COVID-19 தொற்றினை கட்டுப்படுத்தல் : தனிமைப்படுத்தல் மையத்தில் இரு வாரங்கள்

19 வயதான கென்ட்ரிக் பெர்னாண்டோ மற்றும் அவருடன் பயணம் செய்த சக பயணிகளும் மார்ச் 15ம் திகதியன்று இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கினர். ஆயினும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் செயன்முறையை நிறைவு செய்ய அவர்களுக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக தேவைப்பட்டது. அதனால், வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தினை அவர்களால் மறுநாளே (மார்ச் 16) அடையமுடிந்தது.

அம் முகாமிற்கு ஆரம்பகட்டமாக வருகைதந்த சிலரில் இவர்களும் அடங்குவர். மறுநாள் முடிவின் போது  ‘உயர் ஆபத்து’ என அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் அரசாங்கத்தால் விரைவாக அடையாளம்காணப்பட்டு 200 பேர்வரை  இம் முகாமிற்கு அழைத்துவரப்பட்டனர். 

COVID-19 இனால் தொற்றுக்குள்ளான முதல் நோயாளி  ஜனவரி 27 அன்று இலங்கையில் கண்டறியப்பட்டார். சீனாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சீனப் பெண்ணொருவரிடம் COVID-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் (ஐ.டி.எச்) அனுமதிக்கப்பட்டு சுமார் ஒரு மாதகாலத்தின் பின்னர் பிப்ரவரி 19-ஆம் திகதியன்று குணமடைந்து வெளியேற்றப்பட்டார்.

சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் COVID-19 தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே, அனைத்து முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மார்ச் மாத ஆரம்பம் முதல் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 24 மணி நேரத்திற்குள், ஆரம்பகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச பாடசாலைகளும், பாலர் பாடசாலைகளும், தனியார் பாடசாலைகளும் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் மூடப்பட்டன. மற்றும் பல நாடுகளுக்கான Online Visa மற்றும் On-Arrival விசா வசதிகள் என்பன இடை நிறுத்தப்பட்டன.

நாடு திரும்புதல்

ஐக்கிய இராச்சியத்தில் எந்திரனியல், இயந்திர மின்னணுவியல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல்துறையில் கல்விகற்கும் பெர்னாண்டோ என்பவர், அடுத்தவரும்  சில மாதங்களில் COVID-19 தொற்றினால் இங்கிலாந்தில் எவ்வாறான சூழல் உருவாகும் என்ற நிச்சயமற்ற தன்மையினால் மீண்டும் தாய் நாட்டிலிருக்கும் தனது வீட்டிற்கு வர முடிவு செய்தார்.

உலகம் முழுவதும் திண்டாடும் இதுபோன்றதொரு நேரத்தில் தனியாக இருப்பதை விட குடும்பத்தினருடன் இருக்கவே அவர் விரும்பினார். Roar Media விற்கு கருத்து தெரிவித்த பெர்னாண்டோ, தாங்கள் இலங்கைக்கு பயணம் செய்த QR654 விமானத்திலிருந்து தரையிறங்கியவுடன், விமானநிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களை சந்தித்தார்கள் என்றும், பின்பு அவ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் அவர்கள் பிரயாணம் செய்த நாட்டை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

பின்னர் அவர்களை விமானநிலைய வளாகத்திற்கு வெளிப்புறமாக அமைந்திருந்த சிறியதொரு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை கைகள் கழுவுமாறு அறிவுறுத்தப்படவும் மற்றும் COVID-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவும் முன்னர் அவர்களது உடைகள், கைகள், காலணிகள், பயணப் பொதிகள் மற்றும் ஏனைய பொருட்கள் மீதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. 

வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் சுத்திகரிப்பு செயல்முறைக்காக  விமானநிலைய பிரதான வளாகத்திலிருந்து வேறு கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். புகைப்பட உதவி: Roar Media / Tharaka*

“நாங்கள் இலங்கையில் தரையிறங்கும் வரை நாங்கள் நிச்சயமாக தனிமைப்படுத்தப்படுவோமா இல்லையா என்பதனை நாங்கள் அறிந்திருக்கவில்லை” என இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்து தியதலாவாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 வயதான மாணவி மெஹக் சங்கனி கருத்து தெரிவித்தார். “எதைப் பற்றியும் நிச்சயமற்ற தன்மையும் அதனால் ஏற்படும் கவலையும் குழப்பமும் உண்மையில் இச் செயல்முறைகளுக்கு உட்பட்டு அவற்றை கடந்து செல்வதைக் காட்டிலும் மோசமானதாகும்” என்றும் தனது மனநிலைப் பற்றி விவரித்தார் சங்கனி.

சங்கனி போலவே மீண்டும் நாடு திரும்பிய ஏனைய பல மாணவர்களும் இம் முடிவுக்கு வருவதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அவர்கள் கல்விகற்ற நாடுகளில் இவ் உலகளாவிய தொற்றுநோய் குறித்து மேற்கொள்ளும் நடவடிக்கைளில் மற்றும் முன்னேற்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தியே அந்தக் காரணம். 

