Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மின் வணிகத்தின் முக்கிய விதிகள்

கடந்த சில வருடங்களில் மிகப் பிரசித்தம் பெற்ற வணிக முறை எதுவெனக்கேட்டால் யாராயினும் தயங்காமல் கைகாட்டக்கூடிய வணிக முறை, மின் வணிகமாகும் (E-Business) ஆடம்பர பொருட்களிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிடைக்கக் கூடியதாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்துகொண்டு நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் எதையுமே கொண்டுசேர்க்கக்கூடிய அளவுக்கு மின் வணிகத்தின் வளர்ச்சி உள்ளது.

வாடிக்கையாளர்களின் நேரமின்மை என்கிற ஒரு கருவை மூலதனமாக கொண்டு இயங்கும் இவ்வகை வணிகங்கள் தனித்து மனிதர்களின் தேவைகளுக்கான பொருட்களை மாத்திரம் வழங்குவதில்லை. அவர்களது தேவைகளையும், விருப்பங்களையும் உருவாக்கக்கூடிய பொருட்கள், சேவைகளை வழங்குவதிலும் மின் வணிகம் வெற்றி காண்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இன்றைய நிலையில், இலத்திரனியல் வணிகச் சந்தையானது தன்னகத்தே எவ்விதமான தடைகளையும் கொண்டிராத முற்றிலும் ஓர் திறந்த சந்தையாகவே (Open Market) இருக்கிறது. இந்த சந்தையில் வாடிக்கையாளர்களை தம்வசப்படுத்திக்கொள்ளும் சந்தைப்படுத்தல் திறன் கொண்ட எவருமே ராஜாதான். இவ்வாறு தொழிற்படும் மின் வணிகத்தில் ஒரு தனிநபராக அல்லது நிறுவனமாக வெற்றிகொள்ள அடிப்படையாக உள்ள விதிகள் தொடர்பிலும் அறிந்திருக்கவேண்டியது அவசியமல்லவா!

கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்குபவர்கள் அல்ல

மின் வணிகத்தினை பொறுத்தவரையில், கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்கவேண்டிய அவசியமில்லை. சந்தை வாய்ப்பைக் கொண்டிராத பொருட்களை அல்லது சந்தை வாய்ப்பை கொண்ட பொருட்களை கூட எளிமையாக கொள்வனவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையையே மின் வணிகச் சந்தை செய்கிறது.

மின் வணிகம் என்பது, உங்களது இணையத்தளத்துக்கான பார்வையாளர்களை அதிகபப்டுத்துவதோ அல்லது அது சார்ந்த விளம்பரங்கள் மூலம் இணையத்தின் பார்வையிடலை (Website Traffic) அதிகப்படுத்தி அதன் நிலையினை உயர்த்துவதோ அல்ல. (dacifinland.org)

பாரம்பரிய வணிக முறையில் கொள்வனவாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாகவிருப்பது விநியோக சங்கிலியாகும் (Supply Chain). அதாவது, உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் வரையில் உற்பத்திப் பொருட்கள் மீது சேர்க்கப்படும் மேலதிக செலவுகள் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை அதிகபடுத்துவதே ஆகும். ஆனால், இணைய சந்தையில் உற்பத்தியாளர் கூட விற்பனையாளராக இருக்கலாம் அல்லது வாடிக்கையாளரை நேரடியாக சந்தித்துக்கொள்ளக்கூடிய மின் சந்தையில் உற்பத்தியாளரே விற்பனையாளராக இருக்கலாம். இதன் விளைவாக, செலவீனங்கள் குறைக்கப்பட்டு சந்தை வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகிறது. இதுவே, கொள்வனவாளர்களையும் உருவாக்கும். எனவே, மின் வணிகத்தில் தனியே கொள்வனவாளர்கள் மாத்திரமே சந்தையை உருவாக்குபவர்களாக இருப்பதில்லை. மாறாக, முதலீட்டுக்கு வருமான மதிப்பீட்டை கொண்ட எந்தவொரு பொருட்கள் , சேவைகளும் கூட வணிக வாய்ப்பை உருவாக்குவதாக அமையும்.

இணையப் பயன்பாட்டை விடவும், மின் வணிகத்தின் செயல்பாடுகளை கருத்தில் கொள்ளுதல்

மின் வணிகம் என்பது, உங்களது இணையத்தளத்துக்கான பார்வையாளர்களை அதிகபப்டுத்துவதோ அல்லது அது சார்ந்த விளம்பரங்கள் மூலம் இணையத்தின் பார்வையிடலை (Website Traffic) அதிகப்படுத்தி அதன் நிலையினை உயர்த்துவதோ அல்ல. மாறாக, உங்கள் இணையத்தளத்தில் பார்வையாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் செலவிடும் நேரத்துக்கேற்ப அவர்கள் வர்த்தக பரிமாற்றத்தில் ஈடுபட வைப்பதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை மீளவும் இணையத்தளத்துக்கு வருகைதர வைத்தல் அல்லது அவர்களை தக்கவைத்துக்கொள்ளுவதுமே ஆகும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாரம்பரிய வணிகமுறையிலும் பார்க்க, இணைய வர்த்தகத்தில் உள்ள நன்மையே, நீங்கள் விளம்பரம் என்கிற பெயரில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்குமான பெறுபேற்றை அறிந்துக்கொள்ள முடிவதாகும். எனவே, மின் வணிகத்தில் பார்வையாளர் அதிகரிப்புக்கு நீங்கள் செலவு செய்வதை பார்க்கிலும், வாடிக்கையாளர்களை எப்படி உருவாக்கிகொள்ள முடியும் அல்லது வாடிக்கையாளர்களை எப்படி தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் செயல்படுவது அவசியமாகும். இதுவே, கட்டற்ற திறந்த சந்தையில் இலாபகரமான ஒருவராக உங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.

