Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

யார் இந்த இலுமினாட்டிகள்?

உலகில் எங்கே எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கு காரணமாக யாரோ இருப்பார்கள் என்பது நிதர்சனம். மிகப்பெரும்பாலான தருணங்களில் இவை தற்செயலானவையே. ஆனால் ஒரு நாட்டின் புரட்சியோ, தோற்றமோ, எழுச்சியோ, வீழ்ச்சியோ இவை எல்லாம் யாரோ ஒருவரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது என்றால் அந்த கூற்றின் மீதான நம்பகத்தன்மை குறைவுதான் இல்லையா? உலகின் ஒவ்வொரு முக்கிய தருணமும் முடிவும் யாரோ ஒருவர் காட்டும் விரல் நுனியில் இருப்பதாக கூறும் கொள்கைகளும் கோட்பாடுகளும் நிரம்பி வழிகின்றன. இதில் முதன்மையானவர்கள் இலுமினாட்டிகள். சமூக வலைத்தளங்களில், தமிழ் பேசும் நல்லுலகில் கூட இவர்களை பற்றி பரவலாக பேசிவரும் சிலரை நாம் கண்டிருப்போம்.

சில தகவல்கள் ஆச்சரியமாக இருந்தாலும் பல நேரங்களில் நமக்கு சிரிப்பு மூட்டாமல் இல்லை. உதரணம் அண்மையில் வெளிவந்த அரபிக் குத்து பாடலின் பொழிப்புரை. உண்மையில் இந்த இலுமினாட்டிகள் யார்? அவர்களுக்கும் உலகளாவிய நிகழ்ச்சிகளுக்கும் ஏதும் தொடர்புள்ளதா? உலக அரசியல் அவர்களின் நிகழ்ச்சி நிரலா? என ஏராளமான கேள்விகள் எம் அனைவர் மத்தியிலும் உலா வந்த வண்ணமே உள்ளன.

இலுமினாட்டி என்றால் லத்தீன் மொழியில் அறிவாளிகள் என்று பொருட்படும். இலுமினாட்டி என்பது ஒன்றும் ஐந்துதலை நாகம் போன்ற கட்டுக்கதை அல்ல. முன்னொரு காலத்தில் இப்பெயரில் உண்மையாகவே ஒரு குழு இயங்கி வந்தது. அவர்களுக்கென கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் இலட்சியமும் இருந்தது.

வரலாற்றில் இலுமினாட்டிகள்

வரலாற்றின் பக்கங்களில் இந்த இலுமினாட்டிகள் யார் என தேடிப்பார்க்கையில் 15ம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு கதைகள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாம் இருப்பதாக ஐயப்படும் இந்த இலுமினாட்டி எனும் நாமமானது பவேரியன் இலுமினாட்டி எனும் குழுவை குறித்து நிற்கிறது. 1776 முதல் 1785 வரை வெறுமனே பத்தாண்டுகள் நீடித்த இந்த அமைப்பு ஆடம் வெய்ஷாப்ட் எனும் ஜெர்மானிய சட்ட பேராசிரியரால் தோற்றுவிக்கப்பட்டது. அறிவார்ந்த கொள்கைகளில் தீவிர நம்பிக்கை கொண்ட அவர், தனது இலுமினாட்டி அமைப்பின் மூலம் மேற்தட்டு மக்களிடம் தன்னுடைய கொள்கைகளை பரப்ப எத்தனித்தார். வெய்ஷாப்ட் தனது உறுப்பினர்களிடம் பரோபகாரம், மற்றும் இன்னபிற நன்மதிப்புகள் பற்றிய அறிவை வழங்க விரும்பினார். இதன் மூலம் அவர்கள் அதிகாரத்திற்கு வரும் பட்சத்தில் அரசியல் முடிவுகளில் நல்ல செல்வாக்கை செலுத்த முடியும் என நம்பினார்.

