Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பின்னவலை: யானைகளின் பூமி

யானைகள் ஒரு வரிசையில் ஒழுங்காகச் சென்று கொண்டிருந்தன. அங்குசத்தின் கூர்மை மீதிருந்த அச்சம் அவற்றின் சுட்டித்தனத்தைக் கட்டுப்படுத்தியிருந்த போதும், ஆங்காங்கே அவை தமது விளையாட்டுத்தனத்தைக் காண்பிக்கவும் தவறவில்லை. கரிய குன்றுகள் அசைந்து அசைந்து தெருவில் போகும் காட்சியும் அவற்றின் கழுத்து மணியோசையும் பிரமிப்பான உணர்வை அளித்தன. அது பின்னவலை யானைகள் சரணாலயம்!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவருமே இந்த யானைகள் சரணாலயத்தையும் தாம் பார்க்க வேண்டிய இடங்களுக்குள் ஒன்றாக குறித்துக் கொள்ளத் தவறுவதில்லை. ஆண்டொன்றின் அனைத்து காலப்பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும் இந்த யானைகள் சரணாலயம் சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள கேகாலை நகரத்திலிருந்து ஏறத்தாழ 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

ஆசிய காட்டு யானைகளுக்கான புகலிடமாக உள்ள பின்னவலையில், நூற்றுக்கணக்கான யானைகள் வாழ்கின்றன. காயமடைந்தவை, தாயைப் பிரிந்து அனாதையானவை என துர்ப்பாக்கியமடைந்த யானைகளுக்கான வாழிடமாக பின்னவலை மாறியுள்ளது.  பின்னவலையினூடாக சலசலத்து ஓடுகின்ற மகா ஓயா ஆற்றில் இறங்கி கும்மாளம் அடிக்காமல் இந்த யானைகளுக்கு நாளொன்று முடிவதில்லை. தண்ணீரைக் கண்டதும் அவை காட்டும் சுறு சுறுப்பிற்கும் குதூகலத்திற்கும் எல்லையில்லை.

பட உதவி : பிரசாத் ஹரி – facebook.com/pg/prasathdev/

 

குளிப்பதற்கு யானைகளை வரிசையாக அழைத்துச் செல்லும் போது தெருவின் இரு மருங்கிலும், முழு உலகத்தின் பிரதிநிதிகளும் நிறைந்திருப்பதைக் காணலாம். மேற்கத்தேய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை விட, சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அங்கு பாரியளவில் அதிகரித்துள்ளது. பின்னவலையில் இளநீர் விற்றுக் கொண்டிருந்த, தமிழ் தெரியாத சிங்கள நடைபாதை வியாபாரியொருவர், சீனர்கள் தம்மைக் கடந்து செல்லும் போதெல்லாம் சீன மொழியில் இளநீர் வாங்குமாறு கூவிக்கொண்டிருந்தார்.

வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையே தனது நிதியாதாரத்திற்கு பெருமளவில் நம்பியிருக்கின்றது பின்னவலை. யானைகளின் அன்றாட செயற்பாடுகளைக் கண்டு களிப்பதில் அந்தப் பயணிகள் உற்சாகமடைகின்றார்கள். குட்டி யானைகளுக்கு குடுவைகளில் பால் கொடுக்கும் வாய்ப்பைப் பெறும் சுற்றுலாப்பயணிகள், அதனை தமது வாழ்வில் மறக்க முடியாத சந்தோஷக் கணங்களாக கருதுவார்கள். வரிசையாய் வந்து பாலைக் குடித்த சில யானைக்குட்டிகள், மீண்டும் அதனைக் குடிப்பதற்காக கள்ளத்தனமாய் வரிசைக்குள் மீண்டும் சென்று சேர்ந்து கொள்வதைக் காணும் போது, நம்மையறியாமல் நமக்குள்ளிருக்கும் குழந்தை வெளிப்பட்டு விடுகிறது.

பட உதவி : பிரசாத் ஹரி – facebook.com/pg/prasathdev/

 

ஒவ்வொரு யானைக்கும் பெருந்தொகையான உணவு தேவைப்படுகின்றது. ஒரு யானை நாளொன்றுக்கு சுமார் 250 கிலோகிராம் உணவை உண்கின்றது. இந்த நிலையில் அவற்றுக்கான முழு உணவுமே பின்னவலையில் கிடைத்து விடுவதில்லை. பலாப்பழங்கள், தென்னை ஓலைகள், கித்துள் ஓலைகள், புற்கள் போன்ற யானைத்தீனிகள் நாளாந்தம் வெளியிலிருந்து பின்னவலைக்கு கொண்டுவரப்படுகின்றன. 

