இலங்கையில் போதைப்பொருளால் அதிகரித்து வரும் குற்றங்கள்

இலங்கையில் கடந்த காலங்களில் போதைப் பொருள் பாவனையால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரை தெரிவு செய்து, அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றவிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன. மறுபக்கம் பாராளுமன்றத்தில் இந்த தீர்மானத்துக்கு எதிரான தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சர்வதேச நாடுகளும், சமூக மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கையில் மீள மரண தண்டனை அமுலாக்கப்படுவதற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

படஉதவி : dailynews

இவ்வாறிருக்க, இலங்கையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 2,887 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது ஒரு மாதத்துக்குள்ளான 30 சதவீத அதிகரிப்பாகும். கடந்த மே மாதத்தில் 1,257 பேர் கைது செய்யப்பட்டதுடன், ஜூன் மாதம் 1,630 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பயன்படுத்தப்படும் முக்கிய போதைப்பொருளாக கஞ்சா மற்றும் ஹெரொயின் ஆகியவை இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ஹாஷிஷ், புகையிலை, மதன மோதகம், பாபுல், மாத்திரைகள், மெத்தபேட்டமைன் (ஐஸ்), கொக்கயின் மற்றும் லைசெர்ஜிக் அமிலம் டைதிலாமைடு என்பன பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

படஉதவி : hindustantimes

மே மாதத்துடன் ஒப்பிடும்போது, கஞ்சா தொடர்பான குற்றங்கள் ஜூன் மாதத்தில் 49.48 சதவீதத்திலிருந்து 45.89 ஆக குறைந்துள்ளது. மாவட்ட ரீதியாக பார்க்கும் போது, கடந்த ஜூன் மாதத்தில், கொழும்பில் 435 நபர்கள் கைதாகியுள்ளதுடன், தொடர்ந்து கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் அனுராதபுரத்தில் இதுபோன்ற கைதுகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

மேலும் 16 மாவட்டங்களில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் கிளிநொச்சி தவிர ஒவ்வொரு மாவட்டமும் கணிசமான எண்ணிக்கையிலான கைதுகளைக் வெளிப்படுத்தியுள்ளது.

பாலின அடிப்படையில், ஜூன் மாதத்தில், 97 சதவீதம் ஆண்களே போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதாகியுள்ளனர். கைதானவர்களில் 62 சதவீதம் பேர் 20-34 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள். மேலும் கைதானவர்களில் 52.76 சதவீதம் பேர் திருமணமாகாதவர்களாவர், 46.93 சதவீதம் பேர் திருமணமானவர்கள், மீதமுள்ளவர்கள் விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் இணைந்து வாழ்பவர்களாவர்.

கல்வி நிலையைப் பொறுத்தவரை, ஜூன் மாதத்தில கைது செய்யப்பட்டவர்களில், 39.3 சதவீதமானவர்கள் க.பொ.த. (சா-த) தகுதி பெற்றுள்ளவர்கள். 5.9 சதவீதமானவர்கள் க.பொ.த. உயர்தரம் படித்தவர்கள். 2.76 சதவீதம் பேர் ஒருபோதும் பள்ளிக்கு சென்றதில்லை. அதேநேரம் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

படஉதவி : steemit.com

இன அடிப்படையில், ஜூன் மாதத்தில், 74.2 சதவீதம் சிங்களவர்களும், 11.3 பேர் தமிழர்களும், 9.5 சதவீதமான முஸ்லிம்களும் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய அளவில் மலாய்க்காரர்களும் மற்றவர்களும் உள்ளனர்.

மதப் பிரிவின் அடிப்படையில், ஜூன் மாதத்தில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதானவர்களில் 75.09 சதவீதம் பேர் பௌத்தவர்கள். 12.02 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாகவும், 9.33 சதவீதம் இந்துக்களாகவும் இருப்பதுடன், 3.5 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களாவர்.

தொழில் வாரியாக, ஜூன் மாதத்தில், 33.9 சதவீதம் பேர் சாதாரண தொழிலாளர்களே போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதாகியுள்ளனர். தொழிலற்றோர் 17.1 சதவீதமானவர்களும், விவசாயிகள் 7.9 சதவீதமானோரும், தொழில் வல்லுநர்கள் 3.7 சதவீதமானோரும், சுயதொழில் செய்பவர்கள் 3.5 சதவீதமானோரும் கைதாகியுள்ளனர். அவர்களுடன் 0.4 சதவீதமான மாணவர்களும் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதாகி இருக்கின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சாரதிகளாகவும், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்களும் அடங்குகின்றனர். தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி பிரிவின் போதைப்பொருள் தகவல் அறிக்கையின் இருந்து இந்த புள்ளிவிபரங்கள் கிடைக்கப்பெற்றன.

முகப்பு பட வடிவமைப்பு : ஜேமி அல்போஃன்சஸ் / Roar Media

Related Articles