Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அழகர்கோயில் அறிந்ததும் அறியாததும் சித்தர் பூமி

ராஜாராம் நீங்க அழகர்கோயில் போயிருகிங்களா ? சகோதரர் சாரதி கேட்டதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. தல எங்க ஊர்ல இருந்து 13 கிலோமீட்டர் தான் தல அழகர்கோயில், அருவியில் தண்ணி குடிக்கலாம் வண்டி எடுத்துட்டு சும்மாலாம் போயிருக்கோம். இப்டி கேட்டுடிங்க என்றேன. அப்ப அங்க ஒரு சாமியார் ஓட சமாதி இருக்காம், அதபத்தி எதாவது தெரியுமா? நண்பர் ஒருத்தர் கேட்டார். நீங்க அழகர்கோயில் பக்கம்னு நியாபகம் வந்துச்சு, அதான் கேட்டேன் கொஞ்சம் சொல்லுங்களேன்  என்றார். இல்லைங்க சரியா தெரியலை நான் நாளைக்கு கேட்டு சொல்லவா என்றேன். என்னங்க உங்க ஊரை பற்றி உங்களுக்கே தெரியலையா? என்றார். ( நீ கேக்குற ஒவ்வொரு கேள்வியும் என்னைய செருப்பால அடுச்ச மாதிரி இருந்துச்சுப்பா என்று சந்தானம் காமெடி ஒன்று வருமே அதுதான் மனசில் ஓடியது ! ) எப்போதும் நமக்கு அருகில் இருக்கும் மதிப்பு வாய்ந்த விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதே இல்லை என்பது எத்தனை உண்மை. சகோதரர் சாரதியின் சந்தேகம் தீர்க்க அடுத்த நாளே சென்னையிலிருந்து அழகர்கோவில் நோக்கி சென்றேன்.

அழகர்கோவில் பகுதி

மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்ற தலம் என்றால் அது அழகர்கோயில்தான் என்பதில் மாற்றுகருத்தே இல்லை . அழகர்கோயில் மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், மேலூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. அழகர்கோயிலை தென்னகத்து திருப்பதி என்றும் கூட குறிப்பிடுவார்கள். நான் கல்லூரி படிக்கும்போது அழகர்கோவில் சாலைகள் அத்தனை பசுமையாக இருக்கும். இப்போது மரங்கள் வெட்டப்பட்டு கவலைக்கிடமாக இருக்குது. அழகர்கோயில் கோட்டைச்சுவர் மட்டுமே போதும் உங்களை மலைப்பில் ஆழ்த்துவதற்கு. கண்டிப்பாக இது மன்னர்களின் பாதுகாப்பிற்கு முக்கிய பங்காற்றியிருக்கும் என்பதை பார்த்தாலே புரியும். அந்த கோட்டை சுவற்றிற்குள் பேருந்து நிலையம், ஒரு பள்ளிக்கூடம், ஒரு பெரிய குளம், தோப்பு, இதுபோக அரசு ஊழியர்கள் கட்டிடம் இருக்கிறது என்றால் அதன் பிரம்மாண்டத்தை தெரிந்துகொள்ளுங்கள். கோட்டை சுவற்றை தாண்டி உள்ளே சென்றதும் நாயக்கர் காலத்து மண்டபம்  ஒன்று இருக்கும். அது பேருந்து நிறுத்தம் கட்டும் முன் கிட்டத்தட்ட நிழற்குடையாக இருந்தது இப்போது கைவிடப்பட்டு பாவமாக உள்ளது. அதை தாண்டி உள்ளே சென்றால் சுத்துப்பட்டு பல கிராமத்தின் காவல் தெய்வம் நம்ம பதினெட்டாம்படி கருப்பு நம்மை அருவலோடு வரவேற்பார். வேற மாவட்டத்தில் இருந்தெல்லாம் கருப்புசாமி கும்பிட வருவார்கள். வாரம் குறையாம 3 கெடா வெட்டாவது இருக்கும். அந்த பக்கம் போனாலே போதும். உங்க கைய புடுச்சு இழுத்தாவது ஒரு வாய் சாப்டு போங்கப்புனு உரிமையா கூப்டுவாங்க நம்ம மதுரை சொந்தங்கள். பதினெட்டாம்படி கருப்போட வரலாறும் கள்ளழகர் வரலாறும் கேக்க அத்தனை சுவாரசியமாக இருந்தாலும் நாம தேடிவந்த இடதுக்கு இன்னும் எப்டி போறதுனே தெரியல எனவே வரும்போது நேரம் இருந்தா வரலாறு சொல்லுறேன். அதுவும் கிராமத்தில் சொல்லுகின்ற கதைகள் எப்போதும் நமக்கு வியப்பை தறுவதாக  இருக்கும் மக்களே ! கருப்பு கோவிலுக்கு முன்புறம் ஒரு பெரிய குளம், இப்போதும் இருக்கு. ஆனால் நான் கல்லூரி முதாலம் ஆண்டு பயின்றபோது அது இல்லை, பெரிய பொட்டல்தான் இருந்தது. அந்த இடத்தில் ஒரு பூங்கா அமைக்கலாம் என்று தோண்டும்போது அங்கு பெரியே குளமே கிடைத்துள்ளது. இன்னும் சரியான முறையில் தொல்லியல் துறை தேடுனா நிறைய வரலாற்று சான்று கிடைக்கும். ஆனா நாமதான் இருக்குறதையே பாதுகாக்காம விட்டுறமே!

