இலங்கையில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் – பின்னனி என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்பு (நவம்பர் 2) இலங்கையின் மேலைக்கரைப்பகுதியான பாணந்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இலங்கையில் இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை. ஆனால் உலகின் சில இடங்களில் இதை போன்ற அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இவ்விந்தையான நிகழ்வுக்கு பின்னணி என்ன? இன்றும் விஞ்ஞானிகளால் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இது உள்ளது.

ஒரு திமிங்கலம் கடற்கரைக்கு மிக அருகாமையில் நீந்தும் போதோ அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டு நீந்த இயலாமல் போகும் போதோ கடலலைகளால் இழுக்கப்பட்டு, கடற்கரையை நோக்கி தள்ளப்படும் என கருதப்படுகிறது. இச்செயற்பாடு திமிங்கலங்களில் மட்டுமல்லாது ஓங்கில்களிலும் (டால்பின்கள்) நிகழ்வது உண்டு. திமிங்கலங்கள் கூட்டமாக வாழும் இயல்புடையன என்பதனாலேயே ஒரே சமயத்தில் பெருங்கூட்டமாக கரையொதுங்குகின்றன. இது ஒரு வகை தற்கொலை நிகழ்வாக கருதப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு கரையொதுங்கும் திமிங்கலங்களின் உடல் கரடுமுரடான நிலத்துடன் வேகமாக அழுத்தி தேய்க்கப்படுவதால் உள்ளுறுப்புகளில் பாதிப்படைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்து போகின்றன. மேலும் கரையில் வெகு நேரம் கிடக்கும் போது பாரியளவு நீரிழப்பு ஏற்பட்டும், சுவாசிக்க இயலாமாலும் இறப்பை சந்திக்கின்றன.

Yahoonews.com

கரையொதுங்கும் இப்பாலூட்டிகள் சமயங்களில் பெரும் கடலலைகளால் மீண்டும் கடலுக்குள் ஈர்க்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவே. எனவே இவ்வபாய நிலையை சந்திக்கும் உயிர்களை காக்க மனிதனின் உதவி இன்றியமையாததாக உள்ளது.

புவி வெப்பமடைதலால் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களும், திமிங்கலங்களின் எதிரொலி இடக்கணிப்பு (echolocation) மற்றும் புவிகாந்த நிலையில் ஏற்படும் குழப்பங்களும் இவ்வாறான பாரிய கரையொதுக்கங்களுக்கு காரணமாகலாம் என்ற கருத்தை சில  விஞ்ஞானிகளும்  ஆராய்ச்சியாளர்களும் முன்வைக்கும் போதும் அவைகள் இன்று வரை நிரூபிக்கப்படவில்லை. பெரும்பாலான அனைத்து கரையொதுக்கங்களும் விபத்துக்களகாவே  இருக்கக்கூடும் என்ற கருத்தே வலுவாக ஏற்கப்படுகிறது. திமிங்கலங்கள் பிறந்தது முதல் அன்னையுடனே வாழும் வழக்கம் உடையவை. இவை பெரும் கூட்டங்களாகவே கடலில் பயணிக்கவும், வேட்டையாடவும் செய்கின்றன. இந்த நெருக்கமான தொடர்பு காரணமாக வழிகாட்டும் தலைமை திமிங்கலம் பிழையான திசையில் செல்லும்போது அதனோடு சேர்ந்து மொத்த திமிங்கல கூட்டமும் பிரயாணிப்பதே இவ்வாறு பெருமளவான திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கடலொதுங்க வைக்கிறது. தனியாக வாழும் இயல்புடைய சில பெரிய திமிங்கலங்களும் தங்கள் இரையை துரத்திக்கொண்டு ஆழம் குறைந்த நீர் பரப்புக்கு வருவதால் கரை நோக்கி இழுத்து செல்லப்படுகின்றன.

BBC.com

எவ்வாறாயினும் திமிங்கலங்கள் கரையொதுங்குவது சில வேளைகளில் வேட்டைக்கான தந்திரமாகவும் இருக்கலாம். உலகமெங்கும் பரவி வாழும் ஓர்க்கா திமிங்கலங்கள், கடல் சிங்கத்தை வேட்டையாடும் பொருட்டு தாமாகவே நீரிலிருந்து கரைக்கு வருவது இயல்பாகும். பல தலைமுறைகளாக இந்த தந்திரோபாயத்தை பின்பற்றி வருவதனால்  ஓர்க்கா திமிங்கலங்கள் கூட்டமாக கரையொதுங்கி இறந்ததில்லை. சில சமயங்களில் திமிங்கலங்களின் நடத்தையில் ஏற்படும் இந்த அசாதாரண சூழ்நிலைக்கு மனித செயற்பாடுகளும் காரணமாகலாம் என ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பயணம் மேற்கொள்ளும் பெரிய நாவாய்கள் சோனார் இயந்திரத்தை பயன்படுத்துவது திமிங்கலங்களை அச்சமூட்டும். இதனால் அவை மூச்செடுக்க நீரின் மேற்பரப்பிற்கு வருவதில் சிரமம் உருவாகி நோய்வாய்ப்பட அதிகம் வாய்ப்புள்ளது. குருதியில் ஆக்ஸிஜன் குறையும் சமயங்களில் திமிங்கலங்களின் உடல் செயற்பாடுகள் குன்றி கடல் நீரோட்டத்தால் கரைக்கு இழுத்து வரப்படும்.

