மீண்டும் நிலவில் தடம் பதிக்கும் மனிதர்கள்!

‘ஒரு மனிதனின் காலடித்தடம் மனுக்குலத்தின் மாபெரும் பாய்ச்சல்’ 1969 ஜூலை 16 பூமியிலிருந்து சீறிப்பாய்ந்த அபோல்லோ 11 மூலம் நிலவில் கால்தடம் பதித்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவிலிருந்து உதித்த வார்த்தைகள் இவை. கடந்த புதன்கிழமை (16.11.2022) இலங்கை நேரம் பிற்பகல் 12:17 (கிழக்கு வலய நேரம் அதிகாலை 01:47) இற்கு மனுக்குல வரலாற்றின் ஒரு முக்கியமான  பாய்ச்சலின் முதலடியாக ஆர்டிமஸ் 1 விண்ணில் ஏவப்பட்டது.

ப்ளோரிடாவில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் இதுவரை மனிதன் பயன்படுத்தியதிலேயே சக்திவாய்ந்த ரொக்கட்டை கொண்டு ஏவப்பட்டுள்ளது. இது ஏவப்பட்ட காட்சி சமூகவளைத்தலங்களில் பரவலாக பகிரப்பட்டது. ‘நள்ளிரவில் ஓர் சூரியன்’ எனும் அளவுக்கு தீப்பிழம்புகளால் எழுந்த ஒளிப்பிரவாகத்தை ஏவுதளம் முழுதும் பரப்பி கணநேரம் வானில் இருந்த நிலவையும் மறைத்தது. ஏறத்தாழ நான்கு மில்லியன் கிலோகிராம் பருமன் கொண்ட விசையை கீழ்நோக்கி உந்தியவண்ணம் மேலெழுந்த இந்த ரொக்கெட் 27, 358 மணிக்கு கிலோமீற்றர் வேகத்தில் விண்ணில் சீறிப்பாய்ந்தது. மீண்டும் நிலவில் கால்தடம் பதிக்க மனுக்குலம் கொண்டுள்ள பிரயத்தனத்தின் முதலடி இது. கட்டுரை எழுதப்படும் நொடி வரை பூமியிலிருக்கும் விண்வெளி நிலையம் தொட்டு விண்கலம் வரை திட்டத்தின் அத்தனை பாகங்களும் அப்பழுக்கின்றி திறம்பட செயலாற்றிய வண்ணமுள்ளன.

ஒராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது

நாசாவும் நிலவும்

நிலவில் மனிதன் காலடித்தடம் பதித்தான் என்பதை தாண்டி அதற்கு முந்தைய பிந்தைய கதைகள் நாம் அறிந்திருக்க பெரும்பாலும் சாத்தியமில்லை. நீல் ஆம்ஸ்ட்ரோங் பயணித்த அப்போலோ 11 இற்கு முன்பாகவே ஒரு விண்கலம் நிலவை அடைந்தது. அது அப்போலோ 8 விண்கலம் ஆகும். 1968 டிசம்பர் 21ந்திகதி மூவரடங்கிய குழுவுடன் பூமியிலிருந்து புறப்பட்ட இது நிலவின் பரிதியை அடைந்தது. ஆனால் தரையிறங்காது தொடர்ந்து 10 முறை வலம்வந்து விட்டு மீண்டும் 1968 டிசம்பர் 27ந்திகதி பாதுகாப்பாக புவியை வந்தடைந்தது. இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து அப்போலோ 11 விண்ணில் ஏவப்பட்டமை சரித்திரத்தில் அழியாப்புகழ் பெற்றது.

நிலவில் மனிதன்
மூலம்: phsy.org

தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் ஏவப்பட்ட அப்போலோ 12 நிலவில் தரையிறங்கி 31 மணிநேரம் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு பின்னர் மீண்டும் புவியை வந்தடைந்தது. இது மனிதர்களை ஏந்தியவண்ணம் நிலவிற்கு அனுப்பிய ஆறாவது விண்கலம் மற்றும் நிலவில் தரையிறங்கிய இரண்டாவது விண்கலம் ஆகும். இதனை தொடர்ந்து ஏவப்பட்ட அப்போலோ 13 விண்கலம் நிலவை அடைய முன்பாகவே மீண்டும் புவிக்கு திரும்பியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒட்சிசன் தாங்கியில் ஏற்பட்ட கோளாறே பிரதான காரணம் என கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இதில் பயணித்த வீரர்கள் உயிர்சேதமின்றி புவியை வந்தடைந்தனர். தொடர்ந்து அப்போலோ 17 விண்கலங்கள் ஏவப்பட்டு நிலவில் தரையிறங்கி ஆய்வில் ஈடுபட்டன. 1972 உடன் நிலவிற்கு மனிதனை அனுப்பும் அப்போலோ திட்டம் மூடுவிழா கண்டது. அதிகப்படியான பொருட்செலவு இதற்கு காரணமாக கூறப்பட்டது.

