கோலாலம்பூர் சுற்றிவர…

இலங்கையிலிருந்துகொண்டு சிறிய விடுமுறை நாட்களையும், ஒரு அளவான பணத்தினையும் பயன்படுத்தி சுற்றுலா செல்ல ஏதேனும் ஒரு தேசத்தை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிந்துரை செய்யும் பட்டியலில் நிச்சயம் மலேசியா என்கிற நாடும் அதன் தலைநகரான கோலாலம்பூரும் அடங்கியிருக்கும் என்பேன். மலேசியாவின் ஏனைய பகுதிகளை சுற்றிப்பார்க்க செலவும், நாட்களும் அதிகம் வேண்டும் என்பதனால் குறைந்தது 3 அல்லது 4  நாட்களுக்குள் சுற்றிவர ஏற்ற இடம் கோலாலம்பூர் மட்டும்தான். மிகச் சரியான திட்டமிடல் இருந்தாலே செலவுகளை குறைத்துக்கொண்டு கோலாலம்பூரை போதும் போதும் என்கிற அளவுக்கு சுற்றிவர முடியும் என்பது உறுதி.

(fcmtravel.co.ke)

சுற்றுலாப் பயணியொருவர் சுற்றிப்பார்ப்பதற்கு தேவையான பல இடங்களை கொண்டிருப்பதுடன், ஒரு இலங்கையனானக் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இந்நகரம். முதலில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரினை பார்க்கும்வரை என்னுடைய கற்பனையில் அதனை வேறுவிதமாக உருவகித்து இருந்தாலும், ஒரு நகரம் எவ்வாறு பசுமை மாறாத அபிவிருத்தி அடையவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது என்பதனை மறுப்பதற்கில்லை. இன்றைய நிலையில் பாம் ஒயிலை தரக்கூடிய மரங்களுக்கு மத்தியில் மலேசியாவும் தனது இயற்கை காடுகளை செயற்கைத் தனமாக இழந்துகொண்டிருக்கிறது என்றாலும், நகரங்களிலும் மரங்களின் தேவையை உணர்ந்து அவற்றினை பொருத்தமான முறையில் கொண்டிருப்பது பாராட்டப்படக்கூடியதாகவும், நம்மைப் போன்ற நாடுகளின் அபிவிருத்தியாளர்கள் கற்க வேண்டிய விடயமாகவும் இருக்கிறது.

விமானப் பயணம்

மலேசியா போன்ற நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும்போது இருவகையான விமானங்களை தேர்ந்தெடுக்க முடியும். பட்ஜெட் விமானங்கள் (Budget Planes) எனப்படும் விலைகுறைவான, வரையறுக்கப்பட்ட பயணப்பொதியளவை கொண்டுசெல்லக்கூடிய விமானங்கள். இத்தகைய விமானங்களில் உணவு வழங்கல் தொடங்கி சகல சேவைகளுமே உங்களது அடிப்படையான விமானக் கட்டணத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்காது. அவற்றினை உங்கள் தேவைக்கு ஏற்றவகையில் வாங்கிக்கொள்ள வேண்டும். மற்றையது ஒப்பீட்டளவில் விலை அதிகமாக நிர்ணயக்கப்பட்ட சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயணப்பொதியளவை அனுமதிக்கும் விமானசேவைகள். எனவே, உங்கள் தேவைக்கு ஏற்றவகையில் விமானசேவையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

தங்குமிடம்

(asiawebdirect.com)

இணையத்தில் கொட்டிகிடக்கும் பல்வேறு இணையத்தளங்கள் மூலமாகவும் தங்குமிடங்களை உங்களது செலவுகளுக்கு ஏற்றவகையில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும். என் அனுபவத்தில் ‘KL Sentral’ தான் தங்குவதற்கு பொருத்தமான இடம் என சொல்லுவேன். இங்கிருந்து, கோலாலம்பூரில் பார்க்க செல்லும் இடங்களுக்கான நேரம் குறைவாக இருப்பதுடன், பொது போக்குவரத்தின் மையப்புள்ளியாகவும் இது இருக்கிறது. எனவே, இந்த இடத்தில் தங்குமிடத்தினை தெரிவு செய்தாலே ஏனைய விடயங்களை இலகுவாக திட்டமிட்டுக்கொள்ள முடியும்.

