Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

John Keells X 2.0: அடுத்த பெரிய தொடக்கநிலை வணிகத்தை (Start-Up) தேடி…

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்கஸ் நிறுவனம் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்கின்ற John Keells X Open Innovation Challenge, போட்டிக்கான அனைத்து ஆயத்தங்களும் தயார்நிலையில் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் மிகவும் வெற்றிகரமான தொடக்கத்தை ஆரம்பித்த இந்தப் போட்டி மூலம், இலங்கையின் “வளர்ந்து வரும் தொழில்முனைவு” அல்லது எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்வதாயின் “ஸ்டார்ட் அப்”களுக்காக பெருமளவு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமாயிருந்தது. இந்தப் போட்டி, சென்ற தடவையை விடவும், இத்தடவை மிகவும் விரிவாக நடாத்தப்படவுள்ளது. இறுதி சுற்றுக்குத் தெரிவாகும் 07 ஸ்டார்ட் அப்களில், ஆரம்பமாக 02 மில்லியன் ரூபா வீதம் முதலீடு செய்வதற்கு ஜோன் கீல்ஸ் தீர்மானித்துள்ளது. மிகவும் ஆக்கபூர்வமான, மிகுந்த புத்தாக்க திறன் கொண்ட ஸ்டார்ட் அப்களுக்கு, மூலதனங்களைத் தேடிக்கொள்வது மிகவும் கஷ்டமாகும். எனவே, ஜோன் கீல்ஸின் இந்தப் போட்டி, மூலதனத்தைத் தேடிக்கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

“ஜோன் கீல்ஸ் X: திறந்த புத்தாக்க சவால்” என்ற இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களாவன, திறமைகளைக் கொண்டிருக்கும் நபர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கு வழிகாட்டுதல், இலங்கையின் பொருளாதாரத்தின் முன்னேற்றப் பயணத்திற்கு பெரும் பலமாக அமைய முடியுமான ஸ்டார்ட் அப் நிறுவன சூழலை முன்னேற்றுதல் ஆகியனவாகும். இவை காலத்தின் தேவையாகும். இந்த முயற்சியின் முதல் எட்டுக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்ததனால், இந்த வருடம் அதனை மிகவும் விரிவாக செற்படுத்துவதற்கு ஜோன் கீல்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் கலந்துகொள்வோருக்கு சர்வதேச பாடத்திட்டத்தின்படியான வியாபார பயிற்சி, வேகமான முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பரிசோதனை அல்லது growth hacking  இற்கான உதவி, ஆலோசனை சேவைகள் அல்லது mentor-ship மற்றும் போட்டி நடைபெறும் 06 மாத காலப் பகுதியினுள் ஏனைய அனைத்து வகையிலுமான வழிகாட்டல்களைப் பெற்றுக்கொண்டு, திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பித்தல்

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் சிறிய விண்ணப்பம் மற்றும் தமது குழு, போட்டியில் முன்வைக்கவுள்ள புதிய கருத்துக்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வகையிலான சிறிய வீடியோவை அனுப்பலாம். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் எந்தவொரு இணை வியாபாரத் துறை தொடர்பிலான புதிய கருத்துக்களையும் முன்வைக்கலாம். இதற்காக தகவல் தொழில்நுட்பம், ஓய்வு நேர நடவடிக்கைகள் (Leisure), போக்குவரத்து துறை, உணவு மற்றும் சில்லறை வியாபாரம், உடமை, நிதி சேவைகள் மற்றும் விவசாயம் தொடர்பான சேவைகள் போன்ற பல விரிவான துறைகள் திறந்தே உள்ளன. எவ்வாறாயினும், இந்த விடயங்களுடன் மறைமுகமாக தொடர்புபடும் விடயங்கள், அவற்றுடன் தொடர்புபடுத்தி செயற்படுத்த முடியுமான விடயங்கள் குறித்தும் கரிசனை செலுத்தப்படும்.

இப்போட்டிக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம் திகதி முதல் ஜூன் 25 ஆம் திகதி வரை அனுப்பலாம். இதற்காக விசேடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜோன் கீல்ஸ் இணையத்தளம் மூலம் இதனை மேற்கொள்ளலாம். விண்ணப்பிப்பது மிகவும் இலகுவான காரியமாகும். விரிவான வியாபார திட்டமொன்றை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை. விண்ணப்பங்கள் மூலமும், தனிப்பட்ட நேர்முகப் பரீட்சை மூலமும், போட்டிக்கு தெரிவுகள் மேற்கொள்ளப்படும். உண்மையில், இங்கு குழுவில் உள்ளோர், அவர்களிடமுள்ள திறமைகள், திறன்கள் மற்றும் ஆர்வம்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு குழுவின் நிறுவனர்கள் இருவர் அல்லது மூவர், உறுப்பினர்கள் ஒருவர் தொடக்கம் மூவர் வரையில் இருப்பதாயின் மிகவும் நன்று. ஒரே குழுவினர், விரும்புவதாயின் பல கருத்துக்களை முன்வைத்து, வேறு வேறாக விண்ணபிக்கவும் முடியும்.

விண்ணப்பிக்க

பயிற்றுவித்தல் நிகழ்ச்சி

அனைத்து விண்ணப்பதாரிகளிலிருந்தும் தெரிவு செய்யப்படும் 30 குழுவினர் போட்டிக்கு தகுதி பெறுவர். இவர்கள் போட்டிக்குச் செல்ல முன்னர், உலகின் சிறந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகமான MIT இற்கு, தொழில்முனைவு வாய்ப்புக்களை ஏற்பாடு செய்கின்ற Martin Trust Center for MIT Entrepreneurship நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பில் ஓலட் நிர்மாணித்த தொழில்முனைவு பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.  இதில் கலந்துகொண்டு, ஒரு தொழில்முனைவாளர் என்ற வகையில் சிந்திக்க முடியுமான மனநிலையை கட்டியெழுப்பவும், ஒரு தொடக்கநிலை வணிகத்தை ஆரம்பிக்கும்போது அதற்குப் பொருத்தமான கொள்கைகளை பிரயோகிக்கவும்கூடிய புரிதலை பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு குழுவுக்கும், மிகவும் அனுபவம் வாய்ந்த, திறமையான ஒரு ஆலோசகரை அதாவது Mentor ஐ ஜோன் கீல்ஸ் நிறுவனம் நியமிக்கும். ஒவ்வொரு செவ்வாயன்றும், குழுவினர் தமது Mentor மற்றும் ஏனைய ஆலோசகர்களை சந்தித்து, தமது கருத்துக்களை செயல்படுத்துவது தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேலைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவர்.

திறமைகளை வெளிக்காட்டும் நாள்

இப்பயிற்சி நிகழ்ச்சியின் இறுதியில் நடைபெறுகின்ற திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வில், எல்லாக் குழுக்களும், ஒவ்வொருத்தருடன் போட்டியிட்டு, அனுபவம் வாய்ந்த நடுவர்கள் முன்னிலையில் தமது திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இம்முறை நடுவர்கள் குழாமில் துறைசார் முன்னணியினர் உள்ளடங்கியுள்ளனர். அஜித் குணவர்தன (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரதி தலைவர்), ரொனீ பீரிஸ் (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தில் நிதி பணிப்பாளர்) கிரிஷான் பாலேந்திர (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் ஓய்வு நேர நடவடிக்கை பிரிவின் தலைவர் / பணிப்பாளர்) கிஹான் குரே (ஜோன் கீலஸ் ஹோல்டிங் சில்லறை வியாபாரப் பிரிவின் தலைவர் / பணிப்பாளர்), கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய (ஆசியாடா குழுமத்தின் தெற்காசிய பிராந்திய பிரதான நிறைவேற்று அதிகாரி / ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் நிறைவேற்று அதிகாரமில்லா பணிப்பாளர்), ஜொனதன் அலஸ் (ஹட்டன் நெஷனல் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி / முகாமைத்துவ பணிப்பாளர்) மற்றும் ரமேஷ் சண்முகநாதன் (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் பிரதான பிரதி தலைவர் மற்றும் பிரதான தகவல் தொழில்நுட்ப அதிகாரி) ஆகியோராவர்.