கருப்பு கோவிலின் கோபுரம் முழுசும் சிற்ப வேலைபாடுகள். அத்தனை சிறப்பாக இருக்கும். அழகர் சந்நிதியை பார்க்காமலே நாம் மேல செல்லலாம் சில கிலோமீட்டர்கள் காட்டுப்பாதையில் நடக்க வேண்டும். பேருந்து செல்ல தனி ரோடும் உள்ளது. அதன் வழியே நாம் பழமுதிர்சோலைவரை செல்லலாம். முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்று என்பதால் எப்போதும் கூட்டம் இருக்கும்.  முருகன் ஔவைக்கு சுட்டபழம் கொடுத்த இடம், இன்னமும் இருக்கிறது. அருகிலேயே பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளது. கட்டண தரிசனம் என்றால் முருகன் அருகிலும், இலவச தரிசனம் என்றால் சற்று தள்ளியும் சாமியை வழிபடலாம். இங்கிருந்துதான் ஜீவ சமாதியை நோக்கிய நமது பயணம் உண்மையிலேயே ஆரம்பிக்கிறது. பழமுதிர்சோலையில் இருந்து சற்றுத் தொலைவில் ‘ராக்காயி’ அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மைனை வழிபட ‘நூபுர கங்கை’ தீர்த்தத்தில் நீராடி செல்லவேண்டும். இந்த தீர்த்தம் மலையின் உச்சியில் இருந்து வருவதாகவும், பூமியில் ஊத்தாக  வருவதாகவும் பல செவிவழி செய்திகள் இருந்தாலும் இத்தனை வருடத்தில் ஒருநாள்கூட இந்த தீர்த்தம் நின்றதே இல்லையாம். அது எவ்வளவு மோசமான கோடைகாலமாக இருந்தாலும் சரி. இந்த தீர்த்தம் ருசியாக மட்டும் இல்லாமல் மருத்தவ சக்தி கொண்டதாகவும் இருப்பதால் மக்கள் பெரிய பெரிய கேன்களில் பிடித்து செல்கிறார்கள்.

Azhagar Temple (Pic: templesatmadurai)

சாமியார் சமாதி

‘ராக்காயி அம்மன்’கோவிலை அடைந்ததும் இங்க எதோ சாமியார் சமாதி இருக்குன்னு சொன்னாங்க அது எங்க இருக்கு?  என்று நண்பன் விசாரிக்க, அருகில் இருந்த கடைக்கார பெரியவர் தம்பி சாமியார்னு சொல்லாதிங்க சித்தர் சாமிங்க அவரு மரியாதை இல்லாம பேசதிங்கனு சொன்னதும். எனக்கு புருவம் உயரந்தது. சரிங்க அய்யா அவர் பேரென்ன என்றேன் . ‘ராம சித்தர்’ தம்பி சித்துவேலைலாம் தெருஞ்சவரு .அவரு இன்னமும் இந்த காட்டுக்குள்ள திரிறதா கூட  சொல்லுவாங்க. எங்க அய்யா சொல்லுவாரு ராம சித்தர் விலங்குகள் உருவத்துல வந்து சிவ பூசைலாம் பண்ணுவாருன்னு அந்த அய்யா சொன்னதும் எனக்கு மயிர்கூச்சமே ஏற்பட்டுடுச்சு. இப்ப அங்க எப்டி போறது அய்யா என்று கேட்டதும். மலைமேல கைய காமிச்சு அந்த ஒத்தையடி பாதையிலேயே ஏழெட்டு கல்லு நடந்து போங்க, மேல வழிதவறாம இருக்க, பாதையில அம்புக்குறிலாம் வரஞ்சுருக்கும் அத பாத்தே போங்க மாறி போனா மலைக்கு அந்தபக்கம் திண்டுக்கல்,வந்துரம் சூதானம். காட்டெருமை, நரிலாம் இருக்கு தம்பி இருட்றதுகுள்ள வரமாதிரி வெரசா போய்ட்டுவாங்க என்று சொன்னார் அந்த அய்யா.

