வான்தொடும் கொழும்பு!

உலகின் வளர்ந்து வரும் நாடுகளெல்லாம் தங்கள் நாட்டின் உட்கட்டமைப்பை நவீனத்துவப்படுத்திக் கொள்வது வழக்கம் தான். அந்த அந்தவகையில் ஆசியாவின் அதிசயம் என்றழைக்கப்படும் இலங்கையில், அதன் தலைநகர் கொழும்பிலுள்ள 5 உயரமான நவீன வசதிகள் கொண்ட கட்டிடங்கள் பற்றி அறிவோமா?

உலக வர்த்தக மையம் (கொழும்பு) | World Trade Center (Colombo)

கொழும்பு நகர் என்றாலே அதன் அடையாளமாகத் திகழ்வது இந்த  உலக வர்த்தக மையம் தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் உயரமான கட்டிடமாகக் கருதப்பட்ட இந்த இரட்டைக் கோபுரம், 499 அடி கொண்டது. சமீபத்தில் கொழும்பு நகரில் உயரமான கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன்னர் இந்தக் கட்டிடமானது உருவாக்கப்பட்ட காலத்தில் தெற்கு ஆசியாவின் மூன்றாவது உயரமான கட்டிடமாகத் திகழ்ந்து வந்தது.

உலக வர்த்தக மையம்
படஉதவி : linkedin.com

1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அம்மையார் சந்திரிக்கா பண்டாரநாயக குமாரத்துங்க அவர்களினால் திறந்துவைக்கபட்ட இக் கட்டிடம், இரண்டு சமனான கோபுரங்களை கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு கோபுரமும் 40 அடுக்கு மாடிகளைக்  கொண்டு காணப்படுகின்றது. இதனுள் வார்த்தக அலுவலகங்கள், வானொலி ஒளிபரப்பு சேவைக்கூடங்கள் போன்றவை காணப்படுகின்றன. 

கொழும்பு அல்டயர் ரெசிடன்ஸ் | Altair Residence Colombo 

கொழும்பு அல்டயர் ரெசிடன்ஸ்
படஉதவி : altair.lk

இந்த Altair கட்டிடமானது இலங்கையில் இதுவரை கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. 240 மீட்டர் உயரமுள்ள இக்கட்டிடத்தின் இரண்டு கோபுரங்களில் , ஒரு கோபுரத்தை செங்குத்தாகவும் மற்றொன்றை சாய்வான நிலையிலும் வடிவமைத்துள்ளனர்.  செங்குத்து கோபுரத்தில் 68 மாடிகளும் சாய்வான கோபுரத்தில் 63 மாடிகளும் காணப்படும் இக்கட்டிடத்தில் 400 அதி சொகுசு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. 

கிராண்ட் ஹையாட் கொழும்பு | Grand Hyatt Colombo

கிராண்ட் ஹையாட் கொழும்பு
படஉதவி :maga.lk

உலகப்பிரசித்திப் பெற்ற ஹையாட் குழுமத்தால் இலங்கையில் நிறுவப்பட்டுள்ள முதல் ஹையாட் நிறுவன கட்டிடம் இதுவாகும்.  கொழும்பின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான இது 47 மாடிகளைக்கொண்டது. 475 விருந்தினர் அறைகள் மற்றும் 84 apartmentகளையும் தன்னுள் கொண்டுள்ளது. 751 அடி உயரத்தில் கட்ட்டப்பட்டுள்ள இது கொழும்பு 3 கொள்ளுப்பிட்டியில் தன் இருப்பிடத்தைக் கொண்டுள்ளது. 

ஷங்ரி-லா | Shangri-La

ஷங்க்ரி-லா கொழும்பு
படஉதவி : booking.com

இலங்கை காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள இந்த நட்சத்திர ஹோட்டலானது உலகெங்கிலுமுள்ள ஷங்க்ரி-லா குழும சங்கிலியின் 101 வது ஹோட்டலாகும். ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள Shangri-La Golf Resort & Spa விற்கு பிறகு இலங்கையில் உருவான இரெண்டாவது Shangri-La பிராண்ட் இதுவாகும். 2017 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி  திறக்கப்பட்ட இது, 500 அறைகள் மற்றும் 2,000 பேர் அமரக்கூடிய கேட்போர் கூட அறையும் கொண்டுள்ளது. இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற தீவிரவாத குண்டு தாக்குதலில் இந்த ஹோட்டலும் பாதிப்புக்குள்ளாகியமை அனைவரது கவனத்திற்கும் உள்ளானது. 

தாமரைக் கோபுரம் | Lotus Tower 

தாமரைக் கோபுரம்
படஉதவி : theepochtimes.com

சுற்றுலாவிற்குப் பெயர்போன இலங்கைத் தீவானது தனக்கேயுரிய பல தனித்துவ அம்சங்களைக் கொண்டு அனைவரையும் ஈர்த்து வருகின்றது. அதற்கு மேலும் அழகு சேர்க்கும் அம்சமாக இலங்கையில் திறந்துவைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம், தெற்காசியாவிலேயே உயரமான கோபுரம் என பெயர் பெற்றுள்ளது. 1,168 ஆடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கோபுரத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். 2012ஆம் ஆண்டு இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 7 வருடங்களில் இதனை கட்டிமுடித்துள்ளனர்.  30,600 சதுரஅடி கொண்ட நிலப்பரப்பில் 200க்கும் மேற்பட்ட  வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

இக்கட்டிடத்தின் சிறப்பம்சமாக, சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உணவகமொன்றிலிருந்து, 4 நிமிடங்களில் கொழும்பு நகர் முழுவதையும் காணக் கூடிய வகையில் வடிவமைத்துள்ளார்கள். வர்த்தக நிலையங்கள்,கேட்போர் கூடம், வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைக்கூடங்கள் போன்றவை இதனுள் செயற்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் இலங்கையில் வேகமான மின்தூக்கிகள் பொருத்தப்பட்டுள்ள முதல் கட்டிடம் இத்தாமரைக் கோபுரமாகும். இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இது உலகின் உயரமான கோபுரங்களின் வரிசையில் 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

முகப்புப் படம் : unsplash.com

Related Articles