காண்பதெல்லாம் காதலடி | Top 10 கவிதைகள் | roar showtime

பத்து நாட்களுக்கு முன்னர் காதலர் தின சிறப்பாக, காதல் கவிதைகளுக்கான போட்டி ஒன்றினை அறிவித்திருந்தோம். “காண்பதெல்லாம் காதலடி” எனும் தொனிப்பொருளில் நீங்கள் அனுப்பிய கவிதைகளுள் சிறப்பான 10 கவிதைகளை தேர்ந்தெடுத்து எமது சிறப்பு அதிதி திரு. தவ சஜிதரன் அவர்கள் எமக்கு கையளித்திருக்கிறார். 

கடந்த 14ம் திகதி இரவு 12 மணிவரையிலான நேரத்திற்குள் 50ற்கும் மேலான கவிதைகள் எம்வசம் வந்தடைந்தது. அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் கவிதைகள் கிடைத்தவண்ணமிருந்தன. விதிமுறைகளுக்கு இடம் கொடுத்து, முழுமையான பொறுப்பை எமது நெறியாளர் வசமே கையளித்து விட்டோம். அக்கவிதைகளுள் சிறப்பானவற்றை தெரிவு செய்யும் நெறியாளர் பணி நிச்சயம் அவருக்கு சவால் நிறைந்ததாகவே இருந்தது.

முத்தான பத்து கவிதைகள் நிச்சயம் பாராட்டும் படியான சிறப்பினை கொண்டவையாகவே இருக்கின்றது. அவை குறித்து பார்க்க முன்னர், எமது அதிதியின் சிந்தனை துளிகள் இதோ:

“பெருந்தொகையானவர்கள் பங்கேற்ற போட்டியொன்றில் சிலவற்றை மட்டும் சிறந்தவை என்று அடையாளப்படுத்திக் தெரிவுசெய்வது சிக்கலான பணி. கவிதைத் தெரிவுக்காக பயன்படுத்தப்பட்ட அளவுகோல்கள் எவை என்பதை காணொளியொன்றின் ஊடாக விளக்கலாம் என்று இருக்கிறேன். கவிதைகள் அனுப்பியும் தெரிவு செய்யப்படாதவர்கள் சோர்ந்து விடாதீர்கள்! காதலுக்கும் கவிதைக்கும் எப்போதும் கொண்டாட்ட மனநிலை அவசியம். அதைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்! சிகரம் தொடுவீர்கள்! நல்வாழ்த்தும் நனி அன்பும்.
அன்புடன் 
தவ சஜிதரன்”

காண்பதெல்லாம் காதலடி

என் அரிதாரமில்லா முகம்
உன் முத்தத்துக்கு
போதுமாயிருக்கிறது!
என் பிறழ்வு நிலைகளும்
பேரிரைச்சல்களும்
உன் அணைப்புக்கு
ஏதுவாயிருக்கிறது !
என் மௌனங்கள்
மொழிபெயர்ப்பின் தேவையின்றி
உனக்கு புரிகிறது !
என் ஆற்றாமைகள்
கொட்டித்தீர்க்கையில்
இடைவெளிகள் உனக்கு
தேவையற்றிருக்கிறது !
ஆதலால் தான்
அடை மழை நான் உனக்கு
அடர்வனம் நீ எனக்கு!

என் வெறுமைகளை
தயவு தாட்சண்யமின்றி
நிறைத்திருக்கிறாய்!
என் நிறைவுகளின்
கடைசிப்புள்ளி
நீயாகவிருக்கிறாய் !
என் தேவைகளை
வார்த்தைகளின் நீட்சியின்றி
முடித்து வைக்கிறாய் !
என் கோபங்களின் சிவப்பை
ஓர் முழுநீள முத்தத்தில்
மோகச் சிவப்பாக்குகின்றாய் !
ஆதலால் தான்
வெம்மைக்கதிர் நான் உனக்கு
காயும் நிலா நீ எனக்கு!

