Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கோவில் மட்டுமல்ல, அனுபவமும் பொன்னானது!

எங்களின் மொத்த ரயில் பயணத்தில் மிகவும் மோசமான பயணம் எதுவென்றால் அது காசியில் இருந்து பஞ்சாப் சென்றதுதான், எனது இருக்கையை இன்னொருவருக்கும் ஒதுக்கி இருந்தது இந்தியன் இரயில்வே!. (சுத்தம், தமிழ் தெருஞ்சாலும் பரவாயில்லை ஹிந்தி வாலாஸ் வேற இன்னைக்கு அவ்ளோதான்)  அவரிடம் நண்பன் ஹிந்தியில் ஒரு யுத்தமே செய்தும் பயன் இல்லாமல் போக, நானும் அவனும் டி.டி.ஆர் வரும்வரை ஒரே இருக்கையில் அமர்ந்தோம். அன்ரிசெர்வேஷன் நபர்கள் பெரும்பாலும்  ரிசெர்வேஷனில் ஏறி நானும் தான் காசு குடுத்து வரேன் தள்ளி உடக்காரு ஒண்ணும் கொறஞ்சு போயிரமாட்ட. என்று மரியாதையாக மிரட்டி அந்த ஒன் பை டூவிலும் மண் அள்ளி போட்டார்கள். தெய்வமாக வந்தார் டி.டி.ஆர் (யாருக்கு தெய்வமாக என்பதில்தான் இருக்கிறது ட்விஸ்ட்) நேம்லிஸ்ட் வரவில்லை கொஞ்சம் பொறுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு போய்விட்டார் தலைவர். டி.டி.ஆர்க்கு ஆங்கிலம் தெரிந்தால்தானே வேற்று மொழி பயணிகளுக்கு உதவ முடியும், ஒருவேளை ஹிந்தி தெரியாதவர்கள் வடஇந்தியா பயணிக்க மாட்டார்கள் என்பது அரசின் எண்ணமோ?,ஏதோ என் நண்பன் இருந்தததால் தப்பினேன்.

படம் – oddcities.com

தூங்காத  விழிகளுடன் ஒருவழியாய் பஞ்சாப் இரயில்நிலையம் வர, பங்காளி அன்ரிசெர்வேஷன் சும்மாதாண்டா வந்துருக்கு, பேசாம நாம இதுலயே வந்துருக்கலாம்!, என்று மேலும் என்னை வெறி ஏத்தினான் நண்பன். ஏற்கனவே திட்டமிட்டபடி ‘’அம்ரிஸ்தர்‘’ நகர் விடுதியில் அறை எடுத்தோம். இங்கு பெரும்பாலும் எல்லா விடுதிகளிலும் 12 மணி நேரம் அடிப்படையில்தான் அறைகளை வாடகைக்கு விடுகிறார்கள். அதாவது அரைநாள். கொஞ்சம் ஓய்வுக்குபின் மிகுந்த எதிர்பார்ப்புடன் பொற்கோவிலை நோக்கி நடந்தோம் ‘’ராப்னே பனாடி ஜோடி’’ படத்தில் ஷாருக்கான் அந்த கோவிலில் நடந்து வந்தது போலவே புகைப்படம் எடுக்க வேண்டும் என்று பிரபா சொல்லிய படியே வந்தான். (பெட்ருமாஸ் லைட்யேதான் வேணுமா)

சுற்றுலா வாசிகளை கவர்வது எப்படி என்று பஞ்சாப் மாநிலத்திடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும், பொற்கோவிலுக்கு செல்லும் வழியை எதோ வெளிநாட்டு சுற்றலா தளம்போல் மாற்றி உள்ளார்கள். சாலைகள், கட்டிடம், விளக்குகள், இருக்கைகள் என அனைத்திலும் கலைநயம் விளையாடுகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் கடைகள் அதன் பெயர் பலகைகள் என அனைத்திற்கும் ஒரே நிறம் அதிலும் பழமை கலந்த கலைவண்ணம், அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆண்களும் பெண்களும் ஆடுவது போல் பெரிய சிலைகளாக வடித்துள்ளனர். அவர்களின் போர்த் திறனை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை கல்லில் செதுக்கிய சிலை உண்மையிலேயே அற்புதம்! அது அதவிர்த்து பெரிய முழு உருவ அம்பேத்கரின் சிலையும் இருந்தது. நீங்கள் எங்கு நின்றாலும் அது புகைப்படம் எடுக்க தூண்டும் இடமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. பின் பெரிய சுவற்றில் ராட்ஷத டிவியில் பொற்கோவிலில் நடக்கும் நிகழ்சிகள் ஒலிபரப்பபடுகிறன. புகைப்பட பைத்தியம் பிரபாவை அங்கிருந்து நகர்த்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

படம் – pixabay.com

கையில் கண்டிப்பாய் கர்சிப் கொண்டுப்போங்கள் அப்படி இல்லை என்றாலும் அங்கேயும் விற்கிறார்கள். ஏனென்றால்  தலையை மறைத்து துண்டோ அல்லது கர்சிப்போ கட்டினால்தான் பொற்கோவிலினுள் அனுமதிப்பார்கள், பெண்கள் தங்கள் துப்பட்டாவையோ முந்தானையையோ  தலையை மறைக்கும்படி அணிந்திருக்க வேண்டும். நீங்கள் உள்ள சென்று அதை கலட்டினாலும் அதை அணிய சொல்லுவார்கள் எனவே பொற்கோவினுள் இருக்கும்வரை தலையில் கட்டி இருப்பதை நீக்கக் கூடாது. இதுவரை நான் பார்த்த மிகச்சிறந்த புனிதத்தலம் எதுவென்று கேட்டல் பொற்கோவில் என்றுதான் சொல்லுவேன். இவ்வளவு கூட்டத்திலும் இத்தனை சுத்தமாகவும் அமைதியாகவும் ஒரு கோவில் இருப்பதென்பது ஆச்சர்யமே.

அங்கு தொடர்சியாக பாடப்படும் பாடல்களும் அதன் இசையும் உங்களுக்கு அமைதியை கண்டிப்பாய் தரும். ஒரு பெரிய குளத்தின் நடுவில் இருக்கிறது பொற்கோவில். எல்லா மதம் சார்ந்தவர்களும் வருகிறார்கள்! அதற்காகத்தான் அந்தக்கோவில் கட்டப்பட்டதாக அங்கு இருந்த இங்கிலீஷ் தெரிந்த சிங் ஒருவர் சொன்னார். 1604ஆம் ஆண்டு, குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து, அதை இங்கு நிறுவினார். இப்போது இருக்கும் கோவில் 1764இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் சீக்கிய படைகளின் உதவியுடன் கட்டப்பட்டது. மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகராஜா ரஞ்சித் சிங் இதற்கு தங்க கூரைகளை அமைத்தார், அதுதான் இதற்கு பொற்கோவில் என்று பெயர்வரவும் காரணம் ஆனது. கோவிலின் உள்ளே ஒரு காவலர் கூட இல்லை. அனைவரும் சிங்குகளுக்கான சிறப்பு உடையில் பெரிய கத்தி (வாள்) மற்றும் ஈட்டியுடன் நிற்கிறார்கள். குளத்தில் கால்களை விட்டு உட்கார்ந்தபோது கால்களின் அருகே ஈட்டியை தட்டி கால்களை எடுக்க சொன்னதெல்லாம் வேற லெவல்.

படம் – sonyaandtravis.com

குளத்தின் நடுவே இருக்கும் கோவினுள் நுழைந்த போது நம்மையும் அறியாமல் ஒரு உணர்வு எழுவதை தடுக்க முடியாது, அதற்கு முழு காரணமும் நம்மை சுத்தி இருக்கும் சூழல்தான். உள்ளே சாமதி போன்ற அமைப்பு உள்ளது (தப்பா சொல்லிருந்தா மன்னுச்சு! பாக்க அப்டித்தான் இருந்தது) அதனுள் அவர்களின் புனிதநூல் இருப்பதாக நண்பன் சொன்னான், எப்படி தெரியும்? என்று கேட்டதிற்கு, என் அளவு  உயர வாளுடன் நிற்கும் சிங்கு ஒருவரை காட்டி அவரிடம் சந்தேகம்னா கேட்டுக்கோ என்றான், அவருக்கும் சேத்து பெரிய கும்பிடாய் போட்டு வந்தேன்!. அங்கு சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி இருப்பது தனி சுகம், (பொற்கோவில் சென்றால் கண்டிப்பாய் முயற்சிக்கவும்).

நீங்கள் எப்பொழுது கோவில் சென்றாலும் சாப்பாடு உறுதி, சப்பாத்தி, சிறிது சாதம், கீரை கூட்டு, உருளைக்கிழங்கு என வயிறார  தருகிறார்கள். கைகளை உயர்த்தி யாசகம் பெறுவது போல்தான் உணவை வாங்க வேண்டும்! அது உணவை தரும் இறைவனுக்கான மரியாதை என்று சொன்னார்கள். வெள்ளை சக்கரை பொங்கல்போல் ஒன்று வைத்தார்கள் அது கடைசிவரை என்னவென்றே தெரியவில்லை. அம்ரிஸ்தரில் இருந்த இரண்டு நாளில் 4 வேளை பொற்கோவிலில்தான் சாப்பிட்டோம். (குறிப்பு – சாப்பிட்டதே 4 வேளைதான்) நண்பன் பிரபா சப்பாத்தி சப்பாத்தி குருமா குருமா என்று வெளுத்து வாங்கினான்.

