COVID-19 தொற்றும் உலகமும் | கட்டுரைத் தொடர் 01 | சீனா – தென் கொரியா – மலேசியா

உலகின் இயக்கம் மிகவும் அபூர்வமானது. அதன் ஒரு மூலையில் எது நடந்தாலும் மறுமூலையில் உலகம் இயங்கிய வண்ணமே இருக்கும். யுத்தமோ, இயற்கையின் சீற்றமோ எதுவாகயிருப்பினும், உலகம் முழுவதும் ஸ்தம்பித்து திணறுவது இல்லை. அவ்வாறு ஸ்தம்பித்த சந்தர்ப்பங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியதாகத்தான் இருக்கும்.  அது போன்றதொரு சந்தர்ப்பமே இப் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் உருவாகியுள்ளது.

கடந்த வருடம் 2019 டிசம்பர் மாதம் ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 195 நாடுகளுக்கும் COVID-19 தொற்று பரவியுள்ளது. 

சீனாவின், ஹூபே மாநிலத்தில் வுஹான் நகரில் ஆரம்பித்த COVID-19 தொற்றுநோயானது, இன்று அண்டார்டிக்கா கண்டம் தவிர்த்து  உலகிலுள்ள ஏனைய ஆறு கண்டங்களிலும் பரவியுள்ளது. (இந்தக்கட்டுரை பிரசுரமாகும் வரை) உலகெங்கிலும் ஏறத்தாழ எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் COVID-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் COVID-19 தொற்றினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், பாதிப்படைந்தவர்களில் இதுவரை ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோர் குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந் நாள்வரை COVID-19 இனை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியோ அல்லது மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே COVID-19 தொற்றினை இயற்கை (உயிரியல்) நடாத்தும் மூன்றாம் உலகப் போர் எனக் குறிப்பிடுவது மிகையாகாது.

இப்போது பல தொற்றுநோயியல் நிபுணர்களிடையே நிலவும் ஒருமித்த கருத்து யாதெனில், COVID-19 பரவுவதை முற்றிலுமாக கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என்பதேயாகும். மேலும் உலக சனத்தொகையில் 60% முதல் 70% பேர்வரை இவ் வைரஸ் தொற்றுக்கு பலியாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு எனவும் ஒருசில நிபுணர்கள் கருதுகிறார்கள்.

எது எவ்வாறாக இருப்பினும் அனைத்து நாடுகளும் மற்றும் அதனதன் அரசுகளும் தங்களது நாட்டுமக்களை பாதுகாக்கவும் COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு விதமான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டவண்ணம் உள்ளன.

இனி, ஒவ்வொரு கண்டத்திலும் அல்லது உப கண்டங்களிலும் அதிகளவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தற்போதைய முக்கிய நிலவரங்கள் மற்றும் மாற்றங்கள், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகள், இவ் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந் நாட்டு பொதுமக்கள் அரசுக்கு வழங்கும் ஒத்துழைப்புகள், பாரியளவில் பாதிப்படைந்துள்ள நாடுகளை அண்மித்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பனவற்றை இக்கட்டுரை தொடர் மூலம் சுருக்கமாகக் காண்போம்.

சீனா

இப் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றானது தூர கிழக்காசியாவில் அமைந்துள்ள  சீனாவின் ஹூபே மாநிலத்தின் வுஹான் என்ற நகரிலேயே ஆரம்பித்தது. சீனாவின் மாத்திரம் COVID-19 தொற்றினால் என்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளானதுடன் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

COVID-19 இன் உச்சக்கட்ட தொற்றின் போது, சீன அரசு அனைத்து சீன புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்தல் மற்றும் 34 க்கும் மேற்பட்ட நகரங்களை முடக்குதல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. 57 மில்லியன் வரை மக்கள் வாழும் ஹூபே மாகாணம் முழுவதும் பிரதானமாக வுஹான் நகரம் முடக்கப்பட்டது. அம் மாகாணத்திற்கான அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் இடை நிறுத்தப்பட்டன. COVID-19 பரவலை தடுக்க, அந் நகரில் வாழும் பொதுமக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும்  வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென்று 16 தற்காலிக மருத்துவமனைகளும் அங்கே நிர்மாணிக்கப்பட்டன. 

