மிரிஸ்ஸ: வெளிநாட்டவர்களுக்கு மட்டும்

ஒட்டுமொத்த இலங்கையுமே உல்லாசப்பயணிகளுக்கு குறைவில்லா சுவாரசியத்தை அள்ளி வழங்கும் சொர்க்கபுரியாகத்தான் இருக்கிறது. இலங்கையின் ஒவ்வொரு பாகமுமே சுற்றுலா செல்பவர்களுக்கு வெவ்வேறு விதமான அனுபவத்தை தரக்கூடிய காலநிலைகள், வரலாற்று அம்சங்கள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியவையாகவே அமைந்திருக்கிறது.

(marriedtoourbackpacks.files.wordpress.com)

இந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கையின் சுற்றுலாத்துறையின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அதன் கடற்கரைகள் ஆகும். குறிப்பாக, இலங்கை வரும் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளும் சரி, உள்நாட்டவர்களும் சரி இலங்கையின் கடற்கரை அழகு தவறவிடத் தகாத ஓர் சுற்றுலா அனுபவம் என்றால் மிகையல்ல. இத்துணை சிறப்பியல்புகளைக் கொண்ட இலங்கையின் சுற்றுலா வரலாற்றில், அண்மையகாலத்தில் ஒருசில சுற்றுலா தளங்கள் வெளிநாட்டவருக்கு மட்டும் என்கிற தொனியுடனான சுற்றுலா மையங்களாக மாறிவருவது ஆச்சரியமாக இருப்பதுடன், உள்நாட்டவர்களின் வருகையை விரும்பாத இந்நிலை புதிராகவும் உள்ளது. அப்படியான புதிர்களில் முன்னணியில் உள்ள ஒரு இடம்தான் “மிரிஸ்ஸ”(Mirissa)

கடந்த சிலவருடங்களில் இலங்கையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிரிஸ்ஸ பிரதேசத்திற்கு தொடர்ச்சியாக பயணிப்பவர்கள் அங்கு இடம்பெறும் மாற்றங்களை அவதானித்திருக்ககூடும். “உள்நாட்டவர்களுக்கு அனுமதியில்லை” , “வெளிநாட்டவர்களுக்கு மட்டும்” என்கிற பதாகைகளுடன் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகளும், புதிதாக முளைக்கும் சுற்றுலாவிடுதிகளும் உள்நாட்டவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டவே செய்கின்றனர். அப்படியாயின், இலங்கையிலேயே உள்நாட்டவர்களை வெளியேற்றிவிட்டு, வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே என ஒரு சுற்றுலாத்தளத்தை உருவாக்குவது இதன் நோக்கமா? இல்லை இதற்குப்பின்னால் ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்கள் ஒளிந்திருக்கிறதா?

உள்நாட்டவர்களுக்கு அனுமதி மறுக்க காரணம் என்ன ?

(irissawhalewatchinglk.com)

மிரிஸ்ஸ பகுதியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளும், உணவகங்களும் தொடர்ச்சியாக உள்நாட்டவர்களை அனுமதிப்பதில் தயக்கம் காட்டுவதற்கு மிக பிரதான காரணமே, கடந்த காலங்களில் அங்கு வருகை தந்த உள்நாட்டவர்களினது  நடத்தை பிறழ்வே ஆகும். அங்குள்ள சுற்றுலா விடுதிகளினதும், உணவகங்களினதும் முகாமையாளர்கள் இது தொடர்பில் விபரிக்கையில், இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் உள்நாட்டவர்கள் வருடம்தோறும் மிரிஸ்ஸ பகுதிக்கு வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா தளங்களை முறையாக பயன்படுத்துகின்றார்கள். மேலும் சிலர் மதுபானங்களை அருந்தியபின்பு முறைகேடாக நடந்து கொள்ளுகிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் மதுபாவனை காரணமாக, இங்கு வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளவோ அல்லது துஷ்பிரியோக ரீதியிலோ நடந்துகொள்கிறார்கள். இது ஒட்டுமொத்த சுற்றுலா சூழலையும் பாதிப்பதுடன், அதனால் வெளிநாட்டாவர்களிடத்து இலங்கை தொடர்பான தவறான எண்ணக்கருவும் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, இதனை தவிர்ப்பதற்காக, முழுமையாகவே உள்நாட்டவர்களை உள்நுழைப்பதை தவிர்த்துக் கொள்கிறோம் என கூறுகிறார்கள்.

கடந்த வருடத்தில் மிரிஸ்ஸ பகுதியில் இவ்வாறான மோசமான அனுபவங்கள் உள்நாட்டவர்கள் நுழைய அனுமதிக்கபட்ட உணவகங்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் இடம்பெற்றுள்ளமையினால், அடுத்த பருவகாலங்களில் இலங்கையரை விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தளங்களுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்ற கருத்தாடல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

(roar.lk)

இதனை, சாதாரண விடயமொன்றாக கருதி கடந்து சென்றுவிட முடியாது. காரணம், எதிர்வரும் காலத்தில் சுமார் 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்குள் கொண்டுவருவதை நோக்காக கொண்டு இலங்கை அரசு தனது நீண்டகால சுற்றுலா திட்டங்களை வகுத்து வருகிறது. ஆனால், அதனுடன் இணைந்ததாக உள்ளூர் சுற்றுலாவின் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தாதவகையில் செயல்படுவது என்பது, இலங்கை போன்ற நாடொன்றினை முழுமையாக சுற்றுலா நாடாக மாற்றுவதில் சிக்கல் நிலைமைகளையே தோற்றுவிக்கும். குறிப்பாக, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நடத்தை ரீதியிலான விழிப்புணர்வையும், மிரிஸ்ஸவின் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடைபோடும் உணவகங்கள் மற்றும் கேளிக்கைவிடுதிகளின் முகாமையாளர்களுக்கு உள்நாட்டு சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக எதிர்கால சுற்றுலா திட்டங்கள் அமைவது அவசியமாகிறது.

