மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்ற DNA ஆராய்ச்சியாளரான Svante Pääbo

மனிதனுக்கு தன்னுடைய தொடக்கப் புள்ளி, மூதாதைகள், சக இனங்களோடு இருந்த தொடர்புகள் பற்றிய தேடல்  எப்பவுமே இருந்து வருகின்ற ஒன்று.பல வருடங்களாக ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் பெறப்பட்ட என்புகளையும், கலைப் பொருட்களையும் வைத்து மனிதனுடைய பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள்.ஆனாலும் அவர்களால்  நியன்டர்தால்கள், எரக்டர்கள் போன்ற ஏனைய சக மனித இனங்களை தாண்டி எப்படி சேப்பியன்களால் (நவீன கால மனிதர்கள்) இத்தனை காலமாக தப்பிப்பிழைக்க முடிந்திருக்கிறது என்பதை விபரிக்க முடியவில்லை.

ஆனால் ஜேர்மனை சேர்ந்த மரபணு ஆராய்ச்சியாளரான Svante Pääbo இனால் சேப்பியன்களுக்கும், அழிந்து போன ஏனைய மனித இனங்களுக்கும் இடையிலான மரபணுக்களின் வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடிந்திருக்கின்றது.காலத்தோடு DNA அழிந்து போகக்கூடிதாக இருப்பதனால் 10,000 வருடங்களுக்கு முந்தைய எச்சங்களில் இருந்து DNA இனை பிரித்தெடுக்க முடியாதென இத்தனை நாட்களாக நம்பப்பட்டது.

ஜேர்மனை சேர்ந்த மரபணு ஆராய்ச்சியாளரான Svante Pääbo/புகைப்பட உதவி: www.eva.mpg.de

ஆனால் Pääbo இனால் என்புகளில் இருந்து பெறப்பட்ட கலங்களை ஆராய்ந்து, அதன் உள்ளேயிருக்கும் இழைமணியின் உடைந்த DNA பகுதிகளை கோர்த்து நியாண்டர்தால்களின் முழுமையான DNA ஒழுங்கினை பெற முடிந்தது. இது மனித வரலாற்றின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்தக் கண்டுபிடிப்பு ‘தொல் பொருள் மரபணுவியல்’ (Paleogenomics) எனும் புதிய பாதைக்கான அடித்தளத்தினை இட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சேப்பியன்களின் பரிணாம வளர்ச்சியினை தொடக்கப்புள்ளியான மூதாதை இனங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.ஏனைய மனித இனங்களுக்கும் சேப்பியன்களுக்கும் இடையில் எவ்வாறான தொடர்பு இருந்தது என ஆராய்ச்சியாளர்களுக்கு மத்தியில் இரு வகையான கோட்பாடுகள் இருந்தன.

இதில் இனக்கலப்பு கோட்பாடு சேப்பியன்களுக்கும் ஏனைய இனங்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்ததென விபரிக்கின்றது.இன அழிப்புக் கோட்பாடு சேப்பியன்களுக்கும் ஏனைய இனங்களுக்கும் இடையே போட்டியும், சண்டைகளுமே இருந்ததெனவும் இதனாலேயே அவ்வினங்கள் அழிந்ததெனவும் விபரிக்கின்றது.

நியாண்டர்தால்கள், டெனிசோவன்களோடு சேப்பியன்கள் இனக்கலப்பு செய்து குழந்தைகளை பெற்றதற்கான ஆதாரங்களை Pääbo மரபணு ஆராய்ச்சிகள் மூலமாக கண்டுபிடித்திருந்தார்.Pääbo இன் இக்கண்டுபிடிப்பு இனக்கலப்பு கோட்பாட்டிற்கு சான்றாக அமைந்திருக்கின்றது.இன்று வாழும் பெரும்பாலான மனிதர்களில் கூட இதற்கான மரபணு எச்சங்கள் காணப்படுவதை  நிரூபித்தது உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சைபீரியாவில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விரல் நுனிபடபகுதியின் மூலம் டெனிசோவன்ஸ் என்ற புதிய மனித இனத்தை அடையாளம் கண்டுள்ளது – புகைப்பட உதவி-www.cbc.ca

சேப்பியன்களுக்கு கடத்தப்பட்ட அழிந்து போன இனங்களின் மரபணுக்களால் சேப்பியன்களின் உடலில் பலதரப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது.டெனிசோவியன்களின் மரபணுக்கள் மனிதர்கள் உயரமான இடங்களில் வாழ்வதற்கு இசைவாக்கமடைய உதவின. ஆனால் நியாண்டர்தால்களின் மரபணுக்கள் தீவிரமான பல நோய்கள் தொற்றுவதற்கு காரணமாக அமைந்தன.

ஏனைய மனித இனங்களை விடவும் எப்படி ஹோமோ சேப்பியன்களால் இத்தனை காலம் தாக்குப்பிடிக்க முடிகின்றது என்பதை மரபணுக்கள் மூலம் கண்டுபிடித்த Svante Pääbo க்கு இவ்வாண்டுக்குரிய மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

Related Articles