பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு

இங்கு யாருக்கெல்லாம் பயணங்கள் பிடிக்காது என்று கேள்வி கேட்டால், எனக்கு என்று சொல்பவர்கள் மிகவும் குறைவு. ஒவ்வொரு பயணியின் எண்ணமும் நோக்கமும் பயணங்கள் பொறுத்து மாறுபடும். சிலர் வரலாற்றினை தேடி பயணிப்பார்கள். சிலர் உணவு, கலாச்சாரம், நகர அமைப்பு ஆகியவற்றில் இலயிக்க பயணிப்பார்கள். சிலரோ கடல்கள், மலைகள் என்று இயற்கையின் மத்தியில் அமைதியாக ஒளிந்து கொள்ள வழி தேடுவார்கள். குழுவாக பயணிக்கும் எந்த ஒரு பயணமும் சிறப்பு தான். இந்தியாவோ, இந்தியாவைத் தாண்டியோ, குழுவாக நண்பர்களுடன் பயணிக்கும் போது பாதுகாப்பு, பணப்பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை. ஆனால் தனியாக பயணிக்கும் போது, அதுவும் ஒரு பெண் தனியாக பயணிக்கும் போது எவற்றையெல்லாம் யோசித்து செயல்படவேண்டும்?

பயணங்களின் அவசியம்

தொழில்நுட்பத்துறையின் ஆதித வளர்ச்சியின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இருபத்தி நான்கு மணி நேரம் கூட நமக்கு போதாததாக இருக்கின்றது. கணினி, அலைபேசி, ஏகப்பட்ட செயலிகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள். யோசிக்கும் போதே சில நேரங்களில் இவையனைத்தையும் மறந்துவிட்டு சென்றுவிட மனம் விரும்பும். ஆண் பெண் என்ற பேதம் பயணங்களுக்கு இருப்பதில்லை

இவை அனைத்தையும் தாண்டி வேலை தொடர்பாகவும் வெளியூர்களுக்கு வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலையில் நாம் இருப்பதால் பயணத்தின் போது மேற்கொள்ளவேண்டிய சில விஷயங்களை கீழே காண்போம். ஆனால் பெண்களுக்கான பயணங்கள் அத்தனை பாதுகாப்பாய் இருந்துவிடுவதில்லை. வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர்கள் கைது, பாலியல் தொந்தரவிற்கு உள்ளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, சுற்றுலா சென்ற இடத்தில் பணம் பறிக்க முயற்சி பெண் பயணி தப்பிப் பிழைத்தார் – போன்ற செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். இது இந்தியாவில் மட்டும் நிகழ்வதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் நடப்பது போல் வேறெங்கும் நடப்பதும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகின் தலை சிறந்த போர்ப்ஸ் நிறுவனம், பெண்கள் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.

Smiling Traveler (Pic: indiauntravelled)

நீங்கள் ஒரு பெண் சுற்றுலா விரும்பி என்றால் நீங்கள் இதை முதலில் படித்துவிட்டு உங்களின் பயணப்பையை தயார் செய்யுங்கள். நீங்கள் மரம் அல்ல, ஒரே இடத்தில் சாகும் வரை வாழ்ந்துவிட்டு மறைய.

நேரம்

நேர மேலாண்மை உங்களை பல்வேறு இன்னல்களில் இருந்து காப்பாற்றும் முக்கியமான அம்சம். ஒருவேளை உங்கள் நகரத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் இருக்கும் நகரத்திற்கு செல்கின்றீர்கள் எனில், உங்களுடைய போக்குவரத்து முறையினைப் பற்றி இணையத்தில் அறிந்து கொள்ளுங்கள். விமானத்தில் செல்கின்றீர்கள் எனில், புறப்படும் நேரம், விமானம் தரையிறங்கும் நேரம் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். உள்ளூர் பயணங்கள் மட்டுமன்றி வெளிநாட்டுப் பயணத்திற்கும் இது பொருந்தும். உங்களை அழைத்துச் செல்ல உங்களின் நண்பர்களோ, உறவினர்களோ அங்கு இல்லாத பட்சத்தில் இரவில் சென்று சேரும் விமானங்கள் மற்றும் இரயில் போக்குவரத்தினை தவிர்த்துவிடுங்கள்.

ஒவ்வொரு நகரத்திலும் சிறந்த சுற்றுலா தளங்கள் இருக்கும். அவற்றினை காண செல்கின்றீர்கள் எனில், அதனை பார்வையிடுவதற்கு எது சிறந்த நேரம், நீங்கள் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து எவ்வளவு நேரத்தில் செல்லலாம் என்பதைப் பற்றி எல்லாம் நன்றாக தெரிந்து கொண்டு பின்னர் ஒரு பட்டியல் தயார் செய்து கொள்வது நல்லது.