 இலங்கையில் அண்மையில் நடைபெற்ற திமிங்கல கரையொதுக்கம்  குறித்து நோக்கினால் சுமார் 120 திமிங்கலங்கள் கடலலைகளால் கரையில் வீசப்பட்டுள்ளன. இவ்வாறு கரையை அடைந்த திமிங்கலங்கள் Globicephala என்ற விஞ்ஞான பெயர் கொண்ட பயலட் திமிங்கலங்களாகும். இவை வருடாந்தம் வடகீழ் பருவப் பெயர்ச்சியின் போது மன்னார் வளைகுடா பகுதிக்கு இடம்பெயரும் திமிங்கலங்கள். சில திமிங்கலங்கள் தவறான வழியில் பயணித்த காரணத்தால் மொத்த குழுவும் கரைப்பகுதியில் ஒதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக  இலங்கை கடல் சார் உயிரினங்களுக்கான ஆய்வுநிறுவகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளமையால் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், திமிங்கலங்கள் பெரும் எண்ணிக்கையில் கரை ஒதுங்கியதை பார்த்த கரையோரவாசிகள் மறு சிந்தனை இன்றி திமிங்கலங்களை காப்பாற்றும் நோக்குடன் கடற்கரையில் குவிந்தனர்.

LAKRUWAN WANNIARACHCHI – AFP VIA GETTY IMAGES

தம்மால் இயன்றளவு திமிங்கலங்களை கடலுக்குள் மீளத்திருப்பிய வண்ணம் இருந்த வேளையில் காவல்துறை மற்றும் இலங்கை கடற்படையின் உதவி கிடைக்கப்பட்டது. அவர்களுடன் இலங்கை கடல் சார் ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரும் இணைந்து கொண்டனர். அடுத்த நாள் (நவம்பர் 3) அதிகாலை 6 மணி வரை நீடித்த போராட்டதின் பின்பு ஏறக்குறைய எல்லா திமிங்கலங்களும் கடலுக்குள் மீண்டும் அனுப்பப்பட்டன. இப்பணியில் கடற்படையின் 6 விசைப்படகுகளும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் பாணந்துறையின் நல்லூறுவ மற்றும் வாத்துவ பகுதிகளில் கரை ஒதுங்கிய 5 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் மரணத்துக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக வனவிலங்குகள் திணைக்களத்தினரால் அவற்றின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதன் பின் அவ்வுடல்கள் கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. இலங்கையில் இது போன்ற முன அனுபவம் இல்லாத போதிலும், நிலவும் இக்கட்டான சூழலில் தங்கள் உயிரை பணயம் வைத்து விலங்குகளை காப்பாற்ற முயற்சித்த மக்களின் மனித நேயம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

இலங்கைக்கு முற்றிலும் புதிதாக இருந்த இந்த அனுபவம் வேறு சில நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நிகழ்ந்துள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் சுமார் 400 இற்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியா கடற்கரையில் கரை ஒதுங்கின. எனினும் இவற்றில் வரும் 100 மாத்திரமே மீண்டும் கடலுக்கு சென்றன. 2018 இலும் 150 பயலட் திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கின. இது தவிர்த்து அமெரிக்காவின் கேப் கோட், சிலி, நியூசீலாந்து ஆகிய இடங்களிலும் பெருங்கூட்டமாக திமிங்கலங்களும்,ஓங்கில்களும் கரை ஒதுங்கும் நிகழ்வு நடந்த வண்ணமே உள்ளது. 

YahooNews.com

 திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்குவது இயற்கைக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் நேரடியான பாதிப்பை உருவாக்கும். பொதுவாக கரையொதுங்கி இறக்கும் திமிங்கலங்களின் உடல் விரைவில் அழுகுவதால் அவற்றில் உடலின் உட்பகுதியில் பெருமளவு மீதேன் வாயு நிரம்பும். இவ்வாறான நிலையில் அவ்வுடலை அகற்ற முற்படும் போது அது வெடித்து சிதறும் அபாயம் அதிகம். பிறநாடுகளில் இவ்வாறு திமிங்கல உடல்களை அப்புறப்படுத்தும் போது வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக 1970 இல் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் ப்ளோரன்ஸ் நகரில் கரையோரத்தில் இருந்து அகற்ற முற்பட்ட பாரிய திமிங்கலத்தின் உடல் வெடித்து, சம்பவ இடத்தில் இருந்து சுமார் 800 அடி தூரம் வரை அதன் உடற்சிதைவுகள் வீசியடிக்கப்பட்டன. அதிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது பாரிய உடல்பகுதி விழுந்து பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. இன்னும் காரணம் அறியப்படாத மர்மமாகவே இருக்கும் இந்த திமிங்கல விவகாரம் வெகு விரைவில் தீர்க்கப்பட்டாக வேண்டும். இல்லையேல் திமிங்கலங்கள் என்பது வெறும் புகைப்படங்களாகவும், கதைகளாகவும் மட்டுமே எஞ்சிப்போகும் நிலை உருவாகலாம்.

Related Articles