சீன அரசின் அதிரடி நடவடிக்கைகளாலும் அந் நாட்டு சுகாதார  மற்றும் மருத்துவ சேவையாளர்களின் அயராத முயற்சி மற்றும் உழைப்பாலும் தற்போது அங்கு  தொற்றானது கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது அங்கு நாளொன்றுக்கு இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை  99.66% விகிதத்தால் குறைவடைந்துள்ளது என ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

வுஹானில் தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு. சில மருத்துவத் சேவையாளர்கள் தேவையான பிரத்யேக பாதுகாப்பு கருவிகளை பெற்றுக்கொள்வதில்கூட மிகவும் சிரமப்பட்டனர். அவர்களுடைய நண்பர்களிடமிருந்து இரவலாக அல்லது நன்கொடைகளாக கிடைப்பதையே அவர்கள் அதிகமாக உபயோகித்தனர்.
படஉதவி: CHINATOPIX, via Associated Press

டிசம்பர் மாதம் COVID-19 தொற்று குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய முயன்றதற்காக பொலிஸாரால் குறிவைக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட வுஹான் மருத்துவர் லி வென்லியாங், 2020 பெப்ரவரி 07ம் திகதி COVID-19 தொற்றினால் மரணமடைந்தார். இவரது மரணம், சீனாவில் பாரிய எதிர்ப்பொன்றை தோற்றுவித்தது. அரசினது கெடுபிடிகளையும் பக்கச்சார்பான காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி, ஏனைய மருத்துவர்களுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும், மற்றும் பொதுமக்களுக்கும் தக்கசமயத்தில் இவ் வைரஸ் தொற்று குறித்து தெளிவுபடுத்திய இவர் தற்போது சீனாவில் மருத்துவத்துறையின் தியாகியாக கருதப்படுகிறார்.

ஹொங்கோங் நகரில் மருத்துவர் லி வென்லியாங் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இடம்பெற்றது.
படஉதவி: Lam Yik Fei / The New York Times

ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நீடித்த இம் முடக்கங்களினால் பல தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தொலைபேசிகளுக்குக் கூட தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. மேலும் டெஸ்லா, இக்கேயா போன்ற சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் அவர்களுடைய அனைத்து வியாபார செயற்பாடுகளையும் இடைநிறுத்தின. ஆனால், மூடப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இடைநிறுத்தப்பட்ட வியாபார செயற்பாடுகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்கள் நடமாட்டம் என்பனவற்றால் சீனாவின் வளி மாசடைவு பாரியளவில் குறைந்தது, இதனால் COVID-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கையை விட பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்கள்  காப்பாற்றப்பட்டுள்ளன என ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஆகியவற்றின்  மாசு கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் சீனா வளிமண்டலத்தில் வழமையை விட கணிசமான அளவில் நைதரசனீரொட்சைடு (NO2)  குறைவடைந்து வருவதை கண்டறிந்துள்ளன. இம் மாற்றத்திற்கு கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையே காரணம் என கூறப்படுகிறது.
படஉதவி – cnn/health

எவ்வாறாயினும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் சீன மக்களின் வாழ்க்கை முறைமை தற்போது மெதுவாக வழமைக்கு திரும்பிவருகின்றது. பெய்ஜிங்கின் விமான நிலையங்களில் ஊடாக வருகைதரும் சர்வதேச வருகையாளர்கள்  14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந் நடவடிக்கை நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள விமான நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும்  கொரோனா வைரஸ் தொற்றினால் சீனப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவின் சில்லறை வியாபாரத்தை கடந்த ஒரு வருடத்துடன் ஒப்பிடும்போது அது 20.5% சரிந்துள்ளது என சீனாவின் தேசிய புள்ளிவிபர பணியகம் அறிவித்துள்ளது.

அதே போல, இந்தக் காலக்கட்டத்தில் தொழில்துறை உற்பத்தியும் 13.5% வீதத்தாலும்  நிலையான சொத்து முதலீடு 24.5% வீதத்தாலும் சரிவைக் கண்டுள்ளது.