இவர்களின் கருத்துப்படி தெரிவுசெய்யப்படுகின்ற 07  குழுக்களுக்கு, தலா 02 மில்லியன் வீதம் வழங்கப்படும். இந்த முதலீடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்கஸ் நிறுவனத்துக்கு 05 சதவீத உரித்துடைமையுடனேயே வழங்கப்படுகின்றது. வெற்றிபெறும் குழுக்களைத் தெரிவுசெய்யும்போது, அவர்களின் குறைந்த பிரயோக தயாரிப்பின் நிலை, கருத்தை செயல்படுத்தியுள்ள விதம், வியாபார பெறுமதி முன்மொழிவின் பலம் மற்றும் அக்குழுவின் செயற்றிட்டம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்கஸின் வியாபார துறைகளுடன் கொண்டுள்ள இணக்கம் முதலிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

பெரிய பரிசு

ஏனைய பல வியாபார ரீதியான போட்டிகள் போன்று, இந்த நிகழ்ச்சியில் பணத்தை வழங்குவதோடு மாத்திரம் போட்டி முடிவடைவதில்லை. இந்த ஸ்டார்ட் அப்களில் ஜோன் கீல்ஸ் நிறுவனம் முதலீடு செய்து, அதன் பங்கு மூலம் உரித்துடைமையும் கொண்டிருப்பதால், இந்த ஸ்டார்ட் அப்களின் முன்னேற்றம் ஜோன் கீல்ஸ் நிறுவனத்துக்கு முக்கியமாகிறது. வெற்றிபெறும் குழுக்கள் அலுவலக இடவசதிகளைப் பெறும். அத்தோடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் நுகர்வோர் மற்றும் வியாபார தொடர்புகளும் கிடைக்கின்றன. மேலும், இவற்றின் மூலம் தமது வியாபார திட்டத்தை செயற்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றது. இவ்வாறு கிடைக்கின்ற வாய்ப்புக்கள், பணத்தை விடவும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு ஸ்டார்ட் அப்புக்கு நுகர்வோர் வலையமைப்பு இல்லாமையினால் பெரும் கஷ்டம் ஏற்படுகின்றது. ஆனால், ஜோன் கீல்ஸின் இந்த நடவடிக்கை மூலம் அந்தக் கஷ்டம் இல்லாமலாக்கப்படுகின்றது.

அதேபோன்று, முன்னேற்றகரமாக வியாபாரத்தை நடாத்திச் செல்வது குறித்த விசேட பயிற்சியும் வழங்கப்படும். Growth Tribe எனப்படும் பிரபலமான Growth Hacking நிறுவனத்தின் நிபுணர்கள் நெதர்லாந்திலிருந்து இதற்காக வரவுள்ளனர். அதேபோன்று ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட நிதி தொழில்நுட்ப கம்பனியான TransferWise நிறுவனத்தின், அபிவிருத்தி குறித்த பிரதி தலைவரான நிலான் பீரஸும் இந்த பயிற்றுவிப்பாளர் குழாமில் இணையவுள்ளார்.

இந்த ஆறு மாத காலத்தினுள் வெற்றிபெறும் குழுக்கள், தமக்கு கிடைக்கின்ற பயிற்சியை மையமாக வைத்து, நடுவர்களுக்கு முன்வைக்கும்; குறைந்த பிரயோக உற்பத்தி, அதனை அபிவிருத்தி செய்ய உந்துதலாக அமையும். குறித்த ஸ்டார்ட் அப்பை விருத்தி செய்வதே, இந்தப் பகுதியின் பிரதான இலக்காக இருப்பதனால் வாராந்தம் 5 சதவீத வளர்ச்சியை அது காட்ட வேண்டும். அத்தோடு, தமது உற்பத்தியின் அல்லது சேவையின் வணிக வேகம் தொடர்ந்தேச்சையான முன்னேற்றத்தையும் காட்ட வேண்டும். நுகர்வோரிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களின்படி, உற்பத்தியை முன்னேற்றவும் வேண்டும். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸுடன் இணைந்திருக்கும் காலப் பகுதியினுள், இந்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் சட்ட, நிதி மற்றும் ஆவண ரீதியான அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் இக்குழுக்களுக்கு கிடைக்கின்றது.

ஆறு மாத காலம் முடிவடையும்போது, தமது கம்பனியின் – அப்போது அது மிகவும் முன்னேற்றமடைந்திருக்கும் – உற்பத்திகளை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் நிபுணர்கள் குழுவிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. இதன் மூலம் தமது நிறுவனத்தின் 25 சதவீத உரித்துடைமைக்காக, 5 மில்லியன் ரூபா மேலதிக முதலீட்டை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றது.