– நிரோஜினி ரொபர்ட் –

காணும் இடமெங்கும் காதல் முகைவிரித்து
நாணும் இடமெங்கும் நங்கையுன் – சோணத்
திருவதனம் தோற்றும் திறமென்ன மாயக்
கருவிழிக்குள் தோற்பேன் களித்து! (1)

வாணுதலோய் நெஞ்சுக்குள் வாழுகின்றோய் முல்லைப்பூப்
பூணுதியோ காரொக்கும் பூங்குழலில் – நாணுதியோ
யானுன்றன் கண்நோக்க ஏக்கத்தைக் கூட்டுதியோ
மானுன்றன் வில்லை வளைத்து! (2)

 செல்லச் சிணுங்கல்கள் செய்யப் புகுதலுற்றாய்
மெல்லக் குழந்தை விளையாட்டு – வல்லவொரு
மல்லன்மா வேழம் வளைக்கும் தகவிருமை
புல்லுகிற விந்தை புகல்! (3)

சொட்டும் நறவினிமை தோயும் மொழிகூட்டிக்
கட்டும் திறனுடையோய் கைகளொன்றாய் – ஒட்டி
நடந்திருப்போம் ஓயாது நாமிணைந்து காலம்
கடந்திருப்போம் காதல் கவிந்து!!! (4)

 (நேரிசை வெண்பா)

– நிறோஷ் ஞானச்செல்வம் –

பரிசு ஒன்றைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
உன்னைப் பார்த்த தினந்தொட்டான தேடல்.
எனக்குப் பிடித்த
புத்தக சாலையில், பொம்மைக்கடையில்
சிலவேளைகளில் மரத்தடி கடைகளிலும்
பூந்தோட்டம் சென்று பூவையும்
நதியருகே சென்று ஒரு மீனையும்
வானம் தாண்டிச் சென்று சிறு நிலவையும்
பரிசாக்கத் தேடினேன்.
வெள்ளைக் காகிதம் ஒன்றில்
வண்ணமேற்றி ஒரு ஓவியத்தையோ
மையேற்றி ஒரு கவிதையையோ
குறைந்த பட்சம் ஒரு கடிதத்தைதானும்
பரிசாக்கத் தேடினேன்.

ஓவிய வல்லமை கைகளுக்குண்டு-எனினும்
புகைப்படம் பார்த்து வரைவதென்றால்
வைத்த கண்ணை திருப்பும் வல்லமை
கண்களுக்கு இல்லை.
கற்பனையில் வரைவதென்றால்
கனவிற்குள் தோன்றும் விழியின்
ஆழத்திலிருந்து நீந்தி எழ
வல்லமை மூளைக்கும் இல்லை.
கவிதை இசைக்கவும்
அதே சிக்கல்தான்
ஆழச் சுழியும் விழியின்
சுழியை விஞ்சும் வல்லமை
கனவிலும் நினைவிலும்
எப்போதும் இல்லை.

ஒரு பரிசைத் தேடிக்கொண்டிருக்கிறேன் சகி
மிருதுவான ஒரு முத்ததின்
முதல் ஸ்பரிசம் போல ஒரு பரிசு
உறுதியான அணைப்பின் இறுக்கம் போலவும்.
கடைக் கண் விரிந்து பார்க்க ஒரு பரிசு.
நீ பார்க்கும் போதோ
வருடும் போதோ
முகர்கையிலோ
அன்பை அள்ளித்தர
ஒரு பரிசு.

பட்டாம் பூச்சியின் முதல் சிறகசைப்பு
ஒரு மொட்டு வெடிக்கும் சத்தம்
பறந்து செல்லும் ஒளி
அடை மழையின் கடைசித் துளி
சிக்கிவிடாத இவைபோன்ற
ஏதோ ஒன்று எனக்கு வேண்டும்.
பரிசொன்றிற்கு பரிசு
அப்படித்தானே இருக்கமுடியும். 

சலிக்காத ஒரு தேடல் சகி இது.
கண்டடையும் வரை நிற்காத தேடலும் இது.
ஒரு பரிசை இன்னமும்
தேடிக்கொண்டிருக்கிறேன் சகி.

– அதீதன் –

விழித்திரையில் புகைப்படமாய்
தினம் மிதக்கும் பிம்பங்கள்
கூறும் பாெருள் யாவும் இங்கு காதலடி ;
அந்தி வான வண்ணங்கள்
அள்ளித்தரும் எண்ணங்கள்
ஆற்றுவிக்கும் கற்பனைகள் காதலடி

விலை குறைந்த வீணைகளும்
புகழிசைகள் மீட்டுதல் பாேல்
பணம் குறைந்த மனங்௧ள் தினம்
காட்டும் அன்பும் காதலடி

நீளும் பாதை யாவும் எந்தன்
வழிந்துணையாய் வருமிந்த
இயற்கைத்தாயின் சித்திரங்களில்
எண்ணடங்கா காதலடி

உதட்டாேடு உயிர் நழுவும்
இறுதி நாெடி உணரும் பாேதும்
உணர்வாகி வழியனுப்பும்
முதல் காதல் மேன்மையடி

பாேகும் திசை யாவும் உயிர்
காதல்களால் வாழுதடி
ஈரமுள்ள இதயங்களால்
இன்பங்களும் நீளுதடி
மேகங்களும் பிரிவதனால்
மேடைகளும் தளிர்க்குதடி
கானும் பாெருள் யாவும் இங்கு
காதலாகி பாேகுதடி

– ஜேசுதாசன் ஜக்சயன் –

காதல்………
மண்மேல் சேராமல்
வார்த்தை மொழி பேசாமல்
மனதில் நினைவலைகள் – தினம்
ஓயாது தொடர்வது

காதல்………
கண்களின் பார்வையில்
கண்ட நொடிகளில் வித்திட்டு
கண்ணீரில் வேரூன்றி
கனவுக்குள் தவிப்பது

காதல்………..
மனங்களின் ஆழத்தில்
இதயத்தின் நாளத்தில்
உதிக்கும் மொழிகளை
மௌனம் கொண்டுரைப்பது

காதல்……….
கடுஞ்சினத்தின் தீயிலும்
மனதின் வெறுப்பிலும்
பிரிவின் துயரிலும்
அன்பை மனதுள் விதைப்பது

காதல்………
காகிதத்தின் மேல்
கண்ணீர் துளி கொண்டு
காவியம் கிறுக்கி
கதை கூறி ரசிப்பது

காதல்………..
இன்னோர் உயிரில்
இன்னோர் வலியில்
இன்னல்கள் கண்டால்
இன்னுயிர் பிரிவை உணர்வது

காதல்………..
பனிப்புல்லின் குளிர்மையும்
எரிமலையின் வெண்மையும்
கண்டறியா ஓர் உணர்வை
மனதுள் தந்து கடப்பது

காதல்………
ஆணின் கர்வம்
பெண்ணின் அகந்தை
அழகின் தோற்றம்
அனைத்தும் மறக்க செய்வது

காதல்………
ஆணையும் தாயாக்கும்
பெண்ணையும் தந்தையாக்கும்
மூத்தோராயினும் குழந்தையாக்கும்
இளமையின் மந்திரம்

காதல்……….
வரிகள் தாண்டி
உவமைகள் வென்று
வற்றிடாது ஓடுகின்ற
உலகின் அன்பு மொழி

காதல்…………
உனக்குள் அவளையும்
அவளுக்குள் உன்னையும்
உயிரை மாற்றி வைத்திடும்
உலகின் இன்னோர் அதிசயம்

காதல்………
வருடங்களை நிமிடங்களாக்கும்
நிமிடங்களை வருடங்களாக்கும்
காலச் சக்கரத்தை மாற்றிடும்
காலத்தின் காலச்சக்கரம்

காதல்………..
காத்திருப்பு சுகமென சொல்லும்
காலங்கள் கைக்குள் அடக்கிடும்
காணாத காட்சிகளை
காட்டிடும் மந்திர உலகம்

– மனிதி ரா.பவித்ரா –

இருள் சூழும்
மாலைப்பொழுதொன்றில் கடற்கரையோரமாக நான்…
ஆர்ப்பரிக்கும் கடல்
அலைகளை விட அதிகமாக
ஆர்ப்பரித்தபடி மனம்…
தூரத்தில் ஆழியினுள் சரணடைந்து
கொண்டிருந்தான் கதிரவன்…
அழகியலில் இலயித்திருந்த
எனை  கவர்ந்திழுத்தாள்
பேதையொருத்தி…
கணநேரத்தினுள் அழகியல்
ஆனால் அவள்…
கடலலைகளின் ஆர்ப்பரிப்பு
கூடியதாக உணர்ந்தேன்
ஏனோ அவளது
மென்பாதங்களை அவைகள்
தொட்டுவிட்டு சென்றபின்… 
இரசிக்கும் இசையானது
கொலுசின் சப்தம்…
காதோரக்கம்மல்கள்
கதைபேசியன
செவிகளுடன்…
தென்றலுடன் அசைந்தாடின
கருங்குழல், அவளின்
மெல்லிடையை மறைத்தபடி …
காத்திருக்கின்றேன்
பேதையவள்
வதனத்தை காண,
கண்டது கனா
என அறியாமலேயே…