வாடிக்கையாளர் உறவே முக்கியமானது

எத்தகைய வணிகமுறையாகவிருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களுடன் மிகச்சிறந்த உறவை பராமரித்தல் என்பது முக்கியமானது. ஆனால், மின் வணிகத்தில் இது மேலும் ஒருபடி முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மின் வணிகத்தில் பெரும்பாலும் விற்பனையாளர்களும், கொள்வனவாளர்களும் சந்தித்துக்கொள்ளுவதே இல்லை. எனவே, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே இடம்பெறும் வர்த்தகத்தில் ஒருவரின் உணர்வுகளையும், கருத்துக்களையும் புரிந்துக்கொண்டு வர்த்தக உறவை பலப்படுத்துவது என்பது சாதாரண காரியமல்ல.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாரம்பரிய வணிகமுறையிலும் பார்க்க, இணைய வர்த்தகத்தில் உள்ள நன்மையே, நீங்கள் விளம்பரம் என்கிற பெயரில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்குமான பெறுபேற்றை அறிந்துக்கொள்ள முடிவதாகும். (gbtimes.com)

பெரும்பாலான மின் வணிகங்கள் அடிவாங்கும் இடமாகவும் இருக்கிறது. காரணம், சேவைக்கு முந்திய மற்றும் சேவைக்கு பிந்திய வாடிக்கையாளர் உறவினை பலப்படுத்த தவறுவதன் விளைவாகவே, பெரும்பாலான மின் வணிகங்கள் போட்டித்தன்மைமிக்க சந்தையிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. சந்தையில் எவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்தாலும், வாடிக்கையாளர் உறவு என்பதனை மிக உயர்ந்தளவில் கொண்டிருக்கவேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், அதுவே உங்களது வணிகத்தை முடிவுக்கு கொண்டுவரும் காரணியாக மாறிவிடும். வெளிநாடுகளில் இணைய வர்த்தகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர் உறவை திறமையாக கையாளமட்டும் ஆண்டொன்றுக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இணைய நிறுவனங்கள் செலவு செய்வதாக Forbes இணையத்தளம் குறிப்பிடுகிறது. இது ஒன்றே, வாடிக்கையாளர் உறவு இந்நவீனமயப்படுத்தப்பட்ட வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது.

இணைய இடைத்தரகர்கள் தொடர்பில் அவதானமாக இருத்தல்

இணையப்பரப்பில் வர்த்தகத்தின் வெற்றியே, இடைத்தரகர்கள் அல்லது விநியோக சங்கிலியின் பயன்பாடு குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வணிக செயல்பாடுகளை இலகுவாக்குகிறோம் என்பதன் பெயரில், மீண்டும் பாரம்பரிய வணிகம்போல இடைத்தரகர்களை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. மின்வணிகத்தில் இடைத்தரகர்களின் செயல்பாடுகளும், பொறிமுறைகளும் சற்றே வித்தியாசமானதாக இருக்கும்.

உதாரணமாக, இணையத்தில் கொள்வனவாளரும், விற்பனையாளரும் வர்த்தகத்தை தனித்து முடித்துக்கொள்ள முடியாது. வாடிக்கையாளர் குறித்த விற்பனையாளரிடம் பொருளை வாங்க விரும்பின், அதற்கான பணத்தினை செலுத்த வேண்டும். அதனை நேரடி பணமாக செலுத்த முடியாது. எனவே, அதற்காக இணைய பணத்தினை (அட்டைகள் அல்லது பணவைப்பு கணக்குகள்) பயன்படுத்த முடியும். இதன்போது, தவிர்க்க முடியாத வகையில் இணையப் பணம் என்கிற போர்வையில், இடைத்தரகர்கள் உருவாகுகிறார்கள். அதுபோல, வாடிக்கையாளர்கள் பணத்தினை எடுத்த எடுப்பில் செலுத்துவதில்லை. அதனை செலுத்துவதற்கு விற்பனையாளர்கள் பாதுகாப்பான கொடுப்பனவு முறையை கொண்டிருக்கவேண்டும். இதனையும் வேறு தரப்பினரிடமிருந்து பெற்று வழங்குவார்களாயின், அவ்வாறும் இடைத் தரகர்கள் உருவாகுவார்கள்.

இவ்வாறாக, பாரம்பரிய வணிகத்திலிருந்து வேறுபட்ட முறையில் இடைத்தரகர்கள் மின் வணிகத்தினை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். இவர்களால் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதுமட்டுமல்லாது, இவர்களுக்கு செலுத்தும் அனைத்து கட்டணங்களுமே பொருட்கள், சேவைகளின் பெறுதியுடன் சேர்க்கப்பட்டு இறுதியில் வாடிக்கையாளர்களையே வந்தடையும்.

மேலே கூறிய அனைத்துமே, மின் வணிகத்தில் இன்றிமையாதவகையில் கவனிக்க வேண்டிய அல்லது கவனிக்கப்பட வேண்டிய விதிகளாகும். கால மாற்றத்திற்கேற்ப, வணிகத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழலில், அத்தகைய மாற்றங்களில் நம்மை தொலைத்துக்கொள்ளாமல் எப்படி நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதனை அறிந்திருப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது.

Related Articles