படம் – ytimg.com

இங்கு நான் வியந்த மற்றொரு விஷயம், இங்கு எல்லோரும் இக்கோவிலை தனது சொந்த கோவில்போல் பராமரிப்பது. குப்பைகள் இல்லாமல் பார்ப்பது உணவு பரிமாறுவது, உணவு சமைக்க உதவுவது என விழுந்து விழுந்து வேலை செய்கிறர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலைவேண்டுமானாலும் பார்க்கலாம் யாரும் உங்களை ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்கமாட்டார்கள், குறைந்தபட்சம் வேடிக்கை பார்கவாவது போங்கள், அத்தனை வேகமாக, உணவு பரிமாறுவார்கள், பாத்திரம் கழுவுகிறார்கள் (யூடியூபிலும் காணொளி இருக்கிறது பாருங்கள் வியப்பீர்கள்) உங்களை சாப்பாட்டிற்காக சில நிமிடம்கூட காக்கவைக்கமாட்டார்கள். இந்தியாவின் பெரிய சமையல் கூடங்கள் என்ற டிஸ்கவரி சானல் நிகழ்ச்சியில் பொற்கோயில் சமையல் கூடமும் வந்துள்ளது என்றால் யூகித்துகொள்ளுங்கள்.

எங்களால் முடிந்த சில உதவிகளை செய்துவிட்டு அமைதியாய் பொற்கோவிலை பார்த்தமாதிரி குளத்தின் அருகே அமர்ந்தோம். ஏன் நண்பா இவுங்க இந்திரா காந்தியா கொலை பண்ணாங்க?, நண்பன் முன்பே கேட்பான் என்று எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதால், வியப்பாக இல்லை. 1980இல் பஞ்சாப்யை பிரித்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான்  என தனி நாடு கொடுக்கும்படி பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்ட தலைவர் மற்றும் ஆயிரக்கணக்கான போராளிகள் பொற்கோவிலில் தான் இருந்தார்கள். அவர்களை அடக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கைகள் எடுத்தார். இதில் அந்த தலைவர் உட்பட நூற்றுகணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே அவர்கள் பிரதமரை கொலைசெய்தனர். அதென்ன இராணுவ நடவடிக்கை கோவிலுக்குள் புகுந்து சுட்டாங்கனு சொல்லு!, ஏன்டா உன்கூட இருக்க புடிக்கல போறேன்னு சொல்றவன எதுக்கு சுட்டு இருக்க வைக்கணும்?, இது இன்றைய சூழலிலும் விடை காணாத அரசியல் கேள்வி என்பது புரியாமல் என்னிடம் கேட்டான் நண்பன். அப்ப காஷ்மீர் நம்ம கூட விருப்பப்பட்டா இருக்கு என்று நான் பதில் கேள்வி கேட்டதும் ஐயோ சாமி என்னை ஆள விடு என்று ஜகாவாங்கினான்.

படம் – ssl.c.photoshelter.com

நாளைக்கி எங்கடா போறோம்? பிரபா தான் மறுபடியும் ஆரம்பித்தான், ஜாலியன்வாலாபாக் பக்கம் தா அங்க போய்ட்டு இந்தியா பாகிஸ்தான் எல்லை வாஹா ஒரு 30கி.மீ தான் அங்க தினமும் கோடி இறக்குறது நல்லா இருக்கும் அத பாக்க போலாம் என்றேன். நாளைக்கி என்ன நாள் தெரியுமா? முகத்தில் பல்ப் எரிய கேட்டான், (காரணம் நாங்கள் பயணத்தை ஆரம்பித்த பின் பெரிதாக நாட்களையோ நேரத்தையோ கருத்தில் கொள்ளவில்லை, அதுவும் காசி சென்றபின் நங்கள் இருந்த மன நிலையே வேறு) என்ன நாள் பங்கு? ஆகஸ்ட் 15டா சுதந்திர தினம்! அன்னைக்கி நாம இந்திய மக்கள் உயிர்த்தியாகம் பண்ண ஜாலியன்வாலாபாக் அப்பரம் அதோட விளைவாய் கிடைச்ச எல்லையையும் பாக்க போறோம் செம்மல! என்றான்.

ஆம் எப்போதும் பயணம் உங்களுக்கு எதிர்பாரத நிகழ்வுகளை கொடுத்து வியப்பில் ஆழ்த்தும். மயிர் கூசிய எல்லை சம்பவங்களுடன் அடுத்த அத்யாயம் . (பொற்கோவில் வாசலுல என் புது செருப்ப சுட்டுடாங்க அதுக்கு அப்புறம் வெறும்காலோடதான் சுத்துனேன், இந்த சம்பவத்தை கண்டிப்பாய் நண்பன் பதிவு செய்ய சொன்னான் எனவே கூடுதல் கவனம் செருப்பு மேலயும் இருக்கட்டும்!)

Related Articles