ஆர்டிமஸ்

இத்தனை தசாப்தங்கள் கழித்து மீண்டும் நிலவில் மனிதனின் தடம் பதிக்கும்  உத்வேகத்துடன் நாசா இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. கிரேக்க புராணங்களின்படி நிலவின் கடவுளே ஆர்டிமஸ். கிரேக்க கடவுள் அப்போலோவின் இரட்டை சகோதரியே இவர். வேட்டை தெய்வமாகவும் வணங்கப்படுகிறார்.

ஆர்டிமஸ் தெய்வத்தின் சிலை
மூலம்: britannica.com

நோக்கம்

எதனால் இப்போது இந்த திட்டம் என்று உலகளாவிய ரீதியில் பலர் பலவாறான கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர். இதற்கு நாசாவின் பதில்: கண்டறிதல், பொருளாதார வாய்ப்புகள், புதிய தலைமுறைக்கான உந்துசக்தி ஆகிய மூன்று முக்கிய விடயங்களை இத்திட்டத்தை நாசா வகுத்துள்ளது.

என்னதான் நாசாவின் திட்டம் என்று நாம் கூறினாலும் இதில் நாசாவை தாண்டி பல பலம்பொருந்திய சக்திகள் ஒன்றுகூடியுள்ளன. பல தனியார் நிறுவனங்களும் உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளும் இத்திட்டத்தில் கைகோர்த்துள்ளன. அத்தனை பேரையும் தலைமை தாங்கி நாசா இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. நிலவில் கால்பதிக்கவிருக்கும் முதல் பெண்மணி, முதல் வெள்ளையர் அல்லாத ஒருவர் என பல்வேறு சிறப்பம்சங்களை இத்திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. வெறுமனே நிலவுக்கு சென்று தரையிறங்குவதும் அங்கிருக்கும் மேற்பரப்பை ஆய்வு செய்வதும் மட்டுமென்றில்லாமல் சில காலம் அங்கேயே தங்கி இருப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நீண்டகால திட்டத்திற்கு இது ஒரு ஒத்திகை என்றும் கூறலாம். மனிதனால் செவ்வாயில் வாழமுடியுமா? அங்கிருக்கும் வெப்பநிலை, வாயுக்கள் போன்றவற்றை சமாளித்து வாழும் ஒரு சூழலை உருவாக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடியே இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆர்டிமஸ் திட்டத்தின் இலச்சினை
மூலம்: nasa.gov

ஆர்டிமஸ் 1

ஆர்டிமஸ் திட்டத்தின் முதல் பாகமே ஆர்டிமஸ் 1. இது ஒரு சோதனை ஓட்டம் என்றும் சொல்லலாம். நான்கு வாரங்களுக்கு இது செயற்படுத்தப்படும். நிலவிற்கு மனிதர்களை ஏந்திச்செல்லவிருக்கும் ஒராயன் விண்கலம், அதனை விண்ணில் ஏவிய எஸ் எல் எஸ் ரொக்கெட் மற்றும் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் ஆய்வு அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரு சோதனை ஓட்டமே இது. ஆளில்லா இந்த சோதனை ஓட்டம் பரந்திருக்கும் பால்வெளியில் மனித ஆய்வுகளை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.

நிலவு மற்றும் அதற்கு அப்பால் என்கிற மகுடவாசகத்தோடு மொத்த குழுவும் அல்லும்பகலும் பணியாற்றி வருகிறது. 25 நாட்கள் 11 மணித்தியாலங்கள் 36 நிமிடங்கள் என இத்திட்டத்திற்கு கெடு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி பூமியிலிருந்து புறப்பட்ட இவ்விண்கலம் 450, 000 கிலோமீட்டர்கள் பயணித்து நிலவை தாண்டி 64000 கிலோமீட்டர்கள் சென்று அதனை சுற்றி வந்து மீண்டும் பூமியை வந்தடையும். இடையில் சர்வதேச விண்வெளி மையத்தில் தரிக்காது. இதனால் இதுவரை மனிதன் பயணித்த வின்கலங்களிலேயே அதிக நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தரிக்காமல் விண்ணில் பயணித்த விண்கலமாக இது பதியப்படும். எங்குமே தரிக்காமல் நேரடியாக புவிக்கு வருவதனால் இதுவரை மனித சரித்திரத்தில் காணாத வேகத்துடனும் வெப்பத்துடனும் வந்து சேரும்.

ஆர்டிமஸ் 1 பயணப்பாதை
மூலம்: nasa.gov

இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் மனிதர்களை சுமந்து செல்வதற்கான தகுதியை ஒராயனும் எஸ் எல் எஸ் ரொக்கெட்டும் பெறும். அதன்பின்னர் ஆர்டிமஸ் 2 திட்டம் அரங்கேற்றப்பட்டு விண்கலம் மனிதர்களை சுமந்து செல்லும்.