– யசோதா கணேசநாயகம் –

வானத்து மின் மினிகள் வந்திறங்கிப் பூமிக்குப்
போர் தொடுத்துப் பிறந்தவளோ பொன்னான பெண்ணிவளோ..!
வட்ட முகத்தில் இரு கறுப்பு நிலாக் கண் அழகி..!
சிணுங்கற் சிரிப்பழகி சீர்வரிசைப் பல் அழகி…!

விண்ணகத்துத் தேவதையோ வித்தைக்கு
நாயகியோ…?
பெண்ணகத்தில் இல்லையென்றால் பேய்வீடாய்க் காட்சி தரும்
தந்திரமும் கற்றவளோ தத்தித் தாவும் மலர்க்கொடியோ?
கன்னல் மொழியில் என்ன தேன் கலந்து குழைத்தயோ…?
தேம்பாலாய் இனிக்குதடி தெவிட்டாமல் இருக்குதடி.!!

அள்ளி அணைத்தொரு அன்பு முத்தம் நான்
பகிர…
கள்ளி எனக்கொரு கணமேனும் தந்திடடி.!
பட்டுப் பாவாடையில் பவளமாய் 
ஜொலிப்பவளே
எட்டி அடிவைத்து என்னருகில் வந்திடடி..!
தொட்டுக் கை விரலால் தீண்டி விட்டுப் போறவளே உன் காலடியே என் சுவர்க்கம் காத்திருப்பதை அறியாயோ..?

– பிருந்தாராஐன்(ஜெனீவா) –

சட்டென மனம் அவனில்
நிலைகொத்திக் கரையலாம்.
அந்த ஒற்றைக் குறுஞ்செய்திக்காய்
காத்துக் கிடக்கலாம்.
சிறு புன்னகையை ஏந்த மனம்
அத்தனை பாடுபடலாம்.
தவிப்பு அழகாகலாம்.
தாபம் கூடலாம்.
முழுவதிலும் அவன் மட்டுமே நிறைய,
அந்த சின்னக் காதல் உன் தூய
இதயத்தை துளைத்து போடலாம்.
ராத்திரியில் லயித்திருப்பாய்.
பகல் பொழுதை வெறுத்திருப்பாய்.
விழிகளின் உரையாடலை
ஏங்கி செத்திருப்பாய்.
அத்தனையும் வாய்க்கையில்
வெட்கம் உன்னை வருடவும் கூடும்.

காதலை மொழிபெயர்க்காதீர்கள்
காதலுக்கு வயதெல்லை வகுக்காதீர்கள்
காதலை தன்பால் துளிர விடுங்கள்
காற்றைப் போல காதல் சுதந்திரமாக அலையட்டும் .

காதல் –
தூய்மையானது
அழகானது ..
ஆத்மார்த்தமான மெல்லிய ஜீவன் காதல்.
அதை அடைத்து வைத்து அனுபவிக்காதீர்கள்.
ஆங்காங்கே காதலின் வர்ணம் கொண்டு
சித்திரம் வரையுங்கள்.
காதலின் வாசம் கொண்டு கவிதை
நெய்யுங்கள் ..

காதலால் கசிந்து உருகி கனிந்து நெகிழ்ந்து
கரைந்து மறையுங்கள் !
வெற்று வாழ்க்கையில் ஒற்றை
முத்தம் போல
காதல் உன்னை போட்டுடைத்துச் சிரிக்கட்டும்.

சிலிர்த்துப் போ
அவனால் சிவந்து போ!!!

