Roar தமிழின் Sports Roundup – ஓய்வை அறிவிக்கின்றாரா ரொனால்டோ?

எப்படியோ பலவகையான எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த டி20 உலகக் கோப்பைத் தொடரை இம்முறை இங்கிலாந்து வென்று பட்டத்தை தன்வசமாக்கியது. அதற்கடுத்ததாய் இங்கிலாந்து எதிர் அவுஸ்த்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதில் முதல் போட்டி கடந்த வியாழன் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு டி20 சாம்பியனை அவுஸ்ரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியடைந்தது.

பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் தனஞ்சய டி சில்வாவிற்கு முதல் வாய்ப்பு

நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையின் பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். நிஸ்ஸங்க இத்தொடரில் 214 ஓட்டங்களை குவித்து 7 ஆவது இடத்தைப் பெற்றார். அதேபோன்று டி சில்வா 177 ஓட்டங்களை மட்டுமல்லாது 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதன்படி இவர்களில் திறமைக்கு கிடைத்த முதல் வாய்ப்பாக, இருவரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி இத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக பெத்தும் நிஸ்ஸங்கவும், சில்லெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக தனஞ்சய டி சில்வாவும் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி அண்மைக்காலமாக சிறப்பாக செயற்பட்டுவரும் இவர்கள் இருவரும் வெளிநாட்டு லீக் தொடரில் தெரிவான முதல் சந்தர்ப்பம் இதுவாக அமைகின்றது. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

பொலார்ட் ஓய்வு

உலகக்கோப்பைக்கு நிகர் ரசிகர்களின் ஆதரவை பெற்றது இந்தியாவின் ஐ.பி.எல் டி20 தொடர் எனலாம். அந்த அளவிற்கு இது வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அடுத்த ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரிலிருந்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கிய்ரன் பொலார்ட் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். ஐ.பி.எல். 2023 தக்கவைப்பு ஏலத்தில் இருந்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் பட்டியலில் இருந்து விடுவித்ததைத்தொடர்ந்து, எனினும், அவர் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

பொலார்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார் எனினும் அவர் ரசிகர்கள் அவரை ஐ.பி.எல் தொடரில் எதிர்பார்த்திருந்தனர். என்றபோதும் இம்முடிவு அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. பொலார்ட், டி20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2010 முதல் 13 வருடங்களாக மும்பை அணிக்காக விளையாடி வந்த இவர், 189 போட்டிகளில் 16 அரை சதங்களுடன் 3412 ஓட்டங்களை பெற்றுள்ளார். இந்த ஓய்வு தொடர்பில் அவர் கூறும்போது “மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விவாதித்த பிறகு ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். எப்படியாயினும் என்னால் மும்பை அணிக்குத் தொடர்ந்து விளையாட முடியாது என்றால் அந்த அணிக்கு எதிராகவும் கூட விளையாட முடியாது. மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான்” என்று கூறியுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

புகைப்பட உதவி – indianexpress

2024 – 19 வயதுக்கு உட்பட்டேருக்கான உலகக்கிண்ணத் தொடர் இலங்கையில்

பொருளாதார ரீதியில் பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்கும் இலங்கைக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது இக்காரணம். அதாவது 2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரை இலங்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதனை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதியும் செய்துள்ளது. அதேபோன்று அதற்கடுத்த 2026 தொடரை சிம்பாப்வே மற்றும் நமீபியா கூட்டாக இணைந்து நடத்தும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

FIFA

கிரிக்கெட் உலகு இப்படியாய் இருக்க தற்போதைய அனைவரின் பார்வையும் FIFA உலகக்கிண்ணத்தை எதிர்நோக்கியே இருக்கின்றது. இத்தொடர் ஆரம்பமாக இன்னும் இரண்டே நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இது குறித்த பல்வேறு செய்திகள் வெளிவந்தவாறே உள்ளது. ஆரம்பத்தில் ஆடை கட்டுப்பாடுகள் தொடர்பில் கட்டார் அறிவித்திருந்த நிலையில் மீண்டும், உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் அரங்குகளை சூழவுள்ள பகுதிகளில் பியர் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கும் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (FIFA) தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இதற்காய் பல கூடாரங்களும் ஏற்பாடுகளும் செய்திருந்த போதிலும் இத்திடீர் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விஐபி பகுதிகள், தோஹாவிலுள்ள பிரதான FIFA ரசிகர் வலயம், சில தனியார் ரசிகர் வலயங்கள் மற்றம் அனுமதிப்பத்திரம் பெற்ற 35 ஹோட்டல்கள், விடுதிகளில் பியர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சாடியோ மானே விலகல்

