Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

2019ல் சுற்றுலாவிற்கு ஏற்ற நாடு என பெயர் பெற்றிருந்த இலங்கை முகம் கொடுக்கும் புதிய சவால் (ஆய்வுக்கட்டுரை)

சுற்றுலா வழிகாட்டியான லோன்லி பிளானட் இணையதளம் கடந்த ஆண்டு மேற்கொண்ட தரவரிசைப்படுத்தலில் 2019ல் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த நாடுகளின் வரிசையில் (Lonely Planet’s top 10 countries to travel to in 2019) முதன்மையான நாடு என்ற அந்தஸ்த்தை இலங்கைக்கு வழங்கியிருந்தது. புவியியல் அமைவிடம், காலநிலை, இயற்கை அழகு, கொட்டிக்கிடக்கும் வளம், மற்றும் விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை என பல்வேறு  காரணங்களால் இலங்கையானது உலகின் பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு பார்த்தே ஆகவேண்டிய ஒரு நாடாக அவர்களின் பட்டியலில் இடம்பிடித்து வந்துள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறையானது  2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சராசரியாக 178.36 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டிவந்துள்ளதென அண்மைய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2017 ஆம் முதல் 2018 ஆம் ஆண்டுகளில் மாதவாரியாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மொத்த பயணிகளின் எண்ணிக்கையும் அதன் வளர்ச்சி சதவீதமும் பின்வருமாறு :  

படஉதவி : www.sltda.lk

2019 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மொத்த பயணிகளின் எண்ணிக்கையும் அதன் முன்னைய ஆண்டில் அதேமாதத்தில் வருகை தந்த எண்ணிக்கையின் அடிப்படியிலான வளர்ச்சி சதவீதமும் பின்வருமாறு :  

படஉதவி : www.sltda.lk

இதன்படி , 2018 ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின்  (2,333,796) மொத்த எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டை விட (2,116,407) 10.3% அதிகமாகும்.

2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 244,328 ஆக இருந்தது. இது  சென்ற வருடம் மார்ச் மாதத்துடன் (233,382) ஒப்பிடுகையில் 4.7% வளர்ச்சியாகும்.

இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகைகளின் படி  கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கை சுற்றுலாத் துறையானது மிக சிறப்பான வளர்ச்சியினைக் கண்டுவந்துள்ளது என்பதனை உறுதிசெய்கின்றது.

படஉதவி : Sri lanka tourism development authority

இதனடிப்படையில், இலங்கையின் சுற்றுலாத்துறையை இலக்காகக் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது. அரசாங்கத்தின் “2017 -2020 சுற்றுலாத்துறை உபாயத்திட்ட அறிக்கையின்” பிரகாரம் எதிர்பார்க்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான உயர்மட்டக் குறிக்கோள்கள் பின்வருமாறு:

  • சுற்றுலாத்துறையை 2020 ஆம் ஆண்டில் 7 பில்லியன் அ.டொ. சம்பாத்திய இலக்குடன் இலங்கையின் தேறிய அந்நியசெலாவணியை ஈட்டும் #3 துறையாக மாறச்செய்தல். (2015 ஆம் ஆண்டில், சுற்றுலாத்துறையானது 2.98 பில்லியன் அ.டொ. என்ற வீதத்தில் அந்நியசெலாவணியை  சம்பாதித்த #3 துறையாக இருந்தது.)
  • 600,000 இலங்கையர்கள் தொழில்வாய்ப்புகளை  பெறுமளவுக்கு ஆற்றல் வாய்ந்ததாக சுற்றுலாவையும் துணைத்தொழில்களையும் மாறச்செய்தல். ஊழியர்படையில் 10% வீதமான பெண்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குதல். (2015 ஆம் ஆண்டில், சுற்றுலா துறையில் 319,436 ஆட்கள் வேலைக்கமர்த்தப்பட்டனர். )
  • ஒரு சுற்றுலாப்பயணிக்குரிய நாளாந்த செலவினை $210 ஆக அதிகரித்தல். ( 2015 ஆம் ஆண்டில், நாளாந்த செலவு 164 அ.டொ. என்ற அளவில் காணப்பட்டது. )

சுற்றுலாத்துறைக்கு நேர்ந்த அவலம்

21/04/2019 அன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பின் பின்னர் நடந்த அசம்பாவிதங்களில்  250க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெருமளவிலான சேதங்கள் பதிவாகி இருந்தன. கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் ஏற்பட்ட  தற்கொலை குண்டு தாக்குதல்களில் உள்நாட்டு மக்களுடன் சுற்றுலா பயணிகளும் அசெளகரியமான நிலைக்கு தள்ளப்பட்டனர். வெளிநாட்டவர்களில் 42 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயத்துக்கு உள்ளாகிய இத் தற்கொலைத் தாக்குதல்களின் பின்  இலங்கையின் சுற்றுலாத் துறை திடீர் சரிவினை காணத்துவங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான விடுதிகளின் முற்பதிவுகள், தற்போது 70% பதிவுகள் இரத்துசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் கிஷு கோமஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.  