இவை அனைத்தையும் மீறி இரவில் செல்ல வேண்டிய நிலை வருகின்றது எனில், ஆட்டோ அல்லது டாக்சியில் ஏறியவுடன் வீட்டில் இருக்கும் நபர்கள் யாருக்காவது அலைபேசியில் அழைத்து தகவலை பரிமாறுங்கள்… அருகில் இருக்கும் நல்ல தங்குமிடம் உங்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். ஏற்கனவே எங்காவது தாங்கும் அறை முன்பதிவு செய்திருந்தால் வரத்தாமதம் ஆகும் என்றும், எங்கே அன்று இரவு தங்கப் போகின்றீர்கள் என்பதை பற்றியும் தகவல் அளித்துவிடலாம்.

Time for Travelers (Pic: thequint)

தங்குமிடம்

இன்று ஒரு நகரம் தொடங்கி  அனைத்தைப் பற்றியும் இணையத்தின் வழியே அறிந்து கொள்ள முடியும். பாதுகாப்பான தங்கும் விடுதிகள் பற்றி அறிந்து கொள்ள கூகுளில் அவ்விடம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற வாடிக்கையாளர்களின் மதிப்புரையை முதலில் படியுங்கள். அதில் இருந்து ஒரு முடிவிற்கு வரலாம். பெண்கள் தங்கியிருக்கும் விடுதி,  அல்லது நண்பர்களின் வீடுகள் என்பது பாதுகாப்பான அம்சம். முடிந்தவரை அப்படியாக தேர்வு செய்து தங்கிக் கொள்ளுங்கள்.

Stay (Pic: pinterest)

நண்பர்கள்

தனிமை நல்ல நண்பன் தான், ஆனால் உங்களுக்கு முன் பின் தெரியாத இடத்தில் தனிமை சிறந்த நண்பன் கிடையாது. உங்களுக்கு யாராவது அந்த ஊரில் முன்னரே அறிமுகம் ஆகியிருந்தால் அவர்களுடன் அலைபேசி தொடர்பிலேயே இருங்கள். அபாயம் வரும் சூழலை முன்கூட்டியே அறியும் திறன் பெண்களிடத்தில் வெகு இயல்பாக இருக்கின்றது. எனவே, உங்களின் உள்மனம் யாரை நம்பச் சொல்கின்றதோ, அவர்களை நம்புங்கள். செல்லும் இடங்கள் அனைத்திலும் ஆபத்துகள் இருப்பதில்லை. முடிந்தவரை பெண் தோழமைகளை தேர்வு செய்யவும். நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி யாராவது ஒரு நண்பருக்கு தகவல்  பரிமாற்றம் செய்து கொண்டே இருங்கள்.  எங்காவது டாக்ஸியில் செல்ல வேண்டும் என்றால், வண்டியின் எண், ஓட்டுநரின் பெயர், நீங்கள் வண்டி ஏறிய இடம், இறங்கப் போகும் இடம் குறித்தும் அவர்களிடம் சொல்வது மிகவும் நல்லது.

Friends (Pic:packslight

போக்குவரத்து

சாதாரண மக்கள் எந்த போக்குவரத்தினை பயன்படுத்துகின்றார்களோ அதனையே நீங்களும் பயன்படுத்துங்கள். பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோ. இதனால் எளிதில் தொலைந்து போகமாட்டீர்கள். நீங்கள் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து பேருந்து நிலையம், மெட்ரோ, ஆட்டோ நிறுத்துமிடம் ஆகியவற்றின் தூரம் அறிந்து வைத்திருப்பது நல்லது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களின் கையில் இருக்கும் பணம் அதிகமாக விரையம் ஆகாது. இரவு நேரப் பயணங்களையும் வெளியில் செல்வதையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.

Travel (Pic: balibreeze)

உங்களுடைய லக்கேஜ் மற்றும் கைப்பை

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் சுற்றும் இடத்தில் எல்லாம் உங்கள் கவனம் முழுவதும் உங்களின் லக்கேஜ் மீது தான் அதிகம் இருக்கும். அதே போல் செல்லும் இடங்களில் எல்லாம் நினைவுப் பொருட்கள் என்று நிறைய வாங்கி கொண்டு ஊர் திரும்பாதீர்கள். நினைவிற்காக வேண்டுமெனில் இரண்டு அல்லது மூன்று SD card வாங்கிக் கொண்டு நிறைய புகைப்படம் எடுங்கள். அந்த நினைவு என்றும் இருக்கும்.  அத்தனை லக்கேஜ்ஜையும் தூக்கிக் கொண்டு சுற்றுவது என்பது நிம்மதியன்று தலைவலியாக முடிந்துவிடும். எந்த பொருளை பயணப்பையின் எந்த பகுதியில்  வைத்தோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொருளை எடுக்க மொத்த பையையும் திறந்து மூடுவது என்பதும் எரிச்சல் அளிக்கக் கூடியது. உங்கள் கைப்பையில் இல்லாமல், பையின் மற்றொரு இடத்தில் பணம் மற்றும் ஏதாவது ஒரு க்ரெடிட் / டெபிட் கார்ட் ஆகியவற்றை வைத்துக்  கொள்ளுங்கள். கையேடு அல்லது நாட்குறிப்பு ஒன்றினை உங்கள் கைப்பையில் வைத்திருங்கள். முக்கியமான அலைபேசி எண், முகவரி, சந்திக்கப் போகும் மக்கள் ஆகியோரைப் பற்றிய குறிப்பு எப்போதும் அதில் இருக்கட்டும். எங்கும் எதுவும் காணாமல் அல்லது திருடு போகலாம் அந்த நேரத்தில் உங்களின் நாட்குறிப்பு உதவியாக இருக்கும். வெளிநாட்டில் பயணம் செய்கின்றீர்கள் எனில் உங்களின் கடவுச்சீட்டு எண்ணை நாட்குறிப்பில் எழுதி வையுங்கள். முடிந்தவரை அதை மனப்பாடம் செய்து வைத்திருங்கள்.