– அக்சயா பாஸ்கரமூர்த்தி –

கிடப்பில் கிடந்த
கிறுக்கல்கள் எல்லாமே
ஏதோ ஒரு அர்த்தமாய்
உன்னையும் என்னையும்
இணைத்துக்கொண்டு இருக்கிறது

புள்ளிகளின் வழியே
புகுந்துச் செல்லும்
கோலத்தின் வளைவுகள் போல
உன்னையும்
என்னையும்
இணைத்து
அழகாக்கிக்கொண்டு இருக்கிறது

புல்நுனி பனி போல
உன் வேர்களுக்கு
உயிருருகி கொண்டு இருக்கிறேன்

கர்வம் தெறிக்க
கண் சிமிட்டலையாவது
தந்துவிட்டு போ..
வரிகள் உனக்குள் இருக்கும்
ஆண்மையின் வெளிபாடு

வெள்ளை கருப்பு நிற
உலக உருண்டைகள்
நிலவின் கண்களின்
அங்கும் இங்கும் அலைவதாய் கேள்வி
கற்பனையின் விடைக் காண ஏற்பாடு

கணக்கு சொல்லும்
வளைவு நெளிவுகள்
உனக்கான வாய்பாடு

மூக்கும் முழியும் அழகாய்
செய்த பிரம்மனின் வேலைபாடு

ஈர்த்து கொண்டு
நிற்கும் காந்த விழிகள்
கண்களின் செயல்பாடு

அனுதினமும் உன்
கனவே எனக்கு சாப்பாடு

உன் பெயரை உளறுகிறேன்
உறக்கத்தில் உன் கூப்பாடு

என் பூமத்திய ரேகை
உன் மார்போடு கூடி கொண்டதாம்
அப்போது என்ன நிலைப்பாடு

உன் உதட்டால்
என் முதுகில்
ரேகை செய்கிறாய்
முத்ததின் கோட்பாடு

தினம் தினம்
உன் இம்சை நினைவுவோடு
பெரும்பாடு

இப்படி நினைவிலும் கனவிலும் உன் செய்கையின் பொருட்டு
என் செய்கையின்
முதல் காலநிலை மாறுபாடு

மாறுபாட்டின் நினைவில்

நிலா சுடுகிறது
சூரியன் குளிர்கிறது
கூட்டம் கசக்கிறது
தனிமை இனிக்கிறது
காற்று வருடிடும் தென்றல் தருகிறது
கவிதை மலரும் கொஞ்சி தவழ்கிறது

காற்றில் வீசி கைகள் பறக்க
காதல் பேசி உன்னை அழைக்க
இணைய வேண்டும் இளமை சிறக்க
முதுமையிலும் வேண்டும் இன்பம் திளைக்க

படபடவென பதைக்கிறேன்
தடதடவென அதிர்கிறேன்
சுடசுடவென கொதிக்கிறேன்
மணிக் கணக்கில் தான்
மெளனமாய் சிரிக்கிறேன்
அணிகளில் தான்
இலக்கணம் பயில்கிறேன்
மெழுகாய் உருகினேன்
உனக்காய் வருகிறேன்
உனக்கென என்னை தருகிறேன்

புத்தம் புதிய இடங்களில்
பதிக்கலாம் கால் தடம்

காற்றிலே மனம் கசிகிறதே
கற்பூரமாய் மணம் கரைகிறதே

கனவோடு நான்
கற்பனையில் தான்
காதல் செய்கிறேன்
உன்னை நான்

இப்படிக்கு
உன்னுடைய நான்

– G.மணி –

பார்க்கும் இடமெல்லாம்
பாவை நீயடி ;
தொலைந்தது நீயா?
இல்லை
தொலைத்தது நானா?
தெரியவில்லை
ஆயினும் ;
உனக்குள் நானும்
எனக்குள்  நீயும்
தொலைந்து போனோம்…..

விடுதலை கிடைத்தும்
வெளியேற விரும்பாத
உன் நினைவுகள்
என் உள்ளச் சிறையில்
ஆயுள் கைதியாக
அடைபட்டுக் கிடக்கின்றன…..

விழி சிந்தும் துளி நீரில்
உன் நினைவுகளைக்
கரைத்திட நினைக்கின்றேன்
ஆனாலும்;
என் கனவுகள் வழியே
மீண்டும் உளம் புகுகிறாய்
என் செய்வேன் நான்……

விழி மூட மனமில்லை
காரணம்;
விழித்திரையில் உந்தன் விம்பம்
கலைந்திடும் கனவுகளை விட
கலைத்திடும் கனவுகளுக்குத் தான்
வலி அதிகம் …..

இறைவா எனக்கொரு வரம் கொடு
என் கண்கள் காணும்
கடைசி விம்பம்
அவளாக இருக்கட்டும்.