பட உதவி : பிரசாத் ஹரி – facebook.com/pg/prasathdev/

இனச்சேர்க்கை மூலம் யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயற்பாடும் பின்னவலையில் முன்னெடுக்கப்படுகின்றது. இயற்கைச்சூழல் ததும்பி எங்கும் பசுமை கொழிக்கும் பின்னவலையின் எழிலார்ந்த சூழலில் அவை தமது இணையுடன் மகிழ்ந்திருக்கின்றன. பின்னவலை சரணாலயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு முதலாவதாக யானையின் பிறப்பொன்று 1984ல் நிகழ்ந்தது. அது ஒரு பெண் யானைக்குட்டி! அதற்கு சுகுமாலி என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போது அதற்கு 35 வயதாகியிருக்கும்.

அதனைத்தொடர்ந்து, பின்னவலையில் வரிசையாக யானைகளின் பிறப்பு இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டுக்கும் 1991 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டும் 23 யானைக்குட்டிகள் அங்கே முதன்முதலாக கண்விழித்து புதியதொரு உலகத்தால் வரவேற்கப்பட்டன. புள்ளிவிபரங்களின்படி, 2015 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி வரை 70 யானைகள் அந்த சரணாலயத்தில் பிறந்திருப்பதாக கூறப்படுகின்றது.

பட உதவி : பிரசாத் ஹரி – facebook.com/pg/prasathdev/

 

பின்னவலவிலிருக்கும் பல யானைகள் மிதுந்த சுறுசுறுப்புடனும் புத்துணர்வுடனும் காணபடுகின்றன. அவற்றுக்கான மருத்துவக் கண்காணிப்பும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுக் கொண்டுள்ளது. ஏதேனும் நோய்த்தொற்றுக்கு ஆளான யானைகள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. இதன்மூலம் குழுக்களாகத் திரியும் அவற்றின் இயல்பினால் மற்ற யானைகளுக்கும் அந்த நோய் பரவாமல் தடுத்துவிட முடிகின்றது.

பின்னவலையில் செயற்கையாக கட்டப்பட்ட ஒரு மேடையில் நிற்கின்ற சுற்றுலாப்பயணிகள் பல வகையான பழங்களை யானைகளுக்கு கொடுக்கின்றார்கள். அந்தப் பழங்களை தும்பிக்கையால் பெற்றுக் கொள்ள அவை தமக்குள் போட்டியிடுகின்றன.  தும்பிக்கையால் வாங்கிக் கொள்ளும் பழங்கள் கணப்பொழுதில் விழுங்கப்பட்டு விடுவதுடன், பழங்களைத் தருமாறு சுற்றுலாப் பயணிகளை வற்புறுத்தும் யானைகளையும் காணலாம்.

கொழும்பிலிருந்தும் கண்டியிலிருந்தும் பின்னவலைக்கு பேருந்து மூலம் செல்லலாம். தனிப்பட்ட போக்குவரத்துக்கான வசதிகள் மூலமும் அங்கு சென்றடையலாம். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கு முற்றுகை இடுவதால், ஏனைய நாட்களினைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளும் இருக்கின்றார்கள். சர்வதேச அளவில் பிரபல்யம் மிக்க பின்னவலை யானைகள் சரணாலயத்தின் தகவற்கூடங்கள், யானைகள் தொடர்பான பல்வேறு அரிய தகவல்களையும் வழங்குகின்றன. 

பட உதவி : பிரசாத் ஹரி – facebook.com/pg/prasathdev/

 

காட்டின் சுதந்திரம் முற்று முழுதாக இல்லையென்றாலும் ஓரளவு சுதந்திரத்தை அனுபவிக்கும் அந்த யானைகளால் நிரம்பியிருக்கின்ற அந்த பூமி, இலங்கையில் பார்க்கத்தவறவிடக்கூடாத பக்கமாக, சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றது.

முகப்புப் படம் உள்பட அனைத்து படங்களும் : பிரசாத் ஹரி - facebook.com/pg/prasathdev/

Related Articles