ஜான் அடம் வெய்ஷ்புட் – இலுமினாட்டி அமைப்பின் நிறுவுனர்
மூலம்: wikimedia.org

“வெறுமனே ஆறு முதல் ஒன்பது பேர்கொண்ட குழுவாக இருந்தாலும் அவர்களின் கனவு பெரியது. இந்த உலகையே தம்வசப்படுத்த அவர்கள் உறுதி பூண்டிருந்தனர்.” என Conspiracy Theories and Secret Societies for Dummies நூலின் இணை எழுத்தாளர் க்றிஸ் ஹோடாப் அவர்கள் வொக்ஸ் தளத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இலுமினாட்டி அமைப்பில் உறுப்பினர் ஒருவரை இணைக்கும் சடங்கு
மூலம்: Universal Images Group / Getty Images

இலுமினாட்டிகளின் நன்மதிப்பு மற்றும் இலக்குகள் சில சமயங்களில் அவர்களின் இயலுமைக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தன. தன் ஆரம்ப காலங்களில் வெகு சொற்ப அளவான உறுப்பினர்களை கொண்ட இக்குழு அதிகபட்சம் 650 முதல் 2500 உறுப்பினர்களையே கொண்டிருந்தது. வெகு குறகிய காலத்தில் இத்தனை உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள காரணம் வேறு குழுக்களில் ஊடுருவியிருந்த ரகசிய உறுப்பினர்கள். இவர்கள் உண்மையில் இலுமினாட்டியாக இருந்தாலும் வேறு குழுக்களில் சாதாரண உறுப்பினர்களாக இணைந்து தமது அமைப்புக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபடும் கறுப்பு ஆடுகளாக இருந்தனர். இவர்கள் ஃப்ரீமேசன் குழுக்களில் இணைந்து தமது குழுவுக்கு ரகசிய ஆட்சேர்ப்பை நிகழ்த்தினர்.

ப்ரீமேசன்
“இலுமினாட்டியை போலவே/ அதைவிட மிகப்பெரிய ரகசிய அமைப்பு, இதன் வரலாறு 13ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது. இவர்களுக்கென இரகசிய இலச்சினைகள், குறியீடுகள் மற்றும் முத்திரைகள் உண்டு. ஒவ்வொரு ப்ரீமேசனும் தன் குழுவிலுள்ள மற்றைய உறுப்பினருக்கு உதவி புரிய உறுதி பூண்டுள்ளனர்.”

இலுமினாட்டியின் கொள்கைகள்

வரலாற்று ரீதியான இலுமினாட்டிகளுக்கு இருபக்கங்கள் உண்டு. விசித்திரமான சடங்குகள் மற்றும் கொள்கைகளே அவை.

இலுமினாட்டிகள் ஏராளமான விசித்திரங்களை வழமையாக கொண்டிருந்தனர். அவர்களுக்கு குறியீடுகள் இருந்தன (உதாரணத்திற்கு ஆந்தை) தம் அடையாளத்தை மறைக்க புனைபெயர்களை கொண்டிருந்தனர். சிக்கலான அதிகார மட்டங்களை கொண்டிருந்தனர். Novice (புதியவர்), Minerval (மினர்வல்) மற்றும் Illuminated Minerval (ஒளிரும் மினர்வல்) என அவர்களுக்குள் அதிகாரப்பகிர்வுகள் காணப்பட்டன.

1780ல் வரையப்பட்ட ஆந்தை ஒன்றின் ஓவியம். இக்காலத்தில் இலுமினாட்டிகள் மிக துடிப்புடன் இயங்கி வந்தனர்.
மூலம்: Universal Images Group / Getty Images

ஆரம்பத்தில் இலுமினாட்டிகள் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை நம்புவதே கிடையாது. காரணம் அவர்கள் தமது பாதையில் மிக உறுதியாக இருப்பதேயாகும். இவர்களின் ஏனைய சடங்குகள் பற்றி உறுதிபடக்கூற முடியாவிடினும் இவர்கள் சித்தப்பிரமை பிடித்தவர்கள் போல நடந்து கொண்டனர் என்று கூறலாம். ஒவ்வொருவரும் தம் அடையாளங்களை மறைத்துக்கொள்ள உளவாளிகள் போன்று செயற்பட்டனர்.