 படஉதவி : newstatesman.com

விமானப்பதிவுகளை அறிக்கையிடும் ForwardKeys இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

பதிவு செய்யப்பட்டிருந்த விமானச்சீட்டுகளில் 86.2% இரத்துசெய்யப்பட்டுள்ள அதேவேளை புதிய விமானச்சீட்டு பதிவுகள் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும்,  மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 2.6% முன்னிலையில் இருந்த ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாத முன்பதிவுகள் ஏப்ரல் 23ம் திகதிக்கு பின்னர் 0.3% மாக மாறியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பிற்கு முன்னரான ஆய்வுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறையானது  2019ஆம் (ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20வரை) ஆண்டிற்கான விமானசீட்டுபதிவுகளில் 3.4% வளர்ச்சியுடன் ஆரோக்கியம்மிக்க முன்னேற்றத்தை கண்டுவந்தது  தெளிவாகின்றது.

Trading Economics இன் ஆய்வுகள்

உலக நாடுகளின் பொருளாதார நிலைகளை கணக்கிட்டு அறியத்தரும் Trading Economics ன் உலகளாவிய நுண் மாதிரிகள் மற்றும் ஆய்வுகள் மூலம் கிடைத்த  அறிக்கையின்படி இலங்கையின் சுற்றுலாத்துறை வருவாயானது 2020 ஆம் ஆண்டில் 520.00 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்குமென எதிர்பாத்திருந்த நிலையில் நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழலானது இவ்வருவாயில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

சுற்றுலாத்துறை அதிகார சபை இவ்வாரம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதன் தலைவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இந்த கட்டுரைக்கு ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறது.

படஉதவி : dailynews.lk

“ஒரு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அந்நாடு மீண்டுவர சராசரியாக 13 மாத காலம் வரை எடுத்துள்ளது. இலங்கையில் இதேபோல  மீண்டுமொரு அசம்பாவிதம் நேராது விட்டால் 13 மாதங்களுக்குள்ளாகவே சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பிவிடும் வாய்ப்பு உள்ளது.”

“நாளொன்றிற்கு சராசரியாக 4600 சுற்றுலப்பயணிகள் வருகைதந்த இலங்கையில் தாக்குதலுக்கு பின்னர் இச்சராசரி அளவு குறைந்திருப்பினும்  இப்போதும் தினமும் 1700 பேர் வரையில் வந்தவண்ணமே உள்ளனர்.”

“2018ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் பயணிகளுடன் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகப் பெற்ற இலங்கை சுற்றுலாத் துறை 2019ல் பயணிகளின் வருகையில் 30% சதவீதத்தால் குறைந்து 3.0 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயகப் பெறும் என நம்பலாம்.”

“இதுவரை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அமெரிக்கா, கனடா,பாரிஸ், ஜெர்மனி, லண்டன், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் 139 தாக்குதல்களை நடத்தி உள்ளது. 6400 பேர் வரையில் இறந்துள்ளனர். இத்தகைய தாக்குதல்களில் இருந்து அந்நாடுகள் மீண்டுவந்துள்ளன. அப்படியான நாடுகளின் சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் எங்களுக்கு சிறந்த படிப்பினைகளாக இருக்கும்”

வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாது இருப்பின், இலங்கையின் சுற்றுலாத்துறையை ஒரு வருடத்திற்குள்ளாகவே மீட்டெடுக்க முடியும் என்வும் நம்பிக்கை தெரிவித்தனர்.

அபிமானம் குறையவில்லை

வெடிகுண்டு தாக்குதலில் பல வெளிநாட்டவர்களும் உயிரிழந்ததையடுத்து அச்சமயத்தில் இலங்கையில் நிலைகொண்டிருந்த சுற்றுலா பயணிகளில் பலர் அச்சத்தின் காரணமாக மீதமிருந்த தங்களது பயண நாட்களை இரத்து செய்து உடனடியாக வெளியேறத் தொடங்கினர். இத்திடீர் வெளியேற்றம் விமானநிலையத்தில் பயணிகளுக்கு மாத்திரமின்றி விமான நிலைய அதிகாரிகளுக்கும் பெரும் அசௌகரிய நிலையை ஏற்படுத்தியது. நீண்ட வரிசைகளில் காத்திருந்த பயணிகள் பலமணிநேர தாமதத்தின் பின்னர் தமது சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்ல நேரிட்டது. இந்நிலையிலும் கூட இலங்கையின் மீது அபிமானமும் பெரும் அன்பும் கொண்டிருந்த பல வெளிநாட்டவர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பகிர்ந்துகொண்டனர்: 

படஉதவி : twitter.com

 

படஉதவி : twitter.com

 

படஉதவி : twitter.com

 

படஉதவி : facebook.com

 

படஉதவி : facebook.com

 

படஉதவி : facebook.com

 

படஉதவி : facebook.com

“இலங்கை மக்கள் மிகவும் அன்பானவர்கள், இந்த நாடு மிகவும் ரம்மியமான நாடு. மிருகத்தனமான சில முட்டாள் மனிதர்களின் செயற்பாடு இலங்கை மீது எமக்கிருக்கும் அபிமானத்தை எந்த வகையிலும் குறைத்துவிடாது” என பலரும் தமது கருத்துக்களை வெளியிட்ட வண்ணமுள்ளனர்.

தகவல் மூலம் : 
lonelyplanet.com
dailynews.lk
ft.lk
sltda.lk - Srilanka Tourism Strategic plan 2017-2020
ForwardKeys
Trading Economics
முகப்பு படஉதவி : chambertourism.lk

Related Articles