உள்நாட்டு சுற்றுலாபயணிகளை முழுமையாக தடைசெய்வது சரியா ?

(cheesetraveller.com)

இலங்கை சட்டவிதிகளுக்கு அமைவாக இலங்கையின் பிரஜைகளையோ அல்லது வேறு நாட்டின் பிரஜைகளையோ பிறப்பு, மதம், இனம், பாலினம் மற்றும் அரசியல் காரணங்கள் உட்பட ஏனைய எத்தகைய காரணங்களுக்காகவும் பாகுபாடு காட்டுதல் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இதன் அடிப்படையில், உள்நாட்டவர்களை அனுமதிக்கவே முடியாது என்கிற ரீதியில் மிரிஸ்ஸவில் சுற்றுலாவிடுதிகள், உணவங்கள், கேளிக்கை விடுதிகள் இயங்க முடியாது. ஆனால், இத்தகைய மேற்கூறிய சட்டங்களும், அதன் தொழிற்பாடுகளும் இன்னமும் ஆவணங்களில் ஆவணபடுத்தபட்ட அளவிலேயே இருக்கிறது என்பதனாலும், சுற்றுலாத்துறை தொடர்பான பொறுப்பான அதிகாரிகள் வினைத்திறன் அற்றவகையில் இயங்கிகொண்டிருப்பதாலும் இத்தகைய நிலை உருவாக்கபட்டிருக்கிறது.

உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளில் சிலரது நடத்தைகாரணமாக ஏற்படுகின்ற மோசமான அனுபவத்திற்கு இலங்கையர் அனைவரும் பொறுப்பாக முடியாது என்றபோதிலும், இலங்கையர்களாக நம்நாட்டிற்கு சுற்றுலா வருகின்றறவர்களின் பாதுகாப்பிற்கு நாம் ஒவ்வொருவருமே பொறுப்பாக இருக்கிறோம். எனவே, குறித்த மோசமான சம்பவங்களின்போது, உரிய அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதவகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பின், அல்லது ஒரு இலங்கையராக வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத்தக்க செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பின் அதுவே போதுமானதாக அமைந்திருக்கும். இவ்வாறு, எதனையும் செய்ய எத்தனிக்காது தனித்து இலாபநோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட மிரிஸ்ஸ பகுதியின் உணவகங்களும், விடுதிகளும் தன்னிச்சையாக முடிவெடுக்கின்றமையே  வெளிநாட்டவர்களுக்கு மட்டும் அனுமதியுடையதான கொள்கைகளை வகுப்பதற்கு காரணமாக அமைகிறது.

மிரிஸ்ஸ உணவகங்கள் மற்றும் விடுதிகளை பொறுத்தவரையில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளை இழப்பதால் அவர்கள் இலாபத்தில் பெருமளவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மாறாக, அவர்கள் வெளிநாட்டவர்களுக்கு என தனியே உணவகங்களையும், விடுதிகளையும் மாற்றியமைப்பதன்மூலம் இலாபத்தை பெருக்கிக்கொள்ளவே முடியும். குறிப்பாக, வெளிநாட்டவர்களுக்கு என விடுதிகளையும், உணவகங்களையும் உருவாக்கும்போது, அதற்காக மேலதிக விலையிடல் (Additional Pricing Policy or Premium Pricing Policy) முறையை பயன்படுத்தி இலாபத்தை பன்மடங்காக பெருக்கிகொள்ள முடியும். எனவே, தான் வெளிநாட்டவருக்கு மாட்டும் என்கிற வணிகக்கொள்கையை இலங்கையர்களின் நடத்தையை காரணம் காட்டி அமுல்படுத்த எத்தனிக்கிறார்கள். எனவே, இது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது பொறுப்பான அதிகாரிகள் எடுக்கவேண்டியது அவசியமாகிறது.

தீர்வு ?

ஒரு வெளிநாட்டு பிரஜையாக இலங்கைக்கு சுற்றுலா வர விரும்புகின்ற பலரும், இங்கே அதிக பணத்தினை செலவிட தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையானது எல்லாம், தாம் செலவழிக்கின்ற பணத்துக்கு இணையாக எவ்வித தடங்கலுமின்றிய உல்லாச அனுபவம் ஒன்றுதான்.

(cheesetraveller.com)

எனவே, அதற்கு தகுந்தாற்போல, தடையற்ற உல்லாச அனுபவத்தை வழங்கவும், அதற்க்கு தகுந்தாற்போல உள்ளூர் சுற்றுலா முறைமை திட்டங்களை வடிவமைக்க வேண்டியதும் அவசியமாகும். குறிப்பாக, உல்லாச விடுதிகளை பதிவு செய்தல், அவற்றின் தரத்திற்கு ஏற்ப நடசத்திர அந்தஸ்தினை வழங்குதல் என்பனவற்றின் மூலமாக, வெளிநாட்டவரோ, உள்நாட்டவரோ தமது இயலுமைக்கு ஏற்ற வசதிகளை எவ்வித இடையூறுமற்ற வகையில் அனுபவிக்க முடியும்.

இல்லாவிடின், தற்போது மிரிஸ்ஸவில் ஆரம்பித்திருக்கும் இத்தகைய புதிய கலாச்சாரம் ஓர் தொற்றுநோய் போல மெல்ல மெல்ல நாடுபூராவும் பரவும் என்பதுடன், அதுவே ஒருவித மோசமான பிரச்சனைகளுக்கு வித்திடவும் கூடும்.

Related Articles