இலங்கையில் சுற்றுலாத்துறையில் இடம்பிடிக்கப்போகும் புதிய அடையாளம் | நீருக்கடியிலான அருங்காட்சியகம் | Underwater Museum

காலி கோட்டையிலிருந்து கடலில் 800 மீட்டர் பயணம் செய்து 50 மீட்டர் ஆழத்திற்கு மூழ்கினால் ஒரு அருங்காட்சியகத்தை காணுக்கூடிய புது சிந்தனையை உருவாக்கியிருக்கின்றனர் இலங்கைக் கடற்படையினர்.

இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலி கடலில் உருவாக்கப்பட்டுள்ள வரலற்றுபூர்வமான நிகழ்வுதான் இது. கடந்த ஏப்ரல் 5ம் திகதி அன்று திறந்துவைக்கப்பட்ட, புதியமுறையிலும் மிகவும் பிரத்தியேகமாகவும் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியமானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் நிச்சயம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையின் மிகவும் அழகான  ஊர்களில் ஒன்றுதான் காலி. இதன் அழகிய சூழலை மேலும் அழகாக்கும் வண்ணம் நீருக்கடியிலான இந்த அருங்காட்சியகம் அமையப்பெற்றுள்ளது. கடல்நீருக்கடியில் இருக்கும் அழகைக் காணும் அனுபவத்தை பெற்றுத்தருவதே இந்த அருங்காட்சியத்தின் நோக்கமாகும். அருங்காட்சியத்தை மட்டுமல்லாது நீக்கருடியிலான உன்னதத்தையும் இதன் மூலம் நாம் நிச்சயம் உணர்ந்துகொள்ள முடியும்.

நீருக்கடியில் ஒரு பயணம்

இலங்கையர்களுக்கான இந்தப் புதிய அனுபவத்தை அனுவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் நீருக்கடியில் மூழ்க வேண்டும். அவ்வாறல்லாமல் இதைக்காண வேறு வழியே இல்லை.

இலங்கை கடற்படையின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் டைவர்ஸ் எனப்படும் நீச்சல்வீரர்களுல் ஒருவரான கடற்படை துணைத் தளபதி பியால் டி சில்வா நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை உத்தியோகப்பூர்வமாக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

துணைத் தளபதி பியால் டி சில்வாவும் மற்ற நீச்சல் வீரர்களும்.
பட உதவி: இலங்கை கடற்படை

கொங்கிறீட்களால் ஆன சிற்பங்கள் மற்றும் சிலைகள், பெரிய அளவிலான கட்டுமானத்தின் போது அகற்றப்பட்ட இரும்பு ஆகியவை கிரேன்களின் உதவியுடன் கடற்பரப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளன.

காலிக் கடலை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் சிமென்ட் மற்றும் கடல் சூழலைப் பாதிக்காத மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. காலப் போக்கில் இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றி பவளப்பாறைகளால் ஆன சுற்றுச்சூழல் அமைப்பு உருவாகி அதன் அழகை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டைவிங் அல்லது நீச்சல் கலையை அனுபவிக்கும் எவருக்கும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட ரயில் வண்டிகள் மற்றும் மீன்பிடி படகுகளை அருங்காட்சியகத்திற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது என்று இலங்கை கடற்படை விளக்கமளித்துள்ளது.

மெக்சிக்கோ நகரில் உள்ள கான்கன் நீருக்கடியிலான அருங்காட்சியகத்தின் தோற்றம். பட உதவி : trip.com

உலகிலேயே நீருக்கடியிலான அருங்காட்சியகம் குறித்த தகவல்கள் பிரபலமாக பேசப்பட்டது அமெரிக்காவின் மெக்சிக்கோ நகரில் தான். ஆம் மெக்சிக்கோவில் அமைந்துள்ள கான்கன் நீருக்கடியிலான அருங்காட்சியகம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். கான்கன் நீருக்கடியிலான அருங்காட்சியகத்தில் சிலைகள் மற்றும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான காட்சிகளை ரசிக்க கண்ணாடி படகுகள் அல்லது ஸ்கூபா டைவிங் மூலம் பயணிக்க வேண்டும். இந்த அருங்காட்சியகம் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கலைக்கு இடையிலான தொடர்புகளை நிரூபிக்கின்றது. மேலும் உலகின் மிகப்பெரிய செயற்கை பாறைகளையும் உருவாக்குகிறது.

எப்படி உருவானது இந்த திட்டம்

இலங்கையில் பழைமையான கப்பல்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பயன்படுத்திய குண்டுதுளைக்காத வாகனங்கள் நீர்கொழும்பு கடல் பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பலருக்கும் ஞாபகம் இருக்கும்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகே கடலுக்கடியில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க முடியும் என்று புதிய சிந்தனைக்கு கடற்படை வந்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் திட்டம் இன்று முழுமை பெற்றுள்ளது.

பாவனையிலிருந்து அப்புறப்படுத்திய ரயில் வண்டிகளையும் மீன் பிடி படகுகளையும் பயன்படுத்தி இதுபோன்ற ஒரு அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கும், டைவர்ஸ்களின் புகலிடமாக மாற்றுவதற்கும் முன்மொழிவை பிரதமர் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதமளவில் அந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.

தெற்கு கடற்படை முகாமில் உள்ள சிற்பிகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டள்ள சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். கடற்படை சிற்பிகளின் சிற்பங்களில் ரோமானிய வீரர்கள், அரச பீரங்கிகள், நீர் காலாட்படை, மிகப்பெரிய மரக்கன்றுகள் மற்றும் செக்குகள் ஆகியவை அடங்குகின்றது.

அதுமட்டுமல்லாது இலங்கையின் கலையை வெளிப்படுத்து வரலாற்று சுவரோவியம், கோர்வாரக்கல் மற்றும் இசுரமுனி காதல் ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளது. செதுக்கி முடிக்கப்பட்ட சிற்பங்கள் கிரேன்கள் மற்றும் ‘எயார் பலூன்கள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

என்ன பலன்?

இந்த திட்டத்தின் நோக்கங்களில் கடல் பவளப்பாறைகளின் மீளுருவாக்கம் மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாடு ஆகியவை அடங்குகின்றது.

இது கடல்சார்ந்த தொழிலில் உள்ளோருக்கும் சுற்றுலாத் துறையினருக்கும் கூடுதல் வருமானத்தை ஈட்டுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் உருவாகப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையில் புதிய அடையாளம்

கடலில் நீராட விரும்பும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு ரசிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் சுற்றுலாத்துறைக்கு புதிய வருமானத்தை ஈட்டித் தரக்கூடியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வரலாற்று சிறப்புமிக்க காலி நகரத்தின் சுற்றுலா தலங்களின் வரலாற்றில் புதிதாக சேர்க்கப்பட்ட நீருக்கடியிலான அருங்காட்சிய திட்டம், கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் நாட்டின் சுற்றுலாத் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கும். திருகோணமலை மற்றும் தங்கல்ல ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியில் அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

Related Articles