உள்ளூர் பயண முறைகள்

கோலாலம்பூர் முழுவதுமே சுற்றிவரவும் பயணிக்கவும் பொதுப் போக்குவரத்து சேவையினை பயன்படுத்தலாம். அதிலும், மலேசிய ரயில் சேவையானது உயர்தரமனானதும், செலவு குறைவானதுமானது. எனவே, எல்லாவற்றுக்கும் மலேசியாவின் பொதுப் போக்குவரத்து சேவையினை உறுதியாக நம்பி பயன்படுத்திக்கொள்ள முடியும். இவற்றுக்கு மேலதிகமாக Grab & UBER போன்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச வண்டி சவாரி நிறுவனங்களும் உள்ளதால் எது செலவு குறைவானது என கணக்கிட்டு பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து KL Sentral பகுதிக்கு செல்ல ஒருவருக்கான இரயில் கட்டணம் சுமார் RM 55 (LKR 1650). ஆனால், UBER அல்லது GRAB சேவைகளில் அதிகப்படியான கட்டணம் RM 78 (LKR 2340). குறைந்தது 3 பேர் இரயிலில் பயணம் செய்யும்போது  ஏற்படுகின்ற செலவை விட, வண்டி ஒன்றினை முன்பதிவு செய்து செல்லும் குறைவு மிக குறைவு. இப்படியாக போக்குவரத்து முறையிலேயே நிறைய சேமித்துக்கொள்ளவும் முடியும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

Batu Caves குகைக் கோவில்

(thousandwonders.net)

கோலாலம்பூருக்கு யார் சென்றாலும் கட்டாயமாக செல்லவேண்டிய இடமாகவிருப்பது Batu Caves முருகன் குகைக் கோவில்தான். எந்த மதத்தவராக இருந்தாலும், கோலாலம்பூரின் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தளமாக இந்தக் கோவில் இருப்பதால், இங்கே ஒருமுறை சென்று வரலாம். KL Sentralலிருந்து Batu Caves கோவிலுக்கு நேரடியாக இரயில் சேவை உள்ளதால், வெறும் 15 நிமிடங்களில் குகைக் கோவிலின் அடிவாரத்தை சென்றடைந்துவிட முடியும். மலை அடிவாரத்தில் உலகின் உயரமான முருகன் சிலை உங்களை வரவேற்கும். தங்க முலாம் பூசப்பட்ட 140 அடி உயரம் கொண்ட இந்த முருகன் சிலை 2006ம் ஆண்டு இவ்விடத்தில் நிறுவப்பட்டுள்ளது. முருகனுக்கு பின்னால் உள்ள மலையானது குகைக்கோவிலையும், பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பையும் கொண்டது.

குகைக்கோவிலை சென்றடைவதற்கு சுமார் 272 படிக்கட்டுக்களை ஏறி மலையுச்சிக்கு செல்லவேண்டியிருப்பதுடன், மலையிலே தெய்வதரிசனத்தை முடித்துக் கொண்டு வரும்போது, கீழேயுள்ள இருண்ட குகையானது மிக அரியவகை உயிரினங்களை கொண்ட ஊசிப் பாறைகளாலும், சுண்ணக்கல்லாலும் ஆனதாகவும் உள்ளது. இந்த குகைக்குள் சிறப்பு கல்வி சுற்றுலா என்பதன் அடிப்படையில் மலேசிய இயற்கை கழக உறுப்பினர்களின் உதவியுடன் சென்றுவர முடியும். இதற்கு கட்டணமும் உண்டு.

அடுத்ததாக, மலேசியாவின்  தலைநகர் கோலாலம்பூர் என்றால், கோலாலம்பூரின் தலைநகராகவிருப்பது பெட்ரோனாஸ் இரட்டைக்கோபுரமும் அதனை சார்ந்து அமைந்துள்ள பகுதியுமாகும். எனவே, குறித்த இடத்திற்கு சென்றுவிட்டால் அனைத்தையும் ஒரு நாளில் திட்டமிட்டு பார்வையிடக் கூடியதாக இருக்கும்.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரமும் (Petronas Towers) , KLCC பூங்காவும்

(blogspot.com)

2003ம் ஆண்டு வரை உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக இருந்த இக்கோபுரம், தற்போதுவரை மலேசியாவின் சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்ற கட்டிடமாக உள்ளது என்றால் மிகையாகாது. 88 மாடிகளைக் கொண்டதாக அமைந்துள்ள இக்கட்டிடமானது 41வது மற்றும் 42வது மாடியில் இணைப்பினை கொண்ட பாலத்தினை கொண்டுள்ளது. இந்த பாலம் சுற்றுலாப் பயணிகள் கோலாலம்பூரின் அழகினை இரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் பயன்படுத்தபடுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கபட்டிருப்பதுடன், இரவு வேளைகளில் அதன் அருகே அமைந்துள்ள KLCC பூங்காவில் மின்னொளியாலான கண்கவர் நீர் விளையாட்டுக்களும், இதர பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெறுகிறது. எனவே, பெட்ரோனாஸ் கோபுரத்துக்கு வருகை தருபவர்கள், மறக்காது தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கும் சென்றுவரலாம். கொழும்பின் தலைநகரில் எப்படி விகரமாதேவி பூங்கா உள்ளதோ, அதனை விட பலமடங்கு நேர்த்தியுடன் மிக சிறப்பாக வடிவமைக்கபட்டது இந்தப் பூங்கா என குறிப்பிட முடியும்.