இதுபோன்ற விசித்திரமான நடத்தைகளை அவர்கள் பின்பற்றினாலும் உலகம் முழுவதும் அறிவார்ந்த கொள்கைகளான பகுத்தறிவு சிந்தனை மற்றும் சுயாட்சி போன்ற விடயங்களை பரப்பினர். மதகுரு எதிர்ப்பு, அரசாட்சி எதிர்ப்பு முதலிய புரட்சியாளர்களுடன் இலுமினாட்டிகள் நெருங்கிய தொடர்பை பேணினர். காரணம் அரசகுடும்பம் போன்ற பாரிய அமைப்புகளை ஊடறுத்து வேரறுப்பதே இவர்கள் குறிக்கோளாக இருந்தது.

உலகை வென்றனரா இலுமினாட்டிகள்?

வரலாற்றாசிரியர்களின் கூற்றுக்கிணங்க, இலுமினாட்டிகள் ஓரளவு வெற்றி கண்டனர் எனலாம். அதிகபட்சம் செல்வாக்குமிக்கவர்கள் என்ற தளத்தை அடைந்தனர். (இருந்தாலும் இலுமினாட்டிகள் உலகை வெற்றி கொண்டதாகவும், இன்றளவும் இரகசியமாக ஆண்டு வருவதாகவும் கருத்துக்கள் உலா வருகின்றன. அத்தகைய சக்திமிக்கதொரு அமைப்பு உண்மையில் உலகை  ஆட்டிப்படைக்கிறது என்றால் நாம் அதனை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா?)

ஃப்ரீமேசன்களின் வெற்றியிலிருந்து இலுமினாட்டிகளின் வெற்றியை பிரித்தறிவது சற்றே சிரமமான காரியமாகும். காரணம் ஏலவே கூறியதைப்போல ஃப்ரீமேசன்களுக்குள் இலுமினாட்டிகள் ஊடுருவி இரண்டற கலந்துவிட்டனர். ஆகவே இலுமினாட்டிகளின் செல்வாக்கை நாம் அறியும் செல்வாக்கிலிருந்து தனிப்படுத்தி விளக்குவதும் மிகக்கடினமான காரியமாகும்.

இலுமினாட்டிகளில் சில செல்வாக்குமிக்க நபர்கள் அங்கம் வகித்தமையை நாம் அறியக்கூடியதாக உள்ளது. இவர்களில் அக்கால பிரபுக்களும் சில தலைவர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எழுத்தாளர் ஜோஹன் கோத்தே ஒரு இலுமினாட்டி என சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன (இருப்பினும் சில ஆதாரங்கள் இது குறித்து விவாதங்களை முன்வைக்கின்றன). இலுமினாட்டிகளின் செல்வாக்கு உங்கள் பார்வையை பொருத்தது. அவர்களது புரட்சிகரமான சிந்தனைகள்  வேறு குழுக்களையும் ஊடறுத்து பரவியது என்று நீங்கள் நம்பினால், அவர்கள் வெற்றியாளர்கள். அன்றேல், அவ்வாறான சிந்தனைகள் வெறுமனே வாய்வார்த்தைகள் என்று நீங்கள் எண்ணினால் அவர்கள் வெறுமனே வரலாற்று ஆவலுடையவர்கள் எனக்கொள்ளலாம்.

உண்மையான இலுமினாட்டிகள் மறைந்தது எப்படி?

“அவர்கள் அழிக்கப்பட்டனர்” என ஹோடப் கூறுகிறார். மக்கள் அவர்களை மீட்டெடுக்க பலமுறை முயன்றனர். ஆனால் இது வெறுமனே பணம் சம்பாதிக்கும் திட்டமாகவே இருந்தது.

பவேரிய பிரபு கார்ல் தியடோர்
மூலம்: Wikimedia Commons

1785ல் பவேரிய பிரபு கார்ல் தியடோர் அவர்கள் அத்தனை இரகசிய அமைப்புகளையும் தடை செய்தார். அந்த பட்டியலில் இலுமினாட்டிகளும் அடக்கம். அத்துடன் இவ்வாறான அமைப்புகளில் இணைவோருக்கு மிகக்கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட்டன. குறித்த அமைப்புகளின் இரகசியங்கள் பகீரங்கப்படுத்தப்பட்டன அல்லது அழித்தொழிக்கப்பட்டன. வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இலுமினாட்டிகள் மறைந்துவிட்டனர்.