அய்யா சொன்ன பாதையில் நடக்க ஆரம்பித்தோம்.மலைப்பாதை கடினமாக இருந்தது. போக போக செடிகள் பாதைகளை அடைத்து காணப்பட்டன. எனவே அதிகமாக மக்கள் வருவதில்லை என்பது புரிந்தது. நாம் வழி தடுமாறும் போதெல்லாம் பெயின்ட்டால் வரையப்பட்ட அந்த அம்புக்குறிதான் நம்மளை காப்பாற்றுகிறது. தண்ணீர் கொண்டுபோவதே சிறப்பு. நாக்கு தள்ளிவிடுகிறது. பாதி தூரம் செல்வதற்குள் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அழகைக் காண்பது மட்டும்தான் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல். மலை ஏறும் சில இடங்களில் மைனா படத்தில் காண்பதுபோல் சில கடினமான இடங்களும் வருகிறது. மனதைரியம் ரெம்ப முக்கியம் மக்கா ! ஒரு குறிப்பிட்ட மேடான பகுதியை தாண்டியதும் ஒரு பெரிய குரங்கு ஒன்று எங்கள் முன் நின்றது. அழகர் கோவில் முழுவதும் குரங்குகள் சுற்றும் என்பது எனக்கு தெரியும். ஆனால் ராக்காயி அம்மன் கோவிலுக்கு மேல் நாங்கள் குரங்குகளை பார்க்கவே இல்லை. இதை நண்பனிடம் கேட்டபோது கீழே மக்கள் குரங்கிற்கு சாப்பாடு குடுப்பதால் அங்கே இருக்கிறது. இங்க என்னடா இருக்கு இங்க குரங்கு வர என்று சொன்னான். இப்போது குரங்கு வந்ததும் அவனை முறைந்தேன். அவன் குச்சியை வைத்து விரட்ட முயற்சித்தான் அவனை அது மதிக்கவே இல்லை. எங்கிருந்தோ ஒரு பெரியவர் காவி வேட்டியுடன் வந்தார். மேல ஒரு காவி துண்டு போர்த்தியிருந்தார். அவரும் கையில் சின்ன குச்சி வைத்திருந்தார் ‘யேய் போ’ குச்சியை ஒங்க கூட இல்லை அது போய்விட்டது. நானும் நண்பனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம். என்ன தம்பிங்களா ஜீவ சமாதிக்கா ? வாங்க போவோம் என்று முன் நடந்தார் மறுவார்த்தை பேசாமல் அவரை பின்தொடர்ந்தோம்.

சில நிமிட மலையேற்றத்திற்கு பின் சுற்றி பாறைகள் சூழ்ந்த ஒரு பகுதியில் சின்ன சிவலிங்கள் சில பூஜை பொருட்களுடன் ஒரு இடம் இருந்தது. வந்தவர் பூஜைகளை செய்துவிட்டு கண்களை மூடி தியானிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் தியானம் முடிந்ததும் அய்யா ராம சித்தர் பத்தி எதாவது தெரியும்ங்களா? என்றேன். ராம சித்தர் இல்ல தம்பி ராம தேவர் அவர் சாதாரண ஆள் இல்லப்பா பதினெட்டு சித்தர்கள்ள ஒருத்தர் ! அஷ்டமா சித்திகள் தெருஞ்சவர்! .மருத்துவதும் தான் அவரின் உயிர் மூச்சு. அரபு நாடுகளுக்கெல்லாம் சென்று மூலிகை பற்றிய ஆராய்ச்சி செய்திருக்கார் . அத பத்தி ஓலை சுவடிகளும் இருக்கு, என்று தொடர்ந்து பேசினார்.  பெரும்பாலும் சித்தர்கள் உடலை பூமியில் கிடத்தி ஆன்மாக்களின் வழியே மட்டுமே வெளியே செல்லுவார்கள். ஆனால் இவரோ இந்த உடலோடு அவர் நினைக்கும் இடத்துக்கு செல்லும் சக்தியை பெற்றிருந்தார்,என்றார். இருட்ட ஆரம்பித்தால் நீங்க சீக்கிரம் கீழ போங்க தம்பிங்களா என்றார். நீங்க அய்யா என்றோம், எனக்கு கொஞ்சம் வேலை இருக்குபா என்று மலையின் இன்னொரு பக்கம் நோக்கி இறங்கலானார். சரி அப்டியே இறங்கி திண்டுகள் போனாலும் போவார்டா அதான் அந்த பெட்டிக்கடை அய்யா சொன்னருல என்றான் நண்பன். ஆமாம் மலையை ஒட்டி நிறைய கிராமங்கள் இருப்பது எனக்கும் தெரியும் என்பதால் அவரிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல், நடந்து ராக்காயி அம்மன் கோவில் அடைந்து பெட்டிக்கடை அய்யாவை மீண்டும் பார்த்தோம்.

