கேரள வெள்ளத்தின்போது உதவிய செயலிகள்

இந்த ஆண்டு கடந்த (ஆகஸ்டு) மாதம் கேரளத்தில் பெருவெள்ளம், 1924 ஆம் ஆண்டு வந்த “தி கிரேட் ஃப்ளட் 99” க்கு அடுத்து வந்த பெரிய இயற்கை பேரழிவு. இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தோராயமாக 10.40 லட்சம் நபர்கள். அத்துணை லட்சம் மக்களும் தனது வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கும்படியான நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போது, நமது கேரள சகோதரர்களுக்கு நம்மால் முடிந்தது உதவிக்கரம் நீட்டுவது மட்டும் தான்.

எவ்வாறு செய்யப்போகின்றோம்?

தி கிரேட் ஃப்ளட் 99” ன் பிரளயம், இந்த வெள்ளத்தை விட சிறியதாக இருந்தாலும், பாதிப்பு கிட்டத்தட்ட நிகரான ஒன்று தான் என்கின்றது இணையச் செய்திகள்.

அன்றைய காலகட்டத்தில் இருந்த வசதிவாய்ப்பைக்காட்டிலும், இப்போது இருக்கும் வசதிவாய்ப்புகளில் இருக்கும் முன்னேற்றங்களைக் கொண்டும், தற்போதிருக்கும் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியை சமயோஜிதத்தோடு பயன்படுத்தியதாலும் தான் பெருமளவில் பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. அதே தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் துணை நிற்கக் கூடாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, தங்களால் முடிந்தளவு நன்கொடை வழங்க, இந்த லின்க்கிற்கு செல்லவும்: https://milaap.org/fundraisers/helpkeralaroaragain

கூகுள் பெர்சன் ஃபைன்டர்

கேரள வெள்ளத்திற்குப் பிறகு, கூகுள் நிறுவனம் “கூகுள் பெர்சன் ஃபைன்டர்” என்கின்ற மென்கருவியை அறிமுகப்படுத்தியது.  இது காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க உதவும் மென்கருவியாகும். இதில், யாவராயினும், தனது பெயருடன், தான் இருக்கும் இடத்தையும், இன்னபிற விவரத்தைப் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மீட்கப்படாதவர்களைப் பற்றின தகவல் எளிதில் மீட்புக்குழுவினருக்குச் சென்றடையும். இவ்வாறு பதிவு செய்வதன் விளைவாக, மீட்புப் பணியும், துரித காலத்தில் செய்து முடிக்க ஏதுவாக இருக்கும், என்று அறிவித்தது கூகுள். இந்த மென்கருவி மூலம் ஏற்படுத்தப்படும் தகவல் பரிமாற்றத்தில், பெறப்படும் தகவல்கள் முழு சதவிகிதம் மிகச்சரியான கணக்கில் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால், உரிய நேரத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க கூடிய அளவில் இந்த மென்கருவி துணை புரியும் என்று கூறியது கூகுள். இதில், தனது விவரத்தை பதிவு செய்கையில்,“பொது”என்றிருக்கும் அனைவருக்கும் தெரியும்படியான ஒரு தேர்வை, தேர்வு செய்திருக்க வேண்டும், என்பது முக்கியம். இதனால், தகவல் சரியாக சென்றடையும். இதில், விளையாட்டுத்தனமாக, பாதிப்பு வளையத்தில் இல்லாதோரும் தனது விவரத்தை பதிவிட்டிருந்தால், அதற்கு கூகுள் பொறுப்பேற்காது என்பதை தெளிவாக அறிவித்துவிட்டது.

கூகுள் மேம் செயலியில், “பின் ட்ராப்” தேர்வு மூலமும் மக்கள் பயனடையலாம், என்று கூகுள் தெரிவித்திருந்தது. அதன் மூலம் முகாம்களுக்கு பாதிக்கப்பட்டோர்  எளிதில் சென்றடைந்து, அங்குள்ள உணவு, மருத்துவ வசதிகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

Google Person Finder (Pic: t13)

முகப்புத்தக பாதுகாப்பு சோதனை

அனைத்து, பேரிடர் காலங்களிலும் முகப்புத்தகம் உதவும் என்பது நாம் அறிந்ததே. உலகெங்கும் ஏற்படும் இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் காலங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, தான் பாதுகாப்பாக இருக்கின்றோமா? என்பதை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க ஏதுவாக “பாதுகாப்பு சோதனை” இணைப்பை வழங்கும். அதில் “பாதுகாப்பாக இருக்கிறேன்” என்று தேர்வு செய்வதன் மூலம், தங்கள் உறவினரிடம், தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கலாம்.

