Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

Goa Short Film Festivalலில் போட்டியிட்ட இலங்கை கலைஞரின் குறும்படங்கள்

“நமக்கான வாய்ப்பை நாம் தான் உருவாக்க வேண்டும்” இலங்கைக் கலைஞர் அபிஷேக் பால்ராஜ் உடனான ஒரு உரையாடல்

இலங்கையில் பிறந்த ஏராளமான தமிழர்களிடம், என்றைக்காவது ஒருநாள் ஊடகத்துறை / சினிமாத்துறையில் சாதித்துவிட வேண்டும் என்பது ஒரு கனவாகவோ லட்சியமாகவோ மாத்திரம் தசாப்தங்களாக இருந்து வருகிறது. எங்களுக்கான வாய்ப்பு, சந்தர்ப்பம் எங்களை நிரூபிக்கத் தகுந்த ஒரு மேடை எங்கேயாவது கிடைத்துவிடாதா என்கிற தவிப்பில் அலைகின்ற நூற்றுக்கணக்கானவர்களை தினசரி ஓட்டத்தில் சந்தித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். காலம் காலமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்றும் இப்போது காலத்துக்கு தகுந்தாற்போல் இணைய ஊடகம்,  யூடியூப், போட்காஸ்ட், புகைப்படங்கள், குறும்படங்கள் என கிடைக்கிற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஊடகத்துறையில் ஏதாவது சாதித்து விட மாட்டோமா என்கிற தவிப்பில் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் எம்மவர்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

முகப்புத்தகத்தில் பார்த்த பதிவு ஒன்று வெகுவாகக் கவர்ந்திருந்தது. எங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் படைப்பாளியின், God in Love, Out of Time என்கிற இரண்டு குறும்படங்கள் Goa Short Film Festival போட்டியிடத் தெரிவாகி இருந்தன. அந்தப் படைப்புகளின் சொந்தக்காரர், மெக்கானிக்கல் இன்ஜினியர், புகைப்படக் கலைஞர், காணொளி தொகுப்பாளர், வரைகலை நிபுணர் என பன்முகத்திறமைகள் கொண்ட  அபிஷேக் பால்ராஜைத்  தொடர்பு கொண்டு அவருடைய இரண்டு குறும்படங்கள் பற்றியும் அவருடைய கலைப்பயணம் பற்றியும் அறிந்துகொண்டோம்.

Director Abishek Paulraj

கேள்வி: வணக்கம் அபிஷேக் பால்ராஜ். எப்பிடி இருக்கிறீங்க?

பதில்: வணக்கம். நல்லா இருக்கேன்!

கேள்வி: Goa Short Film Festivalலில் God in Love, Out of Time என்கிற உங்களுடைய இரண்டு குறும்படங்களும் போட்டியிட்டு இருக்கு. வாழ்த்துக்கள்!

ஒரே நேரத்தில இரண்டு படங்கள் இயக்கி இருக்கிறீங்க. எப்பிடி சமாளிச்சீங்க? ஏற்கனவே குறும்படங்கள் இயக்கிய அனுபவம் இருக்கா?

பதில்: “என்னுடைய குறும்படம் ஒன்றை ரிலீஸ்க்கு என உருவாக்கியது   இதுவே முதல்தடவை. இந்தியாவில ஒரு ஆறு வருஷம் படிச்சுட்டு இருந்தன். இந்தியாவில ரெண்டு படம், ஓ லெவல் படிக்கும் போது இரண்டு படம் பண்ணின அனுபவம் இருக்கு. நாலு படமுமே எனக்கு பிடிக்கல. அப்போ ஒரு நல்ல டீம் இருக்கல. நான் உட்பட அப்ப இருந்தவங்க எல்லாருமே படம் பாக்கிறவங்க. யாரும் படம் பண்ணுறவங்களா இருக்கல. அப்போ எங்க ரசனை எல்லாம் ஆக்ஷன் த்ரில்லர் என்டு இருந்தது. 

இந்தியாவில நண்பர்களா இருந்தவங்க எல்லாம் படிக்கிற பசங்க. மீடியால பெருசா ஆர்வம் காட்டல. அதனால அங்க பண்ணமுடியல. இங்க வந்தபிறகு ஓ லெவல் படிக்கும் குறும்படம் பண்ணனும்னு ஆர்வமா இருந்த பழைய நண்பர்களோட சேர்ந்து பண்ணின படங்கள் தான் இது.

போன வருடத்துவக்கத்தில் கிங் ரத்னம் அண்ணாவோட கொச்சிக்கடை குண்டுவெடிப்பு சம்பந்தமான ஆவணப்படம் பண்ணியிருக்கன். 