தீயணைந்தாலும் புகைமூட்டம் ஓயவில்லை. அமெரிக்க வரலாற்றின் சதித்திட்ட கோட்பாடுகள் எனும் ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதற்கு இணங்க பெரும்பதவி வகித்த இலுமினாட்டி உறுப்பினர்களில் ஒருவரான சேவியர் வான் ஸ்வாக் அவர்களின் வீட்டில் கிடைக்கப்பெற்ற ஆதராங்கள், இலுமினாட்டிகளின் திகிலூட்டும் கோட்பாடுகளை, அதாவது உலகை ஆட்டிப்படைத்தல் எனும் அவர்களின் கனவு முதலிய விடயங்களை வெளிச்சத்துக்கு கொணர்ந்தன.

மறைந்தும் ஓயா கதைகள்

சக்திவாய்ந்த அமைப்புகள் ஒடுக்கப்பட்டாலும் அவை பற்றிய கதைகள் ஓய்வதில்லை. இலுமினாட்டிகள் அமைப்பு ஒழிக்கப்பட்ட பிற்பாடு அதனை பற்றிய கட்டுக்கதைகள் காட்டுத்தீயாய் பரவின.

பிரபலமான சதித்திட்ட கோட்பாடுகள் ஜோன் ரொபிசன் எனும் இயற்பியலாளரால் எழுதப்பட்டன. 1797ல் இவர் இலுமினாட்டிகள், ஃப்ரீமேசன்களுக்குள் ஊடுருவியதை பற்றி எழுதினார். இவரை போன்றே அபீ ஒகஸ்டீன் பரேல் எனும் எழுத்தாளர், அதே ஆண்டில் ‘பிரெஞ்சு புரட்சிக்கு திரைமறைவில் இருக்கும் சூத்திரதாரிகள் இலுமினாட்டிகளே’ என எழுதினார். இவ்விரு எடுகோள்களும் மீண்டும் இலுமினாட்டிகளை பேசுபொருளாக்கின.

சேர் ஜோர்ஜ் வாஷிங்டன்
மூலம்: Graphica Arts / Getty Images

இந்த பீதி அமெரிக்காவினுள்ளும் ஊடுருவியது. 1798ல் ஜோர்ஜ் வாஷிங்டன் அவர்கள் எழுதிய கடிதத்தில் இலுமினாட்டிகளால் ஏற்படுவிருக்கும் ஆபத்து பற்றி எடுத்துரைத்திருந்தார். இது அலட்சியப்படுத்தப்பட்டதாக அவர் கருதினார். ஆனால் அவர் இதனை பற்றி எழுதியது ஓயவிருந்த வதந்திக்கு தூபமிட்டு மீண்டும் வெகுசன பேசுபொருளாக்கியது. இலுமினாட்டி எதிர்ப்பு நூல்கள்,  பரப்புரைகளை தொடர்ந்து தோமஸ் ஜெஃப்பார்சன் என்பவர் இலுமினாட்டி உறுப்பினரென (ஆதாரமின்றி) கைது செய்யப்பட்டார்.

அக்காலத்தில் இலுமினாட்டிகள் பற்றி எழுப்பி விடப்பட்ட இவ்வதந்திகள் நூற்றாண்டு காலம் தாண்டி இன்றும் அவர்கள் பெயரை உச்சரிக்க வழிகோலின.

ஃப்ரீமேசன்களும் இலுமினாட்டிகளும்

சதித்திட்ட கோட்பாடுகள் அமெரிக்காவில் எப்போதுமே வெகுபிரபலம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு இலுமினாட்டிகளை காட்டிலும் அவர்கள் வெகுவாக பயந்தது ஃப்ரீமேசன்கள் குறித்து தான். 1828ல் ஃப்ரீமேசன் எதிர்ப்பு கட்சி தோற்றம் பெற்றது. பிற்காலத்தில் கட்சி மறைந்துபோனாலும் ஃப்ரீமேசன் குறித்த சித்தப்பிரமை அமெரிக்காவில் ஓயவில்லை. இதற்கு மூலகாரணம் இலுமினாட்டிகள் தமது அமைப்புக்கு ஃப்ரீமேசன்களின் கூட்டங்களிலிருந்து ஆட்களை சேர்த்துக்கொண்டனர். இவ்விரு அமைப்புகளும் அனைவரையும் குழப்பிவிட்டிருந்தன.