மேலும் அவர்கள் கல்விகற்ற பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதனாலும். இது போன்றதொரு நிச்சயமற்ற நேரத்தில் குடும்பத்தினருக்கான அவர்களது ஏக்கமும் இம் முடிவுக்கு காரணிகளாக அமைந்தன.

“எனது குடும்பத்தினர் விமான நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்தபோது அவர்களிடம் என்னால் செல்ல முடியவில்லை என்பதனால் நான் சற்று உணர்ச்சிவசப்பட்டேன்” என 19 வயதான முதலாம் ஆண்டு சட்டக்கல்வி மாணவி சேராயா பெர்னாண்டோ Roar இற்கு கருத்து தெரிவித்தார். “ஒரே நாட்டில் இருந்தும் அவர்களுடன் ஒன்றாக இருக்கமுடியாது என்பது ஒருவிதமான அசாதாரண உணர்வாகும்” என அதிருப்தியான தனது நிலையை பகிர்ந்துகொண்டார்.

செயல்முறை 

பாதுகாப்பு முகக்கவசம் அணிந்து பயணிகளை திரையிடும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் இராணுவவீரர்கள்.
புகைப்பட உதவி:  Mehak Sangani

இலங்கைக்கு வருகைதந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி கண்டிப்பான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. COVID-19 தொற்றுக்குரிய சுகாதார அறிவிப்பு படிவத்தில் கையெழுத்திட வலியுறுத்தப்பட்டனர். இப் படிவத்தில் கடந்த 14 நாட்களில் அவர்கள் மேற்கொண்ட பயண விபரங்கள் பற்றிய கேள்விகள், அவர்களிடம் காணப்படும் நோய் அறிகுறிகள் அல்லது அவர்களுக்கு இருக்கும் நோய்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்கள் இலங்கையில் தங்கிநிற்க தீர்மானித்துள்ள இடம் பற்றிய விவரங்கள் என்பவை கேள்விகளாக உள்ளடங்கியிருந்தன.

விமானநிலையத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ள அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனைவரும் ஒன்றாக அழைத்துச் செல்லப்படுவதற்காக, ஏற்கனவே நாடு திரும்பியவர்கள், வெவ்வேறு விமானங்களில் திரும்பிவரும் ஏனையோரின் வருகைக்காக ஆறு முதல் 12 மணிநேரங்கள் விமானநிலையத்தில் காத்திருந்தனர்.

“எனக்கு ஏற்கனவே பரிட்சயமான சில நண்பர்களையும் மாணவர்களையும் நான் சந்தித்தேன், ஆகவே எனக்கு இது பெரிதளவில் சிரமமாக இருக்கவில்லை. ஆனால் என்னுடன் விமானத்தில் சில வயதானவர்களும், இரண்டு குழந்தைகளுடன் ஒரு தாயும் பயணித்தனர்” என தியதலாவா தனிமைப்படுத்தல்  மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, இங்கிலாந்திலிருந்து திரும்பிய 20 வயதான தாரக* என்ற மாணவர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

பயணிகள் அனைவருமே தனிமைப்படுத்தல் மையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் பேரூந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் மையங்களை அடைந்து, உள்நுழைய முன்னர் மீண்டுமொருமுறை கிருமிநீக்கும் சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு பாலினத்தின் அடிப்படையில் குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

வசதிகள்

வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தின் படுக்கை வசதிகள். 30 அடுக்கு படுக்கைகளில் 60 பேர்வரை தங்கக்கூடிய வசதி இருந்தபோதிலும், சமூக தொலைவினை அல்லது சமூக இடைவெளியினைப் பேணுவதற்காக  ஒவ்வொரு தங்குமிடத்திலும்  அதிகபட்சம் 30 நபர்கள்  மட்டுமே தங்கவைக்கப்பட்டனர்.
புகைப்பட உதவி: Kenderick Fernando

 நல்ல உணவு, தூய்மையான படுக்கை அறைகள் மற்றும் குளியலறைகள், இணைய வசதிகள் மற்றும் பல்வேறு விதமான மேலதி வசதிகளும் அங்கு  வழங்கப்பட்டன. துவாய்கள், தேநீர்க் குவளை, தேயிலை பொதிகள், பால் மா மற்றும் அத்தியாவசிய குளியலறை பொருட்கள் போன்றவையும் வழங்கப்பட்டன.

மருத்துவ முகமூடிகள் மற்றும் அவசர காலங்களில் அழைக்க வேண்டிய முக்கியமான தொலைபேசி எண்களின் பட்டியலும் வழங்கப்பட்டன. முகாமை மேற்பார்வையிடும் படைப்பகுதி தலைவர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தொலைபேசி எண்களும் இதில் அடங்கும்.

