இலங்கையில் பசுவதைச்சட்டம் அமுல்படுத்தப்படுமா?

அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  குழுக்கூட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால், பசுவதை தடைசட்டத்தினை அமுல்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

இலங்கையில் மாடறுப்பு செயற்பாடுகளை தடை செய்யுமாறு இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கான எந்நவொரு முடிவும் இதுவரை காலமும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இலங்கையில் தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பலத்தினை கொண்டுள்ளது. ஆகையால் இச்சட்டத்தினை இலகுவாக இலங்கையில் அமுல்படுத்தமுடியும் என எதிர்பார்க்கலாம். எவ்வாறாயினும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  குழுக்கூட்டத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறைச்சிக்காக பசுக்கள் வெட்டப்படுவதை முழுமையாக தடுக்கும் பொருட்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் உள்நாட்டு மாட்டிறைச்சி தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாட்டிறைச்சிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஆதரவுகளும் எதிர்ப்புக்களும்

பசுவதை சட்டத்தினை பௌத்த மற்றும் இந்து மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருபினும் முஸ்லிம் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சட்டம் குறித்து தமது கருத்தினை வெளியிட்டிருந்த சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு  ‘ஒவ்வொரு மனிதர்களும் என்ன உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவரவர் உரிமையாகும்.

மாடறுப்பு தடை என்பது ஒரு சமூகத்தின் மத உரிமையில் கைவைப்பது மாத்திரமன்றி இலங்கை நாட்டுக்கும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கும் காரியமாகும் என்பதை ஆளும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.இதே வேலை உள்நாட்டில் மாடறுப்பை தடை செய்து விட்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது உள்நாட்டு உணவுப் பொருட்கள் கடும் விலையேற்றத்தை சந்திப்பதுடன், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி பொருட்களும் விலையேற்றத்தை சந்திக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும் இந்த சட்டம் கொண்டு வரப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக” சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் பசுவதைத் தடுப்பு சட்டத்தை கொண்டு வர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானத்தை தான் உள்ளிட்ட சைவ மக்கள் அனைவரும் வரவேற்பதாக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து போராட்டங்கள் நடத்திய தாம், மாட்டிறைச்சி வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாட்டிறைச்சி வர்த்தக நிலையங்களுக்கான ஏலம் விற்பனைகளையும் தடுக்க சிவசேனை அமைப்பு கடந்த காலங்களில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தினை ஆதரித்து சமூக ஆர்வளர்களும், ஊடக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுப்பதை அரசு ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் தொடர்புடைய குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இறுதி தீர்மானம் எட்டப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles