ஜோர்ஜ் ஆர்வேலும் பிக் பாஸூம் – ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

“பிக் பாஸ் தமிழ் -3” இதுதான் தற்போதைய தமிழ் குடும்பங்களின் அல்டிமேட் பொழுதுபோக்கு. இரவானாலே ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காரணம் பிக் பாஸ் ஒளிபரப்பாகின்ற நேரம் என்பதால். இந்த உணர்வு ஒருசிலருக்கு இருந்தாலும், அதில் அப்படி என்னதான் இருக்கிறது பார்ப்பதற்கு என்று சொல்பவர்களும் உண்டு… அதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. அடுத்தவர் வீட்டை எட்டிப்பார்த்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் பிக்பாஸும் இருக்கிறது என்பதுதான் பலரது விமர்சனம். 

கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையிலும் திரும்பிய இடமெல்லாம் இந்த பிக் பாஸை பற்றிய பேச்சுகளும், சமூக வலைளத்தளங்ளில் மீம்ஸ்களளும் ஆளாளுக்கு அவர்களுக்கு ஏற்றாற்போலான விமர்சனங்களையும் கடக்காமல் நாம் எவரும் இருந்திருக்க முடியாது.ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டின் விஜய் டிவி இம்முறையும் மூன்றாவது முறையாக இந்த பிக்பாஸை நடத்துகிறது. முதல் இரு சீசன்களை போலவே இம்முறையும் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சியை முன்நின்று நடத்துகிறார். இதில் இரண்டு இலங்கையர்களும் இருக்கிறார் என்பதில்தான் இங்கு நம் மத்தியில் இந்த நிகழ்ச்சி எடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.

அதிலும் தென்னிந்திய பிரபலங்களை மிஞ்சும் அளவுக்கு இலங்கையின் ‘லொஸ்லியா’ இருந்துவருகிறார். கடந்த முறை ஓவியாவுக்கு எப்படியோ இம்முறை லொஸ்லியாவுக்கு. அட இலங்கையிலிருந்து வந்த இன்னொரு பையனின் நிலை எப்படி என்றால்… அவரும் இருக்கிறார் என்று கடந்து போய்விடுகிறார்கள்.

இலங்கையில் இருந்து கலந்துகொள்ளும் லொஸ்லியா மற்றும் தர்ஷன்.

இவையெல்லாம் இப்படியே கடந்துபோக இந்த பிக் பாஸ் நிழ்ச்சியில் உண்மை இருக்கிறதா? அல்லது ஸ்கிரிப்டில் எழுதிகொடுத்தபடி நடக்கிறது வெறும் வர்த்தக நோக்கம் மட்டும்தானா இதில் இருக்கிறது என்ற பலதரப்பட்ட கேள்விகள் நமக்குள் எழும். அந்த கேள்விகளுக்கான பதிலை இதன் மூலத்தை அறிந்தால்தான் நம்மாள் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே நடைப்பறெ்றுக் கொண்டிருக்க பிக்பாஸின் விமர்சனமோ விளக்கவுரையோ எழுதாமல்… இதன் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்.

யார் முன்னோடி?

முதன்முதலில் எண்டமால் என்னும் நிறுவனம் ‘பிக் பிரதர்’ (Big Brother) என்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை நெதர்லாந்து நாட்டில் 1999ஆம் வருடம் அறிமுகம் செய்தது. ஜேழடி டி மொல் என்பவர்தான் இதன் உருவாக்கி. இவர் வெறும் திரைப்படங்கள், சீரியல் மட்டுமே அறிந்திருந்த காலத்தில் புதுமையான நிகழ்ச்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிக் பிரதர் எனும் இந்த நிகழ்ச்சிக்கான கருத்துருவாக்கத்தை முன்வைத்தார்.அதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியானது நெதர்லாந்து நாட்டில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில் இந்த நிகழ்ச்சி அறிமுகமானது. இந்த நிகழ்ச்சி இதுவரை 54 நாடுகளில் 387 சீசன்களை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்வு அந்தந்த நாட்டின் கலை, கலாசாரம், வெகுஜன ரசனை சார்ந்து சிற்சில மாற்றங்களுடன் வெளியாகிறது.