Hand Bag (Pic: pinterest)

அத்தியாவசிய டிஜிட்டில் உபகரணங்கள்

அலைபேசிகள்

சாதாரண அடிப்படை அலைபேசி ஒன்றினையும், ஸ்மார்ட்போன் ஒன்றினையும் வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண அலைபேசி வெகுநேரம் செயல்படும். ஸ்மார்ட்போனில் இருக்கும் GPS மற்றும் இதர செயலிகள் உங்கள் பயணத்தின் போது உங்களுக்கு வழி காட்டும். திக்கற்ற இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருப்பதாக நீங்கள் உணரமாட்டீர்கள்.

பவர் பேங்க்

உங்களின் அலைபேசி அல்லது மடிக்கணினி எப்போது வேண்டுமானாலும் பேட்டரி குறைந்து வேலை செய்யாமல் போகலாம். முடிந்தவரை அலைபேசிகள், பவர் பேங்க், மடிக்கணினி, கேமரா ஆகியவற்றிற்கு முதல் நாள் இரவே சார்ஜ் போட்டு வைப்பது நலம். பவர் பேங்க் உங்களுக்கு எங்கும் உதவும்.

லைட்டர் மற்றும் டார்ச் லைட் ஆகியவையும் அதிகம் தேவைப்படும். கையடக்கமாக, அதிக எடை இல்லாததாக வாங்கி வைத்துக் கொள்ளுதல் நலம்.

Charger (Pic: survivalrenewableenergy)

தற்காப்பு

நேர மேலாண்மை தொடங்கி அனைத்தையும் சிறப்பாக செய்தும், ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டீர்கள் என்றால், தற்காப்புமுறைகள் உங்கள் உயிரினையும் உடைமையினையும் பாதுகாக்கும். சில்லி – பெப்பர் ஸ்ப்ரே (Chilli-Pepper spray) இது உங்களின் கைப்பையில் எப்போதும் இருக்கட்டும். கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் எதையாவது கற்றுக் கொள்ளலாம். பயணங்கள் போதும் மட்டுமில்லாமல் என்றும் உதவும். உங்கள் சகோதரர்கள் மற்றும் ஆண் நண்பர்களிடமிருந்து ஏதாவது அடிப்படை தற்காப்பு பயிற்சிகளை கற்றுக் கொள்ளுதலும் நலமே.  பிரச்சனை என்று வரும் போது சாதுர்யமாக அதில் இருந்து தப்பிப்பதைப் பற்றி மட்டுமே நிதானித்து செயல்படுதல் நலம். அதையும் மீறி உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரும் பட்சத்தில் துணிவுடன் தைரியமாக இறங்கி செயல்படுவது சிறந்த உத்தியாகும். சின்னதாக பிரச்சனை செல்லும் போதே மன்னிப்பு கேட்டுவிட்டு இடத்தை விட்டு நகர்தல் நலம். முன்பின் தெரியாத இடத்தில் பிரச்சனையை வளர்ப்பது தவறு.

Bus (Pic: dnaindia)

நீங்கள் செய்யக்கூடாத மேலும் சில விசயங்கள்

முன் பின் தெரியாத நபர்களிடம் உங்களைப் பற்றியோ உங்களின் பயணங்கள் பற்றியோ அதிகம் பேசாதீர்கள்.

மெட்ரோ அல்லது இரயில் பயணங்களில் அதிக பாதுகாப்புடன் செல்லுங்கள்

பரீட்சையம் இல்லாத உணவு மற்றும் குளிர்பானங்களை உட்கொள்ளாதீர்கள். நீங்கள் உண்ணும் உணவில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

காதில் இசைப்பானை மாட்டிக் கொண்டு வேறொரு உலகத்திற்கு சென்றுவிடாதீர்கள்.

ஆடம்பரமாக நகைகள் அல்லது ஆடைகள் அணிந்து செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

இரவு பத்து மணிக்கு மேல் வெளியே செல்லாதீர்கள்

Web Title: Tips For Women During Travel

Featured Image Credit: huffingtonpost

Related Articles