“எங்களுக்கு பொருட்கள் மற்றும் அவற்றிற்கான விலைகள் அடங்கிய விரிவான பட்டியலும் வழங்கப்பட்டது. ஏதாயினும் மேலதிகமாக தேவைப்பட்டால் நாங்கள் பணம் செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம்” என வவுனியா தனிமைப்படுத்தல்  மையத்தில் தான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் பெர்னாண்டோ.

வவுனியா முகாமில் பெர்னாண்டோ பெற்ற பொருட்களின் பட்டியல், அதில் 100 க்கும் மேற்பட்ட பொருட்கள் காணப்பட்டன.
புகைப்பட உதவி: Kenderick Fernando

திரும்பி வந்தவர்களுக்கு இவ் வைரஸ் தொற்று குறித்தும், சமூகத்தில் அது பரவுவதைத் தடுப்பதற்காக அரசினால் செயல்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் தனது தனிமைப்படுத்தபடல் அனுபவத்தை பகிர்ந்து வந்த நாடு திரும்பிய 20 வயதான  மாணவர் தினுல் ஹெட்டியாராச்சி “ஒரு மருத்துவ மாணவனாக இருந்தபோதும், நான் இது பற்றி விரிவாக அறிந்திருக்கவில்லை,” என Roar Media விற்கு கருத்து தெரிவித்தார்.

முடக்கம்

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் தொலைக்காட்சி பெட்டியொன்றும் மற்றும்  உணவு நேரங்கள் மற்றும் மருத்துவரின் வருகை நேரங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்ச்சி நிரலுடன் கூடிய அறிவிப்புப் பலகை ஒன்றும் உள்ளது.
புகைப்பட வரவு: Kenderick Fernando

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை / கட்டிடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. உணவு வேளையின் போது, மையத்தின் ஊழியர்களால் ​​உணவுப் பொதிகள் முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்குள் அவற்றை விநியோகிக்க முடியும். இச்செயல்முறை தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் மைய நிர்வாகிகளுக்கும் இடையிலான தொடர்புகளை குறைக்க உதவுகிறது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்புகளை குறைக்கவும், ஒருவருக்கொருவர் இடைவெளியை பராமரிக்கவும். அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் அமைந்துள்ள வெளிப்புற பகுதிகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பு முகக்கவசங்களை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நேரத்தை கடத்துவதற்காக, அவர்களது பணிகளை மேற்கொள்ளவும், விளையாட்டுக்களில் ஈடுபடவும், படிக்கவும், திரைப்படங்கள் பார்க்கவும், உறங்கவும் முடியும்.

“இது [தொடர்பு கொள்ள முடியாமை] வெறுப்புக்குரிய விடயமாக இருக்கலாம், ஆனால் எங்களால் நிலைமைகளை புரிந்துகொள்ள முடியும்,” என்று தாரக கருத்து தெரிவித்தார். மேலும் “உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை மிகவும் முன்னேறியுள்ளது என நான் நம்புகிறேன். மேலும் இத் தொற்றுக்கான வளைக்கோட்டினை சமப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். ”

மருத்துவ அதிகாரிகளும் நாடு திரும்பியவர்களை கண்காணிக்கின்றனர். சில மையங்களில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பாதுகாப்பு உபகரண உடையணிந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களைப் பார்வையிடுகின்றனர், ஏனைய சில மையங்களில், தினசரி தொலைபேசியினூடாக வைத்திய கலந்தாலோசனைகள் நடத்தப்படுகின்றன.

நாடு திரும்பியவர்களை முப்படையினரும் நடாத்திய விதமும் இத் திட்டத்தின் வெற்றிக்கான முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இது குறித்து தனது கருத்தை பகிர்ந்தார் பெர்ணாண்டோ. “எங்களுக்கு தேவையான அனைத்தும் எங்களுக்கு கிடைத்தது, மேலும் இங்கு குறைகூறவோ அல்லது புகார் சொல்லவோ எதுவும் இல்லை” என்றார். மேலும் “நாங்கள் எது பற்றியும் கவலைகொள்ளவில்லை. முகாமில் உள்ள அதிகாரிகள் மீது நம்பிக்கையை வைத்தோம்” என்றார்.

“எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறி தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப நேர்ந்தது. ஆனால் நான் அறிந்தவரையில் எவரும் அவர்களது நாட்டில் தனிமைப்படுத்தலில் ஈடுபடவில்லை” என்று சொன்ன சங்கனி “ஆக்கபூர்வமான செயல்நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதை கண்டு இலங்கையராக இருப்பதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

அனைத்து நேர்காணல்களும் தொலைபேசியினூடாகவோ அல்லது காணொளி அழைப்பு மூலமாகவோ மேற்கொள்ளப்பட்டன. நேர்காணல் வழங்கிய அனைவருக்கும் எங்களது சிறப்பு நன்றிகள்.

 

*அடையாளத்தைப் பாதுகாக்க பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Articles