ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை வரைவதற்கு முடிவுசெய்தது ஏன்?

ஒரு நாடு துயரத்தினால் பாதிக்கப்படும் போது, மக்கள் தங்களது பயத்தை கோபமாகவும், துயரமாகவும் மாற்றிக்கொள்வது வழமையானது. இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களில் 258 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த போதும் நிலைமை இவ்வாறே காணப்பட்டதை கிராபிக் டிசைனர் மற்றும் இலஸ்ரேட்டர் (Graphic designer and illustrator) தாஹிரா ரிஃபாத் உணர்ந்துகொண்டார்.

தாக்குதல்களின் பின்னர், ரிஃபாத் சொல்லொணாத்துயரை அனுபவித்த போதும், சமூகவலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களை பார்வையிட்ட போது இந்த உணர்வு பிரதிபலிக்கத் தவறியதை அவர் உணர்ந்தார்.

“நான் ட்விட்டரை பார்த்த போது, அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டார்கள்” என அவர் தெரிவிக்கின்றார். “நான் காலை 7 மணி வரை தூங்காமல் விழித்திருந்தேன். இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறான அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். மற்றவர்களும் இவ்வாறான உணர்ச்சிக்கு ஆட்பட்டிருப்பார்கள் என நான் நம்புகின்றேன். ஆனால் அதனை சமூகவலைத்தளங்களில் என்னால் கண்டுகொள்ள இயலவில்லை.” தேசிய பாதுகாப்பின் தோல்வி குறித்தும், உலகளாவிய பயங்கரவாதம் தொடர்பிலும், சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையின்மை அதிகரிக்கத் தொடங்கியது குறித்தும் இந்த தாக்குதலிற்கு பின்னர் இணையத்தில் விவாதங்கள் ஆரம்பித்துள்ளன. இவ்வாறான செய்திகளே ரிஃபாத்தின் சமூகவலைத்தள பக்கங்களை நிரப்பியிருந்தன. இந்த சந்தடிகளுக்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அவர் எண்ணினார். இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு தாமே அஞ்சலி செலுத்த முடிவெடுத்தார். இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களை வரைய வேண்டும் என அவர் முடிவு செய்தார்.

“அவர்களை ஏதாவது ஒருவகையில் முன்னிலைப்படுத்த வேண்டும் என நான் உணர்ந்தேன்” என அவர் குறிப்பிடுகின்றார். “நியூசிலாந்தில் தாக்குதல்கள் இடம்பெற்ற போது சூத்திரதாரிகளை முன்னிலைப்படுத்தி அதிக கவனத்தை வழங்க அந்நாட்டு பிரதமர் மறுத்துவிட்டார். ஆனால் இலங்கையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற போது அதனை மட்டும் தான் நாங்கள் செய்தோம். குண்டுதாரிகள் யார் என்ற தகவல்கள் நிறைந்த கட்டுரைகள் தான் அனைவராலும் பகிரப்பட்டன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் குறைந்தளவே பகிரப்பட்டன. உயிரிழந்தவர்கள் வெறும் எண்ணிக்கையாகவே குறிப்பிடப்பட்டிருந்தார்கள்.

எனவே அவர் முதலாவது உருவப்படத்தை வரைய ஆரம்பித்தார்.

40 வயதான ரமேஷ் ராஜு, கட்டிட ஒப்பந்தவல்லுனர் என்பதுடன் இரண்டு குழந்தைகளின் தந்தை. மட்டக்களப்பு ஸியோன் தேவாலயத்திற்குள் குண்டுதாரி நுழைவதை தடுத்து அன்றைய தினம் தேவாலயத்திற்குள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அவரது குடும்பத்தினர் உட்பட பலரின் உயிரை காப்பாற்றி தனது உயிரை இழந்தவர். ராஜு இல்லாவிட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.

மனைவி மற்றும் குழந்தைகள் இருவர் உட்பட பலரின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த ரமேஷ் ராஜு.

“நான் ஒரு கட்டுரையில் ரமேஷ் ராஜு குறித்து எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். ஏற்கனவே அவர் குறித்த தேவையான தகவல்கள் இருந்ததனால் நான் அவரின் உருவப்படத்துடன் ஆரம்பித்தேன்” என ரிஃபாத் குறிப்பிடுகின்றார். “நான் அவரின் படத்தை பகிர்ந்த பின்னர் இன்னும் பலர் முன்வந்தார்கள். உதாரணமாக, சினமன் கிராண்ட் ஹோட்டலின் முகாமைத்துவம் அன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களது பணியாளர்கள் குறித்த விபரங்களை வழங்கியுள்ளது. அடுத்து நான் அவர்களை வரையவுள்ளேன்.”

ரிஃபாத்தின் இந்த முயற்சி பேஸ்புக் மூலம் ஆரம்பமாகியது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை அவர் பேஸ்புக் மூலம் பெற்றுக் கொள்கின்றார். முடியுமான சந்தர்ப்பங்களில் அவர் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றார்.

இது அதிக நேரம் எடுக்கும் ஒரு வேலை, ஆனால் இதனை அவர் மாத்திரம் தனியாகச் செய்ய வேண்டியதில்லை. அவருடைய நண்பர்கள் சிலர் தகவல்களை பெறுவதுடன், அதனை உறுதிசெய்வதற்கு அவருக்கு உதவுகின்றார்கள். அதன் பின்னர் மாதிரி புகைப்படம் தயாரானவுடன், அவர் தனது கணனியில் வரைய ஆரம்பிக்கின்றார்.

துலொத் பிரேமினா அந்தோனி கந்தானை, டி மசினொட் கல்லூரி மாணவன்.

துலொத் பிரேமினா அந்தோனி கந்தானை, டி மசினொட் கல்லூரி மாணவன். துடிதுடிப்பான 7 வயது பையனான அவன் தனது குடும்பத்தை நேசித்தான். அவனுக்கு முன்னால் ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்திருந்தது. அவன் உயிரிழந்த அன்று நீர்கொழும்பு தேவாயலத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தான்.

சாந்தா மாயதுன்ன, விருது பெற்ற தொலைக்காட்சி சமையல்கலை நிபுணர்.

சாந்தா மாயதுன்ன, விருது பெற்ற தொலைக்காட்சி சமையல்கலை நிபுணர். பார்வையாளர்களினால் பெரிதும் விரும்பப்பட்ட அவர், விரைவான மற்றும் இலகுவான சமையல் குறிப்புக்களுக்கு பெயர் பெற்றவர். ஷங்ரி லா ஹோட்டலில் தனது பிரியாமானவர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த போது உயிரிழந்தார்.

ரிஃபாத் தனது வரைபடங்களுடன் உயிரிழந்தவர்கள் குறித்த குறிப்பையும் வழங்குகின்றார். ஆனாலும் தனது வரைபடங்கள் மூலமாக அவர்கள் யார் என்ற உணர்வை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. அவர்களின் ஆடைகள் குறித்த விபரங்கள், சில சமயங்களில் வரைபடங்களின் பின்னணி ஆகியவற்றுக்கு அதிக கவனம் செலுத்துவதன் மூலம் படத்தில் உள்ளவர்களின் தனித்தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டிய மனிதர்களாகவும், அவர்களின் இழப்பு எவ்வளவு துயரமானது என்பதையும் பார்ப்பவர்களினால் புரிந்துகொள்ள முடிகின்றது.

“நான் வரைபவர்களை எனக்குத் தெரியும் என்பது போல நான் உணர்கின்றேன்.” என அவர் குறிப்பிடுகின்றார். “நான் முதலாவது படத்தை பாதியளவில் வரைந்து கொண்டிருந்தபோது, அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மை என்னை புரட்டிப்போட்டது. அது என்னை மிகவும் பாதித்தது. ஆனால் அந்த துயரம் தான் வரைபடங்களை முழுவதும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்கள் சவப்பெட்டியில் கிடைக்கும் காட்சி அவர்களின் அன்பானவர்கள் காணும் இறுதிக் காட்சியாக இருக்கக்கூடாது என நான் விரும்புகின்றேன்.”

உயிரிழந்த 258 பேரின் படங்களை வரைய முற்பட்டிருக்கும் ரிஃபாத் கடந்த வாரம் வரையில் 8 வரைபடங்களை நிறைவு செய்திருக்கின்றார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், அதனை அவர்கள் ரிஃபாத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அவரை மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புகொள்ளலாம். [email protected]

Related Articles