(justgola.com)

பெட்ரோனாஸ் கட்டணம் – RM 85 (LKR 2550)

பூங்கா கட்டணம் – இலவசம்

KL கோபுரம் (KL Tower)

மலேசியாவின் தொலைத்தொடர்பு சேவை பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு இன்று சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல்வேறுவிதமான களியாட்ட விடயங்களையும், கோலாலம்பூரின் அழகை இரசிக்கக்கூடிய காட்சியிடத்தையும் கொண்டதாக இந்த கோபுரம் உயர்ந்து நிற்கிறது. பெட்ரோனாஸ் கோபுரம் தனித்து கோலாலம்பூரை உயர்ந்த இடத்திலிருந்து ரசிக்கக்கூடிய காட்சியமைப்பை மட்டுமே கொண்டுள்ளபோதிலும், KL கோபுரம் அதனை தவிர்த்து இதர பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளதனால் இங்கே நேரத்தை அதிகளவில் செலவிட முடியும்.

(easybook.com)

KL பறவைகள் சரணாலயம் & KL நீர்வாழ் காட்சியகம்

சுற்றுலா செல்லும் நீங்கள் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் தொடர்பில் ஆர்வமும், ஆசையும் கொண்டவர்களாக இருப்பின் இந்த இடங்களுக்கு செல்லலாம். பறவைகள் சரணாலயத்தில் அரியவகை பறவைகளை பார்வையிடவும், அவற்றுடன் புகைப்படம் எடுக்கவும் சந்தர்ப்பம் அமைவதுடன், நீர்வாழ் காட்சியகம் முற்று முழுதாக ஆழ்கடல் சென்றுவந்த அனுபவத்தை தருவதாகவும் அமைந்துள்ளது. ஒப்பீட்டு ரீதியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் அதிகமாவிருப்பதால், இத்தகைய இடங்களை தேர்வு செய்யும்போது உங்கள் பட்ஜட்டையும் கொஞ்சம் கவனித்து கொள்ளுவது உகந்தது.

(easybook.com)

பறவைகள் சரணாலய கட்டணம் – RM 50 (LKR 1500)

நீர்வாழ் காட்சியகம் – RM 64 (LKR 1920)

கெண்டிங் மலை (Genting Highlands)

இலங்கைக்கு எப்படி நுவரெலியாவோ, அதுபோல கோலாலம்பூருக்கு ஒரு கெண்டிங் மலை என குறிப்பிடலாம். தட்பவெட்ப நிலையில் நுவரெலியாவுக்கு சமனானதாக உள்ளதுடன், தேயிலை மற்றும் கொக்கோ பயிர்ச்செய்கைக்கு மிகவும் பிரசித்தம் பெற்றதாக உள்ளது. இங்கு ரிசோர்ட் வோல்ட் கெந்திங் (Resorts World Genting) என்கிற நிறுவனத்தினால் மிகப்பெரிய பேரங்காடி (Shopping Mall), சூதாட்ட விடுதி, கேபிள் கார் பயணம் , களியாட்ட விளையாட்டுக்கள் என்பன நடாத்தப்பட்டு வருகின்றது. தற்சமயம் கெண்டிங் மலைத்தொடரில் உள்ள ரிசோர்ட் வோல்ட் கெந்திங் (Resorts World Genting) புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதால், குறித்த இடத்தில் கேபிள் கார் பயணம் மற்றும் பேரங்காடியை பார்வையிடும் அனுபவம் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கப் பெறுகிறது. அத்துடன், 2020ம் ஆண்டளவில் சிங்கப்பூரில் உள்ள Disney World நிறுவனத்தின் களியாட்ட இடத்தினை போல, இங்கு FOX நிறுவனத்தினால் களியாட்டப் பகுதி அமைக்கபடவிருப்பதால் அதற்கான வேலைகளும் இடம்பெற்று வருகிறது. இவற்றை எல்லாம் கவனத்தில்கொண்டு குறித்த இடத்திற்கு பயணம் செய்வதா? இல்லையா? என்பதனை பயணிகள்தான முடிவு செய்யவேண்டும்.