– ஜெயசக்தி –


நெறியாளர் :

தவ சஜிதரன் அவர்கள் கவிதையை தனது முதன்மை அடையாளமாக வரித்துக்கொண்டவர். சிறுவயது முதல் எழுதி வருகிறார். தமிழ்க்கவிதையின் யாப்பு வடிவங்களில் மிகுந்த பரிச்சியமும் ஈடுபாடும் கொண்டவர். “பிசிறல் இல்லாமல் யாப்பைக் கையாளும் திறன் இவரிடம் இருக்கின்றது… இன்றைய இளம் கவிஞர் அநேகரிடமிருந்து இவரை வேறுபடுத்திக்காட்டும் ஒர் அம்சம் இது” என்கிறார் தவ சஜிதரனின் முதலாவது கவிதைத் தொகுப்பான “ஒளியின் மழலைகள்” எனும் நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான. “ஒளியின் மழலைகள்”   2006 ஆம் ஆண்டு வெளியானது.

மொழிபெயர்ப்பு, திரைப்பட ஆக்கம் ஆகியவை இவர் ஆர்வம் கொண்டுள்ள ஏனைய துறைகள். தவ சஜிதரன் எழுதி இயக்கிய “அகோரா – லண்டன் கதைகள்” ஒளியாவணத் தொடர், ஐபிசி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. 2005ம் ஆண்டு கொழும்பு சண்டே ஒப்சேவரில் ஊடகராக இணைந்த சஜிதரன், வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலான சர்வதேச ஊடகங்களுக்கும் பங்களித்திருக்கிறார். ஊடகராக சஜிதரன் நேர்கண்டுள்ளவர்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, பேராசிரியர் நோம் சோம்ஸ்கி முதலானவர்கள் அடக்கம்.

கவிதை போட்டி:

இக் கவிதை போட்டியின் சாரம் காதல் என்பதாலோ என்னவோ ஏராளமான கவிதைகளை சில தினங்களுக்குள்ளாகவே வந்தடைந்ததை நாம் அவதானித்தோம். சில கவிதைகள் போட்டிமுடிவுத்திகதியை தாண்டியும் எமக்கு கிடைத்தன. 14ம் திகதிக்குள் எமக்கு கிடைத்த அனைத்து கவிதைகளையும் அவரிடம் ஒப்படைத்தோம். திறமையான 10 கவிதையை மாத்திரமே தேர்ந்த்தெடுக்க முடியும் என்கிற அன்பான வேண்டுகோளுக்கு கட்டுப்பட்டு தவ சஜிதரன் அவர்கள், தன் நெருக்கடியான பணிச்சூழலுக்கு மத்தியிலும்  பொறுமையுடன் திறம்பட செயற்பட்டு எமக்கு இவ் அருமையான கவிதைகளை  அடையாளம் காண்பித்தார். அவற்றையே சிறந்த கவிதைகளாக உங்கள் முன் பிரசுரப்படுத்தியுள்ளோம். பத்தும் சிறந்த கவிதைகள் என்பதால் அவற்றை வரிசைப்படுத்தியோ அல்லது தரப்படுத்தியோ இங்கேதரவில்லை. அவை கிடைத்த கால அடிப்படையில் ஒன்றன் பின் ஒன்றாக தந்துள்ளோம்!

கவிதைகளை அனுப்பிய உங்களில் பலர் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதில் ஏமாற்றமடைவீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். எமது இந்த போட்டியின் ஆத்மார்த்தமான நோக்கம் உங்களுக்கு புரியும் என்று நாங்கள் நம்புகிறோம். தவ சஜிதரன் அவர்கள் சொல்வதை போலவே – காதலுக்கும் கவிதைக்கும் எப்போதும் கொண்டாட்ட மனநிலை அவசியம். அதைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்! – நீங்கள் தொடர்ந்து எழுதுவதையே நாம் விரும்புகிறோம். உங்கள் ஆற்றலும் ஆர்வமும் உங்களுக்கு நல்ல பல அனுபவங்களையும் பெருமைகளையும் தேடித்தர வேண்டும் என விரும்புகிறோம்.

குறித்த இந்தப் போட்டி காதலர்தின சிறப்பாக எமது டிஜிட்டல் ஊடக நிறுவனத்தால் முதன் முறையாக ஏற்பாடு செய்த கவிதைப் போட்டியாகும். இலங்கையர்க்கு மாத்திரமே இம்முறை இதை நாங்கள் செய்திருந்தோம். இனிவரும் காலங்களில் உலகெங்களிலும் இருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். 

பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.

Related Articles