இந்த பிக் பிரதர்தான் தற்போது பிக் பாஸாக தமிழில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது.போட்டி எப்படி நடக்கும்?நூற்றுக்கணக்கான கெமராக்களின் கண்காணிப்பின் கீழ், ஒரு தனிமையான வீட்டில் எவ்விதப் புறத்தொடர்புமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகின்ற குழுவினரே போட்டியாளர்கள். இந்தக் குழுவினரில் யார் கடைசிவரை அந்த வீட்டில் தாக்குப்பிடிக்கின்றாரோ அவரே வெற்றியாளர். இது அறிமுகமான புதிதில் பார்வையாளர்களிடையே இந்நிகழ்ச்சி குறித்த ஆர்வம் தீயாய் பரவியது. புகழ்பெற்ற பத்திரிகைகளிலும் வாராந்திர நிகழ்ச்சிகளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஒவ்வொரு வாரமும் காரசாரமாக விவாதித்தார்கள்.

பிக் பாஸ் போட்டிக்காக அமைக்கப்படும் வீட்டின் உள் அமைப்பு.பட உதவி: post.jagran.com

குறிப்பிட்ட போட்டியாளர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள். நிகழ்ச்சி தொடங்கிய அன்று அந்த வீட்டிக்குள் அனுமதிக்கப்படுபவர்கள், வெளியேற்றப்பட்டலோ அல்லது நிகழ்ச்சி முடிந்தாலோதான் அந்த வீட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அந்த வீட்டில் தொலைக்காட்சி, தொலைப்பேசி, கையடக்கத் தொலைப்பேசி, இணையம், கடிகாரம், பேனா, பென்சில், பேப்பர்… எந்தத் தொலைத் தொடர்பு சாதனத்திற்கும் அனுமதி கிடையாது.

போட்டியாளர்கள் வெளிஉலகத் தொடர்பிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்படுவார்கள். கழிவறை, குளியலறை தவிர அந்த வீட்டின் அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு போட்டியாளர்களின் செயல்பாடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். அவர்களுக்குள் போட்டிகள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். குறைவான வாக்குகளைப் பெறுபவர்கள் வாரம் ஒருவராக போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இறுதி வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்களில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்படும்.இதுதான் இந்த நிகழ்ச்சி….

விதை யார் போட்டது?

இதன் மூலம் நெதர்லாந்துக்காரர் என்றும் சொன்னோம்… ஆனால் அது அவர் மட்டுமல்ல அவருக்கு முன்மே ஒரு நாவலாசிரியர் இந்த கருத்துருவாக்கத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் அதை இரத்தமும் சதையுமாக சொன்னார். இவர்களோ கேளிக்கை களியாட்டமாக அதை மாற்றிவிட்டனர். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜோர்ஜ் ஆர்வெல் என்பவரால், ரஷ்யாவில் நிகழ்ந்த ஸ்டாலின் ஆட்சியின் போதான ஏகாதிபத்தியத்தையும் கண்காணிப்பின் அரசியலையும் பகடி செய்து எழுதப்பட்ட ‘1984’ என்னும் நாவலின் மையக் கருத்திலிருந்துதான் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சிக்கான உள்ளடக்கம் உரவாக்கப்பட்டிருக்கிறது. நாவலில் அனைவரையும் கண்காணிக்கின்ற ‘பிக் பிரதர்’ என்னும் கதாபாத்திரமும் அதன் அச்சமூட்டும் கண்காணிப்பும்தான் அந்த நிகழ்வின் மையம்.

1984 நாவலில் சகமனிதர்களை துரோகிகளாகச் சித்திரித்து பிக் பிரதரிடம் காட்டிக்கொடுக்கும் தன்மையின் ஆட்டமாகவும், அந்த ஆட்டவிதிகள் வரலாற்றில் நாஜி அதிகாரிகளிடம் சக புரட்சியாளர்களைக் காட்டிக் கொடுக்கும் சக கலைஞர்களின் கைக்கிளையாகவும் மாறி மாறிச் சுழலும் காலச்சுழற்சியின் பல்வேறு பரிமாணங்கள் தற்போது புகழ்பெற்ற நிகழ்ச்சியாக மாறிப்போனது.ஒற்றைக்கண் கொண்ட கண்ணாடிச் சட்டகத்தின் வடிவம். இந்த வடிவம் இன்று வரை பெரும் பாராட்டுதல்களையும் சமூக நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியாத கண்காணிப்பின் குறியீடாகவும் உலகம் ழுழுக்க விளங்குகிறது. உலகையே தன்வசப்படுத்தி வைத்திருக்கும்… எந்த ஒரு சம்பவத்திற்கும் எந்த ஒரு பொருளுக்கும் இவர்கள்தான் காரணம் என்று ஒரு குடும்பத்தை சொல்லும் இலுமினாட்டிகளின் குறியீடும் ஒற்றைக் கண்தான்.

இலுமினாட்டிகளின் ஒற்றைக்கண் குறியீடு

இந்த ஒற்றைக்கண் கொண்ட குறியீடு, நீங்கள் கண்காணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எந்தப்புறம் திரும்பினாலும் அந்த ஒற்றைக்கண் ‘ஒற்றைத் தன்மையுடன் மட்டுமே’ முன்வைக்கும்.இந்த ஒற்றைக் கண்ணாடியின் சட்டகத்தை ‘1984’ நாவலின் ஒவ்வொரு பக்கமும் அணிந்திருக்கிறது. உலகளவிலான வெகுஜனக் கலையியலாளர்கள், தங்களது கலை இலக்கியச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் போது, இதுபோன்ற செவ்வியல் கலை வடிவங்களையே தற்கால பாபுலர் சூழலுக்கேற்ப உருமாற்றுகிறார்கள். “இது ஒரு வகையான பின்நவீனத்துவக் கலைச்செயல்பாடு’ என்கிறார் கலை விமர்சகர் ரிச்சர்ட் ஹோகார்த். 1984இல் ரத்தமும் சதையுமாக நிகழ்ந்த வாழ்வியல் அவலத்தை வாழ்வியல் அபத்தமாக ஆட்டக் காட்சியாக உருமாற்றியிருக்கிறது வெகுஜன கலை ஊடக வெளி என்ற விமர்சனமும் இந்த பிக் பிரதர் மீது வைக்கப்படுகின்றது. 

யார் இந்த ஜோர்ஜ் ஆர்வெல்?

பிக் பிரதர் உருவாக்கதின் முதல் விதையை எழுதிய ஜோர்ஜ் ஆர்வெல்.
பட உதவி: bbc.com

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த போது, பிஹாரில் 1903 ஆம் ஆண்டு பிறந்தார் ஜோர்ஜ் ஆர்வல். தந்தை இந்திய சிவில் பாதுகாப்புப் பிரிவில் பணி புரிந்தவர். இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளேயர். ஒரு  வயது குழந்தையாக இருந்தபோது, அம்மா இவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்தில் அம்மாவுடனும் சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். தந்தையைப் பார்ப்பதற்காக எப்போதாவது இந்தியாவுக்கு வந்து செல்வார்கள். முதல் உலகப்போருக்குப் பிறகு, ஷிப்லேக் என்ற இடத்தில் குடியேறினர்.பர்மாவில் பிரிட்டிஷ் இம்பீரியல் பொலிஸில் சேர்ந்து 1927 வரை பணி புரிந்தார். இதையடுத்து ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டார். அரசு, அதிகார வர்க்கத்தில் இருந்து முழுவதுமாக விலகி ஒரு எழுத்தாளராகவே இருந்துவிடுவது என அப்போதுதான் தீர்மானித்தார்.

எழுத்துப் பணிக்கு தடங்கல் ஏற்படாதவாறு பல்வேறு வேலைகள் செய்தார். 1935இல் ‘ஜோர்ஜ் ஆர்வெல்’ என்ற புனைப்பெயரில் நாவல்கள் எழுதினார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பத்திரிகைகளிலும் பணியாற்றினார். 1937இல் ஸ்பானிய உள்நாட்டுப் போரில் கலந்துகொண்டார். போர் அனுபவங்களை ‘அனிமல் பார்ம்’ என்ற நாவலாக வடித்தார். இது ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. 1948இல் எழுதி முடித்த நாவலுக்கு அதன் கடைசி இரு இலக்கங்களை திருப்பிப் போட்டு ‘நைன்டீன் எய்ட்டி போர்’ என்று தலைப்பிட்டார்.உன்னதமான நோக்கங்களோடு தொடங்கும் எல்லா புரட்சியும் காலப்போக்கில் அதிகார போதையால் அழிந்து போகும் அவலத்தை இந்த 2 படைப்புகளும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டின. இவை உலகப் புகழ்பெற்றன.

இதுதவிர, பல நாவல்களை எழுதினார். ஏராளமான கவிதைகளையும் படைத்தார். இவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமானவராகப் போற்றப்படும் ஜோர்ஜ் ஆர்வெல், காசநோயின் பிடியில் சிக்கி 47ஆவது வயதில் காலமானார்.

முகப்பு அட்டை உதவி : shilfa.com

Related Articles