ஆரம்பமாகவுள்ள FIFA தொடரில் செனேகல் அணியின் மிகச்சிறந்த வீரர் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு வேதனையையும் இந்த அணிக்கு பாரிய பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடந்த போட்டி ஒன்றில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது எனினும் அது குணமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

30 வயதான சாடியோ மானே ஆப்பிரிக்கான கண்டத்தின் சிறந்த கால்பந்து வீரர் விருதை இரண்டு முறை வென்றுள்ளார். ஆரம்பகாலங்களில் கடுமையான வறுமையில் இருந்த இவர் படிப்படியாக தனது திறமையால் முன்னேறியவர். ஆடம்பரத்தை நாடாது எப்போதும் எளிமையாக இருக்கும் இவருக்கு ரசிகர் படையும் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்பட உதவி -mirror.co.uk

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு

காற்பந்து பற்றி அந்த அளவாக தெரியாதவருக்கும் கூட சட்டென்றே நினைவுக்கு வரும் பெயர் ரொனால்டோ. மைதானத்தில் மாயவித்தைகள் புரியும் இவருக்கு என்றே சொந்தமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படியான இவர் தற்போது தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். அதன்படி இம்முறை FIFA தொடருடன் ஓய்வுபெற யோசிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பில் அண்மைய நேர்காணல் ஒன்றின் போது “அனேகமாக இது தான் எனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும். அதிகபட்சமாக இன்னும் 2அல்லது 3 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவேன். 40 ஆவது வயதில் கால்பந்து வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

போர்த்துகல் கால்பந்து அணியின் தலைவனான ரொனால்டோ இதுவரை 191 ஆட்டங்களில் விளையாடி 117 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த சாதனைக்கு சொந்தக்காரரும் இவரே. 37 வயதில் உள்ள இவர் காற்பந்து உலகில் தனக்கென தனித்துவ முத்திரையை கொண்டவர் என்பதும் சிறப்பு.

நட்சத்திர வீரர் மெஸ்சியின் கணிப்பு

ஆரம்பமாகவுள்ள FIFA கால்பந்து தொடரில் நடப்பு சம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. 8 பிரிவாக இடம்பெறும் இந்த தொடரின் முதல்போட்டியில் கட்டார் மற்றும் ஈகுவடார் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் இத்தொடர் குறித்தும் சாதக, பாதகங்கள் குறித்தும் பல்வேறு தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை கூறிவருகின்றனர். அதன்படி ஆர்ஜென்டினா அணியின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சி, “இம்முறை கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு அதிகமாக இருக்கின்றது என்றே கூறியுள்ளார்.

புகைப்பட உதவி -nytimes.com

ATP Finals

முன்னணி டென்னிஸ் வீரர்களுக்கிடையில் நடைபெறும் 2022 ATP Finals டென்னிஸ் தொடர், இத்தாலியின் டுரின்- பாலா அல்பிடூரில் நடைபெற்று வருகின்றது. இதன் குழுநிலைப் போட்டி நேற்று (வெள்ளி) இடம்பெற்றது. அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 7-6, 6-7, 6-2, என்ற நேர் செட் கணக்குகளில் டெய்லர் ஃபிரிட்ஸ் வெற்றிnபற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அதேபோன்று அதற்கு முந்தைய (வியாழன்) போட்டியில் கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் மற்றும் ரஷ்யாவின் டேனில் மெட்வெடவ் ஆகியோர் மோதினர், இதில் சிட்ஸிபாஸ் 6-3, 6-7, 7-6, என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார்.

புகைப்பட உதவி – atptour.com

அதன்பின்னர், மற்றுமோர் குழுநிலை போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோர் மோதினர். இதில் ஹென்ரி ரூபெல்வ் 3-6,6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோன்று நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொள்ளவுள்ளார்.

Related Articles