகட்டும் என்று நான் சொல்ல, “அட மங்குனி அக்கா, இது பாரதியார் வேல பாத்த பள்ளிக்கூடம், ஆவளவு சிம்பிளா கேட்டீங்க” என்று ராஜாராம் பதில் சொல்லி முடிக்க முன்பே என் மனதுக்கு தெரிந்தது, அந்தப் பள்ளிக்கூட மண்ணை மிதிக்காமல் நான் ஊர் திரும்பப்போவதில்லை என…

நான், “உள்ள போய் பார்க்கலாமா?” “இது பேய் ஜாக்கிங் போற நேரம், நாளைக்கு பாக்கலாம். பப்ளிக் எக்ஸாம் வேற நடக்குது, உள்ள விடுவாங்களோ என்னவோ!” இது ராஜாராம்…, நமக்கு விதித்தது அவ்வளவுதான் என எண்ணிக்கொண்டு அன்றிரவு விடுதியை அடைந்தேன்.

Sugarcane Juice (Pic: Writer Herself)

மறுநாள் காலையில் வழக்கம்போல மதுரையின் வரலாறுசார் முக்கிய இடங்களை பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். அடிக்கிற வெயிலுக்கு அங்கங்க கொஞ்சம் தாகசாந்தி செய்துகொள்வது முக்கியம் மக்களே! அப்படிக் கொழுத்தியது வெயில்., மதுரை நகர் முழுதும் குறைவே இல்லாமல் செறிந்திருந்த பழச்சாறுப் பந்தல்கள் ஒன்றில் கரும்புச் சாற்றில் புத்துணர்ச்சி வேண்டிக் காத்திருந்தபோது, இரவு முழுக்க ராஜாராம் போட்ட ‘ஹோம் வொர்க்கின்’ விளைவாக எங்கள் வாழ்நாளின் பேறுமிகு தருணமொன்று எங்களுக்காய் கதவு திறந்து காத்திருந்தது. “அக்கா போகலாம்” என்று சொல்லி ராஜாராம் நடக்க, “இப்ப எங்க போறோம்?” என்று ஆவலாய் கேட்டேன். “அதுதா நேத்து சேதுபதி பள்ளிகுள்ள சுவரேறி குதிக்க பாத்தீங்களே! அங்கதா போறோம்”. “உள்ள விடுவாங்களா? பரீட்சை வேற நடக்குதாமே!” “பாத்துக்கலாம் வாங்க, இலங்கையில இருந்து மதுரை வர வந்த உங்கள, பாரதி மிதிச்ச மண்ண மிதிக்க வைக்காம அனுப்பிடுவமா” என்று பொறுப்போடு பதில் சொன்னான் ராஜாராம்.

சேதுபதி மேல்நிலைப்பள்ளி

சேதுபதி மேனிலைப் பள்ளி முகப்பு. “மகாகவி பாரதியார் கடமையாற்றிய பெருமைக்குரியது” என்ற வாசகத்தையும் பாரதியின் உருவச் சிலையையும் காணலாம்

School Main Building (Pic: Writer Herself)

நடப்பது கனவா நிஜமா? நான் இருப்பது தமிழகத்திலா? நூறு வருஷத்துக்கு முன்னாடி இங்க பாரதி வாழ்ந்திருப்பாரா? இதோ இந்த வீதிகளில் நடந்திருப்பாரா? ஒரே இடம், வெவ்வேறு காலக்கோடுகளில் சிக்கி நானும், கவிதைத் தமிழால் என்னைக் கட்டிப் போட்டிருக்கும் மகாகவியும் பிரித்துவிட்டதை எண்ணி நொந்துகொண்டேன்! உள்ளே அடியெடுத்து வைத்தபோது என் பெற்றோரைத் தவிர வேறெவரும் என் நினைவுக்கு வரவில்லை. மேன்மக்களை அறிமுகம் செய்து, அவர்பெருமை அறியச் செய்து, வாழ்வின் பேறுகளையும், பெருமதிகளையும் என் மனதில் விதைத்து, இதோ! இந்த பள்ளியின் வாசல்வரை என்னைக் கொண்டு சேர்த்த விசையை, வித்தாக ஊன்றி வளரச் செய்த பெற்றவர்க்கு உள்ளுக்குள் நன்றிகூறி நடந்தேன்.

பரீட்சைக்கான ஹால் டிக்கட்டை மறந்துவந்த ஓர் மாணவனோடு கடைசி நிமிடத்தில் போராடிக்கொண்டிருந்த ஒரு ஆசிரியர் வாசலிலேயே எங்களை எதிர்கொண்டார்…

“என்ன சார் வேணும்?”

“பாரதி கல்வி கற்பித்த வகுப்பறைகளையும் அவரின் நினைவாக இங்கே இருக்கின்ற அம்சங்களையும் பார்க்கவேணும்” என்று இழுத்தோம்…

“எந்த நேரத்தில வந்து என்ன கேக்கிறீங்க? பரீட்சை நடக்குது, உள்ள எல்லாம் விட முடியாது”

இப்படியெல்லாம் எங்களுக்கு அற்புதமான வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்த போது,

“கொஞ்சம் இப்படி உக்காருங்க, ஹெட் மாஸ்டர் வந்து பேசுவாரு” என்று அன்பாகப் பதில் சொன்னார்.

இது வெறுமனே ஒரு பாடசாலை அல்ல. பார்போற்றும் ஓர் புலவனின், தமிழ்க் காதலர்களின் நாயகனின் சுவடுகளைத் தாங்கி நிற்கின்ற ஓர் நினைவுச் சின்னம்! எனவே வருகிறவர்கள் மாணவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது விதியல்ல. என்னைப்போல் பாரதிப் பித்துத் தலைக்கேறியவர்களாகவும் இருக்கலாம். அந்தப் புரிதல் அங்குள்ள அனைவருக்கும் இருந்ததே அவர்கள் எங்களுக்கு அளித்த முகமனுக்கு அடிப்படை.

பள்ளியின் முகப்பிலேயே “மகாகவி பாரதி கடமையாற்றிய பெருமைக்குரியது” என்ற வாசகத்தோடு கம்பீரமாய் அமைக்கப்பட்டிருந்த மகாகவியின் உருவச்சிலை கண்டதும், எனக்குள் உண்டான உணர்வுநிலையை சரியாக விளக்க கவிப்பேரரசு வைரமுத்துவின் கற்பனையைக் கொஞ்சம் கடன் வாங்குகிறேன். ஆம், எனக்கும் வயிற்ருக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டு புரண்டது. கொஞ்ச நேரத்திலேயே தலைமை ஆசிரியர் வந்தார்… மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் என்று அவரது தோற்றம் சொன்னது. கூடவே ஒரு ஊழியரையும் அழைத்து வந்தார்.

Me With Barathi (Pic: Writer Herself)

பாரதியின் உருவச்சிலையோடு பேறுமிக்க தருணமொன்றில்

“இலங்கையில் இருந்தா வந்திருக்கீங்க?” என்று ஆச்சரியமும் மரியாதையும் கலந்த தொனியில் எங்களுக்கு வணக்கம் தெரிவித்தவராக அழைத்துவந்த ஊழியரை நோக்கி..,

“இவர்களுக்கு பாரதி கல்வி கற்பித்த வகுப்பறைகள் இரண்டையும் காட்டுங்க, அப்படியே பாரதி நினைவா இருக்கிற பாடசாலை ரெக்கார்டையும் காட்டுங்க. பாடசாலை முழுவதையும் சுத்திக் காட்டுங்க”. என்று சொன்னதும்……

பாரதி மீது பட்டு வீசிய காற்று இன்றும் இங்கே சுற்றிக்கொண்டிருந்தால் அது எங்களையும் தொட்டுக்கொள்ளட்டும் என்று தவம் கிடந்த எங்களுக்கு, பாரதியின் கையைப் பிடித்து நடந்து செல்லுங்கள் என்று சொன்னதுபோல் இருந்தது அவர் வாக்கு…

“ரொம்ப தூரம் வந்திருக்கீங்க, ஆறுதலா போய் சுத்தி பாருங்க” என்று அவர் சொன்னதும் சுயநினைவுக்கு வந்த நான், வாழ்வின் பேறுவாய்ந்த அத்தருணங்களில் சிலவற்றை புகைப்படங்களாக சேமித்துக் கொண்டேன்.

Sethupathi (Pic: Writer Herself)

பாரதி கல்வி கற்பித்த வகுப்பறைகள் – சேதுபதி மேனிலைப் பள்ளி

முற்றும் புதுமையாகிப்போன பாடசாலையின் ஒரு புறத்தில் பழைமை மாறாமல் ஓர் கட்டடம், வாசலில் நெடிதுயர்ந்திருந்த வேப்பமரம் தந்த நிழலில் கண்ணுக்கு குளிர்ச்சியோடு காட்சியளித்தது. இவ்வரலாற்றுச் சின்னத்திற்கு மூலிகைச் சாமரம் வீசவென்றே கடவுள்  இவ்வேப்ப மரங்களை இங்கு அமைத்திருக்கிறான் போலும்.

அவ்வகுப்பறையை நெருங்க நெருங்க, ஒளியின் வேகம் விஞ்சி நூறாண்டுகள் முன்சென்றது மனது….. அதோ மகாகவி!, கூடவே கொடுத்துவைத்த மாணவர்கள், தமிழிடமே தமிழ் கற்கும் பேறு கொண்டவர்கள், வகுப்பறைத் தரையில் வீற்றிருக்கிறார்கள்… பள்ளிப் படிப்பு பாகற்காயாய்க் கசக்கிறதென்றவன், இனிய கல்வி இதுதான் என்று வரலாறு செய்துகொண்டிருக்கிறான் வகுப்பறைக்குள். பாரதி கவிதைகளைப் படிக்கும்போது உள்ளுக்குள் கேட்கும் பாரதியின் குரல் இப்போது கேட்கிறது எனக்கு! தீந்தமிழ் தேன் சொட்டச் சொட்ட, பாரதியின் நாவில் பட்டு வீறோடு எழுகிறது. அத்தனைபேரும்…, ஏன்! காற்றுக்கூட மெய்மறந்து கேட்கிறது அவன் பாடத்தை. இத்தனைக்குமிடையில் ஓரமாக நின்று அவர்களை வேடிக்கை பார்த்த என்னைக்கண்டு ஓர் புன்முறுவல்  பூத்துவிட்டு மீண்டும் பாடத்தில் மூழ்கிவிட்டான் பாரதி. இதுபோதும் எனக்கு! இரண்டாயிரத்துப் பதினெட்டிற்கே போய்விடலாமென்று திரும்பி வந்து பார்த்தேன்… இங்கும் ஓர் ஆசிரியரும் சில மாணவர்களும் வரவேற்கின்றனர் என்னை…

இலங்கைத் தமிழ் மக்கள்மீது தமிழக மக்கள் கொண்டுள்ள அன்பை, ஆதரவை அன்று நேரடியாக கண்டு அனுபவிக்க நேர்ந்தது. கடல் கடந்து தம் மண்ணைத் தேடி வந்திருந்த என்னை அவர்கள் வரவேற்ற விதமும், முகம் தெரியாத என்னை எனது முகவரி இன்னதென்று அறிந்து அவர்கள் உபசரித்த அழகும் நிஜத்தில் என்னை நெகிழச் செய்தன. உள்ளே சென்று பார்க்கவும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதித்ததோடு, நான் கேட்ட பல கேள்விகளுக்கு அத்தனை பேரும் சலிக்காமல் பதில் சொன்னது சாதாரண விடயமல்ல. பாரதி பிறந்த மண்ணிலிருந்து வந்த ஆசிரியை ஒருவரையும் நாங்கள் அறிமுகம் செய்துகொண்டோம்.