Monkey (Pic: karthicksdays)

ராம தேவர்

அய்யா நம்ம ராம சித்தர் அரபு நாடுலாம் போயிருக்காராம், நெஜமாவா? என்றோம். ஆமாங்க சாமி, அவரு இமய  மலைக்கு போனப்ப சில சித்தர்கள் சொன்ன மூலிகைகள் தேடி அரபு நாடு போயிருக்காங்க. அங்க போயி இவரு நெறைய கத்துகிட்டு அந்த ஊர் மக்களுக்கும் சொல்லி கொடுத்துருக்காரு. அங்க இவருக்கு பேரு ‘யாக்கோப்பு ‘ ( இது ஏழாம் அறிவு படம்ல என்று நண்பன் என் காதுகளில் சொல்லி சிரித்தான் ). நான் இவர பத்தி எழுதணும், வேற எதுவும் தெரியுமா? அய்யா என்றேன் . இவரு போகர் சித்தர் ஓட சீடன் கருவூரர் ஓட சீடன் தம்பி. போகர் தெரயும்ல என்றார். பழனியில் நவபாஷான சிலை செஞ்சவர் தானே? என்றேன். ஆமா அவரேதான். அப்ப இவர் இங்க எதாவது சிலை செஞ்சுருக்காங்களா அய்யா?  என்றேன். இவர் மருத்துவர் தம்பி அரபுக்கு போனவர். அங்கயே தங்கிட்டாங்க. அவரோட குரு அவர் முன்னாடி தோன்றி நம்ம ஊருக்கு போய் இதெல்லாம் சொல்லிக்குடுனு சொல்லிறுக்காரு. அவரோட மூணு சீடர்கள்டையும் நான் கத்துகிட்ட மூலிகைகளை வச்சு சமாதி நிலைக்கு போய் ஆராய்ச்சி பண்ணப்போறேன்னு சொல்லிட்டு போயிட்டாரு. சில ஆண்டுகள் ஆனதும் இதுக்குமேல குரு வர மாட்டாருன்னு ரெண்டு சீடர்கள் அங்க இருந்து போயிறாங்க கிட்டதட்ட 3௦ வருஷம் கலுச்சு ராமதேவர் வறாரு. காத்திருந்த சீடனுக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுக்குறாரு. விட்டு போன சீடர்கள் பார்வைய இழந்துடாங்கலாம் . நான் மீண்டும் அழகர்மலையில் சமாதி நிலைக்கி போறேன்னு சொல்லிட்டு இப்ப இருக்க இடத்துல ஜீவா சமாதி அடஞ்ஜாராம். இந்த நூபுர கங்கை தீர்த்ததொட்டே மூலிகை குணத்துக்கும் அவர்தான் காரணம்னு சொல்லுவாங்க. இது எல்லாம் காலம் காலமா கேள்வி பட்ட விஷயம்தான் தம்பி, கண்டவக யார் இருக்க சொல்லு. ஆடி அம்மாவாசை போன்ற முக்கியமான நாட்களில் கிராமத்து ஆட்கள் தீராத நோயெல்லாம் தீக்கனும்னு ராம தேவர கும்புட போவாங்க. இதான் சாமி எனக்கு தெருஞ்சது என்றார்.

Trekking (Pic: karthicksdays)

இதுபோதுமே  இத வச்சு இவன் படமே எடுத்துடுவான் என்றான் நண்பன் கிண்டலாக. அய்யாவுக்கு நன்றி சொல்லிவிட்டு மலை இறங்க ஆரம்பித்தோம். அடிவாரம் வந்து இருசக்கர வாகனத்தை கிளப்பும்போது நண்பன் கேட்டான், ஏன் பங்காளி நாம பார்த்த அந்த காவி கட்டுன பெரியவர் ராம தேவரோட மூணாவது சீடனா இருந்தா செமையா இருக்கும்ல ! அனிச்சையாக அழகர்மலையின் உச்சியை பார்க்க அங்கு குருவும் சீடனும் என்னை பார்த்து புன்னகைப்பது போல தோன்ற வாகனத்தை மேலுரை நோக்கி செலுத்தினேன்.

Web Title: Rama Devar Siddhar Samaathi

Featured Image Credit: tainoznanie

Related Articles