COVID-19 தீவிரத் தொற்றினைத் தொடர்ந்து சீன அரசானது வனவிலங்குகளை மற்றும் அயற்பண்புடைய விலங்குகளை உணவாக உட்கொள்வதை சட்டவிரோதமாக்கியுள்ளது. வுஹான் நகரில் அமைந்துள்ள வனவிலங்கு சந்தையில் தொடங்கியதாக நம்பப்படும் கொடிய COVID-19 தொற்றுநோயை அடுத்து, வனவிலங்குகளின் நுகர்வு மற்றும் வளர்ப்பிற்கு கடுமையான தடையை சீனா அமுல்படுத்தியுள்ளது. எவ்வகையான வனவிலங்கிலிருந்து இவ் வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியது என்பது இதுவரை  கண்டறியப்படவில்லை எனினும் – வௌவால், பாம்பு மற்றும் எறும்புண்ணி போன்றவற்றிலிருந்து தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது- மீண்டுமொருமுறை இவ்வாறான கொடிய தொற்று ஒன்றினை தடுக்க வேண்டுமாயின், இலாபகரமான பணம் கொழிக்கும் இவ் வனவிலங்குத் வியாபாரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என சீன அரசு தீர்மானித்துள்ளது. ஆயினும் இவ் வியாபாரத்தை இலகுவாக முடிவுக்கு கொண்டுவருவது என்பது எளிதான காரியமல்ல எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான (COVID-19) முதல் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி 2020 ஜனவரி 20 ஆம் திகதி  அன்று இனங்காணப்பட்டார். மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைத் தொடர்ந்து அதிகளவில் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தென்கொரியாவிலேயே இனங்காணப்பட்டனர். 

தென் கொரியாவில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 9,500 க்கும் மேல் அதிகரித்துள்ளது, மேலும் COVID-19 தொற்றினால் மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 162 ஆகும்.

தென்கொரியாவில் சியோல் நகரின்  தெருவொன்றில் COVID-19 நுண்ணுயிரிகளை அழிக்க  கிருமிநாசினிகளை  தெளிக்கும் தென் கொரிய இராணுவ வீரர்கள்
படஉதவி: Ahn-Young-Joon / AP

இத்தாலியில் அதிகளவிளான நோயாளிகள் இனங்காணப்படும் வரை  தென்கொரியாவே COVID-19 தொற்றினால் சீனாவை அடுத்து உலகில் மிகவும் மோசமாக பாதிப்படைந்த நாடக கருதப்பட்டது. ஆரம்பகட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு ஏற்பட்ட தாமதங்களால் தென்கொரிய அரசியல் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். 

ஆயினும் தென்கொரிய அரசு மேற்கொண்ட துரித  நடவடிக்கைகளால், COVID-19  தொற்றுப் பரவலை கணிசமான அளவு கட்டுப்படுத்த முடிந்தது. தைவான், வியட்நாம், மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றை தொடர்ந்து உலகில் பாரியளவில் மற்றும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் திட்டத்தை தென்கொரியா அறிமுகப்படுத்தியது. COVID-19 தொற்றுக்குள்ளானவர்களை கண்டறியவும், தொற்றுக்குள்ளானவர்களை உரியமுறையில் தனிமைப்படுத்துவதற்கும், அவர்களைத் தொடர்பு கொண்டவர்களை இனங்கண்டு அவர்களையும்  தனிமைப்படுத்த விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  அதற்குக் காரணம் தென்கொரிய சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட Drive-through மற்றும் நடமாடும் COVID-19 மருத்துவ பரிசோதனைகளேயாகும். இப் பரிசோதனை முறைகள் மூலம் இதுவரை மூன்றரை இலட்சம் மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் இப் பரிசோதனைகள் மூலம் COVID-19 தொற்றின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை சரிவர இனங்காண முடியாததால் அநேகமானோர் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு கண்காணிப்பட்டனர்.

சியோலுக்கு வடக்கே கோயாங்கில் உள்ள “Drive-through” மருத்துவ சோதனை நிலையத்தில்,COVID-19 தொற்றுக்கான சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளை உடைய ஒருவரிடமிருந்து பரிசோதனை மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பு உடை அணிந்த மருத்துவ அதிகாரிகள்.
படஉதவி -www.cbsnews.com

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலை  மீறி வெளியேறினால் அதிகாரிகளை எச்சரிக்கும் Mobile App இனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் இவ் அச்சுறுத்தலை மீறுபவர்களுக்கு அமெரிக்க டொலர் 2,500 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

தென் கொரியா மேற்கொண்ட விரைவான மற்றும் விரிவான நடவடிக்கைளின் மூலம் அனைத்து நகரங்களையும் முழுவதுமாக முடக்காமலும் தனிமைப்படுத்தாமலும் கடுமையான நடவடிக்கைகளை பயன்படுத்தாமலும் COVID-19 தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டன.

COVID-19 இற்கு எதிராக செயற்படுவதில் சிறந்த முன் உதாரணமாக  தென்கொரியா கருதப்பட, மேற்சொன்ன ஏற்பாடுகளே வழிவகுத்தன.