(itways.com)

பெட்டாலிங் வீதி (Petaling Street)

சீனாவுக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள், கோலாலம்பூரில் உள்ள பெட்டாலிங் வீதிக்கு செல்வதன் மூலம் தாங்கள் சீனாவில் வாங்கவேண்டிய அனைத்து பொருட்களையும் மிகக்குறைந்த விலைக்கு இங்கேயே வாங்கிக்கொள்ள முடியும். கோலாலம்பூருக்கு சுற்றுலா வருகின்ற யாருமே இத்தகைய இடத்தினை நிச்சயமாக தவறவிடமாட்டார்கள். ஆனால், இதன் தரத்தினை பரிசோதித்து வாங்கக்கூடிய திறமையும், ஆற்றலும் மிக அவசியம். அதுபோல, வீதியோர உணவக கடைகளுக்கும் பிரசித்தமான வீதியாக இது உள்ளது. அனேகமாக நமது புறக்கோட்டை கடைகளுக்கான பொருள் வழங்குனர்கள் நிச்சயம் இங்கேதான் இருப்பர்கள் என இங்குவந்த பின்பு நீங்களும் நம்பக்கூடும்.

(abrasaparvaz.com)

புக்கிட் பெண்டாங் (Bukit Bintang)

கோலாலம்பூரில் களியாட்ட நிகழ்வுகளுக்கும், பொருட் கொள்வனவுக்கும் பெயர் போன இடங்களில் ஒன்று. இரவுப்பொழுதுகளில் மிக அதிகமாக இயங்கும் நகரமாக புக்கிட் பெண்டாங் உள்ளது. இங்கு விதவிதமான நாட்டவர்களின் உணவகங்களையும், அவர்களது கலாச்சாரம் சார்ந்த கேளிக்கை நிகழ்வுகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

 Sunway Lagoon & Berjaya time square

கோலாலம்பூரிற்கு சென்றுவிட்டு Sunway Lagoon தீம் பூங்காவுக்கு செல்லாவிட்டால தெய்வ குற்றமாகிவிடும் என சொல்லும் அளவுக்கு இந்த இடம் பிரபல்யமானது. நீங்கள் பயணிக்கும் விடுமுறை நாளில் ஒருதினத்தை முழுமையாக செலவிடக்கூடிய அளவுக்கு தன்னகத்தே பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டதாக இந்த இடம் உள்ளது. வெவ்வேறு விதமான 6 தீம் பூங்காக்களை தன்னகத்தே உள்ளடக்கியதாக இந்த பூங்கா அமைந்துள்ளது. நீர் பூங்கா மற்றும் சாகச பூங்கா என்பவை இங்கே அதிகம் புகழ் பெற்றவையாக இருக்கிறது. எனவே, கோலாலம்பூரில் விடுமுறையை கழிக்க செல்லுபவர்களுக்கு இதுவொரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Berjaya time square பேரங்காடி கட்டமைப்புடன், விளையாட்டு பொழுதுபோக்குகளை உள்ளடக்கியதாக உள்ள இடம். இங்கே செல்லுபவர்கள் Sunway Lagoonனின் சாகச பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களை ஒத்த அனுபவத்தை பெறமுடிவதுடன், தமக்கு தேவையான அனைத்துவகை பொருட்களையும் கொள்வனவு செய்யக்கூடியதாகவும் அமையும். எனவே, இது சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற பழமொழிக்கு ஏற்றவகையில் சுற்றுலா அனுபவத்தை தருகின்ற இடமாக அமைந்திருக்கும்.

(pinimg.com)

Sunway Lagoon கட்டணம் – RM 170 (LKR 5100) உங்கள் உடமைகளை பாதுகாக்க கூடிய பெட்டகங்களை (Lockers) தனியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவற்றுக்கு மேலதிகமாக, கோலாலம்பூரில் மலேசியாவின் பழைய வரலாறுகளை பிரதிபலிக்கும் அருங்காட்சியகங்கள் , பழமையான கட்டிடங்கள் என்பன உள்ளன. வரலாற்றுடன் அதிமாக ஈர்ப்புடையவர்கள் இத்தகைய இடங்களை தேர்வு செய்யலாம். அதுபோல, பொருட்களை கொள்வனவு செய்ய விரும்புவர்களுக்கு கோலாலம்பூரின் ஒவ்வொரு தெருவிலும் பேரங்காடிகள் இருப்பதால், தாராளமாக அவற்றிக்கும் நேரத்தினை செலவிட முடியும்.

இதமான காலநிலை, வேறுபட்ட கலாச்சாரங்கள் , பல்வேறுபட்ட உணவு சார் கலாச்சாரங்கள் என பரந்துவிரிந்திருக்கும் கோலாலம்பூரில் குறுகியநாள் விடுமுறையை கழிக்க இவற்றுக்கு மேலே என்ன வேண்டும்? எனவே, அடுத்த சுற்றுலாவுக்கான தெரிவாக கோலாலம்பூர் இருப்பின் அல்லது உங்கள் தெரிவாக கோலாலம்பூரிருந்து அங்கு சென்று வந்திருப்பின், இங்கே பதிவிட தவறிய விடயங்களை கருத்துரை வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Articles