வாய்ப்புக்கள்

John Keells X வெற்றியாளர்கள் 2016

இந்தப் போட்டியில் பங்குபெறும் ஒரு குழுவானது இறுதிச் சுற்றுவரை செல்லும் வாய்ப்பை பெற்றாலும், இல்லாவிட்டாலும், இந்த திறந்த புத்தாக்க சவாலில் கலந்துகொள்ளும் எவருக்கும், பெரும் அனுபவம் கிடைக்கும். தெரிவு செய்யப்படும் 30 குழுக்களுக்கும், ஸ்டார்ட் அப் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான உயர்தரமான பயிற்சி, வேகமாக மாறுகின்ற சமகால உலகில் வெற்றிபெறுவதற்கு தேவையான சரியான மனநிலை குறித்தும் சிறந்த தெளிவு வழங்கப்படும். அத்தோடு, இந்தப் போட்டி மூலம் முன்னேறிச் செல்லும் குழுக்களுக்கு, பொதுவாக ஸ்டார்ட் அப் ஒன்றை ஆரம்பிக்கும்போது இருக்கும் முதலீட்டை விட அதிகமான முதலீட்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.

ஒரு ஸ்டார்ட் அப் அதற்குத் தேவையான முதலீட்டை தேடிக்கொள்ளும் அளவுக்கு அதனை முன்னேற்றலாம். மேலதிக முதலீட்டு அளவை எட்டும் குழுக்கள், பெருமளவிலான மேலதிக முதலீட்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொள்கின்றன. இந்த ஆறு மாத காலப் பகுதியில் பண முதலீடு குறித்து அலட்டிக்கொள்ளாமல், தமது வியாபார உற்பத்தியை அல்லது சேவையை முன்னேற்றுவதில் முழுமையான கவனத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை இந்தக் குழுக்கள் பெறுகின்றன.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு பணம் தேவைப்படுவது போலவே, சிலவேளை அதனையும் விட அதிகமாக வியாபார தொடர்புகள் தேவைப்படுகின்றன. இந்தப் போட்டியில் முன்னேறிச் செல்லும் எல்லா குழுக்களுக்கும், துறை சார் நிபுணர்கள் முதல் ஆலோசகர்கள் வரையிலும், வியாபார தொடர்புகள் மற்றும் நுகர்வோர் வட்டம் உள்ளிட்டு ஜோன் கீலஸ் ஹோல்டிங்ஸின் வளங்களைப் பயன்படுத்திக்கௌ;ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. இவை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு மிகவும் பிரயோசனமான வளங்களாகும். இதன் மூலம் வியாபார உலகத்தின் கவனத்தை பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு, பல தளங்களிலும் துரிதமான அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆறு மாத காலம் வேலை செய்வதே, வியாபார உலகில் எந்தவொரு இடத்திலும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் போதுமானதாகும். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸுடன் இணைந்து சில காலம் பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டர். அவர்களின் நம்பிக்கையையும், கவனத்தையும் மிகவும் இலகுவாகப் பெற்று, இந்தப் போட்டியின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் முதலீட்டையும் விட அதிகமான முதலீட்டை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் திறந்த புத்தாக்க சவால் போட்டியானாது, சமகாலத்தில் உள்ள வேகமான பொருளாதார வடிவத்தினுள் வெற்றிகரமான வியாபார நிறுவனங்களை உருவாக்குவதற்குத் தேவையான ஆலோசனைப் பெறுவதற்கான சிறந்த ஒரு தளமாகும். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றாலும், வெற்றிபெறாவிட்டாலும், இதற்காக செலவழிக்கும் காலம் ஒருபோதும் வீணாகிவிடுவதில்லை. ஏனெனில், இங்கு கிடைக்கின்ற அனுபவமும், தொடர்புகளும் மட்டிட முடியாதளவு பெறுமதியானவையாகும். வெற்றிபெற முடியுமாயின், அடுத்த பெரிய ஸ்டார்ட் அப் ஆகுவதற்கு உங்களது கருத்துக்களுக்கும் பெரும் வாய்ப்பு இருக்கின்றது.

Roar Tech ஆனது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்கஸின் திறந்த புத்தாக சவாலின் டிஜிடல் ஊடக அனுசரனையாளராகும்.

Related Articles