மேலும் மார்ச் 25ம் திகதி நிலவரப்படி, தென் கொரியாவிற்குள் நுழைய மொத்தம் 171 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு  பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மலேசியா

தென்கொரியாவைத் தொடர்ந்து மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அதிகளவிலான கண்டனத்திற்குள்ளாகி வரும் நாடக மலேசியா தற்போது மாறியுள்ளது. 

மலேசியாவில் COVID-19 தொற்றுக்குள்ளான முதல் நோயாளி 2020 ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் வரை COVID-19 தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் கோலாலம்பூரில் பிப்ரவரி இறுதி வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெற்ற மதநிகழ்வொன்றே திடீரென COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாக கருதப்படுகிறது. அந்நிகழ்வானது ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள பள்ளிவாயிலில் இடம்பெற்ற தப்லிக்  ஜமாஅத் கூட்டமாகும். அக் கூட்டத்தில் ஏறத்தாழ 16,000 மலேசியர்களும் 1500க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டனர். பாரிய அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டமையினால் COVID-19 தொற்று தீவிரமாக பரவுவதற்கு வழிவகுத்தது என்றும், ஏனைய நாடுகள் COVID-19 இன் தொற்றை கட்டுபடுத்த போராடிவரும் நிலையில் மலேசிய அரசாங்கம் இக் கூட்டத்தைத் தடுக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

கோலாலம்பூர், ஸ்ரீ பெட்டாலிங்கில் அமைந்துள்ள ஜமேக் பள்ளிவாயலில்  பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை இடம்பெற்ற தப்லீ அக்பர் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்
படஉதவி – www.theguardian.pe.ca

இதன் பின்னர் மலேசியாவின் சுகாதார அமைச்சக ஊழியர்கள் இரு நாட்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்களை ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாயிலில் வைத்து COVID-19 தொற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அவர்களின் தலைமையில் அமைச்சின் குழு பங்கேற்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இம் மருத்துவ பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மலேசியாவின் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா, இடம்பெற்ற COVID-19 மருத்துவ பரிசோதனைகள்.
புகைப்பட உதவி: நூர் ஹிஷாம் அப்துல்லா / Facebook

இதனைத் தொடர்ந்து மலேசிய மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்கள் அனைத்திலும் மலேசிய அரசாங்கம் மார்ச் 18 முதல் மார்ச் 31 வரையும் மீண்டும் ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 14ம் திகதி வரையும்  இயக்கக் கட்டுப்பாட்டு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இச்சட்ட அமுலின் போது மாநிலத்திலிருந்து COVID19 இனால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் என இனங்காணப்பட்டவைக்கு எவரும் பயணம் மேற்கொள்ளமுடியாது. 

2020  மார்ச் 16ம் திகதி நாடு தழுவிய நேரடி ஒளிபரப்பின் மூலம் நாட்டிற்குள் COVID-19 பரவுவதை எதிர்கொள்ள மலேசிய பிரதமரால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டன. அவை:

  1. அத்தியாவசிய சேவைகள் (நீர், மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, அஞ்சல், போக்குவரத்து, நீர்ப்பாசனம், எண்ணெய், எரிவாயு, எரிபொருள், மசகு எண்ணெய், ஒளிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருந்தகம், தீ, சிறை, துறைமுகம், விமான நிலையம், பாதுகாப்பு, இராணுவம், துப்புரவு, சில்லறை மற்றும் உணவு விநியோகம்) தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடுதல். 
  2. மத, விளையாட்டு, சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் உள்ளிட்ட பாரிய பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ அல்லது அவற்றிற்காக ஒன்றுகூடவோ ​​பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், பொதுச் சந்தைகள், பலசரக்குக்கடைகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து ஏனைய அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மற்றும் வணிக வளாகங்களும் மூடப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை உட்பட பள்ளிவாயில்களில் இடம்பெறும் அனைத்து மத நடவடிக்கைகளும் மற்றும் ஒன்றுகூடல்களும் 2020 மார்ச் 15 அன்று தேசிய ஃபத்வா அமைப்பின் சிறப்பு முசாகரா சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
  3. வெளிநாட்டிலிருந்து வருகைதரும் மலேசியர்கள் 14 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 
  4. தினசரிப் பாடசாலைகள், உறைவிடப் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள், சமயக்கல்வி மையங்கள் மற்றும் பிற முதல்நிலை, இடைநிலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து மழலையர் பள்ளி, அரசு மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 
  5. அனைத்து பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 
  6. சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles