மின்யுத்தம் -எடிசனும் எதிரிகளும்

அத்தியாயம் 2

தன் ஒளிரும் விளக்கை தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் சரியான உட்கட்டமைப்பு வசதி தேவை என எடிசன் அறிந்து வைத்திருந்தார். காலம் தாழ்த்தாமல்  தன்  மின்விளக்கை ஒளிர்விப்பதற்காக ஒரு  மின் அமைப்பையே கட்டமைத்தார். வியாபார உத்திகளை கற்றுத்தேர்ந்த அவர் அத்தோடு நிற்கவில்லை. நேரோட்ட மின்னை வீடுகளுக்கு வழங்கும்  இவ்வமைப்புக்கு தேவையான உதிரிப்பாகங்களையும் தயாரிக்கும் நிறுவனங்களை 1880களில் இவர் நிறுவினார். Edison Lamp Works என இவர் ஆரம்பித்த நிறுவனம் பின்னர் Edison Electric Lamp Company என பெயர் மாற்றம் கண்டது. இத்துடன் Edison Machine Works மற்றும் பிற நிறுவனங்கள் மின்விளக்குகள், மின்பிறப்பாக்கிகள், கடத்திகள் மற்றும் மானிகள் முதலிய பாகங்களை தயாரித்தன. 1889ல் இவை அத்தனையும் ஒருங்கிணைக்கப்பட்டு Edison General Electric என ஒரு குடையின்கீழ் கொண்டுவரப்பட்டன. இதுவே இன்று உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று விளங்கும் General Electric நிறுவனம் ஆகும். ஆண்டுக்கு 74.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டும் நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது.

எடிசன் மெஷின் வேர்க்ஸ் வாசலில் எடிசனின் பணியாளர்கள்
மூலம்: nationalgeographic.com

எதிர்க்கடை

லாந்தர் விளக்குகளின் இடத்தை மின்விளக்குகள் கைப்பற்றும் என்ற எடிசனின் கணிப்பில் தவறில்லை என்பது இன்று நாம் கண்கூடாக காணும் சான்று. மின்விளக்குகளுக்கு காணப்பட்ட அதீத கேள்வியும் அதனூடாக கொட்டிய இலாபமும் 1880களில் அவரை மலைக்க வைத்தது. என்னதான் அவரே இதனை கண்டுபிடித்து இருந்தாலும் கீரைக்கடைக்கு எதிர்க்கடையாக பல போட்டியாளர்கள் தோன்ற ஆரம்பித்தனர். தொழில்நுட்ப உலகில் இது சர்வசாதாரணம் ஸ்மார்ட் அலைபேசிகளை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் ஆனால் இன்று அதற்கு எத்தனை போட்டியாளர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். எடிசனை கவலை கொள்ளவைத்தது இந்த போட்டியன்று. மாறாக இவரது நேரோட்ட மின்வழங்கும் திட்டமே தான். எடிசன் உருவாக்கிய பொறிமுறை சனநெரிசல் மிக்க பகுதிகளிலே இலாபகரமான ஒரு திட்டமாக அமுல்படுத்த முடியும். பணம் கொழிக்கும் அருகருகே வீடுகள்  நிறைந்த நகர்ப்பகுதிகளில் அவரது இந்த பொறிமுறையை நிறுவுவதில் பெரும் சிரமம் இருக்கவில்லை. அதற்கான செலவை ஈடுகட்டும் அளவுக்கான பணம் அம்மக்களிடையே காணப்பட்டது. ஆனால் சற்று தொலைவாக புறநகர் பகுதிகளில் இதனை நிறுவுவது குதிரைக்கொம்புக்கு அலைந்த கதையாகிப்போனது. பாரிய செப்புவடங்களை அப்பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதே பெரும் செலவுமிக்க காரியமாக இருந்ததால் எடிசனின் கம்பனி நகரம் தாண்டி விஸ்தீரணம் அடையமுடியாமல் தவித்தது. இதற்கான ஒரு தீர்வை கண்டறிய எடிசன் கடுமையாக முயன்ற வண்ணம் இருந்தார்.

இவ்வேளையில் தான் ஜோர்ஜ் வெஸ்டிங்ஹௌஸ் எனும் அமெரிக்கர் இப்படியான ஒரு சந்தைவாய்ப்பு இருப்பதை கண்டறிந்தார். அதற்கு தீர்வாக ஆடலோட்ட மின்னோட்டத்தையும் பிரயோகிக்க முயன்றார். அவரது யோசனைப்படி மிக அதிக வோல்ற்றளவை செலுத்துவதன் மூலம் செப்புவடத்தின் விட்டத்தை குறைக்க முடியும் என்று கணித்தார். ஆனால் அத்தகைய பெரும் வோல்ற்றளவு குடியிருப்பு பகுதிகளுக்கு கொணர்வது பெரும் ஆபத்தில் முடியும். உதாரணமாக 1000 வோல்ற்று மின்சக்தியை நெடுந்துரத்திற்கு பயணிக்க செய்யலாம். ஆனால் அதனை வீடுகளில் பாவிக்க முடியாது. விபத்துகள் நேரிடும். ஆகவே வெஸ்டிங்ஹௌஸ் தனது பொறியியலார்களை அழைத்து ஐரோப்பாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மின்மாற்றியை கடனாக பெரும்படி உத்தரவிட்டார். 1000 வோல்ற்று மின்சாரத்தை படியிறக்கி 110 வோல்ட்டாக வழங்குவதே அவரது திட்டம்.

ஜோர்ஜ் வெஸ்டிங்ஹௌஸ்
மூலம்: Heinz History Centre

இதில் சிக்கல் யாதெனில் மின்மாற்றிகள் (Transformers) ஆடலோட்ட மின்னோட்டத்தில் மாத்திரமே இயங்கக்கூடியவையாக இருந்தன. எடிசனின் நேரோட்ட அமைப்புடன் ஒப்பிடுகையில் இதில் சில பின்னடைவுகளும் காணப்பட்டன. எடிசனின் அமைப்பில் நேரடியாக குறைந்தளவு (110V) மின்சாரமே வழங்கப்பட்டது. இது மக்களுக்கு பாதுகாப்பானது. அத்துடன் இந்த அமைப்பை நிறுவுவதிலும் பாரியளவு சிக்கல்கள் இல்லை. தொலைபேசி மற்றும் தந்தி முதலியவற்றுக்கு பயன்படுத்தியதை போன்றே நேரோட்ட மின்சாரத்திற்கும் மின்கம்பிகளை இணைத்து இணைப்பை வழங்கிட இயலும்.

அதியுயர் மின்னை கடத்துவதால் கம்பிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டி இருப்பதை வெஸ்டிங்ஹௌஸ் இன் பொறியியலாளர்கள் கண்டறிந்தனர். இவர்கள் வழங்கவிருந்த ஆடலோட்ட மின்னோட்டமானது நேர் 1000 வோல்ற்றிலிருந்து மறை 1000 வோல்ற்றிற்கு மாறுபடும். மின்பாயும்போது அருகாமையில் செல்பவருக்கு உயிரிழப்பு நேரிடும் ஆபத்து இதில் காணப்பட்டது. ஆனால் தகுந்த பாதுகாப்பு உறை இடப்பட்ட கடத்திகளினூடாக மின்னை கடத்தும் பட்சத்தில் பாரிய தொலைவிற்கு பெருமளவு மின்சாரத்தை கடத்த முடியும் என்பதால் வெஸ்டிங்ஹௌஸ் தரப்பினர் இந்த செலவை ஏற்க தயாராயிருந்தனர்.

1887 அளவில் மின் பொறியியலாளர்களுக்கு ஆடலோட்ட மின்னோட்டத்தின் மீது ஒரு நம்பிக்கை பிறந்தது. திட்டமிட்ட அமைப்பை நிறுவுவதன் மூலம் ஒரு நகர் முழுவதற்கும் தேவையான மின்சாரத்தை வழங்க முடியும். ஆனால் அதனை வழங்குவதற்கு ஏற்ற வலையமைப்பை நிறுவுவதற்கு லட்சக்கணக்கான டொலர்கள் செலவாகும். இந்த செலவை ஈடுகட்ட இராப்பகலாக இவர்கள் மின்சாரத்தை வழங்க நேரிடும். இதற்கு பகல் நேரத்தில் மின்சாரத்தை உள்ளீர்க்கும் மோட்டார் ஒன்று தேவைப்பட்டது. வாகனங்களில், ஆலைகளில் என அனைத்து விதமான தேவைகளுக்கும் பயன்படும் வகையில் அது அமைய வேண்டும்.

டெஸ்லாவின் வருகையும் ஆடலோட்ட மோட்டரின் உதயமும்

நிகோலஸ் டெஸ்லா 1856ல் ஒரு சேர்பிய குடும்பத்தில் இன்றைய குரோஷியா பகுதியில் பிறந்தார். டெஸ்லாவின் தந்தை ஒரு சேர்பிய பாரம்பரிய மதபோதகர் ஆவார். இவர் தன்னைப்போலவே மகனும் ஒரு மதபோதகராக வருவான் என எதிர்பார்த்தார். தன் பதின்ம வயதிலேயே விஞ்ஞானத்தின் பால் ஈர்க்கப்பட்ட நிகோலஸ் டெஸ்லா ஆஸ்திரியாவில் உள்ள Joanneum Polytechnic பாடசாலையில் பொறியியல் பயின்றார்.

நிகோலஸ் டெஸ்லா
மூலம்: Encyclopedia Britannica

கல்லூரியில் பயில்கையில் டெஸ்லா புதியதொரு மோட்டாரை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். அப்போதிருந்த மோட்டர்களில் இரு விதமான மின்காந்தங்கள் காணப்பட்டன. ஒன்று நிலையானது மற்றையது சுழலக்கூடியது. மின்னோட்டம் வழங்கப்படும் போது இவையிரண்டும் ஒத்த முனைவாக்கப்பட்டு ஒன்றையொன்று தள்ளுகையில் மோட்டார் சுழலும். இது செயற்படும் விதத்தை வகுப்பறையில் அவதானித்த வண்ணம் இருந்த டெஸ்லா நேரோட்ட மின்மோட்டர் இயங்குகையில் ஏற்படும் தீப்பொறியை தடுக்க அதிலிருக்கும் சுழலும் ஆளியை நீக்க வேண்டும் என்று டெஸ்லா பரிந்துரைத்தார். அவரது ஆசிரியர் டெஸ்லாவின் யோசனையை முற்றிலுமாக நிராகரித்தார்.

ஆனால் குறித்த விடயத்தில் தீவிரமாக இருந்த டெஸ்லா சில ஆண்டுகளில் அதற்கான தீர்வை கண்டறிந்தார். ஏனையோர் போல எதையும் செய்து பார்த்து ஆராயும் விஞ்ஞானி அவரல்ல. அத்தனையையும் தன் சிந்தனையிலேயே வடிவமைத்தார். செயற்படுத்தியும் பார்த்தார். சுழலியில் இருக்கும் காந்தப்புலங்களை மாற்றுவதற்கு பதிலாக சுழலும் காந்தப்புலத்தை உருவாக்க அவர் எண்ணினார். இதுவரைகாலமும் நடைமுறையில் இருந்த மின்மோட்டருக்கு தலைகீழான ஒரு வடிவமைப்பு மாற்றத்தினை டெஸ்லா கண்டறிந்தார். அவரது இந்த சுழலும் காந்தப்புலத்திட்டம் பொருத்தமான திட்டமாக இருப்பினும் குறித்த காந்தப்புலமானது ஆடலோட்ட மின்னோட்டம் மூலமே உருவாக்கப்படலாம். நேரோட்ட மின்னோட்டத்தில் சாத்தியமில்லை. இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று தெரியாமல் டெஸ்லா திகைத்தார்.

டெஸ்லாவின் மின்காந்த தூண்டல் மோட்டர்
மூலம்: nationalgeographic.com

தொடர்ந்து ஐந்தாண்டுகளில் தனது மோட்டரை உருவாக்க நடைமுறை அறிவு தேவை என்று கருதி பணியில் இணைந்தார் டெஸ்லா. புடாபெஸ்ட்டில் ஒரு தொலைபேசி மாற்றியை நிறுவிய பின்னர் பாரிஸில் உள்ள எடிசன் கம்பனிக்கு இடமாற்றப்பட்டார். அங்கு ஐரோப்பாவின் பாரிய நகரங்களை ஒளியூட்டும் அமைப்பை நிறுவும் பணியில் ஈடுபட்டார். 1884ல் டெஸ்லா நியூயோர்க்கில் உள்ள எடிசன் மெஷின் வேர்க்ஸ் இற்கு மாற்றப்பட்டார். அங்கு எடிசனுடன் நேரடியாக பழகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அங்கு ஒரு  ஒளிக்கதிர் ஒளிரும் அமைப்பை நிறுவுவதற்கு எடிசனால் பணியமர்த்தப்பட்டார். தன் பணியை டெஸ்லா செவ்வனே நிறைவேற்றினாலும் எடிசனால் ஏமாற்றப்பட்டார். பணிக்கு சேரும்போது “இப்பணியை நீ நிறைவேற்றினால் உனக்கு 50 000 டொலர்கள் தருவேன்” என எடிசன் கூறவும் டெஸ்லா பணியாற்றினார். ஆனால் இறுதியில் மிகக்குறைவான ஊதியத்தையே டெஸ்லாவுக்கு அளித்தார். டெஸ்லா எதிர்த்து கேள்வி கேட்கவும் “அத்தகைய ஊதியம் தருவேன் என கூறியது ஒரு அமெரிக்க நகைச்சுவை” என கூறி எடிசன் சிரித்ததாகவும் மனமுடைந்த டெஸ்லா பணியிலிருந்து விலகியதாகவும் கதை உண்டு.

ஏமாற்றத்துடன் வெளியே வந்த டெஸ்லாவின் அடுத்தகட்ட நகர்வு என்ன? போர் எங்ஙனம் மூண்டது? அடுத்த பாகத்தில்…

Related Articles