கேள்வி: இந்த படங்களை உருவாக்கும் போது கிடைத்த அனுபவங்கள் எப்படி இருந்தது?

பதில்: God in Love, Out of Time இரண்டு படமும் கிட்டத்தட்ட ஸீரோ பட்ஜெட் படம். God in Love ல ஒரு 6, 7 பேர் வேலை செஞ்சு இருப்பாங்க, வெறும் 5 நிமிஷ படம் தான். Out of Time 7 நிமிஷ படம். அதுல நானே நடிச்சு நானே எடுத்திருப்பன். ஊரடங்கில எடுத்தபடம். ஒரு சவாலுக்காக எடுத்தது. இந்த இரண்டு படம் எடுக்கும் போது கூட பெருசா நம்பிக்கை இருக்கல. ஊரடங்கினால வெளிய கூட போக முடியாது. 

ரெண்டு படமும் 3 நிமிஷத்துக்கு யோசிச்சது. ஆனா God in Love 5 நிமிஷத்துல முடிஞ்சு இருக்கு. Out of Time 7 நிமிஷம். நான் நேரமுகாமைத்துவத்தை கத்துக்கணும். திட்டமிட்டபடி படம் பண்ண மாட்டேங்குறன். கதையை எழுதி முடிச்சுட்டு இந்த சீனுக்கு இவ்வளவு நிமிஷம் என்டு என்னால fix பண்ண முடியல. ஷூட் எல்லாம் முடிச்சுட்டு எடிட்டிங்ல இருக்கும் போது தான் புரியுது இந்த சீனுக்கு இவ்வளவு வேகமா எல்லாம் போகக் கூடாதுனு. எல்லாருக்கும் அந்த கதையோட உணர்வு வரணும் என்றதுக்காக அப்பிடியே விட்டுட்டம் அதனால தான் அந்த 5 நிமிஷம்லாம்.

படங்களை ஒரு எட்டுத் தடவை எடிட் பண்ணி இருப்பன். எட்டாவது தடவை தான் கொஞ்சமாவது நினைச்ச மாதிரி வந்திருந்திச்சு. கடைசி Output பார்க்கும் போது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம்னு முடிவு பண்ணினன். ஒவ்வொரு விழாவுக்கும் அனுப்புறத்துக்கு ஒரு 10 டாலர் மாதிரி கட்டணும். 10 விழாவுக்கு அனுப்புறதுனா 100 டாலர் மாதிரி தேவைப்படும். இப்பதான் நான் கல்லூரில இருந்து வெளிய வந்திருக்கன். அதனால கட்டாயம் ஒரு தயாரிப்பாளர் தேவையா இருந்திச்சு. அப்பத்தான் முரளிதரன் என்று ஒரு புகைப்படத்துறை நண்பர் ஒருத்தர் கிடைச்சார். அவரோட உதவியால தான் ஒரு 10 திரைப்பட விழாக்களுக்கு குறும்படங்களை அனுப்பக்கூடியதாக இருந்தது. அனுப்பின விழாக்களின்ட முடிவுகள் இன்னும் வெளிவரல்ல. ஒருசில விழாக்களின்ர முடிவுகள் வந்திருக்கு. Goa Short Film Festival, Standalone Film Festival Los Angeles, Direct Monthly Online Film Festival, Lift Off Global Network First Time Filmmaker ஆகியவற்றுக்கு தெரிவாகி இருக்கு. சந்தோசமா இருக்கு.

கேள்வி: God in Love, Out of Time ஆகிய குறும்படங்கள் உருவாகிறதுக்கான அடிப்படைக் காரணம் என்ன?

பதில்: இந்தியாவில visual communication படிக்கணும்னு தான் போனன். என்னை மாதிரி அங்க கோடிப்பேர் இருக்காங்க. அவங்களோட போட்டிபோட ஆசையா ஆர்வமாத்தான் இருந்தது. அவங்க படிப்பு திறமையை முழுமையா பாக்கிறது ரொம்ப குறைவு. அதனால என்னால முடியல என்கிற நிலைமைக்கு போய்ட்டன். சிபாரிசு கடிதத்தை பாக்கிறாங்க, ஆனா பரீட்சைல பெற்ற புள்ளிகள பாக்கிறாங்க இல்லை என்ற ஆதங்கத்துல இருந்தன்.

NIT மாதிரி நல்ல இன்ஸ்டிடியூட் ஒன்னுல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சதுக்கு பிறகு அடுத்த தேவை வேலைதானே. மெக்கானிக்கல் செஞ்சுட்டே சைடுல மீடியால ஏதும் பண்ணனும்னு ஆசை. என்னைப்  பொறுத்த வரைக்கும் மெக்கானிக்கல் தான் சைடுல பண்ணுவன்னு நினைக்கிறேன். 

மீடியாக்காக ஒரு Portfolio தயாரிக்கணும். அது ஸ்ட்ரோங்கா இருக்கனும் னு ஒரு யோசனை இருந்தது. portfolio காக வேற வேற வகையான படம் பண்ணனும் என்றதுக்காக ஒரு 5 கதை தெரிவு செஞ்சம். என்னைப் பொறுத்த வரை Portfolio எப்பிடி ஸ்ட்ரோங் ஆகும் என்டா வேற வேற ஜோனர்ல தான். ஒரே வகையான படம் எடுத்தா அதுல தேர்ச்சி பெறுவாங்களே தவிர மற்ற வகைகள்ல பண்ணும் போது கஷ்டப்படுவாங்க. அதனால வித்தியாசமா படங்கள் பண்ணனும்னு ஆரம்பிச்சம். அந்த 5 கதைல முதலாவதா ஒரு படம் பண்ணுவம் என்டு தொடங்கினம்.

செய்கிற படங்கள் ஒரு 3 நிமிஷ 4 நிமிஷ படங்களா பண்ணனும்னு தான் ஆரம்பிச்சம். யாரும் வீட்ல இருக்கும் போது குறும்படங்கள் எல்லாம் பார்க்க மாட்டாங்க. நேரா படங்கள் தான் பார்ப்பாங்க. குறும்படங்கள் எப்ப பார்ப்பாங்க என்றால் தூங்க முன்னாடி, 18-25 வயசு வரை இருக்கிறவங்க, ஒரு 7 நிமிஷம் 10 நிமிஷம் என்றாலே யோசிப்பாங்க பார்க்க மாட்டாங்க, நேரம் குறைவா இருந்தா தான் அவங்க அதுல என்ன இருக்கு, இவ்வளவு நேரம் தானே பார்க்கலாம் னு பார்ப்பாங்க. அதுல வித்தியாசமான விசயம் ஏதும் சொன்னால் அவங்கள ஈர்க்கலாம். இவன் இப்பிடித் தான் படம் பண்ணுவான் எண்டு முடிவு பண்ணுவாங்க. அடுத்த படம் பார்க்கும் போது அட இவன் இப்பிடியும் படம் பண்ணுவான். இவன் படம் பண்ணினா பார்க்கலாம் என்டு  முடிவு பண்ணனும் என்கிற காரணத்துக்காகத் தான் இந்த ரெண்டு படமும்.

எல்லாரும் படம் பண்ணினா எங்கயாவது ரிலீஸ் பண்ணனும் நல்ல பேர் எடுக்கணும் என்றதுக்காக பண்ணுவாங்க. எனக்கு நல்ல Portfolio தயாரிக்கணும். வெளிய காட்டும் போது நான் அப்பிடிப் பண்ணினன் இப்பிடிப் பண்ணினன் என்டு சொல்லுறத விட வேலையாவே காட்டினா நல்லா இருக்கும். 

God in Love Poster

கேள்வி: God in Love, Out of Time அவற்றோட கதைக்களம் என்ன?

பதில்: God in Love ஓட மையக்கருவை வெளிய சொல்ல முடியாது. ஏன் என்டா அத வெளிய சொன்னா படமே இல்ல. இரண்டு படத்தையும் ஒப்பிட்டே சொல்றன்.

இரண்டு படமும் முழு வித்தியாசமான கதைக்களம். God in Love பார்த்தா லைட்டா சிரிப்பீங்க, மென்மையான கதையா இருக்கும். அழகான காதல் அந்த மாதிரி போயிட்டு இருக்கும்.ஒரு பொண்ணு அவளை காதலிக்கிற பையன்ட point of viewல காட்டியிருப்பம். அதுல ஒரு விசயம் இருக்கும்.

Out of Time முழுக்க வித்தியாசமா இருக்கும். Drug Addict, Weed Addict அந்த மாதிரி இருக்கும். அது அடிக்ஷனோட போராடுற ஒருத்தரோட கதை. ஒரு வேட்டையாடுற வேட்டையாடப்படுற மனநிலையைக் காட்டியிருப்பம்.

இரண்டு படமுமே ஒரு பத்து பேருக்கு போட்டுக் காட்டியிருப்பேன். God in Love பத்துல பத்துபேருக்குமே புரிஞ்சது. அதுல நிறைய பேருக்குப் பிடிச்சது. Out of Time பத்துல நாலு பேருக்குத் தான் புரிஞ்சது. மிச்ச ஆறுபேருல 3 பேருக்கு மையக்கரு புரிஞ்சது. ஆனா என்ன சொல்ல வாறேன்னு புரியல. புரிஞ்ச நாலுபேருமே படத்தை ஆராய ஆரம்பிச்சுட்டாங்க.

இரண்டு படத்துலயும் ஒரு கதாப்பாத்திரம் மட்டும் தான். இரண்டு படத்துலயும் வசனம் டப்பிங் என்று எதுவும் இல்லை.

Out of Time poster

கேள்வி: முக்கியமான கேள்வி. இந்தியாவில மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சு இருக்கிறீங்க. மீடியாவைத் துறையாக தெரிவு செய்றதுக்கு காரணம் என்ன? ஏதாச்சும் மோட்டிவேஷன் கதை இருக்கா?

பதில்: படங்கள் பாக்கிறது சின்ன வயசிலேயே ஊறிப்போயிருந்தது. படம் பாக்குறதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன். ஆனா பிறகு எல்லாரையும் மாதிரி இன்ஜினியரிங் பிடிக்கும், பைலட் ஆகணும்னு ஆசைகள் மாறிட்டு.

இந்தியாவில ப்ளஸ் 2 அதாவது இங்க உயர்தரம் படிக்கும் போது தான் புரிஞ்சது இது எனக்கான வழி இல்லை என்று. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலைகளால இன்ஜினியரிங் செய்ய வேண்டியதாக இருந்தது. ஒருபக்கம் சென்னைல பிரபல கல்லூரி ஒன்றுல விசுவல் கம்யூனிகேஷன் மற்றப்பக்கம் தேசிய தொழிநுட்ப கல்லூரி, திருச்சிராப்பள்ளில மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.

விருப்பமே இல்லாமல் தான் இன்ஜினியரிங் படிச்சன். ஒரு வருசம் எதுலயும் பெருசா ஆர்வமில்லாமல் ஒரு ஓரமா இருந்தேன். NITல படிக்கிற கலாச்சாரம் வித்தியாசமா இருக்கும். எல்லாவற்றுக்கும் கழகங்கள் இருக்கும். எல்லாவற்றையும் முகாமை செய்ய பழகிக்கலாம். நிறைய நாடுகள்ல இருந்து வந்தவங்க இருப்பாங்க. அங்க இருந்து நிறைய பழகிக்கலாம், மொழிகள் கலாசாரங்கள்ல இருந்து நிறைய. மெக்கானிக்கல விட இதைத்தான் அதிகம் கத்துக்கணும் போல இருந்தது. முதல் வருசம் பெருசா ஆர்வமில்லாம மன அழுத்தத்தில தான் இருந்தன். எப்படிப்பட்ட அழுத்தம்னா யாரோ இன்னொரு தகுதியான ஒருத்தரோட இடத்தை வீணாக்கிக்கொண்டு இருக்கிறேன் என்ற மாதிரி.

இரண்டாவது வருசம் சும்மா சேர்ந்தது தான் போட்டோகிராபி, கிராபிக் டிசைன் என்று இருந்த கழகங்கள். இருக்கிற போட்டிகள்ல எல்லாம் பங்குபற்றினன். அங்க இருந்த நல்ல விசயம் என்னதுன்னா போட்டிகளுக்கு வருகிற நடுவர்களெல்லாம் பாலாஜி சக்திவேல், கெளதம் மேனன், வெற்றிமாறன் போன்றவர்கள் தான். அதோட அங்க இலகுவா ஜெயிச்சுடலாம். அவங்க கையால பரிசுகள் வாங்கும்போது ரொம்ப உத்வேகமா இருந்தது. அங்க ஒரு குறும்படம் பண்ணினதா  சொல்லி இருந்தேன் இல்ல, அதுக்கு இரண்டாவது இடம் கிடைச்சது. பாலாஜி சக்திவேல் கையால வாங்கும் போது அவர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் ஊக்குவிப்பா இருந்திச்சு.

கல்லூரியில் Promo தயாரிப்பு போட்டிகள் நடக்கும். முதல் வருசம் பங்குபெறக் கிடைக்கல. அடுத்த 3 வருடங்களும் முதல் பரிசு கிடைச்சிருந்தது. அதுல இருந்து கிடைச்ச மிகப்பெரிய சந்தர்ப்பம் என்றால் செல்வராகவன் சேர்ட டீம் கூட சின்னதா ஒரு அங்கம் வகிக்க வாய்ப்பு கிடைச்சது மறக்கமுடியாதது.

ஓரமா இருந்திட்டு போகலாம் என்று இருந்தவனை அடையாளம் காட்ட ஆரம்பிச்சது. கடைசி வருசம், Mechanical Associationனு அங்க இருந்தது அதுக்கு Overall Coordinatorஆ இருந்தன். Photography Clubக்கு தலைவரா இருந்தன். இரண்டும் நிறைய விசயம் கத்துக்க உதவியா இருந்தது. இதற்கிடையில நான் எடுத்திருந்த ரெண்டு புகைப்படங்கள் இலங்கை சுற்றுலாத்துறையால் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

Out of time Poster 02

கடைசியா இப்ப இங்க இருக்கன். ஆரம்பத்துல சொல்லி இருந்த மாதிரி இந்தியாவில தான் ஊடகத்துறைல சாதிக்கலாம் என்று நினைச்சுட்டு இருந்தேன். ஒரு நேரத்துல தான் தெரிஞ்சிச்சு இந்தியால ஆகிறதுல என்ன இருக்கு. பத்துல பதினொன்றா இருக்கிறதுல என்ன இருக்கு. இலங்கைல சாதிக்கலாம். என்ன செய்றதுனாலும் இங்க செய்யலாம். நம்ம ஊர்ல. புதுசா இருக்கும். 

நிறையப்பேர் சொல்லுவாங்க இங்க படம் பண்ணினா யாரும் பார்க்க மாட்டாங்கனு. ஒரு வேலை செய்யுறீங்கன்னா அந்த வேலைய இந்தியன் தரத்துக்கு செஞ்சீங்கன்னா, இந்தியால இருக்கிறவங்களும் பார்ப்பாங்க. அப்பிடி அவங்களுக்கு ஏற்ற மாதிரி செய்யும் போது இங்க இலங்கைல இருக்கிறவங்களும் தானாகவே பார்க்க ஆரம்பிப்பாங்க. அதுதான் என்னோட சின்ன உந்துதல், ரகசியம் என்றே கூட சொல்லலாம். இந்தியாவில இருக்கிறவங்களுக்கு பிடிக்கணும் அவங்களோட போட்டி போடணும்னு செஞ்சா அவங்க தரத்துக்கு நாங்களும் போகலாம்.

கேள்வி: கடைசியா ஒரே ஒரு கேள்வி. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாருக்கெல்லாம் நன்றிசொல்ல விரும்புறீங்க?

பதில்: இதுவரைக்கும் யோசிச்சதில்லை. இவ்வளவு நேரம் கேட்ட கேள்வியெல்லாம் அடிக்கடி கேட்கிற அடிக்கடி நானே என்னை கேட்டுக்கொள்ற கேள்விகள் தான்.

முதலாவது. அப்பா அம்மா. விசுவல் கம்யூனிகேஷன் படிக்கப் போறன் அதுக்கு கேமரா தேவைப்பட்டது, நீ இன்ஜினியரிங் தான் படிக்கனும் என்று விட்டிருந்தால் கொஞ்சம் கூட அந்தப்பக்கம் எதுவுமே பண்ணிருக்கமாட்டேன். அவங்களுக்கு பிடிக்காத விசயத்துக்கும் கூட கேமரா எல்லாம் வாங்கித்தந்தது இதெல்லாம் கத்துக்கணும்னதுக்காக அவங்களுக்கு.

அதுக்கப்புறம் நண்பர்கள். அவங்க தான் முழுத் தூண்களும். சின்ன சின்ன விசயத்துக்குக்கூட ஊக்குவிப்பு குடுப்பாங்க. அது இல்லன்னா அடுத்து செய்றதுக்கு எந்தவித ஊக்குவிப்பும் இருக்காது. முழு நன்றிகளும் நண்பர்களுக்குத் தான். இந்திய நண்பர்கள் இலங்கை நண்பர்கள் எல்லாருக்கும் தான்.

ஆசிரியர்கள். கல்வி வழில சொல்லித்தந்த ஆசிரியர்கள் தான் இருக்காங்க. வாழ்க்கையை சொல்லித்தந்தவங்க என்று பெருசா யாருமில்ல. நன்றிகள் சொல்லனும்னா அப்பா அம்மா நண்பர்களுக்குத் தான்.

On set 

அபிஷேக் பால்ராஜ் போன்று இலங்கையில் ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கிறவர்களுக்கான அங்கீகாரம் வெகுவிரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கைகளோடும் அவருடைய இரண்டு குறும்படங்களும் கலந்து கொள்கிற போட்டிகளில் வெற்றிபெறவும் அவருடைய எதிர்கால படைப்புகளுக்காக ROAR தமிழ் சார்பான வாழ்த்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Articles