இதனோடு “க்ரைசிஸ் ரெஸ்பான்ஸ் பேஜ்”(நெருக்கடியை கையாளும் பக்கம்) என்ற ஒன்றை தொடங்கி, கேரள வெள்ளம் தொடர்பான செய்திகளையும், காணொளிகளையும், அதில் பதிவிட்டு, மக்களோடு தொடர்பிலேயே இருந்தது. இது கிட்டத்தட்ட 24 மணி நேரமும் நேரலை செய்திகளை வழங்கும் செய்தித் தொலைக்காட்சி செய்யும் பணி தான். இந்தச் செயலுக்கு நாம் அனைவரும், கேரள சகோதரர்கள் சார்பாக நன்றி தெரிவித்தாகவேண்டும்.

இந்த பக்கம் தொடங்கியதன் நோக்கமே, மக்களுக்கு சரியான தகவலை, முந்தி தரும் நோக்கத்தில் தான். இதில் பதிவிடும் காணொளிகளெல்லாம் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பகிரும் காணொளிகள் தான் என்பதால் நம்பகத்தன்மைக்கு உத்திரவாதம் உண்டு.

Facebook Safety Check (Pic: theverge)

ஹேஷ் டேக்

கேரள வெள்ளத்தின் போது மட்டுமல்ல, பொதுவாக அனைத்து நெருக்கடியான காலங்களிலும் ‘#’ ஹேஷ் டேக் ஒரு முக்கிய மென்கருவி என்றே சொல்லலாம். ஹேஷ் டேக்கை பயன்படுத்தி எந்த வார்த்தையை, சம்பவத்தோடு ஒப்பிட்டு பதிவிட்டால், அதனோடு தொடர்புடைய அனைத்து பதிவுகளோடும் திரைமறைவில் இணைந்துகொள்ளும். இந்த ‘ஹேஷ் டேக்’கை பயன்படுத்தி வணிகர்கள், தனது வணிகத்திற்காகவே அளவுக்கதிகமாக பயன்படுத்தும்போது, பேரிடர் காலங்களில் சமூக அக்கறை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும், பாதிப்படைந்த இடங்களைப் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும், காணொளிகளையும் பலருக்கு சென்றடையும் நோக்கம் கொண்டு ஏன் ‘ஹேஷ் டேக்’ பயன்படுத்தும் வழக்கம் இந்த தலைமுறையினரிடம் இருப்பதும், பலகுக்கு நன்மையாக அமைந்தது. நம் பார்வைக்கு தெரியாவிடினும், முகப்புத்தகம், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ் டேக் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். திறன்பேசியைப் கண்டுபிடித்ததன் முழு பயன் இதைப்போன்ற சந்தர்பங்களில் நம்மால் உணர முடிகிறது. இந்த கேரள வெள்ள காலத்தில் ட்ரெண்டிங்கில் இருந்த ஹேஷ் டேக் #keralaflood

Hash Tag (Pic: firebrandtalent)

QKopy செயலி

இன்றளவும், கேரள வெள்ளம் தொடர்பான அனைத்து தகவல்களையும், தெளிவாக தெரிவிக்கும் பெருமை  QKopy செயலியையும் சாரும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், இந்த செயலி மூலமாக காணாமல் போனவர்களைப் பற்றியும், இண்டு இடுக்குகளில் மாட்டிக்கொண்டு தவித்தவர்கள் பற்றியும் தகவல்களை வெள்ள நீர் வடிந்த பின்னும் அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு, தண்ணீர் வடியும் வழிகள் குறித்தும், தாழ்வான பகுதிகள் குறித்தும், தகவல்கள் கொடுத்தது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, நிறுவிய திறன்பேசியில், இந்த செயலியினுள் சென்றால், பொதுமக்களுக்கு ஒரு போக்குவரத்து காவலர் போன்று சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு எரிவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு தோன்றினால், நாம் ஆபத்தான இடத்தில் இருப்பதாக அர்த்தம், பச்சை விளக்கு தோன்றினால் பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றோம் என்று அர்த்தம். இதைப்போன்று பேரிடர் காலங்களில் உதவும் விதமாக வடிவமைத்த மனிதரை தலைவணங்காமல் என்ன செய்ய?

Google Apps (Pic: firstpost)

சம காலத்தில் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பொதுநலத்தோடு வரும் கண்டுபிடிப்புகளை எங்கள் ஊடகம் மூலமாக தெரியாதவர்களுக்கும் எடுத்துச் செல்வதில் தன் கடமையுணர்வோடு செயல்படுவதாக உணர்கிறோம்.

மீண்டும் உங்கள் நினைவுக்கு,

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, தங்களால் முடிந்தளவு நன்கொடை வழங்க, இந்த லின்க்கிற்கு செல்லவும்: https://milaap.org/fundraisers/helpkeralaroaragain

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் விதமாக ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது ரோர் இந்தியா. #RoarForKerala இந்த பிரச்சாரம் தொடர்பான மற்ற கட்டுரைகளைக் காண கீழே உள்ள லிங்குகளை காணவும்

Web Title: Apps That Can Be Useful In Kerala Flood, Tamil Article

Featured Image Credit: thequint

Related Articles