Mahakavi Barathiyar Statue (Pic: Writer Herself)

பாரதியின் உருவச்சிலை – சேதுபதி மேனிலைப்பள்ளி

“இவங்களோட பேசுறது பாரதியோடவே பேசுற மாதிரி”

என்று கூட இருந்த ஆசிரியர்கள் சொல்லக்கேட்டு அவரோடும் ஒரு தாமி எடுத்துக்கொண்டேன். மிகவும் கனிவோடு அப்பள்ளியில் இருந்த பாரதியின் நினைவுகள் பற்றிப் பல விடயங்களைப் பரிமாறிக்கொண்டார். இத்தனைக்கும் மேல், பகல் வேளை நெருங்கிக்கொண்டிருந்ததால் பகலுணவு அருந்திச் செல்லுமாறும் எங்களை வாஞ்சையோடு அழைத்தார்கள் அந்த அன்புக்குரிய ஆசிரியர்கள். காடை பிரியாணிக்கு ஏற்கனவே போட்ட திட்டத்தின் காரணமாக, ராஜாராம் தலைமையில் உணவுக்கு நன்றி கூறி விடைபெற ஆயத்தமானோம்.

பாரதி, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தொண்ணூறு நாட்கள் தமிழ் பண்டிதராய் பணிபுரிந்திருக்கின்றார்கள். அவரது பெயர் தாங்கிய பதிவேடு இங்கு இன்னும் பத்திரமாக பேணப்பட்டு வருகின்றது. மிகவும் நல்ல முறையில் மிகுத்த திட்டமிடலுடன் நடத்தப்படும் பாடசாலைக்கு உரித்தான பல்வேறு அம்சங்கள் இப்பாடசாலையில் நிறைந்திருக்கிறதென்றால் அது மிகையல்ல. அழகான முறையில் அமைக்கப்பட்ட பூந்தோட்டம், பாடசாலை முழுக்க நிழல்தரு மரங்கள், பாடசாலையில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மற்றும் கல்லூரியின் கழகங்கள் போன்ற அம்சங்களின் பட்டியல், தூய்மையான சூழல், கல்லூரி மாணவர்கள் கைப்பட வரைந்த ஓவியங்களின் அணிவகுப்பு, விருந்தினரும் அருந்தி தாகசாந்தி செய்துகொள்ள அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி…, இப்படி சொல்லிக்கொண்டே போகுமளவு நேர்த்தியுடனும் பராமரிப்புடனும் திகழ்ந்தது அப்பாடசாலை, பாரதி வந்துசென்ற தடயம் இருப்பதொன்றே போதுமல்லவா இத்தனை பேறுக்கும்!

Old Register (Pic: Writer Herself)

பாரதியின் பெயர்தாங்கிய கல்லூரி பதிவேடு. இருபத்தி இரண்டே வயதான பாரதியின் பெயர் தொடரிலக்கப்படி முப்பதாவதாக

போதும் போதும் என்னுமளவும் சுற்றிப்பார்த்தும் எதிலும் அவ்வளவு ஈடுபாடு எழவில்லை என்னுள்… இந்த மண்ணில், இந்த வளாகத்தில் எவ்வளவு நேரம் இயலுமோ, அவ்வளவு நேரம் இருந்துவிட வேண்டும் என்றே என் மனது சொல்லிக்கொண்டிருந்தது.

“இனி என்ன அக்கா! தமிழகம் வந்த வேலை இரண்டாவது நாளே முடிந்துவிட்டது போல!” என்று ராஜாராம் பெருமிதத்தோடு கிண்டலடிக்க,

“ஆமாம், இது போதும், இந்தப் பயணம் முழுமை பெற்றாயிற்று” என்று மனதுக்குள் மகிழ்ந்தவளாக சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் வாசல் கடந்து வெளியேறினேன்…

உள்ளே போனதிலிருந்து வெளியே வரும்வரை பாரதி என்னோடு இருந்தது என்னைத் தவிர யாருக்கும் தெரியாது….

Web Title: Memories of Mahakavi Barathi at Sethupathi Higher Secondary School, Madurai

Featured Image Credit: Writer Herself

Related Articles