ஒராயன் மற்றும் எஸ் எல் எஸ் கென்னடி ஆய்வு மையத்தில் நாசாவின் புதிதாக கட்டமைக்கப்பட்ட 39B ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஐந்து தொகுதி பூஸ்டர் சோடிகள் மற்றும் நான்கு RS-25 எஞ்ஜின்களின் துணையுடன் அதியுயர் வளிமண்டல உந்தத்தை 90 வினாடிகளில் விண்கலம் பெற்றது. திண்ம எரிபொருள் கொண்ட பூஸ்டர் ரொக்கெட்டுகள் முழுமையாக எரிந்து அண்ணளவாக 2 நிமிடத்தின் பின்னர் அவை தொகுதியிலிருந்து விடுவிக்கப்பட்டன. பின்னர் மூல அமைப்பு மற்றும் RS-25 களின் உதவியுடன் விண்கலம் மேலும் பயணிக்க 8 நிமிடங்களின் பின்பு இவை தொகுதியிலிருந்து விடுவிக்கப்பட்டன.    

இதன்பின்னர் ஐ சீ பீ எஸ் (interim cryogenic propulsion stage) உடன் பிணைந்துள்ள ஒராயன் நிலவை நோக்கிய தன் பயணத்தை தொடர்ந்து வருகிறது. இந்த அமைப்பு நிலவின் ஈர்ப்புக்கு அருகாமையில் வினகல்த்தை செலுத்தக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

விண்கலம் ஏவப்பட்ட பின்பு
மூலம்: NASA/Keegan Barber⁣

விண்வெளியில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு மீளவரும் ஒராயன் கலம் ஏறத்தாழ 40000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த வண்ணம் இருக்கும். இவ்வேகத்தில் பூமியின் வளிமண்டத்தினுள் நுழையும்போது இதன் வேகம்  மணிக்கு 480 கிலோமீட்டர் வேகத்தால் குறைவடையும். இதற்கு காரணம் வலிமைண்டலத்துடன் விண்கலத்துக்கு ஏற்படும் உராய்வு. நாம் வேகமாக பயணிக்கும் போது வரும் எதிர்காற்றல்ல இது. இந்த உராய்வினால் உருவாகும் வெப்பத்தை ஒராயன் தாங்க வேண்டும். அண்ணளவாக 2800 பாகை செல்சியஸ் வெப்பம் ஒராயன் கலத்தின் மேற்பரப்பில் உருவாகும். அவ்வளவு வெப்பத்தையும் தாங்கிய வண்ணம் பூமிக்குள் நுழையவேண்டும். அவ்வாறு வெற்றிகரமாக நுழையும் போது கடல் மேற்பரப்பிலிருந்து 25000 ஆடி உயரத்தில் ஒராயனின் இரு பரசூட்கள் விடுவிக்கப்படும். இவை ஒராயனின் வேகத்தை 160 கிலோமீட்டர் வேகத்திற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அவகாசத்திற்குள் கொணர்ந்துவிடும். பின்னர் பிரதான 3 பரசூட்கள் விடுவிக்கப்பட வேகம் மணிக்கு 32 கிலோமீட்டர் ஆக குறைந்து குறித்த இடத்தில் சான் டியாகோ குடாவின் கடற்பகுதியில் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கும். இதனை மீட்பதற்கு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் விண்கலம் மீட்கப்படும்.

பரசூட்களுடன் தரையிறங்கும் விண்கலம்
மூலம் : nasa.gov

இந்த சோதனை திட்டத்தின் வெற்றியில் தான் மனித இனத்தின் எதிர்கால வரலாறு தங்கியுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திட்டத்தில் பெரும்பாலும் பெண்களே முக்கிய பதவிகளை ஆற்றி வருகின்றனர்.

ஆர்டிமிஸ்-01 ஏவுகணை செயற்பாடுகளுக்கான தலமை அதிகாரி- சார்லி பிளாக்வெல் தோம்ப்சன் (Charlie Blackwell-Thompson)
மூலம்: The New York Times

ஆர்டிமஸ் 1 ஏவுதலுக்கு தலைமை தாங்கியவர் சார்லி பிளாக்வெல் தோம்ப்சன் எனும் பெண்மணி ஆவார். நாசாவின் வரலாற்றில் ஒரு விண்கலம் ஏவுதலை ஒரு பெண் தலைமை தாங்கியது இதுவே முதன்முறை. ஆர்டிமஸ் விண்கலம் ஒன்பது ஆண்கள் ஒன்பது பெண்கள் என பதினெட்டு பேர் அடங்கிய குழுவுடன் நிலவுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Related Articles