ஒருகட்டத்தில் ஃப்ரீமேசன் மீதான பீதி பெருகி நாட்டில் ஃப்ரீமேசன்களின் செல்வாக்கே இருப்பதாக தோன்றச்செய்தது. அமெரிக்காவை உருவாக்கிய பலர் அதன் முன்னாள் உறுப்பினர்கள் எனும் கூற்றும் உண்டு. அமெரிக்காவின் குறியீடுகள் பல ஃப்ரீமேசன்களின் குறியீடுகள் என கூறப்படுகிறது. அமெரிக்க டாலரில் இருக்கும் கண், ஃப்ரீமேசன்களின் குறியீடு எனக்கூறும் தீர்க்கமான வாதம் இன்றளவும் நீட்டிக்கிறது. ஆனால் இதற்கும் பவேரியன் இலுமினாட்டிகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது ஊர்ஜிதமாகின்றது.

அமெரிக்க டாலரில் இருக்கும் கண் சின்னம் இதனை ஆங்கிலத்தில் Eye of Providence என அழைப்பர்.

மூலம்: wikimedia.org

புனைவுகளில் இலுமினாட்டிகள்

உலகப்புகழ் பெற்ற மார்வல் கொமிக்ஸ் இலும் இலுமினாட்டிகள் இருக்கின்றார்கள். அவர்களின் பெயர் விபரம் இதோ,

  • டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் – சக்திமிக்க மந்திரவாதி
  • ப்ளக் போல்ட் – இன்ஹுமன்ஸின் அரசர்
  • சார்ல்ஸ் சேவியர் – X-Men இன் நிறுவுனர், மியூடன்ட்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்
  • ரீட் ரிச்சார்ட்ஸ் – Fantastic Fourன் நிறுவன உறுப்பினர்
  • நமோர் – அட்லாண்டிஸ் இன் அரசர்
  • அயன் மேன் (அந்தோனி ஸ்டார்க்) – அவெஞ்சர்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர்

இவர்கள் அறுவரும் ஒன்றாக இணைந்து உலகில் இருக்கும் சக்தி மிக்க மனிதர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கிடையிலான அமைதியை பேணுவதுடன் அதனை சுற்றியுள்ள உலகிலும் சமாதானத்தை நிறுவ போராடுகின்றனர்.

இது மட்டுமின்றி ஏராளமான திரைப்படங்கள் இலுமினாட்டிகள் எனும் பெயரை கூறியும் கூறாமலும் வெளிவந்துள்ளன. நடிகர் அஜித்குமார் நடித்து வெளிவந்த விவேகம் திரைப்படமும் இந்த கோட்பாட்டை சிறிது தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

இலுமினாட்டிகள் மீதான கோட்பாடுகள் கொள்கைகள் கொண்டு உருவாக்கப்பட்டவையே உலகப்புகழ் பெற்ற மினியன்ஸ். அவற்றின் கதாப்பாத்திர வடிவமைப்பை உற்றுநோக்கினால் இது நன்கு புலப்படும். மினியன்களை வடிவமைத்த நிறுவனத்தின் பெயர்  இலுமினேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இலுமினாட்டிகள் இருக்கின்றார்களா என்றால் அந்த கேள்விக்கு பதில் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை போன்றது. இருப்பவருக்கு உண்டு இல்லாதவருக்கு இல்லை.  இந்தக்கட்டுரை வாசிப்பதால் இலுமினாட்டிகள் மூலம் உங்களுக்கு ஆபத்து ஏதும் நேருமா என்று கேட்டால், இதோ இந்த கட்டுரையினை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை நான் நலமாகவே இருக்கிறேன்.

Related Articles