சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலை குறித்த ஈரான்!

“எழுதாமல் இருப்பதென்பது இயக்கமின்மை.இயக்கமின்மை என்பது மரணத்துக்கு ஒப்பானது”

இந்த  வாசகங்களுக்கு சொந்தக்காரர்தான் சல்மான் ருஷ்ட்டி! 1988ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நான்காவது நாவலான “The Satanic Verses ” அதாவது  “சாத்தானின் வசனங்கள்”  என்கிற  நூலுக்காக ஏராளமான கொலை மிரட்டல்களுக்கு உள்ளாகி, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவர்.                       

சில  தினங்களுக்குமுன் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த சல்மான் ருஷ்டி மீதான கத்திக் குத்து தாக்குதல் என்பது “அவர் அப்படி என்னதான் எழுதினார்? அவரது தலைக்கு ஏன் இவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டது? அவரது எழுத்துக்களுக்காக இஸ்லாமிய இயக்கங்கள் ஏன் அவ்வளவு  கொதித்தெழுந்தன போன்ற கேள்விகளை மீட்டிப்பார்க்க வைத்துள்ளதென்றே கூறவேண்டும். நாவல்களுக்கு வழங்கப்படும் “விட்பிரெட்” பரிசைப் பெற்ற சர்ட்டானிக் வெர்சஸ் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி பல போராட்டங்களுக்கு வித்திட்டது.

ருஷ்டிக்கு எதிராக நடந்த கலவரங்களில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். ருஷ்டி ஓர் பிரித்தானிய நாவலாசிரியர் என்பதால் ஈரான்  தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டதோடு (இதனால் பெரும்பாலான நாடுகள் தெஹ்ரானில் இருந்த தமது  தூதர்களைத் திரும்பப் பெற்றன).  ஈரானின்   மதத் தலைவரான அயத்துல்லா  கொமேனி, ருஷ்டிக்கு எதிரான பத்வாவை பிறப்பித்ததுடன் ருஷ்டியை கொல்பவருக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார் . ருஷ்டியின் புத்தகங்களை  விற்பனை செய்தவர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும்கூட  கொலை மிரட்டல்கள் விடப்பட்டன.

 சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகங்கள்: புகைப்பட உதவி: Magicpin.com

1991ஆம் ஆண்டு  ருஷ்டியின் புத்தகத்தை ஜப்பானிய  மொழியில் மொழிபெயர்த்த  ஹிடோஷி என்பவர் டோக்கியோவில் அவர் பேராசிரியராக பணியாற்றிய பல்கலைக்கழக வளாகத்திலேயே வைத்து பலமுறை கத்தியால் குத்தப்பட்டு சாகடிக்கப்பட்டார். (கொலையாளியை கண்டுபிடிக்கும்படி இறந்தவரின் மனைவி எவ்வளவோ போராடியும், இஸ்லாமிய நாடுகளுடனான உறவில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால் அந்தக் கொலை வழக்கு அப்படியே மூடிவைக்கப்பட்டது என்பதுதான் சோகம் ) இதேயாண்டு,இத்தாலிய மொழிபெயர்ப்பாளரான எட்டோர் கேப்ரியோலோ, மிலனில் உள்ள அவரது குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டார். (தற்போது ருஷ்டியும் கத்தியால் குத்தப்பட்டே கொலைசெய்விக்க முயற்சிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது ) 1993 இல்  அந்நாவலின் முக்கிய பகுதிகளை  துருக்கிய மொழியில் மொழிபெயர்த்து உள்ளூர் நாளிதழ் ஒன்றில் வெளியிட்ட  78 வயதான நாவலாசிரியர் ஆசிஸ் நெஸின் தாக்குதலுக்குள்ளானார்.

அவர் தங்கிருந்த ஹோட்டலை பயங்கரவாதிகள் தீவைத்துக் கொளுத்தினர்.  தீயணைப்புத் துறையினர் அவரை ஏணி வழியே பத்திரமாக மீட்டபோதிலும், அந்த ஹோட்டலில் தங்கியிருந்த மதச்சார்பின்மையை வலியுறுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த அறிவுஜீவிகள் 37 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.  இந்த வழக்கில் 33 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1993 அக்டோபரில் நார்வே மொழியில் அந்நூலை வெளியிட்ட பதிப்பாளர் வில்லியம் நியாகார்ட், ஓஸ்லோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார்.

சாத்தானிய வசனங்களில் உள்ள முக்கிய கருப்பொருள்கள் மதம், நன்மை மற்றும் தீமை, குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவையாகும் .கதையின்படி , கதாநாயகர்களான ஜிப்ரீல் ஃபரிஷ்தா மற்றும் சலாடின் சாம்சா இருவரும் இந்திய இஸ்லாமிய  பின்னணியில் உள்ள நடிகர்கள். ஃபரிஷ்தா ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டார், அவர் இந்து தெய்வங்களாக நடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் (இந்த கதாபாத்திரம் ஓரளவு இந்திய திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப் பச்சன் மற்றும் என். டி. ராமாராவ் ஆகியோரை அடிப்படையாகக் கொண்டது). சாம்சா தனது இந்திய அடையாளத்தை உடைத்து, இங்கிலாந்தில் வானொலிக் கலைஞராகப் பணிபுரியும் புலம்பெயர்ந்தவர். இந்த இருவரும் பயணப்படும் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறுவதால் ஏற்படும் குளறுபடிகளால்  கதை விரிகிறது.  

தாக்குதல் இடம் பெற்ற இடத்தில்: புகைப்பட உதவி: Bloomberg.com

சாத்தானின் வசனங்கள் என்ற தலைப்பு, குரானில் இருந்து முகமது நபியால் நீக்கப்பட்ட இரண்டு வசனங்களைக் குறிப்பிடுவதாகவும், அவ்விரு வசனங்களும் பிசாசினால் தரப்பட்டவை என்று முகமது நபி  நம்பியதாகவும் இஸ்லாமியர்களால் கருதப்படுவதால் ருஷ்டியின் நாவல் தலைப்பு இஸ்லாமிய சமூகத்திடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, நாவலில் வரும் பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களுக்கு முகமது நபியின் மனைவிகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளமையானது  காலம்காலமாக பேணிப்பாதுகாக்கப்படும் புனித பிம்பங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட களங்கமாக, புனிதப்பயணம் உற்பட பல மத நம்பிக்கைகள் நையாண்டி செய்யப்பட்டுள்ளதாகவும்  இஸ்லாமியர்களால் பார்க்கப்பட்டது. எனினும் ஒருகட்டத்துக்குமேல் ருஷ்டி தன்னால் இஸ்லாமியர்களது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாக கூறியும் இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னும் காழ்ப்புணர்வு மாறாமல் அவர்மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதலானது மனிதாபிமானமற்றது என்றே கூறவேண்டியுள்ளது.                                                   

1947-06-19 அன்று மும்பையில்  நெகின் பட், ஆனிஸ் அகமது ருஷ்டி தம்பதிக்குப்  பிறந்த சல்மான் ருஷ்ட்டி அவரது பதினான்காவது வயதிலேயே பிரித்தானியாவுக்கு கல்வி கற்பதற்காக அனுப்பப்பட்டு பின்னாளில் பிரிட்டன் குடியுரிமையினையும் பெற்றுக்கொண்டவர். இதுவரை பதினான்கு நாவல்களை எழுதியிருக்கும் அவருக்கு அவர் எழுதிய இரண்டாவது நாவலான  (1981) மிட்நைட்ஸ் சில்ட்ரனுக்காக (Midnight  Children) புக்கர் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

“மதங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல. மதங்கள் மீது திணிக்கப்படும் புனிதம் அகற்றப்பட வேண்டும். மதங்கள் விமர்சிக்கப்பட வேண்டும். கேலி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றில் இருக்கும் சில மூட நம்பிக்கைகள் ஒழியும்”  எனக்கூறிய ருஷ்ட்டி 1968 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் ,அதிலும் இஸ்லாமிய பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது  கருத்திற்கொள்ளப்படவேண்டியவொன்று.

 

Related Articles